Published : 08 Jan 2018 10:44 AM
Last Updated : 08 Jan 2018 10:44 AM

தமிழ்ச் சிறுகதையின் நூறாண்டுப் பயணம்!

 

 நூற்றாண்டு தமிழ்ச் சிறுகதைகள்: தருணங்கள், சாதனைகள், எதிர்காலம்’ என்ற விழாவின் முதல் அமர்வில் எழுத்தாளர்கள் பிரபஞ்சனும் எஸ். ராமகிருஷ்ணனும் பேசினர்.

பிரெஞ்சு தந்த உத்வேகம்

பிரபஞ்சன்: பிரெஞ்சு மொழியிலிருந்துதான் சிறுகதை எனும் வடிவத்தை நாம் பெற்றுக்கொண்டோம். முதல் வரியில் கதை தொடங்க வேண்டும் என்ற விதி பிரெஞ்சு மொழியிலிருந்து வந்ததுதான். ரஷ்ய மொழிச் சிறுகதைகளில் 20 பக்கங்கள் தாண்டியும் கதை ஆரம்பிக்கும். ஆக, இவ்வாறு வேற்று மொழிகளிலிருந்து சிறுகதை எனும் வடிவத்தைப் பெற்றாலும், இந்திய அளவில் மிகச் சிறந்த சிறுகதையை எழுதியவர்கள் பலரும் தமிழ் எழுத்தாளர்களாகவே உள்ளனர். தமிழில் வெளிவந்த முதல் சிறுகதையாகக் குறிப்பிடப்படுவது வ.வே.சு.ஐயரின் ‘குளத்தங்கரை அரச மரம்’ எனும் சிறுகதை, அது தழுவல் கதை. வங்க மொழியில் தாகூர் எழுதிய கதை ஒன்றின் தழுவல் அது. அந்தக் கதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு ‘மாடர்ன் டிரிபியூன்’ இதழில் வெளியாகியிருந்தது. இந்த நூறு ஆண்டுகளில் தமிழ்ச் சிறுகதைகள் எவ்வளவோ உயரத்துக்குச் சென்றுவிட்டன.

எஸ்.ராமகிருஷ்ணன்: “முதல் தமிழ்ச் சிறுகதை, வங்க மொழியிலிருந்து நமக்குக் கிடைத்தது என்றால், வங்க மொழிக்கு ஆங்கில மொழியிடமிருந்து சிறுகதை கிடைத்தது. தமிழ்ச் சிறுகதையாளர்கள் யாருமே, ஆங்கில எழுத்தாளர்களின் பாதிப்பிலிருந்து உருவாகவில்லை. பால் சாக், மாப்பஸான் போன்ற பிரெஞ்சு எழுத்தாளர்களிடமிருந்தே உந்துதலைப் பெற்றார்கள். தமிழ்ச் சிறுகதைகள் என்பது தமிழ்க் குடும்பங்களின் கதை. அதேநேரம், 70-களில் வேலையில்லாத் திண்டாட்டம், 80-களில் நகர்மயமாதல் என ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒரு கருப்பொருளை மையப்படுத்தியே சிறுகதைகள் வெளியாகியிருக்கின்றன. ஆனால், அரசியல் சார்ந்தும், காதல் சார்ந்தும் வெளியான தமிழ்ச் சிறுகதைகள் மிகவும் குறைவு. ஈழம், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து எழுதப்படும் கதைகளையும் தமிழ்ச் சிறுகதைகளாக அங்கீகரிக்க வேண்டும்.

சுவாரஸ்ய எழுத்து இலக்கியம் இல்லையா?

‘வெகுசன இதழ்களில் சிறுகதை இலக்கியம்’ என்ற தலைப்பில் எழுத்தாளர்கள் பாஸ்கர் சக்தியும் பட்டுக்கோட்டை பிரபாகரும் பேசினார்கள்.

