Last Updated : 16 May, 2016 07:43 AM

 

Published : 16 May 2016 07:43 AM
Last Updated : 16 May 2016 07:43 AM

பணநாயகத்தை ஒழித்துக்கட்டுவோம்!

ந்து ஆண்டுக் காலம் மக்களை அலைக்கழிக்கும் அரசியல்வாதிகள், தேர்தல் நேரத்தில் மக்களை நாடி வந்து கும்பிடு போடுகிறார்கள். பணிவன்புடன் சிரம் தாழ்த்தி வாக்கு கேட்கிறார்கள். மக்கள் தங்கள் கையிலும் அதிகாரம் இருக்கிறது என்று அப்போதுதான் உணர்கிறார்கள். பணப் பட்டுவாடா ஒரு வழக்கமாகவே ஆகிவிட்ட பிறகு, இந்தத் திருப்தியில் வருமான சாத்தியமும் சேர்ந்துகொள்ள, உற்சாகம் கூடியிருக்கின்றது. வாக்களிப்பது தங்கள் உரிமை, ஜனநாயகக் கடமை என்றெல்லாம் மக்களுக்கும் தெரியும். என்றாலும் கடமையை ஆற்றக் கைநீட்டிக் காசு வாங்கப் பலரும் தயங்குவதில்லை. கட்சிகள் போட்டிபோட்டுக்கொண்டு கொடுப்பதை வாங்கிப் போட்டுக்கொள்வதில் கூச்சம் ஏற்படுவதில்லை. அடுத்த வேளைச் சோற்றுக்கு வழியற்ற பரம ஏழைகள் மட்டுமின்றி நடுத்தர, கீழ்மட்ட நடுத்தர வர்க்கத்தினரும் இந்தக் கூட்டத்தில் அடக்கம்.

“இதெல்லாம் நமது பணம்தானே? இதை வாங்கிக்கொண்டால் என்ன தப்பு?” என்ற வாதம் சிலரால் முன்வைக்கப்படுகிறது. உண்மைதான். நேரடியாகவோ மறைமுகமாகவோ இது மக்கள் பணம்தான். வரிப் பணத்தில் அடிக்கும் கொள்ளை, முதலாளிகளிடமிருந்து பெற்ற கையூட்டு ஆகிய வகைகளில் அரசியல்வாதிகளுக்கு முறைகேடாகப் பணம் வருகிறது. வரிப் பணம் மக்களிடமிருந்து நேரடியாகப் பெறப்படுவது. அரசியல்வாதிகளுக்குத் தரும் பணத்தை முதலாளிகள் மக்களிடமிருந்தே வசூலித்துவிடுகிறார்கள். ஆக, இது மக்கள் பணம்தான். எனில், மக்கள் இதை வாங்கிக்கொள்வதில் என்ன தவறு என்ற கேள்வியில் நியாயம் இருப்பதாகத் தோன்றலாம்.

பெரும்பாலான கட்சிகள் தேர்தல் நேரத்தில் பணத்தைத் தண்ணீராகச் செலவழிக்கின்றன. இதர நாட்களில் நடக்கும் அவர்களது வசூல் வேட்டையின் பெரும்பகுதி தேர்தல் காலச் செலவுக்காகவே ஒதுக்கப்படுவது கண்கூடு. தேர்தல் பிரச்சாரம், கூட்டணி பேரத்துக்கான செலவு, கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளுக்கான செலவு, குழப்பமான முடிவு வரும்பட்சத்தில் உறுப்பினர்களைத் தம் பக்கம் இழுப்பதற்கான செலவு ஆகியவை கட்சிகளின் செலவுக் கணக்கின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துக்கொள்கின்றன. இப்போதெல்லாம் 50 கோடி, 100 கோடி ஊழல் என்றெல்லாம் செய்திகள் வருவதில்லை. 500 கோடி, 1,000 கோடி என்றுதான் வருகின்றன. ஒருவர் தன் வாழ்நாளில் 1,000 கோடியைச் செலவழிக்க முடியாது. ஆனால், தேர்தலின்போது கோடிகள் இறைக்கப்பட வேண்டியிருக்கிறது. எனவே தனக்காகவும், அடுத்தடுத்த தலைமுறைகளுக்காகவும் ‘சேர்த்து’வைப்பதில் இருந்த முனைப்பு, தேர்தல் செலவுகளை ஒட்டிப் பல மடங்காகப் பெருகியிருக்கிறது. தேர்தல் செலவுதான் ஊழலையும் இயற்கை வளங்களின் கொள்ளையையும் முறைகேடான வசூல் வேட்டைகளையும் தனியார் வணிக நிறுவனங்களுக்கு நாட்டை அடகுவைக்கும் போக்கையும் தூண்டுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

