Published : 01 Aug 2015 09:56 AM
Last Updated : 01 Aug 2015 09:56 AM

வளர்ச்சியின் பெயரால்...

காடுகள் காரிருள் சூழ்ந்து காணப்படுவதாலேயே, வீடுகள் ஒளி வெள்ளத்தில் மிதக்கின்றன!

பத்திரிகையாளர்கள் எதையும் விருப்பு - வெறுப்பு இல்லாமல் பார்க்கவும் படிக்கவும் கடமைப்பட்டவர்கள். பயங்கரமான சம்பவங்களைக்கூட உணர்ச்சிவசப்படாமல், நிலை தடுமாறாமல் பார்த்து ஆராய வேண்டியவர்கள். இந்தத் திறமை எனக்கு எப்போதுமே வாய்த்ததில்லை. ஆனால், இப்படி இருப்பது நான் மட்டுமல்ல. நாம் எப்போதுமே மோசமான செய்திகளுக்குத்தான் முக்கியத்துவம் தருகிறோம். ஆனால், சில செய்திகளை நம்மாலேயே ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

ஒவ்வொரு நாளும் நம்முடைய கற்பனைக்கெல்லாம் எட்டாத வகையில் மாபெரும் அழிவை இந்தப் பூமி சந்தித்துக் கொண்டிருப்பதைப் பற்றிய செய்திகள் எங்கே வருகின்றன? அடர்ந்து வளர்ந்த மழைக்காடுகள் அழிப்பு, செழித்து பரந்த புல்வெளிகள் ஒழிப்பு, பல்வேறு உயிரிகளுக்கும் உற்ற உறைவிடமாகத் திகழும் பவளப் பாறைகள் தகர்ப்பு, அரிய கடல்வாழ் உயிரினங்கள் அழிப்பு - இந்தச் செய்திகள் எல்லாம் எந்த அளவுக்கு நமக்குக் கிடைக்கின்றன? அப்படி அரிதினும் அரிதாகக் கிடைக்கும் ஓரிரு செய்திகளுக்கும் நம்முடைய எதிர்வினைதான் என்ன?

கம்போடியாவின் ஆரங் பள்ளத்தாக்கின் கதை

கம்போடிய நாட்டின் ஆரங் பள்ளத்தாக்கில் வசிக்கும் தொல்குடி மக்கள் மிக வலுவான வனப்பாதுகாப்பு பாரம்பரியங்களைக் கொண்டவர்கள். நெடிதுயர்ந்த மரங்களையும் அரிய வனப் பிராணிகளையும் யாரும் அழித்துவிடாமல் அவர்கள்தான் காத்துவருகின்றனர். எனவே, இங்குள்ள பசுங்காடுகளும் சதுப்பு நிலங்களும் ஏரிகளும் புல்வெளிகளும் ஏராளமான தாவர, உயிரிகளுக்கு உற்ற புகலிடங்களாகத் திகழ்கின்றன.

உலகின் பிற பகுதிகளில் அழிவைச் சந்தித்த இனங்கள் எல்லாம் இங்கே பாதுகாப்பாக இருக்கின்றன. சயாம் முதலைகள் இனம் அழிந்துவிட்டாலும் அவற்றில் எஞ்சிய 200 இங்கேதான் வாழ்கின்றன. ஆசிய யானைகள், வெள்ளை இறக்கை வாத்து, ஆரோவணா என்ற அரிய ஆசிய மீனினம், மிருதுவான தோலைக்கொண்ட நீர்நாய், அலையாத்திக் காடுகளில் வாழும் ஆமை, கால்கள் சற்றே வளர்ந்த ஆமை போன்றவை இங்கே வசிக்கின்றன.

இந்த உயிரினங்களுக்கெல்லாம் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் நீர்மின்சாரத் திட்டம் ஒன்றைக் கம்போடிய அரசு வகுத்திருக்கிறது. அந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், இந்தப் பள்ளத்தாக்கு நீரில் மூழ்கும். பிறகு, இந்த உயிரினங்களின் அழிவு தொடங்கிவிடும். சில காலத்துக்குப் பிறகு, இந்தப் பள்ளத்தாக்கே எதற்கும் பயனில்லாத வறண்ட தண்ணீர்த் தொட்டியாக மட்டுமே காட்சியளிக்கும்.