பாஸ்கர் சக்தி: ஒரு வாசகரின் தீவிர இலக்கிய வாசிப்புக்கு வெகுசன இதழ்கள்தான் தொடக்கப்புள்ளியாக இருக்கின்றன. ஆனால் இன்று பல இளம் தலைமுறை எழுத்தாளர்கள், சுவாரஸ்யமாகவும் பொழுதுபோக்கு அம்சங்களுடளும் கதை எழுதினால் அது தீவிர இலக்கியமாவதில்லை என்கிற தவறான கருத்துடன் இருக்கிறார்கள். பல தீவிர இலக்கியப் படைப்பாளிகளை அறிமுகப்படுத்திய எழுத்தாளர் சுஜாதாவே வெகுசன இதழ்களில்தான் இறுதிவரைக்கும் இயங்கினார்.

பட்டுக்கோட்டை பிரபாகர்: அச்சில் தமிழ்ச் சிறுகதை வந்துதான் நூற்றாண்டு கொண்டாடப்படுகிறது என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் அச்சில் வருவதற்கு முன்பே, வாய்வழியாக, செவிவழியாக மக்களிடையே சிறுகதைகள் புழங்கியிருக்கின்றன. ‘எ நைட் இன் தி மியூஸியம்’, ‘அவதார்’, ‘ஜுமான்ஜி’ என இன்றைக்கு நாம் பார்க்கும் ஹாலிவுட் படங்களில் இருக்கும் ‘ஃபேண்டஸி’ என்கிற விஷயத்தை தமிழ்ச் சிறுகதைகளில் நாம் என்றைக்கோ சாதித்துவிட்டோம்.

எல்லாமே பிரசாரம்தான்!

‘தமிழ்ச் சிறுகதைகளின் அரசியல் முகங்கள்’ என்ற அமர்வில் ‘முற்போக்கு இலக்கியம்’ குறித்து எழுத்தாளர் பா.செயப்பிரகாசமும் ‘திராவிட இலக்கியம்’ குறித்து எழுத்தாளர் இமையமும் பேசினார்கள்.

பா. செயப்பிரகாசம்: முற்போக்கு என்பது ஒப்பீடு சார்ந்தது. தமிழ்ச் சிறுகதையின் ஒவ்வொரு 10 ஆண்டுகளையும் எடுத்துக்கொண்டால், நமது எழுத்தாளர்கள் விடுதலைப் போராட்ட அரசியல், யதார்த்தவாதம், பெண்ணியம், தலித்தியம் என ஒவ்வொரு கருத்தியலை தங்கள் கதைகளில் பேசி வந்திருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால், ஒரு சாமானியனின் வாழ்க்கையில் நிலவும் அரசியலை தமிழில் முதன்முதலில் பேசியது புதுமைப்பித்தனின் ‘பொன்னகரம்’ சிறுகதையே.

இமையம்: திராவிட இலக்கியத்தால் பாதிக்கப்படாத தமிழ் எழுத்தாளர்களே இன்று இருக்க முடியாது. அதைப் பலரும் ‘பிரசார இலக்கியம்’ என்கிறார்கள். எதுதான் பிரசாரம் இல்லை? நான் நினைக்கும் ஒரு கருத்தை அடுத்தவருக்குச் சொல்ல வேண்டும் என்று நினைத்துச் சொல்வதும்கூட, ஒரு பிரசாரம்தான். அப்படிப் பார்த்தால் எல்லா இலக்கியமும் பிரசாரம்தான். திராவிட இலக்கியம், சமூகத்தின் கதையை முதன்மையாக வைத்தது. ஆனால், இன்றைய நவீன இலக்கியமோ தனிமனிதக் கதையை முதன்மைப்படுத்துகிறது.

மறைபொருள் என்று எதுவும் இல்லை!

