Published : 25 Jun 2015 10:03 AM
Last Updated : 25 Jun 2015 10:03 AM

பூர்வாங்கத்தைத் தேடி ஒரு பயணம்: மண்ணாகிப் போன பொன்னேரி என்ற சோழகங்கம்

‘அரியலூர் மாவட்டத்திலுள்ள சோழகங்கத்தின் வடிகால் தான் வீராணம் ஏரி என வரலாறு கூறுகிறது. எனவே, சோழகங்கத்தையும் ஆய்வு செய்து கட்டுரை வெளியிட வேண்டும்.’ வீராணம் ஏரி குறித்து ‘தி இந்து’வில் வெளியான தொடர் கட்டுரையை படித்துவிட்டு திருச்சி வாசகர் ஒருவர் ‘உங்கள் குரலில்’ இப்படி கருத்துத் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து சோழகங்கம் என்ற பொன் னேரியின் பூர்வாங்கத்தைத் தேடிப் புறப்பட்டோம்.

வெற்றியின் அடையாளம்

சுமார் தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வடக்கே படை செலுத்திய ராஜேந்திர சோழன் கங்கையை வெற்றி கொண்டான். வெற்றிக் களிப்புடன் அங்கி ருந்து தலைநகரம் திரும்புகையில் கங்கை நீரை தங்கக் குடங்களில் எடுத்து வந்தான். வடபுலத்து வெற்றியை வரலாற்றில் பதிவு செய்வதற்காக, தனது அரண்மனை அமைந்திருந்த கங்கை கொண்ட சோழபுரம் அருகே பிரம்மாண்ட மான ஏரியை வெட்டினான். அதுதான் தற்போது அரியலூர் மாவட்டத்தில் உள்ள சோழகங்கம் என்ற பொன்னேரி.

கங்கையின் புனிதம்

வெற்றியின் அடையாளமாக ஸ்தூபி களை நிறுவுதல் மன்னர் ஆட்சியின் மரபு. ஆனால், கங்கை வெற்றியை பறைசாற்றும் ஜல ஸ்தூபியாகவே பொன் னேரியை அறிவித்தான் ராஜேந்திரன் என்கின்றன கல்வெட்டுச் சான்றுகள். அதே சமயம், தங்கக் குடங்களில், தான் எடுத்து வந்திருந்த கங்கை நீரை பொன்னேரியில் கலந்து கங்கையின் புனிதத்தை அதற்கும் கிடைக்கச் செய்தான். இத்தகையை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பொன்னேரி இன்று வெறும் மண்ணேரியாகக் கிடக்கிறது.

குருவாலப்பர் கோவில், ஆமணக்கன் தோண்டி, உட்கோட்டை, பிச்சனூர் இந்த நான்கு ஊராட்சிகளை தழுவிக் கிடக்கிறது பொன்னேரி. 4800 மீட்டர் நீளம் கொண்ட இதன் மொத்த பரப் பளவு 824 ஏக்கர். மொத்த நீர்ப்பிடிப்புப் பகுதி 2,811 சதுர கிலோ மீட்டர். கரை உயரம் 35.280 மீட்டர். மிகையான நீர்மட்ட அளவு 34.080 மீட்டர். ஏரியின் மொத்த கொள்ளளவு 0.3241 கோடி கன மீட்டர். பதிவு பெற்ற ஆயக்கட்டு நிலங்கள் 1574 ஏக்கர். பதிவு பெறாத ஆயக்கட்டு நிலங்கள் ஆயிரம் ஏக்கர்.

போர்க்கைதிகள் வெட்டிய ஏரி

கடல் கடந்தும் போரிட்டு ராஜ்ஜி யங்களை வென்று வந்த ராஜேந்திர சோழன், அந்த ராஜ்ஜியங்களின் போர் வீரர் களையும் கைதிகளாக சிறைபிடித்து வந்தான். அந்த கைதிகளையும் தனது போர் வீரர்களையும் கொண்டே பொன் னேரியை வெட்டியதாகவும் ஒரு தகவல் உண்டு. கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் ஆலயத்தை ராஜேந்திரன் கட்டியபோது, யானைகளைக் கொண்டு கட்டுமானத்துக்கான கருங்கற்கள் எடுத்துச் செல்லப்பட்டன. அப்போது யானைகள் செல்வதற்கு உயரமான வழித் தடங்களை அமைக்க வேண்டி இருந்தது. பொன்னேரியிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட மண்ணை அந்த வழித்தடங்களை அமைக்கப் பயன் படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

மாளிகைமேட்டின் நீர் அரண்

“பொன்னேரிக்கு சோழப் பேராறு, சோழகங்கம் என்ற பெயர்களும் உண்டு. கங்கைகொண்ட சோழபுரம் 269 ஆண்டுகள் சோழ சாம்ராஜ்ஜியத்தின் தலைநகராக இருந்தது. இங்கே சோழநாட்டின் தலை நகரை வடிவ மைத்தபோது மாளிகைமேடு என்ற பகுதியில் 268 ஏக்கரில் வெளி அரண் மனையையும் அதன் நடுவில் 68 ஏக்கரில் மன்னர்கள் வசிக்கும் உட்கோட் டையையும் அமைத்தான் ராஜேந்திரன்.

