Published : 11 Feb 2018 09:27 AM
Last Updated : 11 Feb 2018 09:27 AM

பயிர்களுக்கான குறைந்தபட்ச விலையை உயர்த்துவது விவசாயிகளுக்குக் கைகொடுக்குமா?

மு

ன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதன் உற்பத்திச் செலவிலிருந்து 1.5 மடங்காக உயர்த்தி வழங்கப்படும் எனத் தனது 2018-19 ஆண்டிடுக்கான பட்ஜெட்டில் அறிவித்துள்ளார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வருமானம் குறைந்து, கடன் சுமையில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு இந்த அறிவிப்பு பெரிய ஆறுதல் என்றே சொல்ல வேண்டும். அதேசமயம், விலையை உயர்த்துவதால் மட்டும் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த முடியுமா எனும் கேள்வியும் எழுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் கரீஃப் மற்றும் ரபி ஆகிய இரண்டு முக்கியப் பருவங்களுக்கு விவசாயப் பயிர்களுக்கான குறைந்தபட்ச விலை அறிவிக்கப்பட்டுவருகிறது. இது 1965-லிருந்து மத்திய விவசாய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் விவசாய செலவு மற்றும் விலைக் குழுவின் பரிந்துரையின் பேரில் வழங்கப்படுகிறது. தற்போது ஏழு தானியங்கள், ஐந்து பருப்புப் பயிர்கள், ஏழு எண்ணெய் வித்துக்கள், நான்கு வணிகப் பயிர்கள் (தேங்காய், கரும்பு, பருத்தி, சணல்) உட்பட மொத்தமாக 23 பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படுகிறது. சாகுபடிச் செலவு, இடுபொருட்களின் விலை, விவசாயப் பயிர்களின் அளிப்பு மற்றும் தேவை, உலகச் சந்தையில் பொருட்களின் விலை ஏற்ற இறக்கங்கள் ஆகிய முக்கியக் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு பயிர்களுக்கு ஆதார விலை நிர்ணயிக்கப்படுகிறது. பல்வேறு காரணங்களால், சமீப காலங்களில் உற்பத்திச் செலவில் பெரிய உயர்வு ஏற்பட்டபோதும், அதை மட்டும் கணக்கில்கொண்டு விலை நிர்ணயம்செய்வது பெரும்பாலும் நடைமுறையில் இல்லை. இன்னும் சொல்லப்போனால், விலைக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட விலையைவிடக் குறைவான விலையை மத்திய அரசு பல்வேறு காலகட்டங்களில் அறிவித்து விவசாயிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எந்த உற்பத்திச் செலவை எடுத்துக்கொள்வது?

மத்திய அரசின் விலைக் குழு ஒன்பது வகையான உற்பத்திச் செலவுக் கூறுகளைப் பயிர்களின் விலை நிர்ணயத்திற்காகப் பயன்படுத்திவருகிறது. அவை ஏ1, ஏ2, ஏ2+எஃப்.எல், பி1, பி2, சி1, சி2, சி2*, சி3 என்றழைக்கப்படுகின்றன. இவற்றில் சி3 முறையில் மதிப்பீடுசெய்யப்படும் உற்பத்திச் செலவானது விவசாயி தனது பயிர்ச் சாகுபடிக்காகச் செய்யும் அனைத்துச் செலவுகளையும் உள்ளடக்கியது. ஏ2 செலவு என்பது விவசாயி தனது சொந்தப் பணத்திலிருந்து பயிர்ச்சாகுபடிக்காகச் செய்யும் செலவை மட்டும் குறிப்பது. அதாவது ஏ2 உற்பத்திச் செலவில் விவசாயியின் குடும்ப நபர்களால் செய்யப்படும் உழைப்பு, விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்கான தேய்மானச் செலவு, கடன்களுக்கான வட்டி, நிலத்தைப் பயன்படுத்துவதற்கான வாடகை போன்றவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. விலைக் குழுவால் பல்வேறு பயிர்களுக்கு ஆண்டுதோறும் வெளியிடப்படும் புள்ளிவிவரப்படி, சி3 உற்பத்திச் செலவுக்கும் ஏ2 உற்பத்திச் செலவுக்கும் உள்ள இடைவெளி 50%-க்கும் அதிகமாக உள்ளது.

