Published : 22 Jun 2018 07:53 AM
Last Updated : 22 Jun 2018 07:53 AM

மருத்துவ சுற்றுலா நகரமாக மாறும் மதுரை: ‘எய்ம்ஸ்’ வருகையால் தொழில் முதலீடுகள் குவிய வாய்ப்பு

எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பதால் மருத்துவ சுற்றுலா நகராக மதுரை மாறுவதுடன், பல கோடி ரூபாய்க்கு தொழில் முதலீடுகள் குவிய வாய்ப்புள்ளது.

மதுரை அருகே தோப்பூரில் ரூ.1,500 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. வட, தென் மாவட்டங்களை இணைக்கும் பெருநகரம் மதுரை என்பதால் தோப்பூரில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனையால் கன்னியாகுமரி முதல் திருச்சி வரை உள்ள 18 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பயன்பெறுவார்கள். அதோடு, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களும் இங்கு சிகிச்சைக்கு வருவார்கள்.

தமிழகத்துடன் சேர்த்து அறிவிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், அசாம் மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் நிறைவுபெறும் நிலையில் உள்ளன. தமிழகத்தில் இடம் தேர்வு செய்வதற்கே தாமதமாகிவிட்டது. எனவே, தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானப் பணியை விரைவாக தொடங்கி முடிக்க வேண்டும்.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு நான்குவழிச் சாலையுடன் இணைப்பு, குடிநீர் வசதி, 20 மெகாவாட் திறன் கொண்ட மின்சார வசதி மற்றும் நிலம் ஒப்படைப்பு உள்ளிட்ட நிபந்தனைகளை மாநில அரசு விரைவாக நிறைவேற்ற வேண்டும். இப்பணிகளை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மேற்பார்வையில் மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தலைமையில் தனிக்குழுவினர் தொடங்கி உள்ளனர்.

எய்ம்ஸ் அமைய உள்ள இடத்துக்கு காஷ்மீர் - கன்னியாகுமரி நான்குவழிச் சாலையில் இருந்து ஆஸ்டின்பட்டி, கூத்தியார்குண்டு ஆகிய இடங்களில் நேரடி இணைப்புச் சாலை வசதி உள்ளது. மேலும், இந்த பகுதிக்கு திருமங்கலம் - செக்காணூரணி சாலையில் கரடிக்கல் பிரிவு சாலை, வீட்டுவசதி வாரியம் துணைக்கோள் நகரம் இருவழிச் சாலை வழியாகவும் செல்லலாம்.

30 கிராமங்கள் நேரடி பயன்

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேர்வான இடம் முழுக்க முழுக்க செம்மண் பூமி என்பதால் 200 அடியில் சுவையான நிலத்தடி நீர் கிடைக்கிறது. அருகில் கரடிக்கல், குன்னனம்பட்டி, கீழஉரப்பனூர், மேல உரப்பனூர், ஆஸ்டின்பட்டி, உச்சப்பட்டி, மூனான்டிப்பட்டி, தென் பழஞ்சி, சாக்கிலிப்பட்டி, கே.புதுப்பட்டி, தோப்பூர், வேடர் புளியங்குளம் உட்பட 30 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமப் பகுதிகளில் மானாவாரி விவசாயம் நடைபெறுகிறது. தற்போது மழை இல்லாததால் இந்த நிலங்கள் பெரும்பாலும் சாகுபடியின்றி உள்ளன. எய்ம்ஸ் வருவதால் இந்த நிலங்கள் வர்த்தக ரீதியான பயன்பாட்டுக்கு பெரும் உதவியாக இருக்கும். இப்பகுதியை சேர்ந்த 30 கிராம மக்கள், நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகளை பெறுவர்.

முதலீடுகள் அதிகரிக்கும்

எய்ம்ஸ் மருத்துவமனையில் நேரடியாகவும், மறைமுகமாவும் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதுவரை கோயில் நகரம் என்ற பெருமை பெற்ற மதுரை விரைவில் மருத்துவ சுற்றுலா நகரமாக மாற வாய்ப்புள்ளது. தினமும் பல ஆயிரம் பேர் வெளியூர்களில் இருந்து வருவர். இதற்காக ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், வணிக வளாகங்கள் புதிதாக தொடங்கப்படும். சாலை போக்குவரத்து வசதிகள் அபரிமிதமாக வளர்ச்சி பெறும். அதனால், எய்ம்ஸ் அருகே புதிய பஸ்நிலையம், வாகன நிறுத்தும் இடங்கள் உருவாகும். ரயில், விமானப் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக உயரும். பஸ்கள், டாக்ஸி, ஆட்டோக்கள் பயன்பாடு அதிகரிப்பதால் சுற்றுவட்டார இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். சிறு, குறு தொழில்களில் ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெறுவார்கள். மதுரையை சுற்றி 2, 3-ம் சுற்றுச்சாலைகள் விரைவாக அமையும். மருத்துவ சுற்றுலா வளர்ச்சிபெற வாய்ப்புள்ளது.

