Published : 09 Apr 2018 08:48 AM
Last Updated : 09 Apr 2018 08:48 AM

ஸ்டாலின் பயணத்தின் இன்னொரு முக்கியத்துவம் என்ன?

ஞ்சை விவசாயிகள் எந்தக் காரணத்துக்காக ஜெயலலிதாவின் மீது மதிப்பு வைத்திருந்தார்களோ, அதே காரணத்துக்காக அவநம்பிக்கைக்கும் கோபத்துக்கும் ஆளாகியிருக்கிறது அவர் தலைமையேற்று நடத்திய அதிமுக அரசு. காவிரி நதிநீர்ப் பங்கீடு குறித்த நடுவர் மன்றத்தின் தீர்ப்பை அரசிதழில் வெளியிட ஜெயலலிதா எடுத்த முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்து 2013-ல் தஞ்சையில் நடந்த பாராட்டு விழா, கட்சிக்காரர்களின் ஏற்பாடுதான் என்றபோதிலும் விவசாயிகளின் விழாவாகத்தான் நடந்து முடிந்தது. ஆனால் இன்று?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று ஏப்ரல் 3-ல் தஞ்சையில் அதிமுக நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் தெருமுனைக் கூட்டமாகச் சுருங்கிப்போனது. தஞ்சை ரயிலடி எதிரே பந்தலைப் போட்டு அதில் சில நூறு நாற்காலிகளைப் போட்டு அடையாளப் போராட்டமாகவே அதை நடத்தி முடித்து நகர்ந்துவிட்டது அதிமுக. அதற்குச் சில நாட்களுக்கு முன்பு, இதே காரணத்துக்காக தினகரன் அணியினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் கூடுதல் கவனத்தைப் பெற்றது. ஆளுங்கட்சி நடத்திய போராட்டம் அந்தக் கவனத்தைக்கூட பெறவில்லை. இந்நிலையில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கும் காவிரி உரிமை மீட்புப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்.

வளநாடுகளின் வழியே…

ஏப்ரல் 7-ல் முக்கொம்பில் தொடங்கிய இந்தப் பயணம், காவிரிப் படுகையின் குறுக்கும் நெடுக்குமாக நீள்கிறது. அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய போராட்டம் என்பதைத் தாண்டி இந்தப் பயணத்துக்கு இன்னொரு முக்கியத்துவமும் இருக்கிறது. தஞ்சை விவசாயக் கிராமங்களினூடான பயணம் என்பதுதான் அது! தஞ்சை மாவட்டம் நிர்வாகக் காரணங்களுக்காக வட்டங்களாகவும் ஒன்றியங்களாகவும் பிரிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், அது சோழர் காலத்து வளநாடுகளின் கட்டமைப்பையும் தனக்குள் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. ஸ்டாலினின் தற்போதைய இந்தப் பயணம் வளநாடுகளின் ரேகைக்குள் நடந்துகொண்டிருப்பதுதான் விசேஷம்.

தஞ்சை என்றவுடன் விவசாய பூமி என்ற ஒரு மனச்சித்திரம் எழுந்துவிடுவது இயல்பு. ஆனால், தஞ்சையின் நான்கு திசைகளிலும் விரிந்து பரந்துகிடக்கிற வளநாடுகள் ஒவ்வொன்றும் மண் வகையாலும் அங்கு வாழும் மக்களாலும் வேறுபட்டவை. தஞ்சையின் வடமேற்குப் பகுதியான திருக்காட்டுப்பள்ளி காவிரிக்கரையின் வளமான பகுதி என்றால், தென்மேற்கில் வல்லத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் செம்மண் நிறைந்த மேட்டுப் பகுதிகளாக, காவிரி நீரால் பயனடையாத பகுதிகளாகத்தான் இன்றும் இருக்கின்றன. ஒரத்தநாட்டுக்குத் தெற்கே அமைந்துள்ள நிலப்பரப்பு, கடைமடையிலும் கடைமடையாக அதிராம்பட்டினம் கடற்கரை வரையிலும் நீண்டு கிடக்கிறது.