இந்த உட்கோட்டைக்குள் மூன்று மாளிகைகள் இருந்தன. வெளி அரண்மனை மற்றும் உட்கோட்டை யைச் சுற்றிலும் தனித் தனி அகழிகள் இருந்தன. அந்த அகழிகளுக்குத் தேவை யான தண்ணீரும் தலை நகருக்கான குடிதண்ணீரும் பொன் னேரியிலிருந்தே கொண்டுவரப்பட்டது. மேலும், அரண்மனையின் மேற்கு வாயிலின் நீர் அரணாகவும் ஏரி இருந்திருக்கிறது” என்கிறார் கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமத்தின் தலைவர் பொறியாளர் கோமகன்.

பிறை வடிவ கழுங்கு தொழில் நுட்பம்

அரியலூர் மாவட்டத்தின் ஆண்டிமடம் பகுதியிலிருந்து உருண்டோடி வரும் மழை நீர்தான் பொன்னேரியின் நீர் ஆதாரம். நாயக்கர்கள் காலத்தில்தான் இந்த ஏரி விவசாய பயன்பாட்டுக்கும் திருப்பப்பட்டதாகச் சொல்கிறார்கள். ஏரியின் கிழக்குப் பகுதியில் மதகுகளும் கழுங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

பிறை வடிவ கழுங்கு தொழில் நுட்பம்|படம்: குளஸ்

ஏரித் தண்ணீர் அதிக அழுத்தத்துடன் கழுங்குகளில் மோதினால் கழுங்கு கள் சேதமடையக் கூடும் என்ப தாலும் எளிதில் ஏரியிலிருந்து நீர் வெளியேற வசதியாகவும் கழுங்கு களை பிறைவடிவில் அமைத்திருக்கி றார்கள். இது போன்ற கழுங்கு அமைப்பு இலங்கையிலும் சில ஏரிகளில் இருப்பதாக ஆதாரங்கள் உள்ளன. இலங்கையும் சோழர் ஆதிக்கத் தின் கீழ் இருந்ததால் அங்கேயும் சோழர் களின் கட்டுமான தொழில்நுட்பத்தின்படி பிறை வடிவ மதகுகள் அமைக்கப் பட்டிருக்கலாம்.

ஓடையாக சுருங்கிப் போன அவலம்

மூன்று போகம் விளைந்த நிலங்கள் ஒரு போகத்துக்கே வழியில்லாமல் மானாவாரி நிலங்களாகிவிட்டன. வயல்களில் மாத்திரமின்றி, ஏரியின் பெரும் பகுதியில் சமூகக் காடுகள் திட்டத்தின் கீழ் வனத்துறையே யூக லிப்டஸ் மரங்களை நட்டு வருமானம் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதைப் பார்த்துவிட்டு தனியார்களும் தங்களால் முடிந்த அளவு ஏரியை ஆக்கிரமித்து மானாவாரி விவசாயம் செய்வததோடு யூகலிப்டஸ் மரங்களையும் நட்டு ஆக்கிரமித்துக் கொண்டார்கள்.

1957க்குப் பிறகு தூர்வாரப்படவில்லை

பொன்னேரியை தூர்வார வேண்டும் என்பது அதன் ஆயக்கட்டுதாரர்களின் நெடுநாளைய கோரிக்கை. ஆனால், எந்த அரசும் இதற்கு முழுமை யாக செவி சாய்த்ததாக தெரிய வில்லை. இதுகுறித்து பேசினார் குருவாலப்பர் கோவில் ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் முல்லைநாதன். “1957-க்கு முன்னால் காங்கிரஸ் ஆட்சியில் மராமத்துத் துறை அமைச்சராக இருந்த ராமையாவின் முயற்சியால் ஏரி தூர் வாரப்பட்டது. அதன் பிறகு யாரும் இதை கண்டு கொள்ளவில்லை. 1989-ல் ஆளுநர் ஆட்சியில், பத்தாயிரம் பேரைத் திரட்டி ஏரிக்குள்ளேயே ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம். அப்போது எங்களோடு பேச்சுவார்த்தை நடத்திய ஒன்றுபட்ட திருச்சி மாவட்ட ஆட்சியர் உஜாகர் சிங், மாவட்ட நடைமுறைத் திட்டத்தின் கீழ் பொன்னேரியை சீர்படுத்துவதாகச் சொன்னார். ஆனால், அதற்காக அவர்கள் ஒதுக்கிய ஆறரை லட்சம் ரூபாய் பாசன மதகுகளை சீர்செய்யவே சரியாகிவிட்டது.

