Last Updated : 29 Mar, 2018 09:24 AM

 

Published : 29 Mar 2018 09:24 AM
Last Updated : 29 Mar 2018 09:24 AM

சாதிச் சான்றிதழுக்கான இருளர் இன மக்களின் காத்திருப்பு முடிவுக்கு வருமா?

நா

ங்களும் படிக்கல... எங்க பிள்ளைகளும் படிக்கல... பேரப் பிள்ளைகள் படிக்குதுவ, சாதிச்சான்று கொடுங்க’ என அச்சிடப்பட்ட துண்டறிக்கையோடு நிற்கிறார்கள் இருளர் இன மக்கள். மார்ச் 19 அன்று விழுப்புரத்தில் பேராசிரியர் பிரபா கல்விமணி ஒருங்கிணைத்த உண்ணாவிரதப் போராட்டத்தில் இருளர் பாதுகாப்புச் சங்கமும் இருளர் மக்களும் கலந்துகொண்டனர்.

அவர்களின் கோரிக்கை எல்லாம் இதுதான். 10, 11, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதிக்கொண்டிருக்கும் 34 பழங்குடி இருளர் மாணவர்களுக்கு, ஐ.டி.ஐ. மற்றும் பி.காம்., படிக்கும் இருவருக்கு என 36 இருளர் மாணவர்களுக்கு உடனடியாக சாதிச்சான்று கிடைக்க வேண்டும். வரும் கல்வியாண்டில் உயர் கல்விக்கு விண்ணப்பிக்க சாதிச் சான்றிதழ் தேவை. ஆனால், இந்தக் கோரிக்கை செவிமடுக்கப்படாமலே கிடக்கிறது. 859 பேர் விண்ணப்பித்திருந்தும் இதுவரை ஒருவருக்குக் கூட சாதிச்சான்று கிடைக்கவில்லை.

தொடரும் துயரம்

ஒரு வரிச் செய்தியாக நாம் கடந்துபோகும் இந்தச் சமூகத்தின் கோரிக்கைக்குப் பின்னே குறைந்தது 80 ஆண்டுகாலப் போராட்ட வரலாறு உண்டு. 1930-ல் தென்னாற்காடு ஜில்லா, திண்டிவனம் தாலுகாவின் முதலாவது இருளர் குல மாநாடு நடைபெற்றது. இந்திய சுதந்திரத்துக்கு முன்பு நடந்த இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் சில இன்றைய கால கட்டத்துக்கும் பொருத்தமாகவே இருக்கின்றன.

தமிழகப் பழங்குடியினரில் 36 சாதிகள் உள்ளன. இவர்களின் மொத்த ஜனத்தொகை 7.95 லட்சம். இதில் முன்னேற்றம் அடையாமல் பழைய நிலையிலேயே இருக்கும் இருளர் உட்பட ஆறு சாதிகளை இந்திய அரசு பூர்வீகப் பழங்குடியினர் என்று வரையறை செய்துள்ளது. இதில் சுமார் 1. 83 லட்சம் பேர் இருளர் சமூகத்தினர். உண்ண, உறங்க உறைவிடமில்லாத இந்தச் சமூகத்துக்கு மனைப் பட்டா, அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை. வன்கொடுமை, ஒடுக்குமுறைகள், பாலியல் வன்புணர்வுகள், கூலிப் பிரச்சினைகள், போலி வழக்குகள் என்று பல்வேறு பிரச்சினைகளின் அழுத்தம் வேறு.

இவற்றிலிருந்து விடுபட கல்வி ஒன்றே வழி என்பதை உணர்ந்திருக்கும் இருளர் சமூக மக்கள், தங்கள் குழந்தைகள் எப்படியாவது உயர் கல்வி படிக்க வேண்டும் என்று தவிப்புடன் காத்திருக்கிறார்கள். ‘கற்பி, ஒன்று சேர், புரட்சி செய்’ என்னும் அம்பேத்கரின் முழக்கம் அவர்களுக்குப் பெரும் ஊக்கத்தைக் கொடுத்திருக்கிறது. 2011-ம் ஆண்டு நிலவரப்படி தமிழகத்தின் சராசரி எழுத்தறிவு 80 % மேல் உள்ள நிலையில், இருளர்களின் எழுத்தறிவு 36 % மட்டுமே.

எதிர்காலம் குறித்த அச்சம்

சாதிச் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்படும் தாமதம், இருளர் சமூகத்தவர் பின்தங்கிய நிலையில் இருப்பதற்கான காரணங்களுள் முக்கியமானது. பழங்குடி அல்லாதோர் தங்களைப் பழங்குடியினர் என்று பொய் சொல்லி, சான்றிதழ் வாங்கி கல்விக்கும் பணியில் சேர்வதற்கும் பயன்படுத்திக்கொள்வதால், அந்தச் சான்றிதழ்களின் முக்கியத்துவம் கருதி, கோட்டாட்சியர் தான் சாதிச்சான்று வழங்க வேண்டும் என்று 1989-ல் தமிழக அரசு ஓர் ஆணை பிறப்பித்தது. அரசின் இந்த நோக்கத்தைக் குறைசொல்வதற்கு இல்லை. எனினும், இதையே காரணமாகக்கொண்டு சரியான ஆதாரங்களை வைத்திருப்பவர்களையும் வருடக்கணக்கில் அலையவிட்டிருப்பதுதான் துயரம்.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் வரை சாதிச் சான்றிதழுக்காகக் காத்திருந்து, அது கிடைக்காமல் எதிர்காலம் குறித்த அச்சத்துடன் வாழும் இருளர் இன இளைஞர் கள் ஏராளம்.