தேர்தல் செலவின் கணிசமான பகுதி வாக்காளர்களுக் கான பணப் பட்டுவாடாவுக்குப் போகிறது என்பதைப் பார்க்கும்போது, இதற்கும் பெருமளவிலான ஊழலுக்கும் இடையே உள்ள தொடர்பை விளங்கிக்கொள்ள முடியும். அரசியல்வாதிகளின் நேர்மையின்மை பற்றிக் குறைபட்டுக்கொள்ளும் மக்கள், அவர்களிடமிருந்து கை நீட்டி வாங்கும் பணத்தின் மூலம் அவர்களது ஊழல்களை ஊக்குவிக்கிறார்கள். பெருமளவிலான ஊழல்களுக்கான காரணியாகிறார்கள். ஊழலின் பங்குதாரர்களாகிறார்கள். அரசியல்வாதிகளைத் தட்டிக் கேட்கும் தார்மிக உரிமையைப் பறிகொடுக்கிறார்கள்.

ஊழலைக் குறைக்க வேண்டும் என்று நினைக்கும் குடிமக்கள் தன் வாக்கை விற்க மாட்டேன் என்னும் உறுதிமொழியை எடுத்துக்கொண்டால், ஊழல் என்னும் விஷச் சுழலின் முக்கியமான ஒரு கண்ணி பலவீனமாகும். தேர்தல் சீர்திருத்தத்தில்தான் பல்வேறு சீர்திருத்தங்களுக்கான தொடக்கமும் இருக்கிறது. இதைச் செய்யத் தேர்தல் ஆணையம் தேவையில்லை. அதிகாரம் தேவையில்லை. நான் வாக்களிக்கப் பணம் வாங்க மாட்டேன் என்னும் உறுதி ஒன்று போதும். நாம் ஒவ்வொருவரும் முன்னெடுக்கக்கூடிய புரட்சி இது.

தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

ளுந்தூர்பேட்டை தொகுதியில் பாமக வேட்பாளராகக் களமிறங்கியுள்ள பாலு, தன் தொகுதியில் வாக்காளர் களுக்குக் கொடுக்கப்பட்ட பணத்தைச் சேகரித்து வந்து தேர்தல் அலுவலரின் மீதே வீசி எறிந்திருக்கிறார். அப்போது அவர் பேசிய வார்த்தைகள் ஆத்திரத்தில் வெளிப்பட்டவை என்றாலும், அவற்றின் அடிப்படையில் இருக்கும் நியாயம் நிராகரிக்க முடியாதது. ஜனநாயகத்தின் மீது மதிப்புக்கொண்ட ஒவ்வொருவரின் உணர்வையும் பிரதிபலிப்பது.

