Published : 10 Jul 2018 08:33 AM
Last Updated : 10 Jul 2018 08:33 AM

சென்னை - சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டம்: யார் சொல்வது சரி?

சென்னை - சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்துக்குக் கடும் எதிர்ப்புகள் எழுந்திருக்கும் நிலையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியம் என்றும் கையகப்படுத்தும் நிலத்துக்கு இதுவரையில் இல்லாத வகையில் பெரிய அளவில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்றும் தமிழக அரசு கூறிவருகிறது. ஆனால், விவசாயிகளின் வாழ்வையும் இயற்கை வளத்தையும் கடுமையாகப் பாதிக்கும் என்று சில விவசாய அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் மற்றும் அரசியல் கட்சிகளும் தொடர்ந்து போராடிவருகிறார்கள். உண்மை நிலவரம் என்ன?

தொழில், பொருளாதார வளர்ச்சிக்கு

எட்டுவழிச் சாலை அவசியம்!

செம்மலை, முன்னாள் அமைச்சர், அதிமுக

து நிச்சயம் நல்ல திட்டம். தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் மையப் பகுதியாக இருக்கிறது. ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும் சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலை மூலமாக 360 கிலோ மீட்டரும், சென்னை - மதுரை நெடுஞ்சாலை மூலமாக 350 கிலோ மீட்டரும் பயணித்து சேலம் செல்ல வேண்டும். ஆனால் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் அமையவுள்ள புதிய எட்டுவழிச் சாலை மூலமாக (277 கிலோ மீட்டர்) 5 மணி நேரத்தில் பயணம் செய்ய முடியும்.

2004-ல், சென்னை - சேலத்துக்கு ஒரு ஆண்டுக் குச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை ஒரு கோடியாக இருந்தது. தற்போது, இந்த எண்ணிக்கை 2 கோடியைத் தாண்டியுள்ளது. ஏற்கெனவே உள்ள சாலைகள் ஆறுவழிச் சாலையாக விரிவுபடுத்தப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதால், இந்தத் திட்டம் அவசியம். இதன் மூலம், ஆண்டுக்குச் சுமார் ரூ.500 கோடி மதிப்பிலான எரிபொருள் மிச்சமாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும், சேலம் மாவட்டத்தோடு இத்திட்டம் நின்றுபோவதில்லை. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற பகுதிகளையும் அடுத் தடுத்து இணைக்கவும் உள்ளது. தமிழகத்தில் இருக்கும் முக்கிய ரயில் நிலையங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்களை இணைக்கும் முக்கிய சாலையாக இந்த சாலை மாறும். நாட்டின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கே முக்கியமானது.

இந்தத் திட்டத்துக்காக, விவசாயிகளின் மொத்த நிலமும் பாதிப்படையும் என்பதில்லை. அவர்களின் நிலத்தில் ஒரு சிறு பகுதி மட்டுமே சாலைக்கு எடுக்கப்படுகிறது. இதற்கும், இதுவரையில் இல்லாத அளவுக்கு இழப்பீட்டுத் தொகையைப் பல மடங்கு உயர்த்தி அரசு வழங்குகிறது. மேலும், இந்த சாலை அமைந்த பிறகு, அருகே எஞ்சியுள்ள நிலத்தின் மதிப்பும் பல மடங்கு அதிகரிக்கும். விவசாயிகளின் ஏழ்மை நிலையைப் பயன்படுத்தி அவர்களின் முழு நிலத்தையும் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் வாங்குவதையும், உரிய பணம் தராமல் இழுத்தடிப்பதையும் இந்த சமூக ஆர்வலர்கள் ஏன் கண்டுகொள்ளவில்லை?

போக்குவரத்துக்காக மட்டுமல்லாமல், பொருளா தார வழித்தடத்தை மேம்படுத்தும் வகையிலான திட்டம் இது. இந்தச் சாலையை ஒட்டியுள்ள முக்கிய மான பகுதிகளில் மத்திய அரசுப் பாதுகாப்புத் துறைக்குத் தேவையான உதிரிப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், வேளாண்மை சார்ந்த தொழிற்சாலைகளை நிறுவ அரசு திட்டமிட்டுள்ளது. தனியார் நிறுவனங்களின் ஆதாயத்துக்காக அல்ல!

நல்ல திட்டங்கள் செயல்படுத்தும்போது சிறிய பாதிப்புகள் இருக்கத்தான் செய்யும். அதற்காக, ஒட்டுமொத்தத் திட்டத்தையே புறக்கணிக்க முடியாது. இந்த சாலைத் திட்டத்தைப் பொறுத்தவரையில், சிறிய பாதிப்புகளும் இல்லாமல் இருக்க இழப்பீட்டுத் தொகையை அதிகப்படுத்தி அரசு வழங்கு கிறது. அதுபோல், இயற்கையைப் பாதுகாக்கும் வகையில் பசுமைவழித் தடத்தின் இருபுறமும் மூன்று லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்.

இந்நிலையில், எந்தவிதக் காரணமும் இல்லாமல், சிலர் விவசாயிகளைத் தூண்டிவிட்டுப் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். அரசியல் ஆதாயத்துக்காகச் சிலர் போராட்டங்களை நடத்துகின்றனர்!

