Published : 23 May 2015 09:01 AM
Last Updated : 23 May 2015 09:01 AM

தேவை சீர்திருத்தமே, சிறையல்ல!

சீர்திருத்தத்தைவிட வஞ்சத்தையே நோக்கமாகக் கொண்டிருக்கிறது புதிய திருத்தம்.

‘சிறார் தண்டனை சட்டத்திருத்தம்’ மக்களவை யில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 16-க்கும் 18-க்கும் இடைப்பட்ட வயதினர் ‘கொடும் குற்றங்கள்’ புரிந்தால் (7 ஆண்டுகளோ அதற்கும் மேலோ சிறைத் தண்டனைக்குரிய குற்றங்கள்) வயது வந்தோருக்கு வழங்கப்படும் தண்டனை அவர்களுக்கும் வழங்கப்படும். இந்த முடிவை எடுத்ததன் மூலம் ‘சிறார் நீதிவழங்கல்’ முறைக்கே சாவு மணி அடித்திருக்கிறது மத்திய அமைச்சரவை.

இந்தச் சட்டத்தின்கீழ் வயது வரையறையை மாற்றியமைக்கவிருக்கும் மத்திய அரசின் முடிவு, இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்துக்கும், குழந்தைகள் உரிமைக்கான ஐ.நா. மாநாட்டுக்கு உட்பட்ட இந்தியாவின் கடப்பாடுகளுக்கும் எதிரானது என்று நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கை தெரிவித்திருப்பது அலட்சியப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கான அமைச்சகத்தின் எடுத்தேன் கவிழ்த்தேன் போக்கை, நிலைக்குழு கடுமையாக விமர்சிக்கிறது. “சிறார் தண்டனைச் சட்டம் என்பது சீர்திருத்தம், மறுவாழ்வு ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டிருக்கிறதே தவிர, வஞ்சத்தை அல்ல” என்றும் நாடாளுமன்ற நிலைக்குழு கூறியுள்ளது.

இப்படியெல்லாம் இருந்தும், இந்த வரையறை மாற்றத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. “குறிப்பிட்ட குற்றத்தை ‘சிறாராக’ ஒருவர் செய்திருக் கிறாரா ‘வயதுவந்தோராக’ செய்திருக்கிறாரா” என்ற அடிப்படையில் சிறார் நீதி ஆணையம் மதிப்பாய்வு செய்யும். இந்த ஆணையத்தில் உளவியல் நிபுணர்களும் சமூக ஆர்வலர்களும் அங்கம் வகிப்பார்கள். இந்த மதிப்பாய்வின் அடிப்படையில் இந்த வரையறை மாற்றம் செய்யப்படுமென்று ‘பத்திரிகை தகவல் அலுவலகம்’ வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

தவறான கணிப்புகள்

இப்போது உத்தேசிக்கப்பட்ட மாற்றம் கீழ்க்கண்ட மூன்று தவறான கணிப்புகளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது: 1. குற்றம்சாட்டப்படுவதைப் பொறுத்த வரை வயதுவந்தோரைப் போலத்தான் சிறாரும்; 2. ஒருவருடைய மன முதிர்ச்சியையும் மன அமைப் பையும் அறிவியல் முறைப்படி மிகவும் துல்லியமாகக் கணிக்கலாம்; 3. இந்த வரையறை மாற்றம் மூலமாகச் சிறார் குற்றங்களைத் திறம்படத் தடுக்க முடிவதுடன் பொதுமக்களின் குறிப்பாகப் பெண்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தலாம்.

நரம்பியல் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களும், அமெரிக்காவின் மெக்ஆர்த்தர் ஃபவுண்டேஷனில் இருக்கும் ஆய்வு அமைப்பொன்று நடத்திய ஆய்வு களும் தெரிவிப்பது இதுதான்:

16-க்கும் 18-க்கும் இடைப்பட்ட வயதுகளில் மனித மூளையின் அமைப்பில் நிறைய மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது 20-களின் இடைப்பகுதி வரை தொடர்கிறது. மூளையின் இந்தப் பரிணாம வளர்ச்சியைப் பொறுத்தவரை அபாயங்கள்குறித்து மதிப்பீடு செய்யும் இயல்போடு பெரும்பாலும் தொடர் புடையது. அதைத்தான் நாம் நேரடியாக ‘மனமுதிர்ச்சி’ என்கிறோம். இந்தப் பருவத்தினர் ‘தாங்கள் செய்வது தவறு என்பதை அறிந்திருக்கக் கூடும்’ என்றாலும், அந்த அறிவைக் கொண்டு அதற்கேற்பத் தங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ளும் வகையில் அவர்களால் நடந்துகொள்ள முடிவதில்லை என்பது மறுக்கவே முடியாத வகையில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதனால் தான் இந்தப் பருவத்தில் அவர்கள் அபாயம் என்பதைக் குறைத்து மதிப்பிடுகிறார்கள். எதிர்மறையான தாக்கத் துக்கும் எளிதில் இலக்காகிறார்கள், விளைவுகளைக் குறித்த உணர்வும் இருப்பதில்லை. சட்ட நடை முறைகளைப் புரிந்துகொள்ளுதல், முடிவெடுத்தல் ஆகியவற்றில் அவர்களுக்குள்ள திறனை வயது வந்தோருடைய திறனுடன் ஒப்பிடவே முடியாது.

உரிமையைப் பறித்துவிடும்

குழந்தைகள் மற்றும் பதின்பருவத்தினர் உளவியலில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற மருத்துவர் சேகர் பி. சேஷாத்ரி சொல்கிறார், “வயதுவந்தோரைக் குற்றச் செயல்களுக்குப் பொறுப்பாக்கும் அளவுக்குப் பதின் பருவத்தினரைப் பொறுப்பாக்க முடியாது. ஏனெனில், அவ்வப்போது ஏற்படும் பாதிப்புகளால் உந்தப்படு பவர்கள் அவர்கள். அவர்களுடைய உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் அவர்களுடைய சூழலால் பெரிதும் தாக்கத்துக்கு உள்ளாகிறார்கள் அவர்கள். தங்கள் செயல்களால் ஏற்படும் விளைவுகளைச் சீர்தூக்கிப் பார்க்கும் அளவுக்கு அவர்களுக்கு முதிர்ச்சியும் கிடையாது. இது, மோசமாக முடிவெடுக்கும் திறனை நோக்கி அவர்களை இட்டுச்செல்கிறது. இந்த முக்கிய மான காரணிதான் வயதுவந்தோரையும் அவர்களையும் வேறுபடுத்துகிறது. தீய வழியில் செல்லும்படி வழிநடத்துவது எளிது என்பதுபோல், நல்ல வழியிலும் அவர்களை வழிநடத்துவது எளிது. பெரியவர்கள் மீது வழக்கு போட்டுத் தண்டிப்பதைப் போலவே பதின் பருவத்தினரையும் செய்வதென்பது சமத்துவமாக வாழ்வதற்குரிய உரிமையை அவர்களிடமிருந்து பறித்துவிடும்.”

பதின்பருவத்தைச் சேர்ந்தவர்களில் ஒவ்வொரு வரையும் அவர்களுடைய மனமுதிர்ச்சி எந்த அளவுக்கு இருக்கிறது என்று மதிப்பிடுவதென்பது ‘அறிவியலின் எல்லையைத் தாண்டுவது போல்’ என்று போன்னி, ஸ்காட் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு (2013) சொல்கிறது. ஆகவே, தற்போது உத்தேசிக்கப்பட்ட மதிப்பாய்வு வழிமுறை பிழைபட்டதாகவும் தர்க்கத்துக்கு உட்படாததாகவுமே இருக்கிறது. அது மட்டுமல்லாமல், பெரியவர்களுக்கான நீதிமன்றத்துக்கு யாரை அனுப்புவது யாரை அனுப்பக் கூடாது என்பதெல்லாம் தனிநபர் விருப்புவெறுப்புக்கு ஏற்ற வகையில் முடிவெடுக்கும்படி ஆகிவிடும்.

