Last Updated : 01 Feb, 2018 09:59 AM

 

Published : 01 Feb 2018 09:59 AM
Last Updated : 01 Feb 2018 09:59 AM

சமத்துவம் ஏன் அவசியமாகிறது?

ஜெ

ர்மனியைச் சேர்ந்த தத்துவவாதியான வில்ஹெல்ம் ப்ரெட்ரிக் ஹெகல், தனது மகத்தான படைப்பான ‘பிலாசபி ஆஃப் ரைட்’ நூலில் (1820-ம் ஆண்டு) வறுமையால் ஏற்படும் தார்மிகச் சீரழிவு மற்றும் சேதாரங்கள் குறித்துக் கொஞ்சம் கசப்புடன் எழுதினார். வறுமை என்னும் நிலை வெறும் பிறழ்வு அல்ல; தொழில்மயமான சமூகம், அதிகமான உற்பத்தி மற்றும் குறைவான நுகர்வு உருவாக்கிய சமூக அமைப்பின் வெளிப்பாடு என்று விவாதிக்கிறார். சமூகம், தன்னால் பாதிக்கப்பட்டவர்களை ஒரு கூட்டு வாழ்க்கையின் சிதிலமான விளிம்புப் பிரதேசத்துக்குள் துரத்தும் காரியம் இது.

இங்கே, குடிமைச் சமூகத்தின் ஒற்றுமையால் கிடைக்கும் அனுகூலங்கள் கிடைக்காத நிலைக்குப் புறந்தள்ளப்படும் ஏழைகள், கடைசியில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத அணுக்களின் குவியலாக, கும்பலாக, கந்தைகளாக ஆக்கப்படுகின்றனர். பெரும் மக்கள் திரளின் வாழ்க்கைத் தரம், குறைந்தபட்ச தேவைகளைக் கூட நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் போகும்போது, எது சரி, எது தவறு என்பது தொடர்பான உணர்வையும், நேர்மை, சுயமரியாதை போன்றவை குறித்த உணர்வை யும் மக்கள் இழந்துபோவதை நாம் காண நேர்கிறது என்று ஹெகல் எழுதுகிறார்: “இயற்கைக்கு எதிராக மனிதன் எந்த உரிமையையும் கோர முடியாது. ஆனால் சமூகம் என்பது உருவாகிவிட்டால், ஒரு வகுப்பினர் மற்றொரு வகுப்பினருக்குச் செய்யும் அநீதியாக வறுமை உடனடியாக உருவெடுக்கிறது.”

வறுமை என்பது சமூக நிகழ்வு என்கிறார் ஹெகல். முதலாவதாக, வறுமையை உருவாக்குவதிலும் மறுஉருவாக்கம் செய்வதிலும் சமூகம் உடந்தையாக இருக்கிறது. ஒரு கோணலான பொருளாதாரத்தின் விளைவு கடும் வறுமைதான். இரண்டாவது, துரதிர்ஷ்டவசமான பின்விளைவுகளை, அதாவது மனிதர்களை நிலைகுலையச் செய்யும் படியான துயரம் போன்ற நிலைகளை, வறுமை உற்பத்திசெய்கிறது. மூன்றாவது, பெரும் எண்ணிக்கையிலான ஏழை மக்களின் இருப்பு என்பது சமூக ஒழுங்குக்கு நேரடியான அச்சுறுத்தலும்கூட. ஏனெனில், சமூகத்தின் அனுகூலங்களிலிருந்து விலக்கப்படுவதால் அவர்கள் நியாயமாகவே விரக்தியில் இருப்பார்கள். சொந்த மக்களுக்குக் காலம் காலமாகத் தான் இழைத்த அநீதிகளைச் சரிசெய்வதற்கு மறுக்கும் சமூகம் குறித்த ஹெகலின் விமர்சனத்தை, பொருளாதார வல்லுநர் தாமஸ் பிக்கெட்டி, அவர் சகா லூகாஸ் சான்ஸெல் வெளியிட்டிருக்கும் ஆய்வு முடிவுகளின் பின்னணியில் வைத்து தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டிய சமயம் இது.

இந்தியாவில் ஏற்றத்தாழ்வு

‘இந்தியாவின் வருமான ஏற்றத்தாழ்வு, 1922-2015: பிரிட்டிஷ் ராஜ்ஜியத்திலிருந்து பில்லியனர் ராஜ்ஜியம் வரை’ என்று மிகவும் பொருத்தமாகத் தலைப்பிடப்பட்ட தங்களின் ஆய்வுத்தாளில், இந்தியாவில் நிலவும் ஏற்றத்தாழ்வு மிகவும் தீவிரமானது என்ற முடிவுக்கு பிக்கெட்டி யும் சான்ஸெலும் வந்துள்ளனர். வருமான வரிச் சட்டம் 1922-ல் அமல்படுத்தப்பட்டதிலிருந்து அதிகபட்ச வருவாயைச் சம்பாதிக்கும் 1% குடிமக்கள் மொத்த வருவாயில் 22% பங்கை வைத்திருக்கும் தற்போதைய காலம் வரை அவர்களின் ஆய்வுக் கணக்கில் எடுத்துக்கொண்டது. கடுமையான வறுமையின் பிடியில் பல்லாயிரக் கணக்கான இந்தியர்கள் சிக்கிக்கிடக்கும்போது மாட்டுக் கறி அரசியல், கருத்து ஒடுக்குமுறை, அடிப்படை மனிதச் சுதந்திரங்களை ஒடுக்குதல் போன்றவற்றின் மீதே கவனம் செலுத்தும், அதிகாரத்தில் உள்ள உயர் வர்க்கத்தினருக்கு இந்த ஆய்வின் முடிவுகள் ஒரு எச்சரிக்கை மணிதான்!

