Published : 22 Jun 2018 07:53 AM
Last Updated : 22 Jun 2018 07:53 AM

காஷ்மீர் அரசின் வீழ்ச்சி காஷ்மீரோடு முடியப்போவதில்லை!

மு

ஃப்தி முகம்மத் சய்யீத் தலைமையிலான மஜகவும் (மக்கள் ஜனநாயகக் கட்சி) பாஜகவும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்தது அந்த நேரத்தில் அவர்களுக்கு அவசியமாக இருந்தது. அதே சமயம் கொள்கை-குறிக்கோள்கள் அற்ற அரசியல் சந்தர்ப்பவாதக் கூட்டணியாகவும் அது இருந்தது. பொருந்தாத கூட்டணியால் இரு கட்சிகளுக்கும் ஏற்பட்டிருந்த தருமசங்கட நிலை இப்போது முடிவுக்கு வந்துவிட்டது. மஜக அரசியல் களத்தில் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டது. 2019 மக்களவைப் பொதுத் தேர்தலின்போது காஷ்மீர் பிரச்சினையைத் தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்த பாஜக முடிவெடுத்துவிட்டது புலனாகிறது.

இரு கட்சிகளும் சேர்ந்து அரசு அமைப்பது தொடர்பாக 2015 ஜனவரி தொடங்கி, நாளது வரையில் நிகழ்ந்த அரசியல் நிகழ்வுகள் அனைத்துமே மாநில நலனைவிட சொந்த அரசியல் ஆதாயம் கருதி செய்யப்பட்டவைதான். அரசியல் களத்தில் நேரெதிராக நின்று ஒன்றையொன்று தாக்கிப் பேசிய கட்சிகள், தேர்தல் முடிவு ஏற்படுத்திய விசித்திரமான நிலையில் நெருங்கிவந்து ஆட்சி அமைத்தன. அதற்கும் முன்னதாக பொது செயல்திட்டம் ஒன்றை விவாதித்து முடிவெடுத்தன. ஆனால், அதை எப்போதும் அமல்படுத்த அக்கறை காட்டியதே இல்லை. முக்கியமில்லாதவற்றுக்கே இரண்டும் முன்னுரிமை தந்தன.

பாஜக கணக்கு என்ன?

பொது செயல்திட்டத்தை மஜக அமல்படுத்த பாஜக அனுமதித்ததே இல்லை. காஷ்மீரத்தின் அமைப்புப்படி பாஜகவால் ஒருகாலத்திலும் ஆளும் கட்சியாக வளர முடியாது. எனவே, கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி அரசில் பங்கேற்றது. தனக்கு வேண்டியவர்களை, வேண்டிய இடத்தில் பதவியில் அமர்த்த இந்த வாய்ப்பை பாஜக பயன்படுத்திக்கொண்டுவிட்டது. மஜகவை உதறுவதற்கு இதுவே சரியான தருணம் என்று பாஜக முடிவெடுத்துவிட்டது. மஜக கூட்டணியால் பாஜகவுக்கு இனி காஷ்மீரத்தில் ஆக வேண்டியது எதுவுமில்லை. எதிர்காலத்தில் விரும்பியபடி செயலாற்ற மஜக ஒரு தடையாகவே உடனிருக்கும் என்று பாஜகவுக்குத் தெரியும்.

மஜக கணக்கு என்ன?

மஜகவை காஷ்மீரிகளில் பலர் ‘சாதுவான பிரிவினைவாதி’ என்றே கருதுகின்றனர். பாஜகவுடன் சேர்ந்து ஆட்சியில் இருப்பதால் காஷ்மீரிகளிடையே அக்கட்சிக்கு ஆதரவு சரிந்துவிட்டது. 2019 மக்களவைப் பொதுத் தேர்தல் மட்டுமல்ல, இனி எந்தத் தேர்தலிலும் மஜக வெற்றிபெறுவது கடினம்தான்.

எனவே, கூட்டணியிலிருந்து தோழமைக் கட்சியை விலக்குவது என்ற முடிவை பாஜக முதலில் எடுத்ததன் மூலம் மஜக கடும்பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. பாஜகவை நம்பி ஆட்சி அமைத்த மஜகவுக்கு இனி அரசியல் எதிர்காலம் வளமாக இருக்காது.

காஷ்மீரில் அரசியல் நடத்தும் தார்மிக உரிமையை அது எப்போதோ இழந்துவிட்டது. அந்தக் கூட்டணியைக்கூட பாஜகதான் முறித்தது, மஜக கடைசிவரையில் பதவிக்காக ஒட்டிக்கொண்டிருந்தது என்ற அவப்பெயரே அதற்கு மிஞ்சும்.

பாஜக முடிவு என்னவாகும்?

கதுவா சிறுமி பாலியல் வல்லுறவு-கொலை வழக்கு தொடர்பாக பாஜகவின் சட்ட மன்ற உறுப்பினர்கள் 2 பேர் மீது நடவடிக்கை எடுத்ததை, கட்சிக்காரர்களும் ஜம்முவாசிகளும் ஏற்கவில்லை. ஆட்சி போனாலும் மாநில ஆளுநரைக் கொண்டே பாஜகவால் ஆட்சி நடத்த முடியும். வேண்டியவர்களை வேண்டிய பதவிகளில் நியமித்துக்கொள்ள முடியும். மறைமுகமாக, முழுமையாக ஆட்சியைத் தன்னால் நடத்த முடியும் என்று நம்புகிறது பாஜக. ஆனால், விளைவுகள் எல்லாமே சுமுகமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை ஏற்படுத்த எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டுவரும் வேளையில், ஆட்சியமைக்க உதவிய கட்சியை பாஜக தூக்கி எறிந்திருப்பதால், பாஜகவைத் தீவிரமாக எதிர்க்க வேண்டும் என்ற உணர்வையே எல்லா கட்சிகளுக்கும் ஏற்படுத்தும்.

