Last Updated : 06 Apr, 2018 08:56 AM

 

Published : 06 Apr 2018 08:56 AM
Last Updated : 06 Apr 2018 08:56 AM

காமன்வெல்த் தலைமை டெல்லிக்கு மாறும்போது கூடவே மாற வேண்டியவை என்ன?

கா

மன்வெல்த் அமைப்பில் 53 நாடுகள் உறுப்பு நாடுகளாக இருக்கும் சூழலில், அதை மீட்டுருவாக்க இந்தியாவை ஏன் அதன் மையத்துக்குக் கொண்டுவர பிரிட்டன் திட்டமிடுகிறது? இந்தியா – பிரிட்டன் உறவு ஏன் முக்கியமானதாகிறது? இந்தக் கேள்விக்கான பதில் முதலீட்டிலிருந்து தொடங்குகிறது.

பிரிட்டனில் இந்தியச் சமூகம்

இன்று பிரிட்டனின் சக்தி வாய்ந்த குடியேறிகளில் முக்கியமானவர்கள் இந்திய சமூகத்தினர். கிட்டத்தட்ட 14 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் - வம்சாவழியினர் இங்கே வாழ்கின்றனர். இவர்களில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தலைநகர் லண்டனில் வசிக்கின்றனர். பிரிட்டனில் வாழும் இனக் குழுக்களில் இந்தியர்கள் ஆறாவது இடத்தில் உள்ளனர். அதிகமானோர் பஞ்சாபியர். மொத்த இந்தியச் சமூகத்தில் பஞ்சாபியரின் பங்கு மட்டும் 45%.

இந்தியர்கள் பெருமளவில் பொருளாதாரரீதியாக மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. பிரிட்டன் செல்வந்தர்களில் முதல் மூன்று இடங்களிலும் இன்று இந்திய வம்சாவளியினரே இருக்கிறார்கள்.

முதலிடத்தில் இருப்பவர்கள் ஸ்ரீசந்த் இந்துஜா - கோபிசந்த் இந்துஜா சகோதரர்கள். எண்ணெய், எரிவாயு, மோட்டார் வாகனம், தகவல் தொழில்நுட்பம், மின்சாரம், ஊடகம், வங்கி, சொத்துகள், சுகாதார நலன் என்று பல துறைகளிலும் கால் பதித்திருப்பவர்கள் இவர்கள். அடுத்த இரு இடங்களில் டேவிட் ரூபன் சைமன் ரூபன், லட்சுமி என். மிட்டல் இருவரும் இருக்கின்றனர். தவிர, 38 பேர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் – மிக செல்வாக்கு மிக்கவர்கள் என்று வரிசைப்படுத்துகிறது ‘சண்டே டைம்ஸ்’. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் ‘தங்க விசா’ திட்டத்தின் உதவியுடன் 74 இந்திய பெரும் கோடீஸ்வரர்கள் தங்கள் குடும்பத்தாருடன் பிரிட்டனில் குடியேறியிருக்கின்றனர்.

நண்பர்களிடம் பேசிக்கொண்டிருக்கையில் மோசின், சுபேர் இஸ்ஸா சகோதரர்களைப் பற்றிப் பேச்சு வந்தது. குஜராத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள் இவர்கள். “இன்று ஐரோப்பாவிலேயே பெரியது இவர்களுடைய ‘ஈரோ கேரேஜஸ்’ மோட்டார் வாகன எரிபொருள் சில்லறை விற்பனையகம்தான்” என்றார்கள். இவர்களைப் போலவே ராஜ், டோனி, ஹர்பால் மதாரு சகோதரர்களும் இந்திய கோடீஸ்வரர்கள். ‘கிராங்கி ஹோட்டல்’ சங்கிலித்தொடர் விடுதிகள் இவர்களுடையது. முட்டை வியாபாரம் முதல் கழிப்பறை உபகரணங்கள் தயாரிப்பு வரை இந்தியர்களின் கைகள் நீண்டிருக்கின்றன. பிரிட்டனில் உள்ள கோடீஸ்வரர்களில் இந்திய வம்சாவழியினர்தான், வெளிநாட்டவர் பிரிவில் அதிகமானவர்கள். லண்டனில் கால் பதித்தே ஐரோப்பாவில் வேர் பரப்புக்கின்றனர் இந்திய தொழிலதிபர்கள்.

