Last Updated : 22 Mar, 2017 09:10 AM

 

Published : 22 Mar 2017 09:10 AM
Last Updated : 22 Mar 2017 09:10 AM

பயிர்வாரி சாகுபடி முறையை விவசாயிகள் யோசிக்க வேண்டும்!

தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த கர்நாடகமும் தமிழ்நாடும் கூட்டாக என்ன திட்டங்களை வகுத்துள்ளன? விவசாயிகளுக்கு எப்படி விழிப்புணர்வை ஏற்படுத்தப்போகின்றன? காவிரி மேலும் கெடாமலிருக்க என்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கப்போகின்றன? மழை வளம் பெருக, வன வளத்தை எப்படிப் பழைய நிலைக்குக் கொண்டுவரப்போகின்றன?

தமிழகத்தின் வரலாறு காணாத வறட்சிச் சூழல் தொடர்பில் பேசுகையில், ஜீவாதார நதியான காவிரியின் நீர்ப் பகிர்வு தொடர்பில் பேசுவது தவிர்க்க முடியாததாகிறது. ஒருவகையில் காவிரியை முன்வைத்து, மாநிலத்தின் ஏனைய நதிகளையும் மாநிலத்தின் விவசாய முறையையும் விவாதிக்கும் விஷயம் இது.

வட இந்தியாவைப் போல அல்லாமல் தென்னிந்தியா எப்போதுமே பருவமழையைச் சார்ந்துதான் இருக்கிறது. பருவமழையும் சமீப ஆண்டுகளாக நிச்சயமற்றதாகவும் இடரை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது. கடந்த சில பதின் ஆண்டுகளாக தென் மேற்குப் பருவமழை நிச்சயமாகப் பெய்யும் என்று எதிர்பார்க்க முடியாததாகவும், பொழியும் அளவு குறைந்துகொண்டும் இருக்கிறது. இனி காவிரி நதி என்ன ஆகும்?

கோடைக் காலத்தில் பெய்யும் மழையின் போதும் தண்ணீர் கிடைக்கும் அளவு, முன்பைப் போல இல்லை. பருவமழை நன்றாகப் பெய்யும் காலத்தில் இரு மாநிலங்களுக்கும் இடையில் பிரச்சினைகள் ஏற்படுவதில்லை. இப்போது இருப்பதைப் போலப் பற்றாக்குறை ஆண்டுகளில் பெரிய அரசியல் நெருக்கடியாகவும் உருவாகிவிடுகிறது. வருத்தம் என்னவென்றால், இனி மழை குறையும் ஆண்டுகள்தான் அதிகமாக இருக்கப்போகின்றன.

ஒருகாலத்தில், காவிரியின் பாசனப் பகுதி வளம் மிக்கதாக இருந்தபடியால் காடுகள் செழித்தன, வேளாண்மை அமோக மகசூலைத் தந்தது. அதையொட்டிய பகுதிகளில் தொழிற் சாலைகளை நிறுவியதால் தொழில் வளமும் பெருகியது. இப்போது இந்த மூன்றுமே ஒன்றுக்கொன்று ஆபத்தாக மாறிக்கொண் டிருப்பதால் அச்சப்படும்படியான சூழ்நிலை ஏற்பட்டுவருகிறது.

பயிர்ச் சுழற்சி அவசியம்

காவிரி நதி நீரைப் பகிர்ந்துகொள்வதில் தமிழகம் - கர்நாடகம் இடையிலான போராட் டங்கள் ஓயும் என்பதற்கான அறிகுறிகள் இதுவரை யில் இல்லை. தமிழ்நாட்டின் டெல்டா பகுதி விவசாயமும் பொருளாதாரமும் காவிரியை நம்பித்தான் இருக்கின்றன. ஆண்டுதோறும் நீர்வரத்து குறைந்து, காய்ந்து வற்றி வரும் நதிக்காக இரு மாநிலங்களும் எல்லா வகைகளிலும் போராடுகின்றனவே தவிர, நீண்ட காலத் தீர்வுக்கு வழி என்ன என்று இரண்டு மாநிலங்களும் யோசிக்கும் நிலையில் இல்லை. இந்த நிலை மாற வேண்டும். மாற்று வாய்ப்புகளை இரு மாநிலங்களும் பேச வேண் டும். காவிரி உற்பத்தியாகும் கர்நாடகத்திலும் அது பாயும் தமிழ்நாட்டிலும் நிலப் பயன்பாட்டை மாற்றியமைக்க வேண்டியதன் அவசியத்தை இது நமக்கு உணர்த்துகிறது.