அணை கட்டுவதற்கான சாதனங்களை எடுத்துக்கொண்டு லாரிகள் வரும். அவற்றுக்காக முதலில் பாதை அமைக்கப்படும். பாதை வந்த பிறகு, இந்தக் காட்டில் உள்ள மரங்களை வெட்டி எடுக்க ஒப்பந்ததாரர்கள் வருவார்கள். அரிய உயிரினங்களைக் கொன்று செல்ல வேட்டைக்காரர்கள் வருவார்கள். வியாபாரிகளுக்கும் வந்துபோக சவுகரியமாகிவிடும்.

உலகின் பல்வேறு நாடுகளில் நீர்மின் திட்டத்துக்காகவும் பாசனத்துக்காகவும் கட்டப்பட்ட அணைகளில் பெரும்பாலானவை இப்போது நீரும் இன்றி, பயனும் இன்றி இயற்கையைச் சீரழித்ததோடு காட்சிப் பொருளாகவே விளங்குகின்றன. அதுமட்டுமின்றி அங்கே வாழும் தொல்குடிகளும் சொந்த இடங்களைவிட்டு விரட்டப்பட்டு அகதிகளாக்கப்பட்டனர். கம்போடிய அரசு கட்டும் நீர்மின் திட்டமும் சில ஆண்டுகளுக்கு மட்டுமே பயன்தரும் என்று இந்த இடத்தைப் பார்க்கும்போதே தெரிகிறது. இந்தச் செய்தி எத்தனை சர்வதேச ஊடகங்களில் இடம்பெற்றிருக்கிறது. அரிதாக இதைத் தெரிந்துகொண்டிருக்கும் நாம் இதற்குக் காட்டப்போகும் எதிர்வினை என்ன?

பெரு பிரமிடின் கதை

பெரு நாட்டில் 2013-ல் ஒரு ரியல் எஸ்டேட் வியாபாரி, 4,000 ஆண்டுகள் பழமையான ஒரு பிரமிடை, வீட்டுமனை போட இடைஞ்சலாக இருக்கிறது என்று புல்டோசர்களை விட்டு இடித்துத்தள்ளி மட்டமாக்கிவிட்டார். லிபியாவில் மிகப் புராதனமான சின்னங்களுக்கு அருகிலேயே அடுக்ககங்களைக் கட்டிவருகின்றனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக இந்தச் செய்திகள் வெளியாயின. நம்முடைய எதிர்வினை என்ன?

நியூசிலாந்து காடுகளின் கதை

நியூசிலாந்து நாட்டில் சில பத்தாண்டுகளுக்கு முன்வரை வார இறுதி நாளில் குடும்பத்தோடு காட்டுக்குச் செல்வார்கள். நன்கு வளர்ந்த மரங்களின் பட்டைகளை அடித்து உடைத்து மரத்தை அதன் சரி பாதியில் கோடாலியால் வெட்டிச் சேதப்படுத்துவார்கள். அல்லது மரத்தின் நடுவில் அரை அடி உயரத்துக்கு ரம்பத்தால் அறுத்தோ கோடாலியால் பிளந்தோ அது எப்போது வேண்டுமானாலும் விழட்டும் என்ற வகையில் ஒடிப்பார்கள்.

அவர்களைப் பொறுத்த அளவில் இதில் தவறு ஏதுமில்லை. ஏனென்றால், மரங்களைக் கொல்வது நாட்டுக்கு நல்லது என்று நினைத்து அவர்கள் இதைச் செய்தார்கள். இருளும் மர்மமும் நிறைந்த காடுகள் அழிவது நல்லது என்றே கருதினார்கள். ஏனென்றால், அவர்களுக்குக் ‘கற்பிக்கப்பட்டது’அப்படி. இப்போது அபிவிருத்தித் திட்டங்கள் நியூசிலாந்தின் வன வளத்தைக் கபளீகரம் செய்துகொண்டிருக்கின்றன. நம்முடைய எதிர்வினை என்ன?

