Last Updated : 30 Jan, 2017 09:30 AM

 

Published : 30 Jan 2017 09:30 AM
Last Updated : 30 Jan 2017 09:30 AM

மையங்களையும் பிம்பங்களையும் தகர்த்த போராட்டம்

போராடுவதற்கான வேட்கையும் உத்வேகமும் தமிழ்ச் சமூகத்தில் உயிர்ப்புடன் இருப்பதை இப்போராட்டம் நிரூபித்திருக்கிறது.

எப்படி இத்தனை பேர் கூடினார்கள்? யாருக்கும் புரியாத ஒரு விஷயம் இது. ஆளுங்கட்சியின் ஆசீர்வாதம், ஒரு சாதியின் ஏற்பாடு என்றெல்லாம் பல யூகங்கள் முன்வைக்கப்பட்டன. இவற்றில் உண்மை இருக்கலாம் என்றுகூட முதல் ஓரிரு நாட்களுக்குப் பலருக்கும் தோன்றியிருக்கும். ஆனால், சென்னை மெரினா கடற்கரையில் அடுத்தடுத்த நாட்களில் கூட்டம் பலவாகப் பெருகியதில் யூகங்கள் அடங்கி வியப்பு எழுந்தது.

பொதுவாக, அரசியல் வாசனையே அற்றவர்கள்கூடக் கடற்கரைக்கு வந்து அமர்ந்துகொண்டார்கள். அரசியலில் ஆர்வம் காட்டாத பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து அமர்ந்தார்கள். சமூகத்தின் பல்வேறு தட்டுகளையும் சாதி, மதங்களையும் கட்சிகளையும் சார்ந்த பலர் மெரினாவில் கூடக்கூட வியப்பு பிரமிப்பாக மாறியது.

பன்முகத்தன்மையே பதில்

கூட்டத்துக்குப் பின்னால் திட்டம், ஏற்பாடு, தந்திரம் ஆகியவற்றைக் கண்டுபிடிக்க விழை பவர்களுக்கு இந்தப் பன்முகத்தன்மையே சரியான பதிலைத் தருகிறது. இன்றைய அமைப்புகளும் திட்டமிடல்களும் அடிப்படையிலேயே பன்முகத்தன்மையை மறுத்து ஒற்றைப்படைத்தன்மையை முன்னிறுத்துபவை. ‘ஒரு கொள்கை, ஒரு கோஷம், ஒரு கூட்டம்’ என்பதே அமைப்பு சார்ந்த சிந்தனைகளின் அடிப்படையாக மாறிவரும் நிலையில், இந்தப் போராட்டம் எல்லா விதங்களிலும் இந்த அடிப்படையைத் தகர்க்கிறது. பின்நவீனத்துவ யுகத்தின் அசலான வெளிப்பாடாகப் பன்முகத்தன்மை கொண்டு பல குரல்களும் ஒலித்தன. பல்வேறு உணர்ச்சிகளும் அலைமோதின.

ஒரு சிலராக இருக்கும்வரை எந்த வெகுமக்கள் போராட்டமும் பலவீனமாகவே இருக்கும். ஓரளவுக்கு மேல் ஆதரவு திரண்டால் அது பிறகு பலவாகப் பல்கிப் பெருகும். கூட்டத்தை வெளியிலிருந்து பார்க்கும் தனிமனித மனம், தானும் அங்கே இருக்க வேண்டும் என்று நினைக்கும். அப்படி இல்லாவிட்டால் கடமையிலிருந்து தவறிவிட்ட உணர்வு ஏற்படும். தன்னால் முழுமையாக ஈடுபட முடியாவிட்டாலும் ஏதேனும் ஒரு வகையில் ஆதரவு அளிக்க வேண்டும் என்று நினைக்கும். ஜல்லிக்கட்டு என்பதிலோ அரசியலிலோ பெரிய ஆர்வம் இல்லாதவர்களும் பெருமளவில் கூடியது இப்படித்தான் சாத்தியப்பட்டிருக்க வேண்டும்.

போராடுவதற்கான வேட்கையும் அதற்கான உத்வேகமும் தமிழ்ச் சமூகத்தில் உயிர்ப்புடன் இருப்பதை இந்தப் போராட்டம் நிரூபித்திருக்கிறது. போராட்டத்தைவிட, அதன் முடிவைவிட, இது முக்கியமானது. ஆட்சியாளர்களால் தொடர்ந்து அலைக்கழிக்கப்படும் மக்கள், ஆட்சியாளர்களை இயக்கிய அதிசயம் இந்தப் போராட்டத்தில் அரங்கேறியது. இந்த நூற்றாண்டின் முக்கியமான சலனங்களில் ஒன்றாகப் பதிவுபெறத் தக்கது இது.