காவிரிப் பாசனப் பகுதியில் பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த சாகுபடி முறைகள் கைவிடப்பட்டதால் பிரச்சினை பெரிதாகிவிட்டது. புன்செய் பயிர்கள் மட்டுமே சாகுபடியாகி வந்த பகுதிகளில், தண்ணீர் அதிகம் தேவைப்படும் நெல், கரும்பு போன்ற பயிர்களே ஏக்கர் கணக் கில் பயிரிடப்பட்டன. இதனால், தண்ணீருக்கான தேவை அதிகமாகியது. தென் மேற்குப் பருவமழையால் கிடைக்கும் மழை நீர் அளவு குறைந்து வருவதாலும் ஆற்றுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களாலும் சாகுபடி முறையிலும் பயிர்த் தேர்வு முறையிலும் மாற்றங்கள் அவசியம். கிடைக்கும் சிறிதளவு நீரை வீணாக்காமல், சாகுபடியை லாபகரமாக்க புன்செய் பயிர்களையே நாட வேண்டும். சாரமிழந்து வரும் மண் வளத்தைக் கூட்டவும் அது உதவும்.

தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த கர்நாடகமும் தமிழ்நாடும் கூட்டாக என்ன திட்டங்களை வகுத்துள்ளன? விவசாயி களுக்கு எப்படி விழிப்புணர்வை ஏற்படுத்தப் போகின்றன? காவிரி மேலும் கெடாமலிருக்க என்ன பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கூட்டாக எடுக்கப்போகின்றன? மழை வளம் பெருக, வன வளத்தை எப்படிப் பழைய நிலைக்குக் கொண்டுவரப்போகின்றன?

சொட்டு நீர்ப்பாசனம், தெளிப்புப் பாசனம், இறவைப் பாசனம் போன்ற தண்ணீர் சிக்கன நடைமுறைகளை விவசாயிகளிடத்தில் பெருமளவில் கொண்டுசெல்ல வேண்டும். மழை நீர் சேமிப்பைத் தீவிரமாக அமல்படுத்த வேண்டும். கழிவுநீரைச் சுத்தப்படுத்திப் பயன்படுத்தும் எளிய முறைகளைக் கையாள வேண்டும். நகர்ப்புற கழிவுநீர், ஆலைகளின் நச்சு நீர் கலவாமல் நதியைக் காக்க வேண்டும்.

மாற்றுப் பயிர்களுக்கு மாறுவோம்

நெல்லைவிட ஊட்டச்சத்து அதிகம் உள்ள கம்பு, கேழ்வரகு போன்ற தானியங்களைச் சாகுபடி செய்ய ஊக்குவிப்புகளை அளிக்க வேண்டும். காய்கறி உள்ளிட்ட மாற்றுப் பயிர்களையும் சாகுபடி செய்யத் திட்டம் வகுக்க வேண்டும். மாற்று நடவடிக்கைகளை எடுக்காமல் இப்படியே சண்டையிட்டுக் கொண்டிருந்தால், வரும் காலங்களில் கிடைக்கும் நீரை, இரு மாநிலங்களாலும் திருப்தியாகப் பங்கிட்டுக்கொள்ள முடியாது. கூட்டாகச் சிந்தித்து காவிரியைக் காப்பாற்றும் முயற்சிகளில் இறங்க வேண்டும். இப்போது கிடைக்கும் தண்ணீருக்கு ஏற்ற பயிர்களைச் சாகுபடி செய்வதுடன், எதிர்காலத்தில் மழைப் பொழிவை அதிகப்படுத்தும் மரம் வளர்ப்பு போன்றவற்றுக்கு நவீன நுட்பங்களைக் கூட்டாகக் கையாள வேண்டும்.