இந்தியாவில் சிலர் நம்பவே முடியாத அளவுக்கு வறுமையிலும் மற்றவர்கள் நம்பவே முடியாத அளவுக்குச் செல்வச் செழிப்பிலும் இருக்கிறார்கள் என்ற கூற்று ஒரு எளிமைப்படுத்தலே. ‘ஏ’ என்பவர் ஏழை என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ளக்கூட வழியில்லை.

எக்ஸ், ஒய், இசட் போன்றோர் ஆரோக்கியமான உணவு, மருத்துவ வசதி, கல்விபெறும் வசதி, வேலைவாய்ப்பு வசதி, வீடு வாங்கும் நிலை, விடுமுறை உல்லாசம் அல்லது சொந்த கார் வாங்கும் வசதியுடன் இருக்கிறார்கள் என்று கொள்வோம். அப்படியெனில், ‘ஏ’ என்பவர் ஏழை மட்டும் அல்ல, அவர் சமமில்லாத நிலையில் எக்ஸ், ஒய், இசட்டுடன் இருக்கிறார். சமத்துவமின்மையின் விளைவாக மட்டுமின்றி, சமத்துவமின்மையின் முதன்மை யான அளவுமானியாகவும் வறுமை இருக்கிறது. அத்துடன் சமத்துவமின்மை என்பது வெட்கக்கேடானதாகவும் இருக்கிறது.

சமூகத்துக்கான சூசகங்கள்

நிச்சயமாக, சமத்துவமின்மை என்பது வெறுமனே புள்ளியியல் விவகாரம் அல்ல; நாம் வாழும் சமூகநிலை குறித்த அதிர்ச்சியூட்டும் பிரதிபலிப்பு. தர்க்கபூர்வமாகப் பார்த்தால், சமூகத்தின் பொருளாதாரப் படிநிலைதான் இந்த மோசமான நிலைக்குக் காரணமென்றால், ஏழை களுக்குத் தான் இழைத்திருக்கும் அநீதிகளைக் களையும் பொறுப்பும் சமூகத்தினுடையதே. நீதியின் அடிப்படை விதியை இதுதான் கட்டமைக்கிறது. அநீதி இழைக்கப்பட்டவர்கள் நீதியைப் பெறுவதற்கு உரிமை உள்ளவர்கள். நீதி வழங்கப்படாவிட்டால், சமத்துவமின்மை வலுவாகி, காலப்போக்கில் நிலைமை மிகவும் மோசமாகிவிடும்.

வெளிப்படையாகச் சொன்னால், இங்கே பிரம்மாண்ட மாக நிலவும் இந்த சமத்துவமின்மை, இந்தியாவில் நாம் காணும் சமூக உறவுகளின் இயல்பைக் கூர்மையாகவும் கடுமையாகவும் பிரதிபலிப்பதாக உள்ளது. ஏனெனில், இந்தச் சமூக உறவுநிலைகள் அப்பட்டமாக அநீதி கொண்டவை. மிக மோசமான பாகுபாடு மற்றும் சுரண்ட லில் ஊறியவையாகவே இருக்க முடியும். சுரண்டலையும் பாகுபாட்டையும் பொருட்படுத்தாமல், சமத்துவமின்மை பற்றிப் பேச முடியுமா? அத்துடன் பின்னணியில் இருக்கும் இந்தச் சமத்துவமின்மைகளுடன் நாம் நேரடியாக மோதாவிட்டால், சமச்சீரற்ற சமூக ஒழுங்கின் வெளியீடாக சமத்துவமின்மை தொடர்ந்து உருவாக்கப்பட்டுக் கொண்டே தான் இருக்கும்.

பரஸ்பர மரியாதைக்கான தார்மிகம்

அடிப்படை ஜனநாயக நடைமுறையையும் குடிமக்களின் சம நிலையை மீறுவதாலும் சமத்துவமின்மையின் உடன்விளைவுகளைக் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது. மனிதர்களுக்குச் சம நிலை ஏன் வேண்டுமெனில், மற்ற மனித உயிர்களுடன் பொதுவான சில திறன்களை ஒவ்வொருவரும் பேணுகின்றனர். உதாரணத்துக்கு மற்ற மனிதர்களுடன் சேர்ந்திசையும் அதேவேளையில், ஒருவர் தனது சுய சரித்திரத்தையும் உருவாக்கும் திறனைப் பெற்றிருக்கிறார். அவரவர் உருவாக்க நினைக்கும் வரலாறு கள் எல்லாம் வரலாறுகளாக வேண்டுமென்பதில்லை, அது பிரச்சினையும் அல்ல. ஒவ்வொரு நபரும் அத்திறனை உணர்ந்திருப்பதுதான் முக்கியமானது.