‘தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகங்கள்’ என்ற அமர்வில் வட்டார இலக்கியம் குறித்து எழுத்தாளர் சு.வேணுகோபால், விளிம்புநிலை சமூகங்களின் இலக்கியம் குறித்து எழுத்தாளர்கள் அழகிய பெரியவன், களந்தை பீர் முகம்மது ஆகியோர் பேசினார்கள்.

சு. வேணுகோபால்: வட்டார இலக்கியம் ஏதோ இன்று, நேற்று தோன்றியதல்ல. அது சங்க காலம் முதலே இருந்து வருகிறது. சங்க இலக்கியங்களில் ஒரு திணைப் பாடலில் வரும் வரியை இன்னொரு திணைப் பாடலில் காண முடியாது. உதாரணத்துக்கு, பாலைத் திணையில் ‘அறநிலைப்பட்ட நெல்லி’ என்று ஒரு வரி வருகிறது. இதன் பொருள், நீர் இல்லாத காலத்தில், வழிப்போக்கர்களின் தாகத்தைத் தணிப்பதற்கு வழி நெடுக நட்டு வைத்த நெல்லி மரங்கள் என்பதாகும். அதேபோல மருதத் திணையில் மட்டும்தான் ‘கால்கோள் நாள் விழா’ என்ற வரி தென்படுகிறது. என்னைப் பொறுத்தவரை சி.சு.செல்லப்பா எழுதிய கதை ஒன்றை தமிழில் வெளியான முதல் வட்டார வழக்குச் சிறுகதை.

அழகிய பெரியவன்: 1930-களில் அமெரிக்காவில் தோன்றிய ‘நீக்ரோவியம்’ எனும் இயக்கம், ஆஸ்திரேலியாவில் எழுந்த தொல்பழங்குடிகளின் இயக்கம் ஆகியவற்றோடு இந்தியாவில் தோன்றிய தலித்தியத்தை ஒப்பிடலாம். 90-களில்தான் தமிழ் இலக்கியத்தில் தலித்தியம் பிறந்தது. எதையும் மறைத்து வைக்காமல் பேசக்கூடிய துணிச்சலை தமிழ் இலக்கியத்துக்குள் கொண்டு வந்ததுதான் தலித் இலக்கியம் செய்த மகத்தான சாதனை. அதன் காரணமாக, இன்றைய தமிழ்ச் சிறுகதைகளில் மறைபொருள் என்று எதுவுமே இல்லை!.

களந்தை பீர் முகம்மது: இன்று உள்ள ‘வகாபியிஸம்’ கலை, இலக்கியத்தை ஒப்புக்கொள்வதில்லை. புரட்சியைப் பற்றிப் பேச வேண்டுமானால்கூட, உங்களுக்கு குர்ஆனின் சம்மதம் இருக்க வேண்டும் என்ற நிலைதான் இப்போதுவரை இருக்கிறது. எங்கள் சமூகத்தின் மீது ஏவப்படும் வன்முறையை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். அதேபோன்று எங்கள் சமூகத்தினரின் தவறுகளையும் சுட்டிக்காட்டுகிறோம். அதனால் எங்களைப் போன்றவர்கள் மீது இந்துத்துவ முத்திரை குத்திவிடுகிறார்கள். பொது சமூகத்தாலும் எங்கள் சமூகத்தினராலும் நாங்கள் இகழப்படுகிறோம். இருந்தாலும் நாங்கள் எழுதுவோம்!

ஒற்றைப் பெண்ணியம் சாத்தியமில்லை

‘தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் பெண் எழுத்தாளர்கள்’ என்ற அமர்வில் நாடக இயக்குநர் ப்ரசன்னா ராமஸ்வாமி, எழுத்தாளர்கள் அ. வெண்ணிலா, சந்திரா பேசினார்கள்.

