Published : 05 Feb 2018 09:03 AM
Last Updated : 05 Feb 2018 09:03 AM

பட்ஜெட் ஏன் முழுமையானதாக இல்லை?

ம் நாட்டுத் தொழிலாளர்களில் 49% பேர் வேளாண்மையில் ஈடுபட்டுள்ளனர். ‘அமோக மகசூல்: விலையில் சரிவு’, ‘வரலாறு காணாத வறட்சி: வருமானமே கிடையாது’. நாடு முழுவதும் கடன் சுமையாலும் விளைச்சல் பொய்த்ததாலும் மனம் வெதும்பி விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இந்நிலையில், விவசாயம் என்பது மாநிலங்களின் அதிகாரப்பட்டியலுக்கு உட்பட்டது என்று கூறி, மத்திய அரசு தனது பொறுப்பைத் தட்டிக்கழித்துவிட முடியுமா?

‘ரபி’பருவத்தில் சாகுபடிச் செலவைப் போல ஒன்றரை மடங்கு குறைந்தபட்ச ஆதார விலை தரப்பட்டு, கொள்முதல் செய்யப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இது பிறகு எல்லாப் பயிர்களுக்கும் விரிவுபடுத்தப்படவிருக் கிறது. விவசாய விளைபொருட்களுக்குப் போதுமான விலை கிடைப்பதை உறுதிசெய்ய உரிய நடை முறைகள் உருவாக்கப்படும் என்கிறது பட்ஜெட்.

ஆனால், வேளாண் விளைபொருட்களைச் சந்தைப்படுத்துவது நிதியமைச்சரின் கவனத்திலிருந்து தப்பிவிட்டது. விவசாய வருவாயை இரட்டிப்பாக்கு வது குறித்து அசோக் தளவாய் கமிட்டி அளித்த பரிந்துரைகளுக்கும் அரசின் புதிய அறிவிப்புக்கும் இடைவெளி இருக்கிறது. நாட்டின் விவசாயத் தொழிலாளர்களில் பெரும் பகுதியினர் உழுவதற்குச் சொந்தமாக நிலம் இல்லாதவர்கள். விவசாயத் தொழிலாளர்களாக இருப்பவர்கள் நில உடைமையாளர்களாகவும் மாற நடவடிக்கை எடுக்கப்படுமா?

தேசிய நெடுஞ்சாலைத் துறை 2017-18 நிதிஆண்டில் 9,000 கிலோ மீட்டர் சாலைகளை அமைத்து விட முடியும் என்று நம்பிக்கை கொண்டிருக்கிறது. அத்துடன் ரூ.5,35,000 கோடி செலவில் 35,000 கிலோ மீட்டர் சாலை அமைக்கும் ‘பாரத் மாலா’ திட்டமும் இருக்கிறது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, நாட்டின் கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்கு மாநிலங்களை இணைக்க நிறைவேற்றப்பட்ட ‘தங்க நாற்கர சாலை’ திட்ட அனுபவம் இதற்கு உதவும்.

கல்வியின் நிலை

கல்வியின் தரம் இப்போது கவலைப்படும்படி யாகத்தான் இருக்கிறது. ‘அசர்’ ஆய்வின்படி 14 வயது முதல் 18 வயது வரையுள்ள மாணாக்கர்களில் 50% பேர் பள்ளிக்கூடத்தில் படித்திருந்தாலும் அவர்களால் சரளமாக எழுத, படிக்க, அடிப்படைக் கணக்குகளைப் போட முடிவதில்லை. நாட்டின் ஜி.டி.பி. மதிப்பில் 5% கல்வித் துறைக்குச் செலவாகிறது.

ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தால் மட்டும் போதாது. எழுத்தறிவில்லாத பெற்றோர்களுக்கும் கல்வி புகட்டப்பட வேண்டும். பெற்றோர்களுக்குக் கல்வி புகட்டும் டிஜிட்டல் பிரிவுகள் ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் ஏற்பட வேண்டும். நிதியமைச்சர் உயர் கல்விக் கூடங்கள் பற்றிப் பேசுகிறார்; ஒவ்வொரு நகரிலும், மாவட்டத்திலும் தொழில் பயிற்சி நிறுவனங்கள் முதலில் ஏற்படுத்தப்பட வேண்டும். தச்சு வேலை செய்கிறவர்கள், கட்டிட வேலை செய்கிறவர்கள், கைக்கருவிகளைக் கொண்டு செயல்படுகிறவர்கள் ஏராளமான எண்ணிக்கையில் தேவைப்படுகின்றனர்.

எல்லாத் துறைகளிலும் புதிதாக வேலைக்குச் சேருபவர்களின் தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதி (இ.பி.எஃப்.) கணக்கில், அவரவர் ஊதியத்தில் 12%-ஐ அரசே செலுத்தவிருக்கிறது. இது அமைப்புரீதியாக உருவான துறையில்; ஆனால் அமைப்புரீதியாகத் திரட்டப்படாத துறையில்தான் லட்சக்கணக்கானோர் புதிய வேலைவாய்ப்பு பெறுகின்றனர். அவர்களுடைய நலன் குறித்து ஏதும் சிந்திக்கப்படவில்லை.

சுகாதார நலம்

10 கோடிக் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 50 கோடிப் பேருக்கு சுகாதாரக் காப்பீடு வழங்கும் ‘தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம்’ அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு குடும்பம் அதிகபட்சம் ரூ.5 லட்சம் பெறுமானமுள்ள உயிர் காக்கும் சிகிச்சைகளை இதன் மூலம் பெற முடியும். இது பாராட்டப்பட வேண்டிய முயற்சி. இப்போதுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் 24, மருத்துவக் கல்லூரிகளுடனான தலைமை மருத்துவமனை களாகத் தரம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்கப்பட வேண்டியதே. அதே சமயம், நாட்டின் எல்லா மாநிலங்களிலும் கிராமப் பகுதிகளில் தொடக்க சுகாதார மையங்களை அமைப்பது குறித்து அரசு ஏன் அறிவிக்கவில்லை. ஜிடிபியில் 3% சுகாதாரத்துக்காகச் செலவிடப்படுகிறது.

செவிலியர்களுக்கான பயிற்சிப் பள்ளிகள் குறித்தும் பட்ஜெட்டில் ஏதும் அறிவிக்கப்படவில்லை. தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கான படுக்கைகள் 51% இருக்கின்றன. ஆண்டுதோறும் 4.5 கோடிப் பேர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். சுகாதாரத் துறையில் அரசு கவனம் செலுத்தினால், ஐந்து ஆண்டுகளுக்குள் 75 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பை உருவாக்கலாம். ஐரோப்பிய நாடுகளிலும் மத்தியக் கிழக்கு நாடுகளிலும் மருத்துவத் தாதியர் களுக்குப் பற்றாக்குறை இருப்பதால் இந்தியாவில் இருந்து ஏராளமானோரைத் தருவிக்கின்றன.

நம்முடைய மருந்து-மாத்திரை உற்பத்தித் தொழிலுக்கு உதவியாக காப்புரிமைச் சட்டங்களை மாற்றும் கொள்கைகள் குறித்தும் ஏதுமில்லை. தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ஆதரவாகக் கொள்கை வகுத்ததைப் போல, மருந்து-மாத்திரைத் துறையை வளர்க்கவும் சர்வதேசத் தரமுள்ள பேடண்ட் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். சுகாதார நலனுக்கு தேசிய அளவில் முன்னுரிமை தரப்பட வேண்டும். புதிய மருத்துவமனைகளுக்கு வரி விடுமுறைச் சலுகை தரப்பட வேண்டும். 99 ஆண்டு குத்தகைக்கு நிலமும் தரலாம்.

- டி.சி.ஏ.ராமானுஜம்,

வருமான வரித் துறை முன்னாள் தலைமை ஆணையர்

தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x