Last Updated : 27 Apr, 2018 09:30 AM

 

Published : 27 Apr 2018 09:30 AM
Last Updated : 27 Apr 2018 09:30 AM

என்னவாகும் நேரு கண்ட இந்தியா?

பி

ரிவினைக் கலவரங்கள் உச்சத்தில் இருந்த 1947-ல் ஒரு நாள் டெல்லியின் சாந்தினி சவுக் பகுதி வழியாகத் தனது அம்பாசிடர் காரில் சென்றுகொண்டிருந்தார் பிரதமர் நேரு. கொந்தளிப்பான காலகட்டம் என்றாலும், இன்றிருப்பதைப் போல அன்று பிரதமருக்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் கிடையாது. ஒரு திருப்பத்தில் கும்பலாகச் சிலர் முஸ்லிம் ஒருவரைத் தாக்கிக்கொண்டிருப்பதைக் கண்ட நேரு, தனது காரை வேகமாக அங்கே செலுத்தச் செய்ததோடு, காரிலிருந்து இறங்கி அந்த இடத்தை நோக்கி ஓடினார். அந்த இஸ்லாமியர் மீட்டெடுக்கப்படும்வரை அவர் அங்கிருந்து விலகவில்லை. இன்னொரு சம்பவம். ஒருமுறை பாதுகாப்பு அதிகாரிகள் அவரை அணுகி, “உங்களுடைய சமையலறையில் பணிபுரியும் இஸ்லாமியர்களை, குறிப்பிட்ட காரணங்களுக்காக இடம் மாற்றிவிடலாமா?” என்று கேட்டபோது, அந்தப் பேச்சுக்கே இடமில்லை என்று தீர்மானமாக மறுத்துவிட்டார் நேரு.

இஸ்லாமியர்களை ஓர் அச்சுறுத்தலாகப் பார்க்கும் சமூகப் போக்கு நேருவை ஆழமாகப் பாதித்தது. இந்திய ஜனநாயகம் தழைத்திருக்க வேண்டுமானால், சிறுபான்மையினரின் நலன்கள் காக்கப்பட வேண்டும்; எந்த வகையிலும் மதம் சார்ந்து அவர்கள் பாகுபடுத்தப்படக் கூடாது என்று நம்பினார். “வெறும் வாய் வார்த்தையில் சொன்னால் போதாது, நாங்கள் இந்தியாவுக்கு விசுவாசமாக இருப்போம் என்று செயலளவிலும் முஸ்லிம்கள் நிரூபிக்க வேண்டும்” என்று மூத்த தலைவரான வல்லபபாய் படேலே பகிரங்கமாகப் பேசிக்கொண்டிருந்த சமயத்தில், நேரு மதச்சார்பின்மையைத் தன்னுடைய அடிப்படை அரசியல் கோட்பாடுகளுள் ஒன்றாக முன்னிறுத்தினார் என்பது முக்கியமானது. கட்சிக்கு உள்ளேயே புகைச்சல்கள் இருந்தாலும், நேருவின் ஆளுமையைக் கண்டு அஞ்சி அவர் பின்னால் காங்கிரஸ் தலைவர்கள் அணி திரள வேண்டியிருந்தது.

தலைகீழ் மாற்றங்கள்

நேருவின் இந்தியாவை நரேந்திர மோடி தலைகீழாகத் திருப்பிப் போட்டிருக்கிறார். நேரு மிகவும் சிரமப்பட்டு அழுத்தி வைத்திருந்த அனைத்தும் இன்று வீறுகொண்டு எழுச்சிபெற்றிருக்கின்றன. அவர் எவற்றையெல்லாம் வலியுறுத்தியிருந்தாரோ அவையனைத்தும் பலமிழந்துவருகின்றன. மதச்சார்பின்மை, அறிவியல் கண்ணோட்டம், ஜனநாயகப் பற்று, பகுத்தறிவு நாட்டம், சமத்துவ வேட்கை, அறிவுத் தேடல் அனைத்தும் வேகவேகமாக அழிக்கப்பட்டுவருகின்றன. பிரிவினையும் வகுப்புவாதமும் எதிர்காலம் குறித்த நிச்சயமின்மையும் பரவிக்கிடந்த கொந்தளிப்பான ஒரு காலகட்டத்தில், நேரு பெரும்பான்மை இந்து மதத்தின் பக்கம் சாயாமல் நடுநிலை வகித்து சமூக ஒழுங்கை நிலைநாட்டினார். நேரு வெறுத்தொதுக்கிய வகுப்புவாதம் இன்று புதிய பலத்துடன் செழிப்படைந்திருக்கிறது. அதற்கான விலையை நாம் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். தேசத்தின் சமூக ஒழுங்கு குலைந்து, மீண்டும் ஒரு கொந்தளிப்பான காலகட்டத்துக்கு இந்தியா திரும்பிக்கொண் டிருக்கிறது.