பருவநிலை மாறுதல்களால் மழைப் பொழிவு குறைவதும், காலமல்லாத காலத்தில் பெய்வதும் உலக வழக்கமாகிக்கொண்டி ருக்கிறது. காவிரியில் தண்ணீர் கிடைத்தபோது நெல், கரும்பு பயிரிட்ட அதே வேகத்தில், அதே அளவில், இரு மாநிலங்களிலும் மரங்களை வளர்ப்பதில் அடுத்த சில ஆண்டுகளில் முனைப்பு காட்டினால்தான் நீர்ப்பெருக்கை மேலும் ஏற்படுத்த முடியும். காவிரி நீரைச் சாகுபடிக்குப் பயன்படுத்துவதை மட்டுமே பிரதானமாக்க வேண்டும். வழியில் உள்ள நகரங்களுக்கும் ஊர்களுக்கும் தொலைதூரத்தில் உள்ள பெருநகரங்களுக்கும் குடிநீர் எடுப்பதைக் கைவிட வேண்டும். மணல் கொள்ளை என்பது தனிச் சம்பவம் அல்ல. காவிரி உள்ளிட்ட ஆறுகளை அழிப்பதற்கான செயல். அதை மாநில அரசுகளும் மக்களும் உள்ளூர் அமைப்புகளும் இணைந்து தடுக்க வேண்டும். முக்கியமாக, மாற்றுச் செயல்திட்டங்களுக்கான குரல்கள் விவசாயிகள் தரப்பிலிருந்து எழ வேண்டும்!



பலன் தரும் பயறு வகைச் சாகுபடி!

தமிழகத்தில் போதிய நீர் இல்லாமல் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பயறு வகைச் சாகுபடியைத் தேர்வுசெய்தால் குறைந்த நீரைக் கொண்டு விவசாயிகள் நல்ல சாகுபடியையும் அதன் மூலம் வருவாயையும் பெற முடியும் என்று நம்பிக்கையளிக்கிறார்கள் நிபுணர்கள்.

தமிழகத்தைப் பொறுத்தமட்டில் ஆண்டுக்குச் சுமார் 10 லட்சம் ஏக்கரில் உளுந்தும், சுமார் 6 லட்சம் ஏக்கரில் பச்சைப் பயறும் சாகுபடி செய்யப்படுகின்றன. தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், மாநிலமெங்கும் உளுந்து சாகுபடிப் பரப்பை மேலும் அதிகரிக்கத் தற்போது தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

“தற்போது இந்தியாவில் சுமார் 19 மில்லியன் மெட்ரிக் டன் துவரை உற்பத்தி செய்யப்படுகிறது. 24 மில்லியன் மெட்ரிக் டன் என்ற அளவுக்கு இதன் உற்பத்தியைப் பெருக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காகப் பல மானிய உதவிகளும் வழங்கப்படுகின்றன” என்கிறார் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் கே.ராமசாமி.

“துவரை பயிரின் வயது 4 முதல் 5 மாதங்கள் வரை. இந்தக் காலகட்டத்தில் 10 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் விட வேண்டும். வறட்சியைச் சமாளிக்கும் வகையில், தெளிப்புப் பாசனத்தை விவசாயிகள் தேர்வுசெய்வது நல்லது. இதற்காகத் தெளிப்பு நீர்க் கருவிகள் 50% மானியத்தில் விவசாயிகளுக்கு விற்கப்படுகின்றன.

உளுந்து சாகுபடிக் காலம் 55 முதல் 60 நாட்கள் மட்டுமே. இந்தக் காலகட்டத்தில் 4 முறை மட்டும் நீர் பாய்ச்சினால் போதும். ஒரே நேரத்தில் காய் பிடித்து முற்றுகின்ற தன்மையுள்ள 3 புதிய உளுந்து ரகங்களைத் தற்போது வேளாண் பல்கலைக்கழகம் மூலம் அறிமுகப்படுத்தி உள்ளோம். குறைந்த செலவில் நல்ல வருவாய் பெற உளுந்து, பச்சைப் பயறு மற்றும் துவரைச் சாகுபடியை விவசாயிகள் தேர்வுசெய்யலாம்” என்கிறார் அவர்.

- வி.தேவதாசன்



- ஹரிணி நாகேந்திரா, பல்கலைக்கழகப் பேராசிரியர்.

தமிழில் சுருக்கமாக: சி.ஹரி

© ‘தி இந்து’ ஆங்கிலம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x