படிக்கும் வயதில் ஒரு இளம் கோடீஸ்வரர்

புதுப்புது யோசனைகளுடன் களத்தில் இறங்கும் இந்தியர்களைப் பற்றிப் பேசுகையில், அக்ஷய் ரூபாரேலியாவின் பெயர் அடிபட்டது. இன்று பிரிட்டனின் இளவயது கோடீஸ்வரராகக் குறிப்பிடப்படும் அக்ஷய் ரூபாரேலியா (19) ஒரு இந்திய வம்சாவளியினர். இவர் வயதை ஒட்டிய இளைஞர்கள் தங்களுடைய ஓய்வு நேரத்தை மைதானத்திலோ, செல்பேசியிலோ செலவிட்டுக்கொண்டிருக்கும் நிலையில், சொத்துகளை வாங்கி விற்பதில் லாபம் சம்பாதிக்கிறார் அக்ஷய் ரூபாரேலியா.

இணையம் வழியே சொத்து விற்பனை தரகில் குதித்த அக்ஷய் ரூபாரேலியா, வெகுசீக்கிரத்தில் இந்தத் தொழிலில் நீண்ட காலமாக இருக்கும் பாரம்பரிய தரகர்களுக்கு சவாலாகிவிட்டிருக்கிறார். பெரிய நிறுவனங்கள் வசூலிக்கும் தொகையோடு ஒப்பிடுகையில் அதில் ஒரு சிறு பகுதியை மட்டுமே தன்னுடையதாக நிர்ணயிப்பது இவருடைய பாணி. முதல் ஆண்டிலேயே இவருடைய விற்றுமுதல் முதல் 1.2 கோடி பவுண்டுகள் என்கிறார்கள். 10 கோடி பவுண்டுகள் மதிப்புக்கு இதுவரை வியாபாரம் செய்திருக்கிறார்.

முதலீட்டில் இடைவெளி

2000 – 2015 பதினைந்தாண்டுகளில் இந்தியாவில் பிரிட்டன் 2,220 கோடி டாலர்களை முதலீடு செய்திருக்கிறது. இது இந்தியாவுக்குக் கிடைத்த அன்னிய நேரடி முதலீட்டில் 9%. இந்தியாவில் பிரிட்டிஷ் தொழில் நிறுவனங்கள் 6.91 லட்சம் பேருக்கு வேலை அளித்திருக்கின்றன. கடந்த பத்தாண்டுகளில் பிரிட்டிஷ் நிறுவனங்களின் எண்ணிக்கை இந்தியாவில் 300% அதிகரித்திருக்கின்றன.

பிரிட்டனில் அதிகம் முதலீடு செய்யும் நாடுகளில் அமெரிக்கா, சீனா, பிரான்ஸுக்கு அடுத்த நிலையில் இந்தியா இருக்கிறது. பிரிட்டனில் இப்போது இந்தியர்களுக்குச் சொந்தமாக 800+ தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன. 1.1 லட்சம் பேர் இவற்றில் வேலை செய்கின்றனர். 13 பெரிய இந்திய நிறுவனங்கள் தலா 1,000 பேருக்கும் மேல் வேலை அளிப்பவை இங்கே இருக்கின்றன. ஜாகுவார் லேண்ட் ரோவர் உள்ளிட்ட டாடாவின் ஐந்து நிறுவனங்களில் மட்டும் 65,000 பேர் வேலை செய்கின்றனர். கடந்த நிதியாண்டில் அமெரிக்கா 577 பெரும் திட்டங்களிலும், சீனா 160 பெரும் திட்டங்களிலும் பிரான்ஸ் 131 பெரும் திட்டங்களிலும் இந்தியா 127 பெரும் திட்டங்களிலும் புதிதாக முதலீடு செய்திருக்கின்றன.

இரு தரப்பு முதலீடுகளுமே போதுமானவை அல்ல என்கிறார்கள் பிரிட்டிஷார். காமன்வெல்த் மீட்டுவருவாக்கம் தொடர்பில் லண்டனில் அடுத்தடுத்த நாட்களில் பிரிட்டன் அமைச்சர்கள் மார்க் ஃபீல்டு, லார்டு அஹம்மது, லண்டன் துணை மேயர் ராஜேஷ் அகர்வால் மூவரையும் சந்திக்க நேர்ந்தது. மூவருமே, “இந்தியா – பிரிட்டன் இரண்டு தரப்பிலுமே முதலீடுகளைப் பல மடங்கு விஸ்தரிக்க முடியும்” என்றார்கள். “கண் முன்னே இருக்கும் சாத்தியங்களோடு ஒப்பிடுகையில் பாதியைக்கூட நாம் சாத்தியமாக்கவில்லை” என்றார்கள்.

