Last Updated : 10 Jun, 2018 09:34 AM

 

Published : 10 Jun 2018 09:34 AM
Last Updated : 10 Jun 2018 09:34 AM

அடித்தட்டு மக்களின் கனவை நொறுக்கும் நீட்!

 

நீ

ட் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. தமிழகத்திலிருந்து 60 சதவீத மாணவர்கள் தகுதி மதிப்பெண்கூட வாங்க முடியாமல் தோல்வியடைந்திருக்கிறார்கள். தகுதி மதிப்பெண் பெற்றிருக்கும் பிற மாநில மாணவர்கள், ‘பழைய கேள்வித்தாள்களுக்கு விடை எழுதிப்பார்த்தேன்' என்று ஒருவர் பாக்கியில்லாமல் சொல்லியிருக்கிறார்கள். தமிழ் வழிக் கல்வி மாணவர்களுக்கு இது பெரிய சவால். தமிழில் நீட் தேர்வுக்கான பழைய வினாக்கள் எதுவுமே இல்லை. சரியான புத்தகமும் இல்லை.

தமிழ் வழிக் கல்வி மாணவர்களுக்கு அரசு தயாரித்துக் கொடுத்த ஒரு புத்தகம் தவிர பெரிய அளவில் எதுவும் சந்தையில் இல்லை. 12-ம் வகுப்பு பாடங்கள் மட்டுமே நீட் தேர்வுக்குப் போதுமானவை என்று சொல்ல முடியாது. சிபிஎஸ்இ-யின் பிற வகுப்புகளிலிருந்தும்கூட கேள்விகள் வருகின்றன. நீட் மாதிரியான தேர்வுக்கு தனித்த கவனத்துடன் படிக்க வேண்டியிருக்கிறது.

அமர்ந்து படித்தால் மட்டும் மதிப்பெண் வாங்குகிற சூட்சுமம் நீட் தேர்வில் இல்லை. இயற்பியல், வேதியியல் பாடங்களில் நெகட்டிவ் மதிப்பெண்கள் வாங்கியவர்கள் எண்ணிக்கை வெகு அதிகம். எல்லாவற்றையும் திருகி, நுணுக்கிக் கேட்டு வைக்கிறார்கள். தவறான பதில்களுக்கு மதிப்பெண்களை இழக்க நேரிடும் என்கிற புரிதல்கூட கிராமப்புற மாணவர்களிடம் இல்லை என்பதுதான் நிஜம். இந்த இடத்தில்தான் தனியார் பயிற்சி நிறுவனங்கள் கொழிக்கிறார்கள். லட்சக்கணக்கில் பணத்தை வாங்கிக்கொண்டு சூட்சுமங்களைச் சொல்லித்தருகிறார்கள். இதெல்லாம் கிராமப்புற மாணவர்களுக்கு எவ்வளவு தூரம் சாத்தியமாகும்?

தனியார் பயிற்சி நிறுவனங்களில் நீட் தேர்வுக்கு என்றே பயிற்சியளிக்கும் ஆசிரியர்களை ராஜஸ்தானிலிருந்தும் ஆந்திராவிலிருந்தும் அழைத்துவருகிறார்கள். அவர்களின் முழுநேரத் தொழிலே இதுதான். வெவ்வேறு வினாத்தாளின் விடைகளோடு தயாராக இருக்கிறார்கள். இவர்களோடுதான் நமது அரசுப் பள்ளி ஆசிரியர்கள் போட்டியிட வேண்டியிருக்கிறது. சரியான புத்தகம் இல்லாமை, படிக்கும் முறை தெரியாதது, சொல்லித் தரும் ஆசிரியர்களிடமிருக்கும் குறைபாடுகள் எனச் சகலமும் சேர்ந்து கிராமப்புற மாணவர்களைத் திணறடிக்கின்றன.

பத்தாம் வகுப்பில் 450 மதிப்பெண்கள், 12-ம் வகுப்பில் ஆயிரத்தை தாண்டியிருந்தாலும்கூட நீட் தேர்வில் 720-க்கு 100 மதிப்பெண்க்கூடத் தாண்ட இயலாததன் பின்னால் இருக்கும் காரணங்கள் இவையே. நகர்ப்புறங்களில் கடுமையான பயிற்சி பெற்ற மாணவர்களுடன், கிராமப்புறங்களில் படித்த மாணவர்களை ஓடச் செய்வது நியாயமே இல்லை. நீட் தேர்வில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளைப் பேசுகிற அதே சமயம் நீட் தேர்வு குறித்து மாணவர்களிடையே உருவாகி இருக்கும் இத்தகைய அச்ச உணர்வு பற்றியும் நாம் பேச வேண்டியிருக்கிறது. தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் இருக்கும் குழப்பங்கள் தொடங்கி தேர்வறைகளில் காட்டப்படும் கண்டிப்பு வரை எல்லாமே கிராமப்புற மாணவர்களுக்கு மிரட்சியை உருவாக்குகின்றன. வெளியுலகத்தை இதுவரை பார்த்திராத பிஞ்சு மனதில் உருவாகும் இந்தப் பயமே பல மாணவர்களை மனதளவில் வீழ்த்திவிடுகிறது.

இவற்றையெல்லாம் சரி செய்யாமல் ‘பாடத்திட்டத்தை மாற்றினால் போதும்' என்று பேசுவது அபத்தம். பாடத்திட்டத்தை மாற்றுவது என்பது வெறும் கண் துடைப்பாகவே இருக்கும்.

நீட் நமக்கு முன்பாக உருவாக்கியிருக்கும் சவால்கள் மிகச் சிக்கலானவை. பல காரணிகள் பின்னாலிருக்கின்றன. ஒவ்வொன்றாகத் தீர்க்க வேண்டும். அதற்குப் பல ஆண்டுகள் ஆகக்கூடும். அதுவரை பல்லாயிரம் மாணவர்கள் தமது கனவை இழப்பார்கள். எதிர்மறையாக, நம்பிக்கை இழக்கக்கூடிய வகையில் சொல்லவில்லை. உண்மையில் களத்தில் இறங்கி பார்ப்பதற்கு முன்பாக இதுவொன்றும் பெரிய காரியமில்லை என்றுதான் தோன்றியது. கடந்த ஓராண்டு அனுபவத்தில், மாணவர்களிடம் பழகியதிலிருந்து ஒன்றைத் தெரிந்துகொள்ள முடிந்தது - நீட் கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு எதிரானது. அடித்தட்டு மக்களின் மருத்துவக் கனவை அடித்து நொறுக்கக் கூடியது. பொதுவாகவே நுழைவுத் தேர்வு என்று ஒன்றை நடத்துவதாக இருந்தால், அது சகலமானவர்களுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். ஒரு சாராரை நசுக்குவதாக இருந்தால் அத்தகைய தேர்வு முறைகள் முழுமையாக அகற்றப்பட வேண்டும். இன்றைய சூழலில் நீட் அப்படியானதொரு தேர்வு. அரசு சட்ட ரீதியாகப் போராடி நீட் தேர்வை ரத்துசெய்வதுதான் ஒரே வழியாகத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x