கருவாட்டு ஓடை (கடும் ஆற்று ஓடை). | படம்: குளஸ்

அதன் பிறகு, 2009-ல் பதினோரு எம்.எல்.ஏ-க்களைக் கொண்ட சட்ட மன்ற மனுக்கள் குழு வந்து ஏரியைப் பார்வையிட்டது. அவர்களும் ரூ.66 கோடிக்கு தூர்வார அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்பினார்கள். அந்த அறிக்கை என்ன ஆனது என்றே தெரியவில்லை. 2011-ல் கொள்ளிடக் கரையை சீரமைப்பதற்காக இங்கிருந்து ஓரளவு மண்ணை வெட்டிக் கொண்டு போனார்கள். அத்தோடு எந்த நடவடிக் கையும் இல்லை” என்கிறார் முல்லை நாதன்.

ஷட்டர் காவலாளி

சமூக விரோதிகளிடமிருந்து ஷட்டர்களை பாதுகாக்க, கிருஷ்ணமூர்த்தி என்ற பெரியவரை தற்காலிக பணியில் அங்கு வைத் திருக்கிறார்கள். அருகிலுள்ள ஒற்றை அறை வீட்டில் மனைவியோடு தங்கி இருக்கும் கிருஷ்ணமூர்த்தி நம்மிடம் பேசுகையில், ’’மாதம் 5000 ரூபாய் சம்பளம். அதுவும், தண்ணீர் நிரம்பி இருக்கிற அந்த நாலு மாசத்துக்கு மட்டும் தான். 1992-ல் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகமாகி அணை உடையுற நிலைக்குப் போயிருச்சு. நான் ஒரு மணி நேரம் தாமதிச்சிருந்தா அணை உடைஞ்சு ஊரே அழிஞ்சிருக்கும். நல்ல வேளையா, கூச்சல் போட்டு ஆட்களை வரவெச்சு ஷட்டரை திறந்து தண்ணியை வெளியேத்திட்டோம். இப்ப தொடர்ந்து மூணு வருசமா ஏரியில தண்ணி இல்ல. அதனால எனக்கு சம்பளமும் குடுக்கல. ஏரிக்குள்ள இருக்கிற காட்டுக் கருவையை வெட்டி வித்துத்தான் நாங்க கஞ்சி குடிக்கிறோம்“ என்றார்.

போராட தயாராகும் அமைப்புகள்

இப்போது பாமக உள்பட இங்குள்ள அரசியல் கட்சிகள் அனைத்துமே ஏரி விவகாரத்தில் மவுனிகளாக இருப்ப தால் பொன்னேரியை தூர்வாரும் போராட்டத்துக்கு பொதுநல அமைப்பு கள் தயாராகி வருகின்றன. இது குறித்து நம்மிடம் பேசிய அரியலூர் மாவட்ட மக்கள் விழிப்புணர்வு சேவை சங்கத்தின் தலைவர் அண்ணா மலை, ’’இந்த மாவட்டத்தை சவலைப் பிள்ளையைப்போலத்தான் வைத்தி ருக்கிறது அரசாங்கம். வறட்சியான இந்த மாவட்டம் மது விற்பனையில் 5-ம் இடத்திலும் கல்வியில் 25-ம் இடத்திலும் இருக்கிறது. இதை இப்ப டியே வைத்திருக்க வேண்டும் என்று தான் அரசியல்வாதிகளும் விரும்புகிறார்கள்.

பொன்னேரியை தூர்வார வேண்டும் என பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்து வருகின்றன. 1996-ல் திமுக எம்.எல்.ஏ., க.சொ.கணேசன் முயற்சியில் ஏரியைத் சீர்படுத்த நிதி ஒதுக்கினார்கள். அந்த நிதியைக் கொண்டு ஏரி கரையை பலப்படுத்தியதோடு விட்டு விட்டார்கள். ஏரிக்குள் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என கடந்த ஏப்ரலில் நாங்கள் தீர்மானம் போட்டு அரசுக்கு கோரிக்கை அனுப்பினோம். அதற்கு, ‘உங்களது கோரிக்கையை பரிசீலிக்கிறோம்’ என்று இப்போதுதான் பதில் வருகிறது. விரைவில் பொதுநல அமைப்புகளை திரட்டி, போராட்டத்தை நடத்தவிருக்கிறோம்” என்றார்.