ப்ரசன்னா ராமஸ்வாமி: முரண்பாடுகளுடன்தான் இங்கு பெண்ணியம் செயல்படுகிறது. சாதிய ஓடுக்குமுறையை எதிர்கொள்ளும் பெண் படைப்பாளிகளின் தளம் வேறு, உயர்தட்டு பெண் படைப்பாளிகளின் தளம் வேறு. ஒற்றைப் பெண்ணியம் சாத்தியமில்லை. 

அ. வெண்ணிலா: தமிழின் முதல் நாவலான ‘பிரதாப முதலியார் சரித்தரம்’ வெளியாகி 18 ஆண்டுகளில் பெண் எழுத்து அறிமுகமாகிவிடுகிறது. வை.மு. கோதைநாயகி, குகப்பிரியை, குமுதினி, ‘பனித்துளி’ சரோஜா ராமமூர்த்தி, கமலா பத்மநாபன், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் போன்றவர்கள் தொடக்க கால பெண் எழுத்தாளர்கள். செண்பகம் ராமசாமியின் ‘சரோஜாதேவியின் கதை’, அனுராதாவின் ‘காளி’ போன்ற சிறுகதைகள் முக்கியமானவை. 

சந்திரா: 1930-களில் வை.மு. கோதைநாயகி காதல் போன்ற புரட்சிகர அம்சத்தைப் பற்றி எழுதியிருக்கிறார். 1940-களில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கைகள், சாதிய பாகுபாடுகளை எதிர்த்து எழுதினார். அம்பையின் சிறுகதைகள் சமூக விதிகளை கேள்விக்கு உள்ளாக்கின. தலித் எழுத்தாளர்களில் பாமாவும் சிவகாமியும் பெண்களின் வாழ்க்கையை துணிச்சலுடன் பதிவுசெய்திருந்தார்கள்.

கதாசிரியருக்கு உள்ள சுதந்திரம் தனித்துவமானது

இயக்குநர் வெற்றிமாறன்: ‘சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்ட குறும்படங்கள் திரையிடல்’ அமர்வை இயக்குநர் வெற்றிமாறன் தொடங்கிவைத்தார். இயக்குநர் பாலுமகேந்திரா இயக்கிய பிரபஞ்சனின் ‘ஒரு மனுஷி’ என்ற படம் திரையிடப்பட்டது. இலக்கியத்தைத் திரைப்படமாக எடுப்பதில் இருக்கும் சவால்களை வெற்றிமாறன் பகிர்ந்து கொண்டார்: ஒரு செவ்வியல் நாவலில் இருக்கும் அழகியல் அம்சங்கள் திரைப்படத்துக்குப் பயன்படாது என்பார் பாலுமகேந்திரா. எழுத்தாளனுக்கு இருக்கும் சுதந்திரம் திரைப் படைப்பாளிக்கு இருப்பதில்லை. ஒரு செவ்வியல் நாவல், செவ்வியல் திரைப்படமாக மாறாமல் இருப்பதற்கு இதுவே காரணம்.

கதாநாயகர்களும் தயாராக வேண்டும்

‘சிறுகதைகளும் தமிழ்த் திரைப்படங்களும்’ என்ற அமர்வில் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனின் ‘வெயிலோடு போய்’ கதையை ‘பூ’ திரைப்படமாக மாற்றியதைப் பற்றி இயக்குநர் சசி பகிர்ந்துகொண்டார்: அந்தச் சிறுகதையை நான் படிக்காமல் போயிருந்தால், இயக்குநராகியிருக்க மாட்டேன். கிராமங்களை எனக்கு அறிமுகப்படுத்தியதே அந்தக் கதைதான். எனது கல்லூரிக் காலத்தில் படித்த அந்தக் கதையைத்தான் முதல் படமாக எடுக்க வேண்டுமென நினைத்தேன். ஆனால் 10 ஆண்டுகளுக்குப் பிறகுதான் எடுக்க முடிந்தது. ஆனாலும் அதை முழுமையாகப் படமாக்க முடியவில்லை.

