Last Updated : 29 Jun, 2018 09:27 AM

 

Published : 29 Jun 2018 09:27 AM
Last Updated : 29 Jun 2018 09:27 AM

ஹாலிவுட் படம் தந்த ஆங்கிலப் பதம்!

மொ

ழிபெயர்ப்புப் பணியின்போது சில வார்த்தைகள், பதங்கள் புதிய திறப்புகளுக்கு வழிவகுக்கும். ‘தி நியூயார்க் டைம்ஸ்’ இதழில் வெளியான ஒரு கட்டுரையில் இடம்பெற்ற ‘கேஸ்லைட்டிங்’ (Gaslighting) எனும் பதம், 1944-ல் வெளியான ‘கேஸ்லைட்’ எனும் ஹாலிவுட் படத்துக்கு அழைத்துச்செல்கிறது. படம், 1938-ல் பிரிட்டனைச் சேர்ந்த பேட்ரிக் ஹாமில்டன் உருவாக்கிய நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது. லண்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓபரா பாடகி அலைஸ் அல்குயிஸ்ட்டைக் கொலைசெய்யும் திருடன், அவரது நகைகளைத் திருட முயல்கிறான். ஆனால், அவரது உறவுக்காரச் சிறுமியான பவ்லா அங்கு வந்துவிடுவதால் அந்த முயற்சியைக் கைவிடுகிறான். பின்னர், இத்தாலியில் வளரும் பவ்லா, திருமண வயதை எட்டும்போது கிரிகோரி ஆண்டன் என்பவர் அவளைக் காதலித்துத் திருமணம் செய்கிறார். கிரிகோரியின் விருப்பத்தின்படி, லண்டனுக்குத் திரும்பி அல்குயிஸ்ட்டின் வீட்டில் வசிக்கத் தொடங்குகிறார்கள் இருவரும்.

ஒருகட்டத்தில், வினோதமான சத்தங்களையும், வெளிநபரின் நடமாட்டங்களையும் உணரும் பவ்லா அதைப் பற்றி கிரிகோரியிடம் கூறுகிறாள். குறிப்பாக, பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் மேல்தள அறையிலிருந்து விளக்கு வெளிச்சங்கள் தெரிவதாகக் கூறுகிறாள். ஆனால், பவ்லாவுக்குத்தான் ஏதோ பிரமை ஏற்பட்டிருப்பதாகச் சொல்கிறார் கிரிகோரி. தன்னைத்தானே சந்தேகிக்கத் தொடங்குகிறாள் பவ்லா. உண்மையில், கிரிகோரிதான் அல்குயிஸ்ட்டைக் கொன்ற திருடன் என்றும், நகைகளைக் கைப்பற்ற அவர் செய்த சதிதான் இவையெல்லாம் என்றும் பிற்பாடு பவ்லா உணர்கிறாள். மேல் தளத்தில் தெரிந்த விளக்கொளி, கிரிகோரி பயன்படுத்திய கேஸ் விளக்கிலிருந்து வந்தது என்பதும் புரியவருகிறது. படம் வெளியான பிறகு, உளவியல் ரீதியாகத் தன்னைத்தானே சந்தேகித்துகொள்ளும் உளவியல் பாதிப்பைக் குறிப்பிட ‘கேஸ்லைட்டிங்’ என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. கலை, இலக்கியம், அன்றாடப் பயன்பாடு என்று வெவ்வேறு தளங்களிலிருந்து புதிய வார்த்தைகளைச் சேர்த்துக்கொள்ள ஆங்கிலம் தயங்குவதே இல்லை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x