Published : 13 Oct 2017 09:06 AM
Last Updated : 13 Oct 2017 09:06 AM

பணமதிப்பு நீக்கம் ஒரு மீள் பார்வை!- 5: பொருளாதாரச் சரிவின் தொடக்கப் புள்ளியா?

மூ

ன்று ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டன - ‘அச்சே தின் ஆனே வாலே ஹைய்ன் (நல்ல நாட்கள் வந்துகொண்டிருக்கின்றன)’ எனும் முழக்கத்தை மக்கள் கேட்டு! 2014-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வைத்த முழக்கம் இது. இந்த வார்த்தைகளை மக்களிடம் சேர்த்தவர் பிரதமர் நரேந்திர மோடி.

ஊழல் மலிந்த இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வதாக மோடி அப்போது கூறிய வார்த்தைகளை இன்றளவும் மக்கள் மறக்கவில்லை. ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டன. வளர்ச்சிக்கான அறிகுறிகள் இம்மியளவுகூட தெரியவில்லை. மாறாக நாட்டின் பொருளாதார நிலை எதிர்மறை திசையில் சென்றுகொண்டிருக்கிறது. கடந்த காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக் குறியீடே இதற்கு சிறந்த உதாரணம். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 5.7 சதவீதமாக இருக்கிறது. உற்பத்தித் துறை வளர்ச்சி கடந்த காலாண்டில் 1.2 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடப்புக் கணக்கு பற்றாக்குறை 2.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. பெரிய அளவில் முதலீடுகள் வரவில்லை. தனியார் நுகர்வு குறைந்துகொண்டே வருகிறது. இப்படி அனைத்து அடிப்படைப் பொருளாதாரக் காரணிகளும் எதிர்மறையாக உள்ளன.

ஆசிய அளவில் பார்த்தால் கடந்த காலாண்டில் நமது நாட்டின் ஜிடிபி வளர்ச்சி மட்டுமே குறைந்திருக்கிறது. சீனா, மலேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளோடு ஒப்பிடும்போது இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி பின்னால் இருக்கிறது. நமது அண்டை நாடான பாகிஸ்தானின் ஜிடிபி வளர்ச்சி இந்தியாவுக்கு நிகராக இருக்கிறது. வங்கதேசத்தின் ஜிடிபி வளர்ச்சி நமது நாட்டுடன் ஒப்பிட முடியாத அளாவுக்கு அதிகரித்திருக்கிறது. இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி குறைந்ததற்கு மூன்று முக்கிய காரணங்கள்: பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, கிராமப்புறப் பொருளாதாரம்.

பணமதிப்பு நீக்கம் தோல்வி

பணமதிப்பு நீக்கத்தின் பிரதான நோக்கம் கறுப்புப் பண ஒழிப்பு. ஆனால், அந்த நோக்கத்தை இந்தச் செயல்பாடு எட்டவில்லை என்பதுதான் நிதர்சனம். பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டபோது நாட்டின் மொத்த பணப் புழக்கத்தில் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 15.44 லட்சம் கோடி. பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டபோது அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹட்கி உச்ச நீதிமன்றத்தில் பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் 4 முதல் 5 லட்சம் கோடி வரை வங்கிக்கு திரும்ப வராது என்று தெரிவித்தார். ஆனால், இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஆண்டறிக்கையில், பணமதிப்பு செய்யப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் 99% திரும்ப வந்துவிட்டதாகவும் 1 சதவீத நோட்டுகள் திரும்ப வரவில்லை என்றும் அறிக்கையில் கூறியிருக்கிறது. அதாவது 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே வங்கிக்குத் திரும்ப வரவில்லை. மீதமுள்ள பணம் அனைத்தும் அமைப்புக்குள்ளேயே தொடர்ந்து புழங்கிவருகிறது என்பதைத்தான் இது காட்டுகிறது.