“இந்தத் தேர்தலை இப்படித்தான் நடத்துவேன்னு சொன்னா, இது தேர்தலே கிடையாது. இதுக்கெல்லாம் ஒரு தேர்தல் ஆணையம் தேவையில்லை. இதுவா மக்களாட்சி? இதுவா தேர்தல்? ஊரு பூராம் பணம் கொடுக்கிறாங்க சார். நாடு பூராம் கொடுக்கிறாங்க. தெருத் தெருவா குடுக்கிறாங்க. நான் ஹைகோர்ட் வக்கீல். நியாயமா தேர்தல் நடத்துறோம், நேர்மையா நடத்துறோம்னு சொன்னீங்க. அதை நம்பி நான் தெருத் தெருவா நாய் மாதிரி அலையுறேன். இருக்கிறவங்க கால்ல எல்லாம் விழுறேன். அவங்க ஈஸியா விலைக்கு வாங்கிடுறாங்க... எங்க ஏரியாவுல பணம் கொடுக்கிறதா, நேத்து நான் புகார் பண்ணேனே, அதுக்கு என்ன சார் பதில்? விரிவா புகார் கொடுத்தேன், என்ன நடவடிக்கை எடுத்தீங்க?” உலுக்குகின்றன பாலுவின் வார்த்தைகள்.

பாமக மட்டும் அல்ல; பல தொகுதிகளில் மநகூவினர் இப்படிப் புகார் கொடுத்திருக்கிறார்கள். பணம் கொடுத்தவர்களைப் பையும் பணமுமாகப் பிடித்திருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் எங்கும் திருப்திகரமாக நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு பற்றி நடுநிலையுடன் சொல்வதென்றால், மிக மோசம் என்றே சொல்ல வேண்டும்.

தேர்தல் சமயத்தில் உண்மையில் அரசாங்கத்தையே தன் கையில் வைத்திருக்கிறது தேர்தல் ஆணையம். அதற்கு அவ்வளவு அதிகாரத்தை அரசியலமைப்புச் சட்டம் கொடுத்திருக்கிறது. இதே தேர்தல் ஆணையத்தில்தான் சேஷன் பணியாற்றினார். இதே தமிழகத்தில் 2011-ல் மதுரையில் மூன்று அதிகாரிகள் எப்படி ஓடி ஓடி வேலை பார்த்தார்கள்; கடந்த தேர்தலில் ஆளுங்கட்சி எப்படியெல்லாம் தேர்தல் ஆணையச் செயல்பாடுகளுக்கு எதிராகப் புலம்பியது என்பதை இன்னும் பலர் மறந்துவிடவில்லை. தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தன்னுடைய செயல்பாடுகளில் தோல்வியைத் தழுவிவிட்டார் என்றே குறிப்பிட வேண்டியிருக்கிறது.

வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தேர்தல் ஆணையத்தால் தடுக்கவே முடியாது என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சாமி போட்டு உடைத்துவிட்டார். ராஜேஷ் லக்கானியும் அப்படிச் சொல்லலாம், பணி ஓய்வு பெற்ற பிறகு. அரவக்குறிச்சியில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததால், தேர்தலைத் தள்ளிவைப்பதாகத் சொல்லியிருக்கிறது தேர்தல் ஆணையம். அப்படியென்றால், எஞ்சியுள்ள 233 தொகுதிகளிலும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்படவில்லை என்கிறார்களா? அரவக்குறிச்சியில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண நிலைக்குக் காரணமான கட்சிகளின் வேட்பாளர்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும். இப்படி ஒரு நடவடிக்கை எடுத்தால்தான், ஏனையோருக்கு ஒரு அச்சத்தை அது ஏற்படுத்தும்.

ஆட்சியாளர்களாலும் அதிகாரிகளாலும் முடியாததை வாக்காளர்கள் செய்ய முடியும். பணத்தின் மூலம் எதையும் சாதித்துவிடலாம் என்று நம்புவோரையும் கிரிமினல்களையும் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்துவிட்டு, அவரவர் மனசாட்சிப்படி நல்லவர்களைத் தேர்ந்தெடுப்பதே அது. வாக்களிக்கச் செல்வோருக்கு வாழ்த்துக்கள்! இருள் அதிகமாகிவிட்டால் விடியப்போகிறது என்று அர்த்தம். பண நாயகத்தின் கடைசித் தேர்தலாக இது இருக்கட்டும்!

தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x