மதுரையில் மட்டுமின்றி அதன் அருகே உள்ள தென் மாவட்டங்களிலும் மருத்துவம், கல்வி, தொழில் வளர்ச்சி ஏற்படவும், வேலைவாய்ப்பு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. பல ஆயிரம் கோடிவரை புதிய தொழில் முதலீடுகள் கிடைக்கும். இதனால் எய்ம்ஸ் தொடர்பான அறிவிப்பு, மதுரை மற்றும் சுற்றுப்புறப் பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ சுற்றுலா

இதுகுறித்து வேலம்மாள் மருத்துவக் கல்லூரி தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம் கூறியதாவது:

MDUMUTHURAMALINGAM எம்.வி.முத்துராமலிங்கம்  

மதுரையில் மருத்துவ சுற்றுலா வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். மருத்துவம் தொடர்பான உப தொழில்கள், நிறுவனங்கள் அதிகரிக்கும். தென் மாவட்டங்கள் மட்டுமின்றி, தென் மாநிலங்கள், பல்வேறு நாடுகளிலிருந்து சிகிச்சைக்காக மதுரைக்கு ஏராளமானோர் வருவர். சுற்றுலா சார்ந்த தொழில்கள் வளரும். கடும் போட்டி உருவாவதால் குறைந்த செலவில் தரமான மருத்துவ வசதிகளை மக்கள் பெறுவர்.

தொழில் வர்த்தக சங்க முதுநிலைத் தலைவர் எஸ்.ரத்தினவேல்:

தென் தமிழகத்தில் பல உள்நாட்டு, வெளிநாட்டு தொழில் முனைவோர் மதுரை-தூத்துக்குடி பெருவழிச்சாலையில் தொழில் தொடங்க முன்வருவர். தொழில் பொருளாதார வளர்ச்சி மேம்படும். இதனால் மதுரை நேரடியாக பயன்பெறும். மதுரை ரயில் நிலையம், விமான நிலையம், பேருந்து நிலையம் மேம்படுத்தப்படும். பயணிகள் வரத்து அதிகரிக்கும் என்பதால் மதுரையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். 10 ஆயிரம் பேருக்கும் மேல் நேரடி, மறைமுக வேலைவாய்புகள் உருவாகும்.

ரியல் எஸ்டேட் வளரும்

எய்ம்ஸ்க்கான மக்கள் இயக்கத் தலைவர் எம்.மணிமாறன்:

மருத்துவம் சார்ந்த சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் நிறைய வரும். ஆட்டோ, கார் ஓட்டுநர்கள், உணவக தொழிலாளர்கள், சிறிய கடைகள், உணவு தயாரிப்பாளர்கள் என பல வழிகளில் வேலைவாய்ப்புகள் உருவாகும். ரியல் எஸ்டேட் தொழில் நல்ல வளர்ச்சி பெறும். மதுரை மாநகர் மேலும் 10 கி.மீ. விரிவாக்கம் செய்ய வாய்ப்பு உருவாகும். திருமங்கலம் வரை இந்த வளர்ச்சி நீடிக்கும். திருமங்கலம்- செக்காணூரணி பகுதியில் ஏற்படும் வளர்ச்சியின் தாக்கம் உசிலம்பட்டி வரை இருக்கும்.

கரடிக்கல் கிராம விவசாயி சேதுராமன்:

MDUAIIMS-sethuraman சேதுராமன்  

எங்கள் கிராமத்தினர் எல்லையில்லா மகிழ்ச்சியில் உள்ளனர். வெளிநாடுகளிலிருந்து இங்கு சிகிச்சைக்கு பலர் வர உள்ள நிலையில், சைக்கிளில் சென்று சிகிச்சை பெறும் வசதியை பெற்றுள்ள நாங்கள்தான் பாக்கியசாலிகள்.

கிராமங்களிலும் நல்ல வளர்ச்சி

கட்டுமானப்பணியில் இப்பகுதியைச் சுற்றியுள்ள 20 கிராமத்தினருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். எங்கள் சந்ததியினர் நல்ல பலனை பெறுவர். விவசாய நிலத்தின் மதிப்பு உயரும். கிராமத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும். சாலை, போக்குவரத்து வசதிகள் மேம்படும். தற்போது ஏக்கர் ரூ.5 லட்சம் முதல் 30 லட்சம்வரை விற்கிறது. விரைவில் 2 மடங்காக உயரும். தற்போதே ஏராளமானோர் இங்கு வலம்வர தொடங்கிவிட்டனர். எல்லாவற்றுக்கும் மேலாக உள்ளூரைச் சேர்ந்தவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x