Last Updated : 25 Jun, 2018 09:18 AM

 

Published : 25 Jun 2018 09:18 AM
Last Updated : 25 Jun 2018 09:18 AM

செலவில்லாத இயற்கை விவசாயத்துக்கு வழிகாட்டும் ஆந்திரம்!

பணச் செலவே இல்லாத இயற்கை வேளாண்மை முறையை ஆந்திர பிரதேசம் முழுமையாகக் கடைப் பிடிக்கும் என்று முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஜூன் தொடக்கத்தில் அறிவித்தார். இயற்கை வேளாண்மை என்பது உரம், பூச்சிக்கொல்லி ஆகிய ரசாயனங்களை அறவே தவிர்த்துவிட்டு, இயற்கையில் கிடைப்பனவற்றை வைத்துச் சாகுபடியை மேற்கொள்ளும் முறை. 2024-க்குள் மாநிலத்தின் அனைத்து விவசாயிகளும் இதைக் கடைப்பிடிப்பார்கள் என்று டாவோஸ் நகரில் நடந்த உலகப் பொருளாதார அரங்கு மாநாட்டில் சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.

இந்தப் புரட்சிகரமான சாகுபடி முறை பல ஆண்டு களாகச் சோதிக்கப்பட்டுவருகிறது. இடுபொருள் செலவுகளைக் குறைப்பது மட்டுமல்ல, உணவு, குடிநீர், மண், காற்று என்று அனைத்திலும் கலக்கும் ரசாயன நஞ்சை அறவே விலக்குவதும் இதன் நோக்கமாகும். 2015-ல் ஆந்திரத்தின் பல மாவட்டங்களில் இது முன்னோடித் திட்டமாகச் சோதித்துப் பார்க்கப்பட்டது. இதை மாநில அளவில் அமல்படுத்தும் முதல் மாநிலம் ஆந்திர பிரதேசம்.

ஒத்துழைப்பு அவசியம்

திட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பு ‘ரயத்து சாதிகார சம்ஸ்தா’ என்ற முகமையிடம் ஒப்படைக்கப்பட்டிருக் கிறது. இது கட்டம்கட்டமாக விரிவுபடுத்தப்படுகிறது. ஒவ்வொரு மண்டலத்திலும் குறைந்தது ஒரு ஊராட்சி யில் இது அமலாகும். 2021-22-க்குள் அனைத்து ஊராட்சி களிலும் அமலாகும். 2024-ல் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளும் இதன் கீழ் வந்துவிடும்.

இந்தத் திட்டத்தை அமல்செய்ய ரூ.16,500 கோடி திரட்டப்படுகிறது. நிலமற்ற குத்தகை விவசாயிகள், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் என்று அனைவருக்கும் பயிற்சி தரப்படுகிறது. திட்ட அமலுக்குப் பொறுப்பாள ராக நியமிக்கப்பட்டிருக்கும், ஓய்வுபெற்ற அரசு ஊழிய ரான டி.விஜய்குமார், “இந்தத் திட்டம் பரவுவதற்கு விவசாயிகளுக்கு இடையிலான தொடர்பு முக்கியம்” என்கிறார். விவசாயிகளின் கருத்துகளை உள்வாங்கிக்கொண்டு, இயற்கை வேளாண்மை முறைகளைக் கடைப்பிடிக்க அவர்களை ஊக்குவித்து, பல வழிகளிலும் உதவுவது மட்டுமே வேளாண் துறையின் பணி என்கிறார் விஜய் குமார். ‘ராஷ்ட்ரீய கிரிஷி விகாஸ் யோஜனா’ (ஆர்கேவிஒய்), ‘பரம்பராகட் கிரிஷி விகாஸ் யோஜனா’ (பிகேவிஒய்) என்ற இரு திட்டங்களின் மூலம் மத்திய அரசு இதற்கு நிதியை வழங்குகிறது. கூடுதல் நிதியுதவி பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மூலம் திரட்டப்படும்.

இயற்கையைப் பின்பற்றுவோம்

‘இயற்கை வேளாண்மை என்றால், வேளாண்மையே செய்யாமல் இருப்பது’ என்றார் ஜப்பானின் மசானோபு ஃபுகுகா. ‘நிலத்தை உழாமல், ரசாயனம் பயன்படுத் தாமல், களிமண் உருண்டைகளில் விதைகளைக் கலந்து நிலத்தில் வீசி விளைவிப்பதே இயற்கை விவசாயம். இயற்கையில் எப்படித் தாவரங்கள் விளைகின்றன என்று கவனித்து அதைக் கடைப்பிடிப்பதே இயற்கை வேளாண்மை” என்றார் அவர்.