இந்நிலையில், மத்திய அரசானது பயிர்களுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்யும்போது சி3 உற்பத்திச் செலவைக் கணக்கில் கொள்ளாமல் விலை நிர்ணயம் செய்வதால் விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பதில்லை. உதாரணமாக, விலைக் குழுவால் வெளியிடப்பட்டுள்ள 2014-15 ஆண்டு புள்ளிவிவரப்படி தமிழகத்தில் ஒரு குவிண்டால் நெல் உற்பத்திக்கான செலவு (சி3) ரூ.1,537 என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இதே காலகட்டத்தில் மத்திய அரசால் நெல்லுக்கு அறிவிக்கப்பட்ட ஆதார விலை வெறும் ரூ. 1,360 மட்டுமே. அதாவது சி3 உற்பத்திச் செலவின் அடிப்படையில் பார்த்தால், தமிழக நெல் விவசாயிகளுக்கான ஏற்பட்ட நஷ்டம் ஒரு குவிண்டாலுக்கு ரூ.177. இதே போன்ற சூழலை, அனைத்து மாநிலங்களிலும் பெரும்பாலான விவசாயிகள் பல ஆண்டுகளாகச் சந்தித்துவருகிறார்கள்.

அதிக கொள்முதல் நிலையங்கள் தேவை

எனவேதான் எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட விவசாயிகளுக்கான குழு (2006) பயிர்களின் ஆதார விலையை சி3 உற்பத்திச் செலவுக்கு மேலாக 50% அதிகம் வைத்து நிர்ணயம் செய்ய வேண்டும் என்று பரிந்துரைசெய்தது. இப்படியான சூழலில், ஒரு வழியாக இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வந்திருப்பதை விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கான முதற்படியாகக் கருதலாம்.

குறைந்தபட்ச ஆதார விலையை ஒன்றரை மடங்கு உயர்த்துவதால் மட்டும் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்திவிட முடியாது. அறிவித்த விலையைப் பெற, பல்வேறு விவசாயிகளும் பலன்பெறும் வகையில் விளைவித்த பயிர்களை விற்பதற்கு நிரந்தரக் கொள்முதல் நிலையங்களை அனைத்துப் பகுதிகளிலும் ஏற்படுத்த வேண்டும். ஆனால் நெல், கோதுமை தவிர, மற்ற பொருட்களைக் கொள்முதல் செய்வதற்கான கட்டமைப்புகள் பரிதாபமான நிலையில் உள்ளன என்று அரசின் புள்ளிவிவரங்களே தெரிவிக்கின்றன. விவசாயிகளின் பொருளாதார நிலையைக் கண்டறிவதற்காக 2013-ல் நடத்தப்பட்ட ஆய்வின்படி, மொத்த உற்பத்தியில் வெறும் 17% நெல்லும், 19% கோதுமையும் மட்டுமே அரசுத் துறை நிறுவனங்களால் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறது, மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய மாதிரி கணக்கெடுப்பு நிறுவனம் (என்.எஸ்.எஸ்.ஓ.).

கொள்முதல் நிலையங்கள் இல்லாத காரணத்தால் நெல், கோதுமை அல்லாத பயிர்களைச் சாகுபடிசெய்யும் விவசாயிகள், தங்களது பயிர்களை அரசு அறிவித்த ஆதார விலைக்கும் கீழாகத் தனியார் வணிகர்களிடம் விற்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக விலைக் குழுவால் வெளியிடப்படும் பல்வேறு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

விளைபொருட்களை உற்பத்திசெய்ய ஆகும் செலவிலிருந்து 1.5 மடங்கு கூடுதல் விலைக்கு அரசு கொள்முதல் செய்யும் என்ற அறிவிப்பு மட்டும் போதாது. கொள்முதல் கட்டமைப்புகள் வலுவிழந்து இருப்பதால், விவசாயச் சந்தைகளில் இடைத்தரகர்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது.

பட்ஜெட்டில் கூறியிருப்பதுபோல், நாடு முழுவதும் உள்ள 585 பெரிய விவசாய சந்தைகளைத் தேசிய மின்னணு வேளாண் சந்தையுடன் 2018 மார்ச் மாதத்தில் இணைக்கத் துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அது சாத்தியமானால், வேளாண் பொருட்களை அரசு நிர்ணயித்த விலைக்கோ அல்லது அதற்கு மேலாகவோ நேரடியாக விற்க முடியும்.