பிரிட்டன் தன்னுடைய பொருளாதாரத்தைச் சேவைத் துறையை மையமாகக் கொண்டதாகவும் இந்தியா உற்பத்தித் துறையை மையமாகக் கொண்டதாகவும் அமைத்துக்கொண்டிருப்பது இரு தரப்பு உறவுகளின் மையப் புள்ளி. இந்தியா பின்தங்கியிருக்கும் ஆராய்ச்சி கண்டுபிடிப்புத் துறைகளில் பிரிட்டன் பல மடங்கு முன்னேறியிருப்பதும், இந்தியாவின் கை மேலோங்கும் உற்பத்தித் துறையில் இந்தப் புதிய தொழில்நுட்பங்கள் இணைந்தால் நிகழவிருக்கும் சாத்தியங்களும் அவர்கள் சுட்டிக்காட்டும் முக்கியமான வாய்ப்புகள். ஓர் உதாரணம், பசுமைப் பொருளாதாரம். சம காலத்தின் முக்கியமான சவால்களில் ஒன்று என்றால், அது தகவல் திரட்டு பாதுகாப்பு!

பொருளாதாரத்தோடு சேர்ந்து புவியரசியல் கணக்குகளும் இதன் பின்னணியில் முக்கியப் பங்காற்றுகின்றன. சீனாவின் பாய்ச்சல் எல்லோரையுமே சங்கடப்படுத்துகிறது. பிரிட்டனின் சாமானியர்களிடம் பேசுகையில்கூட இதை உணர முடிந்தது. குறிப்பாக லண்டனில் குவியும் சீன, ரஷ்ய முதலீட்டை அவர்கள் ஒரு அச்சுறுத்தலாகவே குறிப்பிட்டனர். உற்பத்தி, ஆராய்ச்சி இரண்டிலும் சமமாக முன்னகரும் சீனா பொருளாதாரரீதியாக மட்டும் அல்லாமல் அரசியல்ரீதியாகவும் விரிக்கும் கரங்களை இந்தியாவின் வளர்ச்சி மட்டுமே ஆசியாவில் கட்டுப்படுத்த முடியும் என்று மேற்கு நம்புவது தீர்க்கமாகத் தெரிகிறது.

எதைப் பெறப்போகிறோம்?

இந்தியாவுக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமையலாம். தன்னை நோக்கி காமன்வெல்த் அமைப்பின் மையம் நகர்வதை இந்திய ஆட்சியாளர்கள் ரசிப்பதைப் பார்க்க முடிகிறது. இந்தியாவின் புவியரசியல் கணக்குகளுக்கு காமன்வெல்த் ஒரு நல்ல வாகனமாக அமையக்கூடிய வாய்ப்புள்ளதுதான். ஆனால், ராஜீயரீதியிலான கணக்குகள், பெருவர்த்தகரீதியிலான கணக்குகளைத் தாண்டி இந்தியா கவனம் செலுத்த வேண்டிய மேலான விஷயம் ஒன்றுண்டு. அது பிரிட்டனின் குடிமைக் கலாச்சாரத்தோடு சேர்த்து தொழில்நுட்பக் கலாச்சாரத்தைக் கையகப்படுத்திக்கொள்வது.

இந்தியாவில் தொழில்துறை வளர உயர் நவீன தொழில்நுட்பங்கள் அவசியம். இன்று நம்முடைய உற்பத்தி துறையின் லாபங்களுக்காக பெரிய அளவில் சுற்றுச்சூழலைப் பறிகொடுத்துக்கொண்டிருக்கிறோம். நாட்டின் அறிவியல் முன்னேற்றத்துக்கும் சாமானிய மக்களின் வாழ்க்கைக்கும் பெரிய தொடர்புகள் இல்லை.

இந்தச் சவால்களுக்கு எப்படி பதில் தேடப்போகிறோம் என்பது முக்கியமானது. கடந்த காலங்களில் இதே சவாலை எதிர்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து வெளியே வந்துகொண்டிருக்கும் பிரிட்டனிடமிருந்து நாம் உதவியைப் பெற முடியும்.

இந்திய மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களின் சூழலுக்கேற்ப முதலீடு செய்வதில் இருக்கும் ஆர்வத்தை பிரிட்டன் ஆட்சியாளர்கள் வெளிப்படுத்தினார்கள். மாநிலங்களில் அதற்கான சாத்தியங்களை இந்திய அரசு உருவாக்க வேண்டும். வேலைவாய்ப்புகள் இரு தரப்புகளிலுமே தலைவலியாக உருவெடுத்துவரும் நிலையில் புதிய தொழில் முயற்சிகள் கூடுதல் வேலைவாய்ப்புகள், கண்ணியமான பணிச் சூழலுக்கு உத்தரவாதம் அளிப்பதற்கும் கவனம் அளிக்க வேண்டும்.

காமன்வெல்த்தின் தலைமை லண்டனிலிருந்து டெல்லி நோக்கி நகரும் சூழலில், நாடுகள் – தலைவர்கள் – செல்வந்தர்களின் மேன்மைக்கானதாக மட்டும் அந்த மாற்றம் இல்லாமல் அனைத்து நாடுகளின் சாமானிய மக்கள் மேன்மைக்கானதாகவும் அமைய வேண்டும்!

- சமஸ்,

தொடர்புக்கு:samas@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x