Last Updated : 13 Feb, 2018 09:34 AM

 

Published : 13 Feb 2018 09:34 AM
Last Updated : 13 Feb 2018 09:34 AM

வெவ்வேறு மருத்துவ முறைகளை இணைப்பது சரியா?

எல்லாவித மருத்துவ முறைகளுக்கும் ஒரே நோக்கம்தான் - நோயாளியை விரைவாகக் குணப்படுத்துவது. எனவே, பாரம்பரியமான மருத்துவ முறைகளையும் நவீன ஆங்கில மருத்துவ (அலோபதி) முறை களையும் இணைத்து, ஒருங்கிணைந்த மருத்துவ முறை மூலம் நோயாளிகளைக் குணப்படுத்துவது சிறப்பானதாக இருக்காதா என்று கேட்பவர்கள் உண்டு.

ஒரு மருத்துவருக்கு எல்லா முறைகளும் தெரிந்திருந்தால், ஒவ்வொரு நோய்க்கும் எது உகந்த வழியோ அதைக் கையாண்டு குணப்படுத்தலாமே என்றும், நோயாளியே அந்தந்த நோய்க்கு அந்தந்த சிகிச்சை முறை அறிந்தவரைத் தேடிச் செல்வதைவிட இது எளிதாக இருக்குமே என்றும் சிலர் கேட்கிறார்கள்.

ஒருவர் எல்லா மருத்துவ முறைகளையும் கற்று, அதைத் தேவைக்கேற்பப் பயன்படுத்தலாம் என்று சொல்வது புரிதலின்மையின் விளைவு. பாரம்பரியமான வைத்திய முறை களையும் நவீன அறிவியல் அடிப்படையிலான மருத்துவ முறைகளையும் ஒருங்கிணைக்க முடியாது.

பாரம்பரிய வைத்திய முறைகள்

பாரம்பரிய வைத்திய முறைக்கும் நவீன மருத்துவ முறைக்கும் உள்ள வித்தியாசத்தையும் பொதுவான அம்சங்களையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒருவருக்கு நோய் வருவதற்கும், இன்னொருவருக்கு நோயே வராமல் இருப்பதற்கும், அப்படி நோய் வந்தவர் களுக்குக் கொடுக்க வேண்டிய மருந்தையும் - சிகிச்சை முறைகளையும் எந்த முறையைச் சேர்ந்த மருத்துவராக இருந்தாலும் அறிந்திருக்க வேண்டும்.

எல்லாவித மருத்துவ முறைகளுமே சில நம்பிக்கைகள், கொள்கைகள், கோட்பாடுகளின் அடிப்படையிலானவை. சிகிச்சை முறைகளும் அப்படியே. பாரம்பரிய மருத்துவ முறைகளில் காலம் கடந்தும் நிற்பவை மூன்றுதான்: அவை சீன சிகிச்சை முறை, இந்திய ஆயுர்வேதம், ஜெர்மனி யில் உருவான ஹோமியோபதி.

ஹோமியோபதியில், நோய்க்குக் காரணமாக இருக்கும் ரசாயனத் துணுக்குகளையே மிக நுண்ணியதாக்கி, விஷம் நீக்கி மிகச் சிறு அளவில் புகட்டினால் அதுவே நோயைத் தீர்த்துவிடும் என்ற கோட்பாடு பின்பற்றப்படுகிறது. ‘சிமிலியா சிமிலிபஸ் கியூரென்டர்’ என்று இதை அவர்கள் அழைக்கின்றனர். ஹோமியோ என்ற சொல்லுக்கு அதுதான் பொருள். அலோபதியின் கோட்பாடு இதற்கு நேரெதிர். நோய்க்குக் காரணமான நுண்ணுயிரியை அழிக்கும் நோய்முறியே மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

சீன மருத்துவமுறை மூலிகைகளைப் பயன்படுத்துவது. அது ‘கி’ அல்லது ‘சி’ எனப்படும் உயிராற்றல் உடலுக்குள் உள்ள பாதை வழியே பாய்கிறது.. அது எல்லா உறுப்புகளையும் திசுக்களை யும் இணைக்கிறது. அந்த உயிராற்றல் பாய்வதில் தடை ஏற்பட்டால் நோய் ஏற்படுகிறது என்பது சீன மருத்துவத்தின் கோட்பாடு. அக்குபஞ்சர், அக்குபிரஷர், மசாஜ், உடற்பயிற்சி, பத்திய உணவுகள், மூலிகை மருந்து ஆகியவற்றின் மூலம் நோய் தீர்க்கப்படுகிறது.