அதேபோல், சிறிய நகரங்களிலும் தாலுக்கா போன்ற இடங்களிலும் இயங்கிக்கொண்டிருக்கும் 22,000 விவசாய அங்காடிகளின் உள்கட்டமைப்பின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இந்தியாவில் 86% -க்கும் அதிகமாக சிறு, குறு விவசாயிகள் இருப்பதால், இவர்களுக்கு இது போன்ற சந்தைகள் மிகவும் முக்கியமானவை. எனவே, பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள ரூ. 2,000 கோடி சந்தை உள்கட்டமைப்பு நிதியைப் பயன்படுத்தி, இந்த சந்தைகளைச் செம்மைப்படுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என்ன செய்ய வேண்டும்?

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல் என்ற பெயரில், உள்நாட்டுச் சந்தையில் வேளாண் பொருட்களின் விலை சற்று உயரும்போதெல்லாம், ஏற்றுமதியைத் தடைசெய்வதற்காகக் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை நிர்ணயித்து விவசாயிகளுக்கு லாபம் கிடைக்காமல் செய்துவிடுகிறது மத்திய அரசு. இதுபோன்ற தடைகள் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படுவதில்லை. எனவே, வேளாண் பொருட்களின் ஏற்றுமதிக்கு உள்ள தடைகளை முற்றிலும் நீக்க வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளாக, உருளைக்கிழங்கு, தக்காளி, வெங்காயம் சாகுபடிசெய்யும் விவசாயிகள் விலை வீழ்ச்சியால் சாகுபடி செலவைக்கூட மீட்க முடியாமல் சாலை யிலும், சந்தையிலும் கொட்டிச் செல்லும் அவலத்தைப் பார்த்துவருகிறோம். இது போன்ற எளிதில் அழுகக்கூடிய வேளாண் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில், பட்ஜெட்டில் ‘ஆபரேஷன் கிரீன்’ என்ற பெயரில் ரூ. 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

பயிர்ச் சாகுபடிக்குத் தேவையான இடுபொருட்களின் விலை 1990-91-க்குப் பிறகு விரைவாக உயர்ந்து வருவதால், வேளாண் பொருட்களின் உற்பத்திச் செலவு அதிகரிக்கிறது. விவசாயிகளின் வருமானக் குறைவுக்கு இது ஒரு முக்கியக் காரணம்.

சட்ட அனுமதி வேண்டும்

எனவே, இடுபொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். விவசாயிகள் உற்பத்திசெய்யும் அனைத்து வேளாண் பொருட்களை யும் அரசு நிர்வகிக்கும் துறைகளால் மட்டும், குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய முடியாது. வேளாண் பொருட்கள் வணிகத்தில் பெரிய நிறுவனங்களின் ஆதிக்கம் கடந்த பல ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. எனவே, சிறந்த தனியார் நிறுவனங்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையில் வேளாண் பொருட்களைக் குறைந்த கொள்முதல் செய்வதற்குச் சட்ட அனுமதி வழங்க வேண்டும்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நெல், கோதுமை தவிர, மற்ற வேளாண் பொருட்களைக் குறைந்தபட்ச ஆதரவு விலையில் விற்க முடியாமல் விவசாயிகள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்துவருகிறார்கள். வேளாண் பொருட்களை அரசு கொள்முதல் நிலையங்களில் விற்றால் மட்டுமே, பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டுள்ள கூடுதல் விலையை அவர்கள் பெற முடியும். எனவே, குறைந்தபட்ச ஆதரவு விலையில் மட்டும் வேளாண் பொருட்களை விற்பதற்கான உறுதிச் சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும்.

2020-ம் ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக உயரும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறுகிறார். வேளாண் பொருட்களின் கூடுதல் விலை அறிவிப்போடு, அதன் சந்தையில் மேற்கூறிய சீர்திருத்தங்களைப் போர்க்கால அடிப்படையில் நடைமுறைப்படுத்தினால் மட்டுமே இந்தக் கனவை ஓரளவுக்கேனும் பூர்த்திசெய்ய முடியும்!

- அ.நாராயணமூர்த்தி,

பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர்,

பொருளியல் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை,

அழகப்பா பல்கலைக்கழகம்,

தொடர்புக்கு:

narayana64@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x