மாணவர்கள் சான்றிதழுக்காக வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்று, 10-வது அல்லது 12-வது வகுப்பில் படிக்கும்போது பள்ளியே சான்றிதழ்களை வழங்கும் திட்டத்தை 1999-ல் தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. இதிலும் குறைபாடுகளும் நடைமுறைச் சிக்கல்களும் இருந்ததால் 6-ம் வகுப்பிலேயே சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை வேண்டும் என்று 2012-ல் மீண்டுமொரு அரசாணை பிறப்பித்தது. அரசுத் தரப்பிலிருந்து, இப்படி எத்தனை திருத்தங்களும், எளிய வழிமுறைகளும் புதிய உத்தரவுகளும் வந்துகொண்டே இருந்தாலும், இருளர் மக்களின் துயரம் முடிந்த பாடில்லை.

இருளர்களைக் கவனத்தில்கொண்டு பூர்வீகப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்த அரசின் நோக்கம் முழுமையாய் நிறைவேற வேண்டுமானால், ஒப்பீட்டள வில் சிறுபான்மைக் குழுவான பழங்குடியினர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஆனால், அரசு அதிகாரிகளின் பாரபட்சமான செயல்பாடுகள் இதற்கு முட்டுக்கட்டையாய் இருக்கின்றன. இருளர் மக்களை சாதியரீதியாகவும், முன்முடிவுகளோடும், இளக்கார மாக அணுகும் போக்கும் இன்னமும் முடிந்த பாடில்லை. இப்படி நடந்துகொண்ட சில அதிகாரிகள் நீதிமன்றங்களின் கேள்விகளுக்குள்ளான நிகழ்வுகளும் உண்டு. பெற்றோரின் சான்றிதழ்களை ஆதாரமாகச் சமர்ப்பித்தாலும் பிள்ளைக்குச் சான்றிதழ் கொடுப்பதில் தாமதமாகும் உதாரணங்களும் உண்டு. அதேசமயம், பாரபட்சமில்லாமல் செயலாற்றிய சில அதிகாரிகள் தங்கள் பதவிக்காலங்களில் துரிதமாகச் சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். நெறிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டால் தாமதத்துக்கு இடமில்லை என்பதைத்தான் இவை உணர்த்துகின்றன.

அதிகாரிகள் கையில்…

‘இருளர்கள் யார்? அவர்கள் எங்கே வசிப்பார்கள்? அவர்கள் இருளர்கள் என்பதற்கான சான்றுகள் என்ன?’ போன்ற குறிப்புகளை எல்லாம் மானுடவியலாளர் எட்கர் தர்ஸ்டன் ‘தென்னிந்தியாவின் சாதிகளும் பழங்குடிகளும்’ எனும் தலைப்பில் பல தொகுதிகளைக் கொண்ட நூலை எழுதியிருக்கிறார். மலைகளில் வாழும் இருளர்கள் முதல் வட தமிழ்நாட்டின் சமவெளிகளில் வாழும் இருளர்கள் வரை ஆவணக் குறிப்பேடுகளில் இடம்பெற்றிருக்கிறார்கள்.

இருளர்கள் என்று சான்று வழங்கும் பணியில் ஈடுபடும் அதிகாரிகளில் சிலர், போதிய ஆதாரமில்லை என்று பல விண்ணப்பங்களை நிராகரிக்கும் போக்குகளைத் தொடர்ந்து, 2013-ல் அரசு ஒரு பரிந்துரை ஆணையை வழங்கியது. மாவட்டரீதியாகப் பரிந்துரைக்கப்பட்ட மானுடவியல் பேராசிரியர்களின் உதவியோடு பழங்குடி மக்களை அடையாளம் காணும் பணியைச் செய்யலாம் என்கிறது அந்த ஆணை.

அரசு அறநெறிகளைப் பின்பற்றினாலே தீர்வு களுக்கான வழிவகைகள் உண்டு என்பதுதான் பழங்குடி இன மக்களுக்காகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் செயல்பாட்டாளர்களின் கருத்தாக இருக்கிறது. தலித் பழங்குடியின மக்களின் பாதுகாப்பைக் குறைந்தபட்சமாக உறுதிசெய்வது சட்டங்களும் அரசு இயந்திரமுமே. இம்மக்களுக்குக் கல்வி என்பது மிக அடிப் படையான விஷயம். இங்கே எதற்கும் தீர்வுகள் இல்லா மல் இல்லை. காலங்காலமாக உரிமைகள் மறுக்கப்பட்டு, நிலையான வாழ்வாதாரங்கள் இல்லாமல் தவிக்கும் ஒரு சமூகத்தைக் கைதூக்கிவிட, அந்தச் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளின் கல்விக்கு உதவலாம். அரசு அதிகாரிகள் மனதுவைத்தால் ஒரு தலை முறையையே மாற்றிவிட முடியும்.

‘இருளர்கள் என்றால் இளக்காரமா?’ என்று அச்சிடப்பட்ட பதாகைகள் கோபத்தின் வெளிப்பாடு அல்ல; தங்கள் சமூகம் இனிமேலாவது தலைநிமிர வேண்டும் என்று குமுறும் எளிய மனங்களின் இறுதி நம்பிக்கை!

- வாசுகி பாஸ்கர், எழுத்தாளர்,

‘மற்றமையை உற்றமையாக்கிட’

நூலின் ஆசிரியர்.

தொடர்புக்கு: musicallybaskar@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x