இரண்டு அணுகுமுறைகள்

நமக்கு மத்தியக் கிழக்கில் நடக்கும் சம்பவங்கள் இப்போ தெல்லாம் உடனுக்குடன் வந்து சேர்ந்துவிடுகின்றன. காசா பகுதி மீது குண்டுகள் வீசப்படுவதும், சிரியாவில் நடக்கும் போரும், பிணையாட்களை ஐ.எஸ். அமைப்பினர் கழுத்தை அறுத்துக் கொல்வதும் உடனடியாகப் படிக்கவும் பார்க்கவும் கிடைக்கின்றன. தனக்கு எதிரானவர்கள் என்று முடிவு கட்டியவர்களுக்கு எதிராக ஐ.எஸ். பல்வேறு கொடூரங்களை அரங்கேற்றுகிறது. அதனுடைய குறுகிய கண்ணோட்டப்படி எது புறம்பானதோ அது அழிக்கப்படுகிறது.

நிம்ருத், ஹத்ரா நகரங்களில் இருந்த பாரம்பரியக் கலைச் சின்னங்களும் சிற்பங்களும் கட்டுமானங்களும் தொல்லியல் சான்றுகளும் ஐ.எஸ். அமைப்பைப் பொறுத்தவரை எதிரானவை. பல்லாண்டுகள் மழை, வெயில், பனி, புயலுக்கு ஈடுகொடுத்து நிலைத்து நின்றவை அனைத்தும் சில மணி நேரங்களுக்குள் தகர்த்து சின்னாபின்னமாக்கப்பட்டு மண்ணோடு மண்ணாக வெட்டி நிரவப்பட்டுவிட்டன. நாம் உச்சுக் கொட்டுகிறோம். மறுபுறம், கம்போடியாவின் ஆரங் பள்ளத்தாக்குக்கு நம்முடைய எதிர்வினை என்ன?

ஐ.எஸ். அமைப்பு மதத்தின் பெயரால் அழிவுகளைத் திணிக்கிறது; ஏனையோர் அதை வெவ்வேறு பெயர்களால் திணிக்கிறார்கள். எந்தவித அழிப்புமே நியாய மானது அல்ல. ஆனால், நாம் ஒன்றைக் கண்டிக் கிறோம், மற்றதற்கு மவுனம் சாதிக்கிறோம் அல்லது வளர்ச்சியின் பெயரால் நியாயப்படுத்தக் கற்றுக்கொண்டிருக்கிறோம்.

பணம் மட்டுமே காரணம் அல்ல

வெறும் பணம் சம்பாதிப்பது மட்டும் இத்தகைய அழிவுகளுக்குக் காரணம் அல்ல. வேறு சில அரசியல், சமூக, கலாச்சாரக் காரணங்களும் இருக்கின்றன. புனித நூல்களில் கூறப்பட்டுள்ளதைப் போல இருளை விரட்டி ஒளியைப் பாய்ச்சவும், தீமையை அழித்து நன்மையைப் புகுத்தவும், கருப்புத் தோலைக்கொண்ட நாகரிக மற்ற மக்களை அடக்கி அவர்களுக்கு நாகரிகத்தைப் புகட்டவும், வந்தேறிகள் நிலங்களைக் கைப்பற்றிக்கொண்டு பூர்வ குடிகளை நிலமில்லாமல் விரட்டவும், உள்ளூர் மக்களைக் கசக்கிப் பிழிந்து வேலைவாங்கி அடிமைகளாக நடத்தவும் இந்த வளர்ச்சித் திட்டங்கள் பயன்படுகின்றன.

இத்தகைய திட்டங்கள் மனித குல முன்னேற்றத்துக்கு உதவும் என்று நமக்கு நாமே கற்பித்துக்கொள்கிறோம். நம்பப் பழகியிருக்கிறோம். முக்கியமாக, உலகில் எங்கோ ஒரு காட்டில் விழும் மரங்கள் நம்மைப் பாதிக்கப்போவதில்லை என்று நம்புகிறோம். காடுகள் காரிருள் சூழ்ந்து காணப்படுகின்றன. வீடுகள் ஒளி வெள்ளத்தில் மிதக்கின்றன!

© தி கார்டியன், தமிழில் சுருக்கமாக: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x