உயிர் பெறுமா சுற்றுலா நகராகும் திட்டம்?

கங்கைகொண்ட சோழபுரத்தை பாரம்பரிய சுற்றுலா தலமாக அங்கீகரித்திருக்கிறது யுனெஸ்கோ. 2013-ல் அரியலூர் ஆட்சியராக இருந்த செந்தில்குமார், பொன் னேரியை மையப்படுத்தி இங்கு ஒரு சுற்றுலா நகரத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் இறங்கினார். முதல் கட்டமாக ஏரியை சர்வே செய்து எல்லைக் கல் ஊன்றி அதற்குள் சுமார் 100 ஏக்கரில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினார்.

அடுத்ததாக ஏரிக்குள் உள்ள வண்டல் மண்ணை விவசாயிகளே இலவசமாக வெட்டி அள்ளிக் கொள்ள அரசின் அனுமதியை பெற முயற்சி எடுத்தார். கூடவே கங்கை கொண்ட சோழபுரத்தையும் சிதிலமடைந்து கிடக்கும் மாளிகைமேடு அரண்மனையையும் பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகள் பெருமளவில் வருகிறார்கள். இங்கிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் பிரசித்திபெற்ற முக்கியத் திருத்தலங்கள் உள்ளன. உலக வங்கி நிதி உதவியுடன் இவைகளின் மினியேச்சர்களை கங்கைகொண்ட சோழபுரத்தில் நிறுவி சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பது தான் அவரது மெகா திட்டம்.

தனியாரிடம் குத்தகையில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்துக்கு சொந்தமான சுமார் 365 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி அங்கே மினியேச்சர்களை அமைப்பதுடன், பொன்னேரியை தூர்வாரி தண்ணீர் நிரப்பி அதன் மையத்தில் பூங்கா அமைத்து படகு போக்குவரத்து தொடங்குவதும் அவரது திட்டம். இதன் மூலம் கங்கைகொண்ட சோழபுரத்தை சுற்றுலா நகரமாக்கி இருக்கலாம். ஆனால், இதற்கெல்லாம் செயல்வடிவம் கொடுப்பதற்குள்ளாக செந்தில்குமாருக்கு பணியிட மாறுதல் வந்துவிட்டது.

ஏரியின் பெருமையை குலைத்த ஆங்கிலேயர்கள்

திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையானது பொன்னேரியை இரண்டாக பிளந்து கொண்டு செல்கிறது. ஏரிக்கு நடுவில் எப்படி சாலை அமைக்க அனுமதித்தார்கள்? இதுகுறித்து நம்மிடம் பேசிய வரலாற்றுத் துறை பேராசிரியரும் அரியலூர் அரசு கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வருமான இல.தியாகராஜன், ’’கி.பி1023-ல் தான் வட இந்தியப் போரை முடிக்கிறான் ராஜேந்திர சோழன். எனவே, கி.பி.1023-லிருந்து கி.பி.1027-க்குள்தான் கங்கைகொண்ட சோழபுரத்தையும் பொன்னேரியையும் அவன் உருவாக்கி இருக்க வேண்டும். கி.பி.1397-ல் நாயக்கர் மன்னரான வீரவிருப்பண்ண உடையார் காலத்தில்தான் சோழகங்கம் ’பொன்னிவளர்கள் ஏரி’ என பெயர் மாறியது. பின்பு அது பொன்னேரியாக மருவிவிட்டது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் நினைவுச் சின்னங்களையும் மதிப்பிழக்கச் செய்வதில் ஆங்கிலேயர்கள் கண்ணும் கருத்துமாய் இருந்தார்கள். அவர்களுக்கு இந்த ஏரியின் வரலாறு தெரிந்ததால் அதன் பெருமையை குலைப்பதற்காக ஏரியின் மையத்தில் சாலையை போட்டிருக்கிறார்கள். அதற்கு முன்பு வரை ஜெயங்கொண்டத்திலிருந்து டி.பழூர் வழியாகத்தான் சிதம்பரத்துக்கு சாலை இருந்தது’’ என்றார்.