கூட்டணியை முறித்துக்கொண்டு அரசிலிருந்து வெளியேறியதற்கான காரணங்களாக பாஜக கூறுவன வியப்பைத் தருகின்றன. மாநிலத்தின் பாதுகாப்பு நாளுக்குநாள் மோசமாகிவருவதாகவும், அதற்குக் காரணம் இன்னொரு கட்சிதான் என்றும் கூறியிருக்கிறது. மாநிலத்தில் பாதுகாப்பு நிலைமை மோசமாகிவருகிறது என்பது உண்மைதான். ஆனால், பெயரளவுக்கு பாதுகாப்புப் படையின் மாநிலத் தலைவராக முதலமைச்சர் இருந்தாலும், அனைத்து பாதுகாப்புப் படைகளுமே டெல்லியின் கட்டளைப்படிதான் செயல்படுகின்றன. பாதுகாப்பு நிலைமை மோசமானதற்கான நேரடிப் பொறுப்பு டெல்லி அரசுக்குத்தான் அதிகம். அப்படியே மாநில அரசுதான் காரணம் என்றாலும் அந்த அரசில் இதுவரை உடனிருந்தது பாஜகதான். எனவே, பழிகளை மஜக மீது போடுவது வெறும் சாக்குதான்.

காஷ்மீரில் நிலைமை மோசமாகிவிட்டது என்று அறிவித்ததன் மூலம் தன்னுடைய காஷ்மீர் கொள்கை ஓட்டையானது என்பதை பாஜகவே ஒப்புக்கொண்டுவிட்டது. நீக்குபோக்கு இல்லாத, அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்துச்செல்ல வேண்டும் என்ற ராஜதந்திரம் இல்லாத, முரட்டுத்தனமான அடக்குமுறைக் கொள்கையால் அமைதி ஏற்படுவதற்குப் பதிலாக அமைதியின்மைதான் பரவிக்கொண்டிருக்கிறது. இதனால் வன்செயல்கள், பயங்கரவாதம், எல்லைக்கு அப்பாலிருந்து விஷமிகள் ஊடுருவுவது, பயங்கரவாதிகளுடன் இளைஞர்கள் சேர்வது என்று எல்லாமே அதிகரித்துவிட்டன. காஷ்மீரின் அமைதியின்மை மாநிலத்திலும் தேசிய அளவிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு சர்வதேச அளவிலும் இந்தியாவின் மதிப்பைக் குலைக்கும்.

இனி என்னவாகும்?

மஜகவால் ஜம்முவில் ஒரு இடத்தையும் வெல்ல முடியவில்லை. இனி காஷ்மீர் பகுதியிலும் அதே நிலை ஏற்படக்கூடும். காங்கிரஸும் தேசிய மாநாட்டுக் கட்சியும் மஜகவின் இடத்தைப் பிடிக்க முற்படும். பாஜகவும் மஜக பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்க முடியுமா என்று பார்க்கும்.

காஷ்மீரில் மக்களுடைய பிரதிநிதிகளின் ஆட்சியில்லை, டெல்லிதான் நேரடியாக ஆள்கிறது என்பதால் பிரிவினைவாதிகளும் அவர்களை ஆதரிக்கும் பயங்கரவாதிகளும் தாக்குதல்களை ஆரம்பிப்பார்கள். இதனால்தான், நாங்கள் வெளியேறினோம் என்று பாஜகவும் தனது முடிவை நியாயப்படுத்தும். ராணுவ பலத்தைக் கொண்டே ஒடுக்கிவிடலாம் என்று டெல்லி முயன்றால் மேலும் பல இளைஞர்கள் பயங்கரவாதிகளுடன் சேர்ந்துகொள்வார்கள். இதன் விளைவாக மக்கள், பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினர் என்று மூன்று தரப்பிலும் உயிர்ச் சேதம் அதிகரிக்கும். கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டிலிருந்து ஏராளமானோர் இந்தியப் பகுதிக்குள் ஊடுருவுவார்கள். இரு நாட்டு ராணுவங்களும் பதிலுக்கு பதில் தாக்குதலில் இறங்கும்.

இனி எதிர்காலமே இல்லையென்றாகிவிட்ட மஜகவுக்கு இரண்டே வழிகள்தான் உள்ளன. பிரிவினையை முன்பைவிடத் தீவிரமாக ஆதரிப்பது அல்லது அரசியலில் செல்வாக்கிழந்த கட்சியாகத் தேய்வது. பிரிவினைவாதிகளை மஜக ஆதரிக்க முற்பட்டால் அது அரசியல்–பாதுகாப்பு சூழ்நிலையை மேலும் மோசமாக்கிவிடும். இதன் விளைவு நாட்டின் பிற பகுதிகளிலும் அரசியல்ரீதியாக எதிரொலிக்கும்!

- ஹேப்பிமோன் ஜேகப் , புதுடெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத் துணை பேராசிரியர்.

சுருக்கமாகத் தமிழில்: சாரி,

தி இந்து ஆங்கிலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x