விவசாயம், பசுமையை ஒழித்து

எட்டுவழிச் சாலையா?

மா.சுப்பிரமணியன், சென்னை முன்னாள் மேயர், திமுக

செ

ன்னையிலிருந்து உளுந்தூர்பேட்டை வழியாகவும், கிருஷ்ணகிரி வழியாகவும் இரண்டு முக்கிய தேசிய நெடுஞ்சாலை கள் உள்ளன. இந்தச் சாலைகளில் ஒரு குறிப்பிட்ட தூரத்துக்குப் பிறகு, பெரிய அளவில் வாகன நெரிசல் ஏற்படவில்லை. தவிர, வந்தவாசி வழியாக வும் சேலம் செல்ல மற்றொரு மாநில நெடுஞ்சாலை இருக்கிறது. இந்தச் சாலைகளை விரிவாக் கம் செய்தாலே தேவையைப் பூர்த்திசெய்துகொள்ள முடியும். இப்போதைக்குப் பெரிய அளவில் தேவை இல்லாத சூழலில் அவசர அவசரமாக இந்தச் சாலை அமைப்பது ஏன்?

ஒரு நாட்டின் மொத்தப் பரப்பளவில் பசுமைப் பரப்பு 33% இருக்க வேண்டுமென்பது இயற்கை விதி. ஆனால், தமிழ்நாட்டில் தற்போது இருப்பதே 17%தான். இந்நிலையில், இந்தத் திட்டத்துக்காக 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு விவசாய நிலங்கள், மரங்களை அழிப்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

கஞ்சமலை, ஜருகுமலை உள்ளிட்ட எட்டு மலைகள் பாதிக்கப்படுகின்றன. சில இடங்களில் ஆறுகள், ஏரிகள், கிணறுகள், கண்மாய் போன்ற பல நீர்நிலைகள் அழிக்கப்படுவதோடு நிலத்தடிநீரும் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் விவசாயம் அழிந்துவரும் நிலையில் இத்திட்டத்தால் நிறைய விவசாய நிலங்கள் அழிக்கப்படும்.

இத்திட்டத்துக்குக் கையகப்படுத்தப்படும் விவசாய நிலத்தை ஏக்கர் கணக்கில் சொன்னால் பெரிய அளவில் தெரியும் என்பதாலே ஹெக்டேர் கணக்கைச் சொல்லிவருகிறார்கள். எடுக்கவுள்ள நிலங்களின் அளவு 2,343 ஹெக்டேர். இதை ஏக்கரில் கணக்கிட்டால் 5,789 ஏக்கராகும். மேலும், ஹெக்டேருக்குத்தான் இழப்பீட்டுத் தொகையை அரசு சொல்கிறதே? தவிர, ஏக்கருக்குச் சொல்வதில்லை. ஹெக்டேருக்கு ஒரு கோடி ரூபாய் என்றால் ஏக்கருக்கு ரூ.30 லட்சம்தானே அளிக்கப்படும்? எட்டுவழிச் சாலையின் இரு புறமும் சுற்றுச்சுவர் கட்டுவதால் ஒட்டி இருந்த கிராமங்கள் தொடர்புகளே இல்லாமல் பிரிக்கப்படும். 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்படுவது எந்த விதத்தில் நியாயம்?

இந்தச் சாலையை உருவாக்க ரூ.10 ஆயிரம் கோடி செலவிடத் துடிக்கும் தமிழக அரசு, ரயில்வேயிடம் இணைந்து ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற முன்வராதது ஏன்? சாலை செல்லவிருக்கும் ஊர்களை ஒட்டிய ரயில்வே திட்டங்கள் பல ஆண்டுகளாய் பேசப்பட்டுவருகின்றன. தமிழகத்தில் சென்னை – மகாபலிபுரம் – கடலூர், ஈரோடு – பழநி, திண்டிவனம் – செஞ்சி – திருவண்ணாமலை, திண்டிவனம் – வாலாஜா ரோடு, கூடுவாஞ்சேரி – ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட ரயில் பாதைத் திட்டங்களுக்கு ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கினாலே முழுமையாகத் திட்டங்களை நிறைவேற்ற முடியும் என ரயில்வே சொல்கிறது. இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பின்றி மக்கள் ரயில் போக்குவரத்து வசதியைப் பெற முடியும். தொழில் மற்றும் பொருளா தார வளர்ச்சியைப் பெற முடியும். மாநில அரசு திட்டச் செலவைப் பகிர்ந்துகொள்ள முன்வந்தால் ரயில்வே திட்டங்களை முன்னெடுக்கும் செயல்திட்டத்தை ரயில்வே துறையும் வைத்திருக்கிறது. கேரளம் இதற்கு ஓர் உதாரணம்.

இதுபோன்ற திட்டங்களை அரசு கையில் எடுக் காமல், சேலம் எட்டுவழிச் சாலையை அமைத்தே தீருவோம் என்பதில் அரசு உறுதியாக இருப்பதில், சாலையைத் தாண்டிய கணக்குகள் அரசுக்கு இருப்பதாகவே மக்கள் கருதுகிறார்கள். அவர்களுடைய அனுமதியின்றி இத்திட்டம் கூடாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x