பொன்னேரியுடனான ராமதாஸின் மலரும் நினைவுகள்

பொன்னேரிக்கும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதா ஸுக்கும் மறக்கமுடியாத பிணைப்பு உண்டு. 1995-ல் 2000 பேரை திரட்டி வந்து பொன்னேரிக்குள் இறங்கிய ராமதாஸ், ஒருவார காலம் அங்கேயே தங்கி இருந்து இரவு பகலாக ஏரியை தூர்வாரினார். ஏரிக் கரையில் மரக் கன்றுகளையும் நட்டார். அப்போது, நெகிழ்ச்சியான சில நிகழ்வுகளும் நடந்தன. உலகநாதன் - சித்ரா இணையர் திருமணத்தை ஏரிக்குள்ளேயே நடத்தி வைத்த ராமதாஸ், மன்னர் மன்னன் - தமிழரசி தம்பதியரின் ஆறு மாத ஆண் குழந்தைக்கு ’கங்கைகொண்டான்’ என்று பெயர் சூட்டி நெகிழ்ந்த சம்பவமும் நடந்தது.

கொள்ளிடத்தின் உபரி நீரை தேக்கலாம்:

பொன்னேரி நிரம்பினால் கருவாட்டு ஓடை (கடும் ஆற்று ஓடை) வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்லமுடியும். மழைக்காலங்களில் கொள்ளிடத்தின் வழியாக ஆண்டுக்கு சுமார் 8 டி.எம்.சி. வரை தண்ணீர் வீணாகக் கடலில் கலப்பதாகச் சொல்லப்படுகிறது. கொள்ளிடத்திலிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் பொன்னேரி உள்ளது. வீராணத்திலிருந்து சென்னைக்கு குழாய்கள் மூலம் தண்ணீர் எடுத்துச் செல்லப்படுவதைப்போல கொள்ளிடத்தின் உபரி நீரை குழாய்கள் மூலமாக பொன்னேரிக்கு கொண்டு வந்து நிரப்பலாம்.

அல்லது திருமழப்பாடிக்கு மேலே கொள்ளிடத்தில் ஒரு தடுப்பணையைக் கட்டி பொன்னேரிக்கு தண்ணீரை திருப்பி விடலாம். ஆனால், அதற்கு முன்னதாக ஏரிக்குள் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்றி மூன்று மீட்டர் ஆழத்துக்கு தூர்வார வேண்டும்.

நிலக்கரிச் சுரங்க தண்ணீரை பொன்னேரியில் நிரப்பலாம்

ஜெயங்கொண்டம் பகுதியில் 30 ஆயிரம் ஏக்கரில் பூமிக்கடியில் நிலக்கரி படிமங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் போன்று ஜெயங்கொண்டம் லிக்னைட் கார்ப்பரேஷன் தொடங்குவதற்காக பத்தாயிரம் ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தி இருக்கிறது.

இது ஒருபுறமிருக்க, நிலக்கரிச் சுரங்கம் தோண்டினால் அதிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை என்ன செய்யப் போகிறார்கள் என்பது கேள்வி. நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரானது அருகிலுள்ள பெருமாள் ஏரியில் நிரப்பப்படுகிறது. அதன் மூலம் வடலூர் தொடங்கி ஆலப்பாக்கம் வரை உள்ள சுமார் ஐம்பது கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதைப் போலவே ஜெயங் கொண்டம் லிக்னைட் கார்ப்பரேஷன் நிலக்கரிச் சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை பொன்னேரியில் தேக்கி வைத்தால் மீண்டும் பொன்னேரி ஆயக்கட்டில் மட்டுமில்லாது வீராணம் ஆயக்கட்டிலும் முப்போக விவசாயம் சாத்தியமாகும் என்கிறார்கள். ஆனால், அதற்கும் பென்னோரி தூர்வாரப்பட வேண்டும்.

தூர்வார ரூ.66.32 கோடியில் திட்டம்

பொன்னேரி எப்போதுதான் தூர்வாரப்படும்? பொதுப்பணித் துறை நீர்வள ஆதார அமைப்பின் ஜெயங்கொண்டம் உபகோட்ட உதவிப் பொறியாளர் செந்தில்நாதன் பேசினார். ’’பொன்னேரியில் சுமார் 25 குடும்பங்கள் ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார்கள். அவர்களை அங்கிருந்து வெளியேற்ற நோட்டீஸ் கொடுத்திருக்கிறோம். இதேபோல், ஏரிக்குள் வனத்துறையினரால் நடப்பட்டுள்ள யூகலிப்டஸ் மரங்களை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமச்சீர் வளர்ச்சி நிதியின் கீழ் ஏரியை தூர்வார ரூ.66 கோடியே 32 லட்சத்துக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் ஏரி தூர்வாரி முடிக்கப்படும்” என்றார் செந்தில்நாதன்.

நம்பிக்கையோடு காத்திருப்போம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x