Last Updated : 31 Jan, 2017 11:13 AM

 

Published : 31 Jan 2017 11:13 AM
Last Updated : 31 Jan 2017 11:13 AM

பஞ்சாபில் ஆட்சி அமைக்கப்போவது யார்?

இப்போதைய பஞ்சாப் மாநிலத்தின் எல்லைகள் இறுதியாக்கப்பட்ட 1966 முதல் சட்டப்பேரவைத் தேர்தல் என்றாலே, காங்கிரஸ் அல்லது சிரோமணி அகாலி தளக் கூட்டணி என்றுதான் மாறி மாறி மக்கள் வாக்களித்திருக்கின்றனர். இப்போது சிரோமணி அகாலி தளத்துடன் பாஜக கூட்டணிக் கட்சியாக ஆட்சியில் பங்கு வகிக்கிறது. 2012-ல் மட்டும் ஆட்சி மாறாமல் அகாலி-பாஜக கூட்டணியே மீண்டும் ஆட்சிக்கு வந்தது. இப்போது ஆம் ஆத்மி கட்சி தேர்தல் களத்தில் தனித்துப் போட்டியிடுவதால், அரசியல் களமே புதிய வடிவம் பெற்றிருக்கிறது.

முதல் முறையாக இம்முறை மும்முனைப் போட்டி நடக்கிறது. 2014 மக்களவைத் தேர்தலில் ஆஆக, மாநிலத்தின் 4 தொகுதிகளைக் கைப்பற்றி அனைத்துக் கட்சிகளுக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அத்துடன் 25% வாக்குகளைக் கைப்பற்றி தன்னை பெரிய சக்தியாக நிலைநிறுத்திக்கொண்டது.

முந்திக்கொண்ட ஆஆக

டெல்லிக்கு அடுத்தபடியாக அடுத்து ஆட்சியைக் கைப்பற்றக் கூடிய மாநிலம் பஞ்சாப் என்ற நம்பிக்கையில் கடுமையாக உழைத்துவந்தது ஆஆக. கிராமப்புறங்களில் ஆஆகவுக்கு ஆதரவு அதிகம் இருக்கிறது. அகாலிகளின் கோட்டை என்று கருதப்படும் மால்வா பிரதேசத்தில் ஆஆக இப்போது வலுவாக இருக்கிறது. தேர்தல் தேதியை மத்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்தபோது, காங்கிரஸையும் அகாலிதள - பாஜக கூட்டணியையும் முந்திக்கொண்டு, தன்னுடைய வேட்பாளர்களை மாநிலத்தின் 117 தொகுதிகளுக்கும் அறிவித்துவிட்டது ஆஆக.

அதேசமயம், ஆஆகவுக்கு எல்லாமே நல்லதாகவும் நடந்துவிடவில்லை. அதற்குள் கட்சிக்குள் ஊழல் புகார்களும் உள்பூசல்களும் புகுந்துவிட்டன. கட்சித் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராகப் பேசினார்கள் என்பதற்காக 4 மக்களவை உறுப்பினர்களில் 2 பேர் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பஞ்சாபில் ஆஆக கட்சியை வளர்ப்பதில் முக்கியப் பங்கு வகித்தவரும் ஒருங்கிணைப் பாளருமான சூச்சா சிங் ஊழல் புகாரால் விலக்கப்பட்டார். வேட்பாளர் தேர்வுக்கு வெளியாட்கள் நியமிக்கப்பட்டதும் தொண்டர் களின் கண்டனத்தைக் குவித்தது. எல்லாவற்றுக்கும் மேலாக ஆஆகவுக்கு முதல்வர் வேட்பாளர் யார் என்று சொல்ல முடியவில்லை.

அகாலி - பாஜக கூட்டணியின் சவால்கள்

அகாலி தளம் - பாஜக கூட்டணி மாநிலத்தில் அடித்தளக் கட்டமைப்புகளை உருவாக்கியது, மின்சார உற்பத்தியில் உபரியை ஏற்படுத்தியது போன்ற சாதனை முழக்கங்களுடன் களத்தில் நிற்கிறது. ஆனால், கட்டுக்கடங்கா ஊழல், பஞ்சாபைச் சீரழித்துவரும் போதை வஸ்துகள் கடத்தல் - புழக்கம் என்று ஆளும் கூட்டணி மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் மக்கள். சட்டம் - ஒழுங்கு சீர்குலைவதை அகாலிகள் ஆதரித்தனர், தங்களுடைய கட்சி நிர்வாகிகளின் ஆணவப் போக்குக்குத் துணை நின்றனர் என்பதும் அக்கூட்டணியினர் மீதான அதிருப்திக்குக் காரணங்களாக இருக்கின்றன.