கட்டுடைக்கப்பட்ட பிம்பங்கள்

இந்தப் போராட்டம் பின்நவீனத்துவத் தன்மை கொண்டது. ஒற்றை மையம் இல்லை. ஒற்றைத் தலைமை இல்லை. ஒரு பிரிவினரின் திரளாக அது இல்லை. ஒரே குறிக்கோள் என்பதும் இல்லை. போராட்டம் நெகிழ்வுத்தன்மை கொண்டிருந்தது. ஆளுமை சார்ந்த எந்தப் பிம்பங்களும் முன்னிறுத்தப்படவில்லை. ஏற்கெனவே பிம்பங்களாக உலா வருபவர்களும் தங்கள் பிம்பங்களைத் துறந்த நிலையிலேயே போராட்டத்தில் இடம்பெற்றார்கள். குஜராத்தில் ஷாரூக் கானைக் காண வந்த கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் இறந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு, மாபெரும் ரசிகப் பட்டாளங்களைக் கொண்ட நட்சத்திரங்கள் மெரினா கூட்டத்தில் கரைந்துபோனார்கள். தங்கள் மனம் கவர்ந்த நட்சத்திரங்களைப் பார்த்து யாரும் பரவசமடையவில்லை. அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் முண்டியடிக்கவில்லை. நாயகர்களும் நாயகியரும் தங்கள் பிம்பங்களைக் கழற்றிவைத்துவிட்டுச் சாதாரணர்களாக மாறினார்கள்.

பிம்பங்களைக் கட்டுடைப்பது பின் நவீனத்துவத்தின் கூறுகளில் ஒன்று. நட்சத்திரங்களின் ஒளிவட்டங்கள் மங்கிய துடன் இதன் தாக்கம் நிற்கவில்லை. காவல் துறையை மகிமைப்படுத்தும் ஆகிவந்த வெற்றிச் சூத்திரத்தை மையமாகக் கொண்ட ‘சிங்கம் 3’ திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனது தற்செயலானதல்ல. மெய்யான பிரச்சினைகளுக்குப் பொய்யான தீர்வுகளைத் தரும் வணிகத் திரைப்படம், தன் அபத்தத்தை உணர்ந்துகொண்டதன் வாக்குமூலமாகவே இதைப் பார்க்க வேண்டும். காவல் துறையினரின் வன்செயல் கள் ஊடகங்களின் வழியே சந்தி சிரித்த நேரத்தில், காவல் துறையைத் தூக்கிப் பிடிக்கும் ஒரு படம் பின்வாங்கியது சமூகத்தின் சுரணைக்குக் கிடைத்த அங்கீகாரம்.

பெரும் கொண்டாட்டமாக இந்தப் போராட்டம் நடைபெற்றது இதன் பின்நவீனத்துவத் தன்மைக்கு மற்றுமொரு சான்று. முழக்கங்கள், பதாகைகள், உரைகள், உரையாடல்கள் ஆகியவை ஜல்லிக்கட்டு முதலான பிரச்சினைகளை முன்னிட்டு நடந்தாலும், அந்த ஆறு நாட்களிலும் இளைஞர்கள் கொண்டாடித் தீர்த்தார்கள். எந்தத் திட்டமும் ஒத்திகையும் அற்ற கொண்டாட்டம். பெருகும் கூட்டம் மேலும் மேலும் மக்களை ஈர்த்தபடி இருக்க, கொண்டாட்டங்களும் பன்முகத்தன்மை கொண்டதாக அமைந்தன.

இந்தப் போராட்டம் அமைதியாக முடியாது என்றே பலரும் அஞ்சினர். காரணம், மையங்களையும் பிம்பங்களையும் தகர்த்த இந்தப் போராட்டம், வெற்றிகரமாகவும் சுமுகமாகவும் முடிவது மைய நீரோட்ட அரசியலையும் அதிகார மையங்களையும் அசைத்துப் பார்க்கக்கூடியதாக இருக்கும். எனவே, இது அமைதியாக முடியாமல்போவதே இந்த மையங்களின் அரசியலுக்குத் தோதானது. அன்றைய சம்பவங்களை இந்தக் கோணத்தில் அணுகும்போது, அதிகாரத்தின் செயல்பாடுகளையும் பிற அரசியல் அமைப்புகளின் செயல்பாடுகளையும் மேலும் துலக்கமாகப் புரிந்துகொள்ள முடியும்.

மக்களைப் பெரிய அளவில் திரட்டுவதன் மூலம்தான் அறவழிப் போராட்டங்களை வெற்றிபெறச் செய்ய முடியும் என்பதை காந்தியிடமிருந்து கற்றுக்கொள்ளலாம் என எழுத்தாளர் அருந்ததி ராய் ஒரு முறை சொல்லியிருந்தார். தமிழக மக்கள் அதைச் செயல்பூர்வமாக நிரூபித்துக்காட்டியிருக்கிறார்கள். நிராசை நிறைந்த சூழலிலும் போராட முடியும் என்பதற்கான நம்பிக்கையை மீட்டுத் தந்த வரலாற்று நிகழ்வு இது.

- அரவிந்தன், தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x