இது ஒருபுறம் இருக்க பணமதிப்பு நீக்க நடவடிக்கையானது கிராமப்புறப் பொருளாதாரம், சிறுதொழில்கள், விவசாயம் என இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படைகளைச் சாய்த்துவிட்டது. கடந்த நிதியாண்டில் முதல் ஆறு மாத காலத்தில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 7.7 சதவீதமாக இருந்தது. ஆனால், தற்போது 5.7 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. கிராமப்புறங்களில் பணத் தட்டுப்பாடு அதிகமாக இருந்ததால் முதலீடுகளும் நுகர்வும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்ததுதான் இதற்கு முக்கிய காரணம்.

ஜிஎஸ்டியில் ஏன் அவசரம்?

பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுத்த 8 மாதங்களுக்குள்ளேயே அவசர அவசரமாக, எந்தவிதத் தொழில்நுட்பப் பின்புலமும் இல்லாமல் ஜிஎஸ்டியை அமல்படுத்தியது மத்திய அரசு. ஜிஎஸ்டி அமல்படுத்துவதற்கு முன்னால் 20% நிறுவனங்கள் மட்டுமே புதிய வரிமுறைக்குத் தயாராக இருந்தன. மீதமுள்ள நிறுவனங்கள், வணிகர்கள் புதிய வரிமுறைக்கு மாறுவதற்குப் போதுமான கால அவகாசத்தை மத்திய அரசு வழங்கவில்லை. ஜிஎஸ்டியை அமல்படுத்த இருந்ததால் வணிகர்கள் சரக்குகளைத் தேக்கி வைக்கும் நிலைகூட ஏற்பட்டது. இது நாட்டின் பொருளாதாரத்தில் மிகப் பெரிய சரிவை ஏற்படுத்தியது. பணமதிப்பு நீக்கத்தால் ஏற்கெனவே சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் பாதிக்கப்பட்டு, உற்பத்தி குறைந்திருந்த நிலையில் ஜிஎஸ்டி உற்பத்தித் துறையை மேலும் முடக்கி போட்டது. கடந்த காலாண்டில் உற்பத்தித் துறை குறியீடு குறைந்ததற்கு இது முக்கிய காரணம். மேலும், வங்கிகளின் வாராக்கடன் அளவு அதிகரித்ததால் கடன் வழங்கும் நடவடிக்கைகள் குறைந்துவிட்டன. முதலீடுகள் குறைந்ததால் தொழில்துறை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

அழிவு நிலையில் கிராமப்புற பொருளாதாரம்

2008-ல் சர்வதேச அளவில் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டபோது இந்திய பொருளாதாரத்தில் அதிக அளவு பாதிப்பு ஏற்படவில்லை. அதாவது பங்குச்சந்தை சரிந்ததே தவிர மக்களிடையே அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. காரணம், கிராமப்புறப் பொருளாதாரம் வலுவாக இருந்தது. ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்’ நடைமுறையில் இருந்ததால் தொடர்ந்து வேலைவாய்ப்பு இருந்தது. மக்களிடையே பணப்புழக்கம் இருந்ததால் நுகர்வு குறையவில்லை. இந்தச் சுழற்சிதான் இந்திய பொருளாதாரத்தை காப்பாற்றியது. இந்த காலகட்டத்தில் விவசாய உற்பத்தி வளர்ச்சி 3 சதவீதமாக இருந்தது. விவசாய வருமானம் 7.5% அதிகரித்தது. இதன் காரணமாக நுகர்வு அதிகரித்தது. அதே சமயம் பணவீக்கமும் அதிகரித்தது.

ஆனால் 2014-15 மற்றும் 2015-16-ம் நிதியாண்டுகளில் ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட’த்துக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை; அதற்கு ஒதுக்கப்பட்ட நிதியும் குறைக்கப்பட்டது. மேலும் இரண்டு ஆண்டுகள் நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் வறட்சி ஏற்பட்டதால் கிராமப்புறப் பொருளாதாரம் முற்றிலுமாக நலிவடைந்தது. தேவையும் குறைந்து நுகர்வு குறைந்ததால் நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு ஆட்டம் கண்டிருக்கிறது.