ரசாயன உரம், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி விவசாயம் செய்துவந்த சுபாஷ் பாலேகர் இந்தியாவில் இயற்கை வேளாண்முறையை மேம்படுத்தினார். நான்கு அம்சங்களை அவர் வலியுறுத்துகிறார். 1. சாகுபடிக்கான விதைகளை முதலில் பசுவின் சாணத்துடனும் கோமியத்துடனும் கலக்க வேண்டும். 2. சாகுபடி நிலத்திலும் சாணத்தையும் கோமியத்தையும், மக்கிய இலை-தழை களையும் கலந்து தெளித்து தயார்படுத்த வேண்டும். 3. நிலத்தில் சத்துகள் அதிகமாக இறங்க, மூடு பயிரைச் சாகுபடி செய்ய வேண்டும். வைக்கோல் போன்ற இயற்கைப் பொருட்களைப் பரப்பி மண்ணில் ஈரப்பதத் தைத் தக்க வைத்து, மக்கவைக்கவும் வேண்டும். 4. நிலத்தின் மண் சாகுபடிக்கு ஏற்றதாக மாற, அதில் காற்றோட்டம் அதிகமாகும்படி மண்ணை மேல் கீழாகக் கிளற வேண்டும், மண்புழுக்களை அதிகம் வளர்க்க வேண்டும். பூச்சிகளால் பாதிப்பு வராமலிருக்க இயற்கை யான தடுப்பு முறைகளைக் கையாள வேண்டும் என்கிறார் பாலேகர்.

ரசாயன உரங்கள் பயன்படுத்திய சாகுபடியைவிட இயற்கை சாகுபடியில் மகசூலானது பணப் பயிர், உணவுப் பயிர் இரண்டிலுமே அதிகம். 2017 கரீப் பருவத் தில் பருத்தியில் 11%-ம், கேழ்வரகில் 40%-ம் கூடுதல் விளைச்சல். உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் போடாத தால் இடுபொருள் செலவு கிட்டத்தட்ட பூஜ்ஜியம்தான். லாபமும் அதிகம். 2016-ல் முழுக்க முழுக்க இயற்கை வேளாண்மையைக் கடைப்பிடிக்கும் மாநிலமாக சிக்கிம் அறிவிக்கப்பட்டது. மாநிலம் முழுக்கப் பயன்படுத்தப்பட அதிக தழைச்சத்து, சாம்பல்சத்து, மண்புழு கலந்த இயற்கை எரு (உரம்) தேவை. இதைச் சிறு விவசாயிகள் வாங்குவதற்கு அதிகம் செலவிட வேண்டும்.

பிற மாநிலங்களுக்கு முன்மாதிரி

ஆந்திர மாநிலத்தில் ரசாயனத்தை மையமாகக் கொண்ட வேளாண்மையிலிருந்து விடுபட்டு, வேளாண் சூழலை மேம்படுத்தும் இயற்கை வேளாண்மைக்குத் திட்டமிட்ட முறையில் படிப்படியாக மாறிவருகின்றனர். இப்படி மாற பல்வேறு துறைகள் ஒத்துழைக்க வேண்டும். அரசியல் தலைமையும் அதிகார வர்க்கமும் துணை நிற்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். மாநிலத்தில் விவசாயிகள் - பொதுமக்கள் இணைந்து மேற்கொண்ட பல்வேறு திட்டங்களில் கிடைத்த அனுபவமும் வெற்றி யும் பக்கபலமாக இருக்கின்றன. எந்தவொரு திட்டமும் வெற்றிபெற அது மக்கள் நிலையிலிருந்து தொடங்கி, படிப்படியாக வளர்ந்து, மேல்நோக்கி விரிவடைய வேண்டும். இதை எல்லா மாநிலங்களிலும் அமல்படுத்துவது எளிது.

இயற்கை வேளாண்மைச் சாகுபடி முறையானது நிலம், உயிரிப் பெருக்கம், வாழ்க்கைமுறை, தண்ணீர், ரசாயனம் படிவதைக் குறைப்பது, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் ஆற்றல், மனிதர்களின் சுகாதாரம், மகளிருக்கு அதிகாரம், ஊட்டச்சத்து என்று எல்லாவற்றுக்கும் நன்மைகளையே தருகிறது. விவசாயிகள் தற்கொலையில் முன்னணியில் இருக்கும் ஐந்து மாநிலங்களில் ஆந்திரமும் ஒன்று. விவசாயக் கடன் சுமை, சாகுபடி பொய்த்துப்போவது ஆகியவையே தற்கொலைக்கு முக்கியக் காரணங்கள்.

இயற்கை வேளாண்மை என்பது புதிய கண்டுபிடிப்பல்ல, ஏற்கெனவே கடைப்பிடிக்கப்பட்ட தொழில்நுட்பத்தை விவசாயிகளுக்கு மறு அறிமுகம் செய்வதுதான். விவசாயத் துறை வளம் பெற, ஆட்சியாளர்களுக்கு விஜய்குமார் கூற விரும்பும் ஒரே அறிவுரை இதுதான்: “விவசாய வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் என்று வேளாண் விஞ்ஞானிகளைக் கேட்காதீர்கள், விவசாயிகளைக் கேளுங்கள்” என்பதுதான் அது.

- சுஜாதா பைரவன், அறிவியல், தொழில்நுட்பம், கொள்கை ஆகியவற்றின் ஆய்வாளர்

தமிழில்: சாரி, ‘தி இந்து’ ஆங்கிலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x