தன்னாட்சி நிர்வாகம்

சோழர்களின் ஆட்சிக்காலத்தில் இந்தப் பகுதிகள் அனைத்தும் வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. அப்போது தஞ்சையின் கடைமடை வரைக்கும் தண்ணீர் வந்தது. எனவே, வளநாடு என்ற பெயர் பொருத்தமாக இருந்திருக்கலாம். இன்றைக்கு அவை வெறும் பெயர்கள் மட்டுமே. தஞ்சைக்கும் ஒரத்தநாட்டுக்கும் இடைப்பட்ட பகுதிகள் காசுவளநாடு, கீழ்வேங்கைநாடு, கோணகர்நாடு, பின்னையூர்நாடு என்ற நான்கு வளநாடுகள் இருந்தன. இவை ஒவ்வொன்றிலும் 18 ஊர்கள் அடங்கியிருந்தன. இந்த நான்கு நாடுகளுக்கும் பொது இடங்களாக சிவன் கோயில்கள் அமைந்திருந்தன.

ஒரத்தநாட்டுக்குத் தெற்கே பாப்பாநாடு, கண்ணந்தங்குடி, சுந்தரநாடு, அம்புகாடி, அழும்புநாடு, கத்திவளநாடு, ஈட்டிவளநாடு என்று ஏழு வளநாடுகள் இருந்தன. அதற்குத் தென்கிழக்கே 33 கிராமங்களை உள்ளடக்கிய முசுகுந்தநாடு. இப்படி தஞ்சையைச் சுற்றியிருந்த அனைத்துக் கிராமங்களுமே வளநாடுகள் என்று தன்னாட்சி அமைப்புகளாலேயே நிர்வகிக்கப்பட்டிருக்கின்றன.

நாயக்கர்கள், மராட்டியர்கள், பிரிட்டிஷ்காரர்கள் என்று தஞ்சையை ஆண்டவர்கள் மாறிக்கொண்டிருந்தாலும் இந்தக் கட்டமைப்பு தொடர்ந்தது. இந்திய சுதந்திரத்துக்குப் பின்பும்கூட, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளால் அந்தக் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த முடியவில்லை. முக்கியமான காரணம், கீழத்தஞ்சை மாவட்டத்தைப் போல இங்குள்ள கிராமங்கள் பெருநிலக்கிழார்களின் கைகளில் இருந்ததில்லை. இங்குள்ள விவசாயிகள் பெரும்பாலும் தங்கள் நிலத்தில் தாங்களே ஏர்பிடித்து உழும் சிறுவிவசாயிகள். அதனால் அவர்கள் பெருநிலக்கிழார்களின் ஆதரவு பெற்றிருந்த காங்கிரஸ் கட்சியிலும் தங்களை இணைத்துக்கொண்டதில்லை. விவசாயத் தொழிலாளர்களின் ஆதரவைப் பெற்றிருந்த கம்யூனிஸ்ட் கட்சியிலும் பெருமளவில் இணைத்துக்கொள்ளவில்லை.

மொழிப் போராட்டத்தில்…

இந்தச் சிறுவிவசாயிகளின் குடும்பங்களிலிருந்து தஞ்சாவூர் சரபோஜி கல்லூரிக்குப் படிக்கவந்த முதல் தலைமுறை மாணவர்கள்தான் மொழிப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள். எல்.கணேசன், ம.நடராசன், பின்னையூர் பன்னீர்செல்வம், உழவர் மையம் கோவிந்தராஜன் போன்றோர் இந்த விவசாயப் பின்னணியிலிருந்து வந்தவர்கள்தான். இப்படித்தான் காங்கிரஸின் செல்வாக்கின்கீழ் இருந்த தஞ்சை மாவட்டம், திராவிட இயக்கத்தின் கோட்டையாக மாறியது.