அகாலிகளின் பிரதான ஆதரவாளர்கள் என்று கருதப்படும் மார்க்கவாதிகள் மாநிலத் தில் நடந்த சில சம்பவங்களால் அகாலிகள் மீது கோபமும் அதிருப்தியும் கொண்டிருக் கின்றனர். தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், சீக்கிய மதத்தை அவமதித்துவிட்டார் என்ற கோபம் அவர்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. அதைவிட முக்கியம் அவரை பாதல்கள் மன்னித்துவிட்ட விதம் அவர்களை மேலும் எரிச்சல்படுத்திவிட்டது.

திணறும் காங்கிரஸ்

ஆக, காங்கிரஸ் மீண்டும் தலையெடுப் பதற்கான சூழல் உருவாகியிருக்கிறது. ஆனால், காங்கிரஸோ வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய பிறகும்கூட 40 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் யார் என்று தீர்மானிக்க முடியாத சூழலிலேயே இருக்கிறது. நான்கு மாதங்களாகத் தன்னுடைய அடுத்த அரசியல் முடிவு என்ன என்று அறிவிக்காமல், இழுத்தடித்த கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, பிரச்சாரத்துக்கு இன்னும் 18 நாட்களே இருக்கின்றன என்ற நிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

கடந்த சட்டப் பேரவைப் பொதுத் தேர்தலில் வெற்றிவாய்ப்பை வெறும் 2% வாக்கு வித்தியாசத்தில்தான் காங்கிரஸ் இழந்தது. காங்கிரஸ்தான் வெற்றிபெறும் என்று எல்லா கருத்துக் கணிப்புகளும் தெரிவித்தன. மக்களும் நினைத்தார்கள். கட்சித் தலைவர்களின் மெத்தனமும், கோஷ்டிப்பூசலும், வேட்பாளர் தேர்வில் செய்த குளறுபடிகளும், போட்டி வேட்பாளர்களைச் சமாதானம் செய்ய முடியாமல் போனதும் தோல்விக்குக் காரணங்களாகிவிட்டன. அந்தத் தோல்வியிலிருந்துகூட காங்கிரஸ் பாடம் கற்றுக்கொண்டதைப் போலத் தெரியவில்லை. இப்போதும்கூட உட்கட்சிப் பூசலால்தான் வேட்பாளர் பட்டியலை இறுதிசெய்வது தாமதமாகியிருக்கிறது. குறைந்தது 30 தொகுதிகளில் போட்டி வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர்.

நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு இறங்குமுகமாக இருக்கும் இத்தருணத்தில், பஞ்சாபில் வெற்றி பெறுவதன் மூலம் ஒரு புதிய நம்பிக்கையை விதைக்கும் வாய்ப்பைக் கண் எதிரே வீணடித்துக்கொண்டிருக்கிறது காங்கிரஸ்.

மாநில காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் மக்களிடம் செல்வாக்குள்ள, வாக்குகளை ஈர்க்கக்கூடிய தலைவர். மக்களவைத் தேர்தலில் மோடி அலை வீசியபோதிலும் அருண் ஜேட்லியைத் தோற்கடித்தவர். 2014-ல் நரேந்திர மோடி மக்களவைப் பொதுத் தேர்தலிலும் 2015-ல் பிஹாரில் நிதீஷ்குமார் சட்டப் பேரவை பொதுத் தேர்தலிலும் வெற்றிபெற உத்தி வகுத்துத் தந்த பிரசாந்த் கிஷோர், பஞ்சாபில் இப்போது காங்கிரஸுக்கு உதவிக் கொண்டிருக்கிறார். பஞ்சாபில் வாக்குகள் மூன்று திசைகளில் பிரியும் என்பதால் வெற்றி யாருக்கு என்பதைக் கணிப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. கடந்த முறை தேர்தல் முடிவு இப்படியிருக்கும் என்று ஊகித்து அறிவித்தவர்கள், அது பொய்த்துவிட்டதால் இப்போது அதிக எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள்!

© ‘தி இந்து’ ஆங்கிலம் | சுருக்கமாகத் தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x