Published : 09 Apr 2018 08:49 AM
Last Updated : 09 Apr 2018 08:49 AM

சிங்கங்களுக்கு ஆபத்தாகும் காட்டுயிர் சுற்றுலா

“சி

ங்கங்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அவற்றைப் பார்த்துக்கொண்டிருப்பதே மகிழ்ச்சியாக இருக்கும்" என்று குஜராத்தின் அம்ரேலி மாவட்ட தல்கானியா கிராம விவசாயி கூறியபோது நான் பெருமிதத்தின் உச்சிக்கே சென்றேன். உள்ளூர் மக்கள் சிங்கங்களை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்களே என்று மகிழ்ந்தேன்.

“சிங்கங்களைப் பிடிக்கும்தான். ஆனால் அவை காட்டில் மட்டுமே இருக்க வேண்டும்" என்று அவரே முடித்தபோது நானும் எனது சகாக்களும் சிரித்துவிட்டோம். "எங்களுக்கு (விவசாயிகளுக்கு) சிங்கங்கள் என்றால் உயிர், ஆனால் அவை காட்டுக்குள் மட்டுமே நடமாட வேண்டும்" என்கிறார் அந்த விவசாயி.

விவசாயிகள், கிராமம், வயல்வெளிகள், காடு என்ற சூழலில் காப்புக் காட்டுக்குள் சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதா, அதற்குச் சாதகமான அம்சங்கள் என்ன என்பதைக் கடந்த 15 ஆண்டுகளாக இங்கேயே தங்கி ஆராய்ந்துவருகிறேன். அழிவை நோக்கிச் சென்ற ஆசிய சிங்கங்களுக்குக் கடைசிப் புகலிடம் கிர் காடுகளும் அதன் சுற்றுப்புறங்களும்தான். 1995-ல் 300 எண்ணிக்கையில் இருந்த சிங்கங்கள் 2015-ல் 500-க்கும் மேல் அதிகமாகியிருக்கின்றன. கிர் காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்ற அறிவிப்பு 1965-ல் வெளியானது. அது 50 ஆண்டுகளைக் கடந்த பொன் விழாவும் கொண்டாடப்பட்டது.

எச்சரிக்கை மணி

கடந்த 25 ஆண்டுகளில் சிங்கங்கள் காப்புக் காட்டில் மட்டும் அல்ல அதைச் சுற்றியுள்ள மக்கள் குடியிருப்புகள், மலைப்பாதைகள், கடற்கரையோரப் பகுதி மற்றும் விவசாய நிலம் என்று எல்லா பகுதிகளிலும் வாழ்கின்றன. மக்கள்தொகை அதிகரிப்பும் சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரிப்பும் மிகப் பெரிய செய்திகள், வனவிலங்குக் காவலர்களுக்கு.

அதேசமயம் மனிதர்களும் சிங்கங்களும் நெருங்கி வரத்தொடங்கியிருப்பதையும் எச்சரிக்கையுடன் பார்க்க வேண்டும். இதனால், கால்நடைகளையும் மனிதர்களையும் சிங்கங்கள் தாக்குவதற்கான வாய்ப்புகளும் அதிகமாகின்றன. இயற்கையல்லாத முறையில் சிங்கங்கள் மரணிப்பது குறித்தும் செய்திகள் வருகின்றன. ரயில் பாதையில், சாலையில் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கின்றன. மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து மடிகின்றன. தாகத்துக்குக் குடிநீர் தேடி திறந்த கிணற்றில் பாய்ந்து சேறில் சிக்கியோ அடிபட்டோ இறக்கின்றன.

சிங்கங்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவங்களும் உண்டு. இவையெல்லாம் நமக்கு எச்சரிக்கை மணிகளாகும். எனவே காப்புக் காட்டுக்கு வெளியே வாழும் சிங்கங்களை மட்டுமல்ல மனிதர்களையும் காப்பாற்ற வேண்டிய சவாலான கடமை வனத் துறைக்கு ஏற்பட்டிருக்கிறது. சிங்கங்கள் இப்படி வெவ்வேறு இடங்களில் பரவிக்கிடப்பதால் கவலைப்படத்தக்க இன்னொரு விளைவும் ஏற்பட்டுவருகிறது. வனப்பகுதிகளில் சுற்றுலா செல்ல விரும்பும் சாகசக்காரர்கள் வனத் துறையினரின் எல்லைக்கு வெளியே சுற்றுவது அதிகரித்துவருகிறது. இந்த சாகச சுற்றுலாப் பயணிகள் இரவில் தங்களுடைய காரிலோ, பைக்கிலோ வீடியோ கேமராக்களைச் சுமந்தபடி செல்கிறார்கள். சிங்கங்கள் தென்பட்டால் அவற்றைச் சில கிலோ மீட்டர்களுக்கு விரட்டிச்சென்று படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொள்கின்றனர். சிங்கங்கள் இருக்கும் இடங்களைக் காட்டுமாறு கூறி உள்ளூர் வழிகாட்டுகளுக்கு அதிகபட்சம் ரூ.20,000 வரை சன்மானம் தரக்கூடத் தயாராக இருக்கின்றனர்.