அந்தக் கதையின் இறுதியில் மாரியின் மனது அருமையாகப் படம்பிடிக்கப்பட்டிருக்கும். ‘அவள் அவளின் மச்சானை நினைத்து மட்டும் அழவில்லை. அவனது குடும்பத்தார், அவளது அக்கா (அதாவது, மச்சானின் மனைவி) ஆகியோரையும் நினைத்து அவள் அழுதாள்’ என்பதாக தமிழ்ச்செல்வன் முடித்திருப்பார். அதைத் திரையில் கொண்டுவர முடியவில்லை.

எழுத்தாளர் பாஸ்கர் சக்தியின் ‘அழகர்சாமியின் குதிரை’ சிறுகதையைத் திரைப்படமாக்கிய அனுபவத்தை இயக்குநர் சுசீந்திரன் பகிர்ந்துகொண்டார்: “எனக்கு எப்போதும் உணர்வுபூர்வமான விஷயங்களை நகைச்சுவை கலந்து சொல்லப் பிடிக்கும். ‘அழகிரிசாமியின் குதிரை’ அதற்குச் சரியான தேர்வு. அந்தக் கதையைத் திரைக்கதையாக்குவதற்குப் பட்ட கஷ்டத்தைவிட, அந்தப் படத்தில் ஹீரோவாக நடித்த அப்புக்குட்டிக்கு ஹீரோயின் தேடுவது மிகவும் சிரமமாக இருந்தது. நல்ல சினிமாக்கள் வருவதற்கு இயக்குநர்கள் மட்டுமே போதாது. ஹீரோக்களும் தயாராக வேண்டும்.

மொழிபெயர்ப்புகள் முக்கியம்!

‘தமிழ்ச் சிறுகதைகள்மீது உலக இலக்கியத்தின் தாக்கம்’ என்ற அமர்வில் எழுத்தாளர் சி.மோகன், மொழிபெயர்ப்பாளர் ஜி. குப்புசாமி பேசினார்கள்.

சி. மோகன்: மொழிபெயர்ப்புகள் மூலம்தான் நாம் ஒரு கலையின் எல்லையற்ற சாத்தியத்தைப் புரிந்துகொள்ள முடியும். புதுமைப்பித்தன், க.நா.சு. போன்ற பல தமிழ் எழுத்தாளர்கள் உலகத்தின் சிறந்த சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கிறார்கள். என்றாலும், இதுவரை 112 இலக்கிய நோபல் பரிசு வென்றவர்களில், நமக்கு 10-க்கும் குறைவான அயல் எழுத்தாளர்களை மட்டும்தான் தெரியும். அதுவும்கூட மொழிபெயர்ப்பால்தான் சாத்தியமாகியிருக்கிறது.

ஜி.குப்புசாமி: தமிழ்ச் சிறுகதைகளின் பிதாமகன் என்று சொல்லப்படும் புதுமைப்பித்தன் எழுதிய சிறுகதைகளைவிட, அவர் மொழிபெயர்த்த உலகச் சிறுகதைகள் பக்க அளவில் பெரியவை. அவரின் பல கதைகளில் மேற்கத்தியக் கதைகளின் தாக்கம் தெரியும். தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள 1001 அரேபியக் கதைகளைச் சொல்லும் ‘ஷகர்தாதி’யின் நீட்சியாக, புதுமைப்பித்தனின் ‘சிற்பியின் நகரம்’ கதையைச் சொல்லலாம். ஜெயகாந்தனின் பல கதைகளில் மாப்பஸானின் தாக்கத்தைக் காண முடியும். அசோகமித்திரனின் கதைகள் பலவற்றில் ரேமண்ட் கார்வரின் தாக்கத்தைக் காண முடியும்.

 

தொகுப்பு: ஜெ.கு.லிஸ்பன் குமார், ந.வினோத் குமார், என்.கௌரி, க.சக்திவேல்

படங்கள்: ஸ்ரீபரத், எல்.சீனிவாசன்

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x