முதலீடுகள் இல்லை

தனியார் முதலீடுகள் குறைந்தது பொருளாதாரச் சரிவுக்கு முக்கியக் காரணம். 2009-ல் அதிகக் கடன் வாங்கிய நிறுவனங்களும் இன்னமும் அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்துவருகின்றன. இதன் தாக்கம் வங்கிகளின் கட்டமைப்பையே தாக்கும் அளவுக்கு வந்துவிட்டன. இதன் காரணமாக வங்கிகள் கடன் அளிப்பதைக் குறைத்துவிட்டன. இந்தியாவில் தனியார் முதலீட்டில் 80% நிதி, வங்கிகள் மூலமாகவே வருகின்றன. வங்கிகள் நிதி அளிப்பது குறைந்ததால் ஒட்டுமொத்த முதலீட்டுச் சூழலையே பாதித்துள்ளது. வங்கிகளை மறுசீரமைப்பு செய்யாமல் தனியார் முதலீடுகளை ஊக்குவிக்க முடியாது.

அதுமட்டுமல்லாமல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரசு முதலீட்டு விகிதம் கடந்த எட்டு ஆண்டுகளாக 35 சதவீதமாக இருந்துவந்தது. தற்போது 30 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதனால் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படவில்லை.

நல்ல நாட்கள் வராதா?

சமீபத்தில் வெளியான புள்ளிவிவரம் பலரையும் ஆச்சரியப்படுத்தக்கூடியது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்தாலும் இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டில் 26% அதிகரித்துள்ளது. ஒருபுறம் கிராமப்புறப் பொருளாதாரம் அழிவு நிலையில் சென்றுகொண்டிருக்கிறது. மறுபுறம் கோடீஸ்வரர்களின் சொத்துமதிப்பு அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அரசின் பொருளாதாரக் கொள்கை முடிவுகள் யாருக்குச் சாதகமாக இருந்துவருகின்றன என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ள முடியும்.

2017-ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது. ஏற்கெனவே கணித்திருந்ததை விட 0.5 சதவீதத்தை தற்போது குறைத்துள்ளது. இதற்கு பணமதிப்பு நீக்கமும் ஜிஎஸ்டியும் காரணம் என்று உலக வங்கி அறிக்கை கூறுகிறது. ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் பேசிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ‘பணமதிப்பு நீக்கமும் ஜிஎஸ்டியும் இந்திய பொருளாதாரத்தை வலுவான பாதையில் அழைத்துச் சென்றுகொண்டிருக்கின்றன’’ என்று பேசுகிறார்.

நடைமுறை வேறாக இருக்க, தொடர்ந்து மோடி அரசும் அமைச்சர்களும் வெற்று வாசகங்களாலும் கோஷங்களாலும் மக்களை மாற்றிவிடலாம் என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்தியப் பொருளாதாரத்தின் நிலைமை பொதுவெளிக்கு வந்துவிட்டது. மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள். அதன் பிரதிபலிப்புதான் பொருளாதாரம் சரிவில் இருக்கிறது என்பதை சமீபத்தில் மோடி ஒப்புக்கொண்டது. கடந்த சில நாட்களுக்குப் முன்பு நிறுவனச் செயலாளர்கள் மாநாட்டில் பேசிய மோடி, ‘பொருளாதார வளர்ச்சி விகிதம் தற்போது மட்டுமா 5.7 சதவீதத்தில் இருக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் எட்டு முறை பொருளாதார வளர்ச்சி குறைந்த சம்பவங்களை கூற முடியும்’ என்று கூறுகிறார். பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்ற நாட்டின் முக்கிய பொருளாதாரக் கொள்கை முடிவுகளைத் தானாக முன்வந்து அறிவித்த பிரதமர், பொருளாதார வளர்ச்சி விகிதம் சரிந்ததற்கான காரணங்களை ஏன் விளக்க மறுக்கிறார்? நல்ல நாட்கள் வரும் என்று பிரதமர் கூறினார் அல்லவா? எப்போது வரும்?

- தேவராஜ் பெரியதம்பி,

தொடர்புக்கு: devaraj.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x