சிறையால் குறைக்க முடியாது

கொடும் தண்டனை அளிக்கும் சட்டங்களால் பொதுமக்கள் பாதுகாப்பை அதிகரிக்க முடியவில்லை என்பதற்கும் சிறார் குற்றங்களைத் தடுக்க முடியவில்லை என்பதற்கும் போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன. எனினும், தோற்றுப்போன மேற்கத்தியத் தண்டனை முறையையே நாம் கட்டிக்கொண்டு அழுகிறோம். இதுபோன்ற வரையறை மாற்றங்கள் வெற்றிகரமாகச் செயல்படுகின்றனவா என்பதை அறிந்துகொள்வதற்காக அமெரிக்காவில் அமைக்கப்பட்ட குழுவொன்று அறிவியல்பூர்வமான ஆதாரங்களை ஆராய்ந்து இந்த முடிவுக்கு வந்தது: “வன்முறையையும் குற்ற இயல்பையும் குறைப்பதற்காகத்தான் வரையறை மாற்றம் செய்யப்பட்டது. ஆனால், கிடைக்கும் ஆதாரங்கள் மேற்கண்ட வரையறை மாற்றத்தால் நடந்திருக்கும் நன்மையைவிடத் தீமையே அதிகம் என்பதைச் சொல்கின்றன. அமெரிக்கா தற்போது சிறைகளை மூடிக்கொண்டுவருகிறது. அதற்கான நிதியையெல்லாம் ஆக்கபூர்வமான நலத்திட்டங்களுக்குச் செலவிடுவதில் திருப்பிவிட்டுக்கொண்டிருக்கிறது.”

வறுமை, குடும்பத்தின் சிதைவு, தங்குதடையில்லாமல் ஆபாசப் படங்கள் கிடைப்பது, சிறார் பாதுகாப்பு முறைகளின் தோல்வி போன்றவைதான் சிறார் குற்றங் களின் ஆணிவேர். அவற்றைக் களைவதை விட்டுவிட்டு, கண்மூடித்தனமாகச் சிறாரைக் குறிவைக்கிறது அரசு. பெரியவர்களோடு சேர்ந்து சிறைவைக்கப்படும் இந்தச் சிறார்கள் விடுதலையாகி வெளியில் வந்தால் சமூகத்துக்கு அதுதான் பெரிய தீங்கை ஏற்படுத்தும்.

சிறார் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து வெளிவந்த ஒரு சிறுவன், தற்போது உத்தேசிக்கப்பட்ட இந்தச் சட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டதும் இப்படிச் சொன்னான்: “எல்லா வற்றையும் பெரியவர்களிடமிருந்துதான் நாங்கள் கற்றுக்கொள்கிறோம். போதைமருந்து பயன்படுத்து பவர்களைப் பார்த்து நாங்களும் போதைமருந்து பயன்படுத்தக் கற்றுக்கொள்கிறோம். வெடிகுண்டு செய்பவர்களைப் பார்த்து வெடிகுண்டு செய்யக் கற்றுக் கொள்கிறோம். எங்களைச் சிறைக்கு அனுப்பினால் இதையெல்லாம் கற்றுக்கொண்டு, நாங்களும் அவர்களைப் போல்தான் ஆவோம்.”

இளம் பெண் ஒருவர், அவரது சிறு வயதில் கடத்தல் கும்பலின் வலையில் விழுந்தவர், தனக்கு இழைக்கப் பட்ட கொடுமையை 12 வயது சிறுமிக்கும் அவர் செய்தார். அந்த இளம் பெண் இப்படிச் சொல்கிறார், “எங்களைச் சிறைக்கு அனுப்புவதன் மூலம் எங்களின் உத்வேகத்தையும் நம்பிக்கைகளையும் கொன்று விடாதீர்கள். அதற்குப் பதிலாக எங்களுக்கு உதவி செய்யுங்கள், வழிகாட்டுங்கள், அறிவுரை கூறுங்கள், ஆதரவு தாருங்கள், சரியான பாதை எதுவென்று காட்டுங்கள் - எங்களைச் சிறையில் தள்ளி எங்கள் வாழ்க்கையை அழித்துவிடாதீர்கள்.”

சிறார் நலனுக்கான அமைச்சகமும் மத்திய அமைச்சகமும் இதையெல்லாம் சற்றும் பொருட்படுத்திய தாகத் தெரியவில்லை.

‘தி இந்து’ (ஆங்கிலம்), சுருக்கமாகத் தமிழில்: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x