வாதம், பித்தம், கபம் என்ற மூன்று (திரி) தோஷங்களால் நோய் ஏற்படுகிறது என்கிறது ஆயுர்வேதம். உடலில் இருக்க வேண்டிய இவற்றின் அளவு மாறுபடுவதையே ‘தோஷம்’ என்கிறது. நோய்க்கு மருந்தாக கஷாயம், சூரணம், குளிகை, எண்ணெய், எண்ணெய் மசாஜ், பத்திய உணவு, பேதி, குடல்புழு நீக்கம் ஆகியவற்றைப் பரிந்துரைக்கிறது.

இந்த வைத்திய சிகிச்சை முறைகள் எப்படி பல்லாண்டுகளுக்கு முன்னால் தோன்றின என்று தெளிவான வரலாறு இல்லை. ஆனால், அவை முறைப்படுத்தப்பட்டு, வைத்திய சாஸ்திரங்களாக எழுதப்பட்டிருப்பதும் அவற்றின் மூலம் பல சிகிச்சை முறைகள் இன்றளவும் வெற்றிகரமாக நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கவை.

அறிவியல்சார் மருத்துவம்

மருத்துவத்தில் ஐரோப்பியர்கள் இருநூறு அல்லது முன்னூறு ஆண்டுகளுக்கு முன்புவரை பின்தங்கியே இருந்தனர். அறிவியல்பூர்வமான மருத்துவ முறை ஜெர்மனி, ஆஸ்திரியா, பிரான்ஸ், பிரிட்டன் பிறகு அமெரிக்கா ஆகிய நாடுகளில் 18-வது 19-வது நூற்றாண்டுகளில் படிப்படியாக வளர்ச்சியடைந்தது. உடற்கூறியல், உயிரியல், நுண்ணுயிரியல், உயிர் வேதி யியல், மரபியல் போன்றவை 20-ம் நூற்றாண்டில் வளர்ந்து, இப்போதும் விரிவடைந்துகொண்டே வருகின்றன.

அறிவியல் அடிப்படையிலான (நவீன) மருத்துவ முறை தொடர்ந்து கேள்விகளை எழுப்பு கிறது. கொள்கைகளையும் கோட்பாடுகளையும் தொடர்ந்து திருத்திக்கொள்கிறது. அத்துடன் அதற்கேற்ப விளக்கங்களையும் அளிக்கிறது. சிகிச்சை முறைகளை மேம்படுத்தியும் மாற்றியும் சிகிச்சை யைத் தொடர்கிறது. ஆராய்ச்சிகளை இடைவிடாமல் மேற்கொள்கிறது. அறிவியல் முறையின் அடிப்படையே ஆராய்ச்சிதான்.

பாரம்பரிய முறைகளைப் பொறுத்தவரை நோய்க்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும் நிரந்தரமானவை. அவற்றைப் பயிலும் மாணவர்கள் அந்தக் கருத்துகளையும் வழிமுறைகளையும் அப்படியே ஏற்றுத் தொடர்கின்றனர். ‘உண்மை’ என்பதற்குப் பாரம்பரிய முறையிலும், நவீன முறையிலும் நேர்மாறான விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன.

பாரம்பரிய முறையில் எது ஒருவருக்குக் கற்பிக்கப்படு கிறதோ, எது அவரால் நம்பப்படுகிறதோ அதுவே உண்மை என்றாகிறது. அதை ஆய்வுசெய்து சரிபார்க்க வேண்டிய தேவையே இல்லை என்று நம்புகிறார்கள்.

ஆனால், நவீன மருத்துவம் என்பது ஆராய்ச்சிகள் மூலம் கிடைத்த முடிவுகளை அடிப்படையாகக் கொண்டது. ஏன், எப்படி என்று விளக்கமாகக் கூறுவது மட்டுமல்ல - பரிசோதனைகள் செய்துபார்த்து உண்மைகளைத் தெரிந்துகொள்வதே நவீன மருத்துவம். இதற்கொரு ‘விலை’யும் உண்டு, ‘பரிசு’ம் உண்டு.