சிறுபான்மையினருக்கும் பெண்களுக்கும் எதிரான சிந்தனைப் போக்கும் குற்றச்செயல்களும் புது பலத்துடன் அதிகரித்துள்ளன. யாரோ சில உதிரிகள் அல்ல, முக்கியப் பொறுப்பில் உள்ளவர்களே அஞ்சத்தக்க வகையில் பேசுகிறார்கள், அருவருப்பூட்டும் செய்கைகளில் ஈடுபடுகிறார்கள், ஆபத்தான அரசியலை முன்னெடுக்கிறார்கள். வன்முறை, சாதியம், மதவாதம், வகுப்புவாதம், ஆணாதிக்கம் அனைத்தையும் பெருமிதத்தோடு உயர்த்திப் பிடிக்க ஒரு பெருங்கூட்டம் தோன்றியிருக்கிறது. நவீன அறிவியல் கண்ணோட்டமும் முற்போக்குச் சிந்தனைகளும் வெறுத்து ஒதுக்கப்படுவதன் விளைவு இது. சகிப்புத்தன்மை ஒரு வசைச் சொல்லாக மாறிவிட்டதால், பட்டவர்த்தனமாகவே வெறுப்புக் குற்றங்கள் பெருக ஆரம்பித்துவிட்டன. கேள்வி கேட்கும் ஊடகம் வெறுக்கப்படுகிறது. பத்திரிகையாளர்கள் பரிகசிக்கப்படுகிறார்கள். மோசமாக அவமதிக்கப்படுகிறார்கள். அல்லது நேருவிய ஆதரவாளர்கள் என்றோ காங்கிரஸ் ஆதரவாளர்கள் என்றோ இடதுசாரிகள் என்றோ முத்திரை குத்தப்பட்டு புறக்கணிக்கப்படுகிறார்கள்.

நிறுவனமயமாகும் வெறுப்பு அரசியல்

மத நம்பிக்கை, மத அடிப்படைவாதமாக உருமாற்றப்பட்டிருக்கிறது. கத்துவா சம்பவத்தில் குற்றம் இழைத்தவர்களுக்கு ஆதரவாக பாஜகவைச் சேர்ந்த இரு அமைச்சர்கள் பேரணி நடத்தும் அளவுக்கு இந்த உருமாற்றம் விகாரமடைந்திருக்கிறது. கொல்லப்பட்டது ஓர் இஸ்லாமியக் குழந்தை என்பதும் குற்றவாளிகள் இந்துக்கள் என்பதும் குற்றத்தை நியாயப்படுத்துவதற்குப் போதுமான காரணங்களாக அமைந்துவிட்டன. உனாவில் குற்றம் இழைத்தவர் பாஜகவைச் சேர்ந்தவர் என்பதால், வழக்கைப் பதிவுசெய்வதே பெரும் சவாலாக மாறிவிட்டது. இந்தியாவைக் கடந்து சர்வதேச ஊடகங்களில் செய்திகளும் கண்டனங்களும் பெருகும் வரை மாநில அரசுகளும் மத்திய அரசும் இவை குறித்து வாய் திறக்கவில்லை. ‘காவல் துறை இப்படித்தான் நடந்துகொள்ளும் என்றால், பாதிக்கப்பட்டவர்கள் எங்கு சென்று முறையிடுவது? சட்டமும் ஒழுங்கும் முழுவதும் குலைந்துவிட்டது என்றுதான் சொல்ல முடியும்’ என்று உனாவ் சம்பவம் குறித்து அலகாபாத் உயர் நீதிமன்றம் முறையிடவேண்டிய நிலை ஏற்பட்டது.

சிவில் சமூகம் கவலைகொள்வதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. பாஜகவின் வெறுப்பு அரசியலையும் அதன் காரணமாக அதிகரிக்கும் குற்றச்செயல்களையும் ஆதரிக்க இன்று ஒரு பெருங்கூட்டம் வளர்ந்திருக்கிறது. இணையத்தை மேலோட்டமாகப் பாவிப்பவர்கள்கூட இதைக் கண்கூடாகப் பார்க்க முடியும். சிறுபான்மையினரையும் மாற்றுக் கருத்துள்ளவர்களையும் மிக மோசமாக வசைபாட ஒரு குழு உருவாகியிருக்கிறது. அதிகாரத்துக்கு எதிராகக் கேள்விகள் எழுப்புபவர்களை இந்த அடியாட்கள் துரத்தித் துரத்தி அச்சுறுத்துகிறார்கள். சம்பந்தப்பட்டவர் பெண்ணாக இருக்கும் பட்சத்தில், பாலியல்ரீதியான அருவருப்பூட்டும் வசவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது. சுருக்கமாகச் சொல்வதானால், முதல்முறையாக வெறுப்பு அரசியல் இந்தியாவில் நிறுவனமயப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்து பாகிஸ்தான்?

சுதந்திரம் அடைந்தபோது இந்தியா ஒரு குழப்பமான நிலவுடைமைச் சமூகமாக இருந்தது. நேரு அதனை 21-ம் நூற்றாண்டுக்கு எடுத்துச்செல்ல விரும்பி, பெரும் கனவுகள் கண்டார். மோடி தன்னிடம் வந்துசேர்ந்துள்ள இந்தியாவை மீண்டும் நிலவுடைமைக் காலகட்டத்துக்கு எடுத்துச்செல்ல விரும்புகிறார். நேருவின் கனவுகளுக்கும் லட்சியங்களுக்கும் நேர் எதிரானவையாக இருக்கின்றன மோடியின் கனவுகளும் லட்சியங்களும். இந்தியா எந்நிலையிலும் ஓர் இந்து பாகிஸ்தானாக மாறிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் நேரு. நேருவை எதிர்ப்பதாகச் சொல்லி மோடி இந்தியாவை மெல்ல மெல்ல அந்தத் திசையை நோக்கித்தான் நகர்த்திக்கொண்டிருக்கிறாரோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது.

- மருதன், எழுத்தாளர், ‘குஜராத் இந்துத்துவம் மோடி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x