“ஜீப்புகளில் வரும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக உள்ளே இருந்துகொண்டு சிங்கங்களைப் பின்தொடர்கின்றனர். கேமராவில் படம்பிடிக்கின்றனர். அவற்றைச் சீண்ட ஒலிப்பான்களையும் விளக்குகளையும் பயன்படுத்துகின்றனர். இதனால், சிங்கங்கள் அச்சமும் எரிச்சலும் அடைகின்றன. அவர்கள் செல்லும் அதே பாதை வழியாகத்தான் நாங்கள் எங்களுடைய வேலைகளுக்கும் வீடுகளுக்கும் இரவில் கையில் சிறிய டார்ச்லைட்டை மட்டும் எடுத்துக்கொண்டு செல்கிறோம். அவர்களைப் போல எங்களால் உற்சாகமாகவும் அச்சமில்லாமலும் அந்த இடங்களைக் கடக்க முடியாது" என்று அம்ரேலி மாவட்டத்தின் மால்ஷிகா கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் வருத்தத்துடன் சுட்டிக்காட்டினார். அப்பகுதியில் வாழும் பல கிராமவாசிகளும் இதைத்தான் கூறினர். சிங்கங்கள் எண்ணிக்கையில் அதிகரித்திருந்தாலும், முன்பு மக்களை அவை நேரடியாகத் தாக்கியதில்லை. இப்போது சீண்டலும் தொல்லைகளும் அதிகரித்துவருவதால் அவை கோபப்பட ஆரம்பித்துள்ளன என்று பலர் அச்சப்படுகிறார்கள்.

வனக் கோயிலுக்கு அனுமதி

கிர் தேசியப் பூங்காவின் முக்கியமான இடத்தில் கங்காய் கோயில் இருக்கிறது. சிங்கங்களின் வாழ்விடத்தில் அமைந்திருப்பதால் இங்கு இரவில் தங்க அனுமதி தந்ததில்லை. விழாக் காலங்களில் பக்தர்கள் காட்டிலேயே இரவில் தங்கிக்கொள்ளலாம் என்று குஜராத் மாநில அரசு 2017 முதல் அனுமதித்துவருகிறது. இரவில் தங்கும் பக்தர்கள் அடுப்பு மூட்டி சமைக்கின்றனர். திறந்தவெளியில் தூங்குகின்றனர். இரவு முழுக்க ஓசையெழுப்பி காட்டின் அமைதியான சூழலைக் கெடுக்கின்றனர். அத்துடன் சாகச சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் என்ற போர்வையில் வந்து இரவில் பல இடங்களுக்கும் செல்கின்றனர். வனத்துறை 20 ஆண்டுகளாக எதிர்த்துவந்த ஒரு விஷயத்தை மாநில அரசு அனுமதித்துவிட்டதால் சிங்கங்களின் பாதுகாப்பே இப்போது கேள்விக்குறியாகி வருகிறது.

அடுத்து கவலை தரும் இன்னொரு விஷயம், சுற்றுச்சூழல் மண்டலம் என்ற வரையறைக்குள்ள பரப்பளவு ஒரு கிலோ மீட்டருக்கும் குறைந்த தொலைவாக சுருக்க உத்தேசிக்கப்பட்டிருக்கிறது. இதனால் இதுவரை பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கணிசமான இடங்கள் சுற்றுலா செல்லவும் கனிமங்களை அகழ்ந்தெடுக்கவும் அனுமதிக்கப்படும்.

இவ்விரு முடிவுகளையும் எதிர்த்துப் பொதுநலன் கோரும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியைச் சுற்றியுள்ள பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கான தங்குமிட வசதிகளைச் செய்யவும் பிற வளர்ச்சித் திட்டங்களுக்கும் அனுமதி தரப்பட்டிருக்கிறது. இதனால், புதிய கட்டுமானங்கள் முளைக்கும், வனப்பகுதியின் முகமே மாறிவிடும். சாலைகள் அமைக்கப்படுவதால் வன நிலத்தின் தரமே மாறிவிடும். சிங்கங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாழ்விடங்கள் குறைந்துவிடும்.

நிபந்தனைகள் அவசியம்

சிங்கங்களின் எண்ணிக்கை உயர்வது தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும் என்றால் காட்டைக் காடாக வைத்திருக்க வேண்டும். காட்டில் உள்ள கோயில் திருவிழாவுக்காக இரவு தங்க அனுமதிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் பரப்பளவைக் குறைக்கக் கூடாது. சுற்றுலா, ஹோட்டல் துறையினரின் வருமானத்துக்காகக் காடுகளில் தங்கும் விடுதிகளையும் உணவு விடுதிகளையும் கட்ட அனுமதிக்கக் கூடாது.

கிர் காட்டில் சிங்கங்களின் எண்ணிக்கை பெருகியதற்கு, காடுகளில் சுற்றிவர சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளும் நிபந்தனைகளும் ஒரு காரணம்; காப்புக் காட்டைச் சுற்றி வாழும் மனிதர்களும் விவசாய நிலங்களும் மற்றொரு காரணம். மக்களுடைய சகிப்புத்தன்மை, கிர் காடுகளை சிங்கங்களுக்காகவே ஒதுக்க வேண்டும் என்று இதுநாள் வரையில் காட்டப்பட்ட அரசியல் உறுதி போன்றவையும் காரணங்கள். இவற்றில் எந்த சமரசமும் கூடாது. இது இப்படியே நீடித்தால்தான் எதிர்காலத்தில் இன்னொரு பொன்விழாவைக் கொண்டாட முடியும்!

- மீனா வெங்கடராமன், காட்டுயிர் உயிரியலாளர்,

தமிழில்: சாரி,

© தி இந்து ஆங்கிலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x