மருத்துவர் முறையாக நோயை ஆராய்ந்தாரா, சிகிச்சை செய்தாரா என்று அவர் கடைப்பிடித்த வழிமுறைகளைக் கொண்டே கண்டுபிடித்துவிடலாம். இவற்றை அந்த மருத்துவர் சரியாகக் கடைப்பிடிக்கவில்லை என்றால், அவருக்குத் தண்டனை நிச்சயம். இதுதான் அதில் உள்ள ‘விலை’. மருத்துவர் யாராக இருந்தாலும், சரியான முறையில் நோயை அறிவதும், சிகிச்சை தருவதும்தான் நவீன மருத்துவத்தில் உள்ள ‘பரிசு’.

விளைவும் பொறுப்பும்

அறிவியல்பூர்வமான நடைமுறை என்பதால் நவீன மருத்துவத்தில் எல்லாவிதமான நோய்களும் அடையாளம் காணப்பட்டுப் பெயரிடப்படுகின்றன, எண் வழங்கப்படுகிறது. சர்வதேச அளவில் அனைவரும் ஒரே சமயத்தில் அறிந்து சிகிச்சை தரும் வகையில் அட்டவணைப்படுத்தப்படுகிறது.

தன்னுடைய நோய் முறையாகச் சோதிக்கப்பட்டதா, சரியான சிகிச்சை வழங்கப்படுகிறதா என்று ஒரு நோயாளியால் நவீன மருத்துவரைக் கேட்க முடியும். அப்படி இல்லாவிட்டால் அந்த மருத்துவர் கவனக்குறைவாகப் பணிசெய்ததாகக் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும், நோயாளிக்கு இழப்பீடும் கிடைக்கும்.

இத்தகைய திட்டவட்டமான சோதனை முறைகளும் வகைப்படுத்தல்களும் பாரம்பரிய மருத்துவத்தில் கிடையாது. பாரம்பரிய மருத்துவர் தன்னால் முடிந்த அளவுக்கு நோயை அடையாளம் காண்கிறார். அதையொட்டி சிகிச்சை அளிக்கிறார். அவர் நோயை அறிந்தவிதம் சரியா, அவர் அளித்த மருந்துகள் சரியா என்று யாராலும் சரிபார்க்க முடியாது.

இதனால், மருத்துவரைப் பொறுப்பாளியாக்கவும் முடியாது. நல்ல வேளையாகப் பாரம்பரிய மருத்துவத்தில் மருந்துகள் பெரும்பாலும் ஆபத்தற்றவையாக இருப்பதால் நோயாளிகளுக்கு உயிராபத்து ஏற்படுவதில்லை.

அறிவியல்பூர்வமான முறை என்பது தனி மனிதரால் மட்டும் நிபுணத்துவம் பெற்றுவிட முடியாத சிக்கல்கள் நிறைந்தது. எனவேதான் நோய்க் குறிகளையும் நோயின் தாக்கத்தையும் அறிய அறிவியல் சோதனைச் சாலைகளின் உதவி நாடப்படுகிறது. அத்துடன் அந்தந்தத் துறையில் சிறப்பு மருத்துவப் படிப்பும், பயிற்சி யும் அளிக்கப்படுகிறது.

பாரம்பரிய முறையும் நவீன மருத்துவ முறையும் அடிப்படையிலேயே வேறுபாடுள்ள கருத்துகளை அடிப்படையாகக் கொண்டவை. எனவே, இரண்டையும் சேர்த்து சிகிச்சை தர முடியாது. எனவே, இவற்றை ஒருங்கிணைக்கவும் முடியாது. ஒன்று, நம்பிக்கையின் அடிப்படையிலானது. இன்னொன்று, சோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டது. ஒரு மதத்தில் நம்பிக்கையும் பயிற்சியும் பெற்ற பூசாரி, இன்னொரு மதத்தின் சடங்குகளைச் செய்வது எப்படி முடியாதோ அப்படித்தான் இதுவும்!

- டாக்டர் டி. ஜேகப் ஜான்,
வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியர்.
தமிழில்: சாரி, © ‘தி இந்து’ ஆங்கிலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x