சமநிலை என்ற கருத்தியல் குறைந்தபட்சம் ஜனநாயக தார்மிகத்துக்கான இரண்டு பிரதான அடிப்படைகளைக் கொண்டிருக்கிறது. பொதுவாக, சில அடிப்படைப் பண்புகளைப் பகிர்ந்துகொள்ளும் நபர்களுக்கிடையில் சமத்துவ உறவு உருவாகிறது. தார்மிகரீதியாகப் பேசினால் சமத்துவம் என்பது இயல்புரிமை ஆகும். இரண்டாவது அடிப்படை என்னவெனில், இனம், சாதி, பாலினம், கலாச்சாரம், பாலினத் தேர்வுகள், வகுப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மனிதர்கள் பாகுபடுத்தப்படக் கூடாது என்பது.

அரசியல் தார்மிக நிலையின் இவ்விரண்டு அடிப்படை கள் பின்வரும் விளைவுகளைச் சாதிக்கக்கூடியவை. மனிதர்களைச் சமமாக ஏன் நடத்த வேண்டும் என்பதற்கான காரணம், அவர்கள் சம மரியாதையோடு நடத்தப்படுவதற்கான சமநிலையைக் கொண்டிருக்கின்றனர் என்பதுதான். மனிதர்களை நாம் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்பதற்கான காரணம், அவர்கள் சில சிறப்பான திறனைக் கொண்டிருக்கிறார்கள் என்பதால் மட்டுமல்ல. உதாரணத்துக்கு கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள், இசைக் கலைஞர் கள் அல்லது இலக்கிய ஆசிரியர்களாகத்தான் அவர்கள் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அவர்கள் மனித உயிர்களாக இருந்தாலே போதுமானது என்பது பொது தார்மிக உணர்வுநிலையாக இருக்க வேண்டும். ‘எதற்கு சமத்துவம்’ என்ற வினாவை ஒருவர் எழுப்பினால், சம நிலையையும் மரியாதையையும் சமத்துவம் உறுதிப் படுத்துகிறது என்றும் சமூகத்தில் மனிதர்கள் பல்வேறு பரிவர்த்தனைகளில் பங்குகொள்வதற்கு முக்கியமான முன்நிபந்தனையாக சுயமரியாதை இருக்கிறதென்றும் நாம் பதில் சொல்ல முடியும். அப்படி அவர்களால் செயல்பட முடியாவிட்டால், அரசு தனது குடிமக்களின் நலனில் தீவிரமாக இல்லையென்றே அர்த்தமாகிறது.

சமத்துவமின்மையே சமூக உறவாக மாறியிருக்கும் வலையில் சிக்கியிருக்கும் மக்களின் மீதான அரசு காட்டும் செயலின்மை மற்றும் சுரணையின்மையின் பின்னணியில், இந்தியக் குடிமக்களின் கூட்டு மனசாட்சியை உலுக்க வேண்டிய அவசரத் தேவை உள்ளது. சமத்துவத்துக்கான உரிமை மீறப்படும்போது, குடிமக்கள் இந்த மீறலை எதிர்த்துக் கொந்தளிக்க வேண்டும். ஆனால், இந்தச் சூழ்நிலை ஏற்பட வேண்டுமானால், சமூகம் கேட்பதற்குரிய உரிமையை ஆழமாக உணர வேண்டும். அரசியல் சிந்தனையிலும் நமது மதிப்பீடுகளிலும் நமது அரசியல் பேச்சுகளிலும் சமத்துவத்துக்கான உரிமையை இணைத்துக்கொள்ளுதல் வேண்டும். இத்திட்டத்துக்குப் படைப்பாற்றலுடன் கூடிய கற்பனையும் தைரியமும் ஒருபக்கம் தேவையெனில், மறுபுறம் கவனம் மிக்க காரண காரிய விளக்கத் திறனும், வென்றெடுத்தலும், பிறரைப் பற்றிய உரையாடலும் அவசியம்.

இந்த முயற்சிக்கு ஆற்றலும் நேரமும்கூட அவசியம். ஆனால் இது அவசியமானது. ஏனெனில், சமூகத்தின் அடிப்படை விதிகளாக எது இருக்க வேண்டும் என்ற அரசியல் புரிந்துணர்வுதான் நமது கூட்டுவாழ்க்கையின் மையமாகத் திகழ்கிறது. ‘அரசியல் என்பது தரப்படுவதல்ல, அது உருவாக்கப்பட வேண்டியது’ என்று கார்ல் மார்க்ஸ் முன்பே சொன்னது போல, தீர்மானகரமான, தொடர்ந்த அரசியல் தலையீடு மூலமாக மட்டுமே அது சாத்தியம்!

-நீரா சந்தோக்,

டெல்லி பல்கலைக்கழகத்தின் அரசியல்

அறிவியல் துறை முன்னாள் பேராசிரியர்,

தமிழில்: ஷங்கர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x