சோழர் காலத்து வளநாடு கட்டமைப்புக்கு இன்னமும் தொடர்ச்சியிருக்கிறதா என்ற கேள்வியும்கூட எழலாம். ஆனால், இன்றைக்கும் ‘காசாவளநாட்டின் வரலாறு’ என்ற புத்தக வெளியீட்டு விழாவுக்கு, அரசியல் களத்தில் எதிரெதிராய் மோதிக்கொள்ளும் திமுக, அதிமுக தலைவர்கள் ஒரே மேடையில் அமர்கிறார்கள் என்பதுதான் உண்மை நிலை. மாணவர்கள் இயக்கத்திலிருந்து உருவான திமுகவின் தலைவர்கள், கட்சி அரசியலைத் தாண்டி இன்றைக்கும் அந்தப் பகுதியின் மக்கள் தலைவர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்தக் கிராமங்கள் ஒவ்வொன்றிலும் தனிப்பட்ட செல்வாக்கு இன்றும் தொடரவே செய்கிறது.

அதிமுக பிரிந்தபிறகு, அந்தக் கட்சிக்கும் வளநாடுகளிலிருந்து தலைவர்கள் உருவெடுத்தார்கள். அதன் பிறகு ஒவ்வொரு அரசியல் கட்சி தொடங்கப்படும்போதும் அங்கிருந்து புதுப்புதுத் தலைவர்கள் உருவெடுக்க ஆரம்பித்தார்கள். கடைசியில் தெருக்கள்தோறும் தலைவர்கள் என்று நிலைமை மாறியது.

ஸ்டாலினின் மாற்றம்

ஆனால், பிந்தைய நாட்களில் விவசாயப் போராட்டம் என்றாலும்கூட நகரங்களோடு திரும்பிவிடுகிற போக்கே எல்லா தலைவர்களிடமும் வந்தது. கிராமங்களினூடான பயணத்தைப் புதிய நெடுஞ்சாலைகள் மாற்றியமைத்தன. நெடுஞ்சாலைப் பயணத்தின் சாலையோரக் காட்சிகள் மட்டுமே அல்ல தஞ்சையின் வளமையும் வறட்சியும். நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து பல கிலோ மீட்டர்களுக்கு நீளும் ஊர்ப்புறச் சாலைகளின் இருபுறமும் அமைந்துள்ள பாசன வாய்க்கால்களை நம்பிய வயல்வெளிகளையும் உள்ளடக்கியது.

ஸ்டாலின் திட்டமிட்டுச் செய்கிறாரா, தற்செயலா என்று தெரியவில்லை. ஆனால், ஒரு பெரிய இடைவெளிக்குப் பின், முதல் தலைவராக தஞ்சை மாவட்டத்தின் விவசாயக் கிராமங்களுக்குள் அடியெடுத்துவைத்திருப்பது அவர்தான். கூடவே தன்னுடன் ஒரு பெரிய படையையும் எதிர்க்கட்சித் தலைவர்களையும் கைகோத்து அவர் செல்வது நல்ல தொடக்கம். காவிரியிலிருந்து கிளைபிரிந்து ஓடும் வாய்க்கால்களை மட்டுமே நம்பி வாழ்ந்துகொண்டிருக்கும் கிராமங்கள் அவை. பல வாய்க்கால்கள், பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தண்ணீரையே பார்க்காமல் வறண்டுகிடக்கின்றன. நெடுஞ்சாலைகளை முற்றிலும் தவிர்த்துவிட்டு, பேருந்து வசதிகள்கூட இல்லாத ஊர்களின் வழியே அவர் பயணித்துக்கொண்டிருக்கிறார். காவிரி உரிமை மீட்புக்கான பயணமே என்றாலும், வளநாடுகளில் இழந்துவரும் திமுகவின் செல்வாக்கை மீட்டெடுக்கவும் இந்தப் பயணம் உதவலாம்!

- செல்வ புவியரசன்,

தொடர்புக்கு:

puviyarasan.s@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x