Published : 07 Dec 2016 10:21 AM
Last Updated : 07 Dec 2016 10:21 AM

ஜெ. - முதலும் கடைசியுமாய்... சில உரைகள்...

முதல் நாடாளுமன்ற உரை!

மாநிலங்களவை அதிமுக உறுப்பினராகப் பதவி வகித்த ஜெயலலிதா, தனது முதல் நாடாளுமன்ற உரையிலேயே முத்திரை பதித்தவர். எம்ஜிஆரால் தமிழக அரசியலில் அறிமுகப்படுத்தப்பட்ட அவர், முதலில் அதிமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அவரது பேச்சாற்றல் மற்றும் ஆங்கிலப் புலமை கண்டு வியந்த எம்ஜிஆர், அவரை 1984-ல் மாநிலங்களவை உறுப்பினராக்கினார். 1984 முதல் 1989 வரை ஐந்து ஆண்டுகள் டெல்லியில் மாநிலங்களவை உறுப்பினராக ஜெயலலிதா பணியாற்றினார். மாநிலங்களவையில் கடந்த 23.4.1984 அன்று எரிசக்தி அமைச்சகச் செயல்பாடு தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு பேசியதுதான் அவரது கன்னிப் பேச்சு. அவரது உரையிலிருந்து:

“இந்த அவையின் உயர்ந்த பாரம்பரியத்தை நன்கு அறிவேன். இந்த அவையானது ஆரம்பம் தொட்டுப் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய அறிஞர் பெருமக்கள், உன்னதமான தலைவர்கள், பெரிய மேதைகள் என அறிவாளிகளின் சந்திப்புக் கூடமாக இருந்துவருகிறது. 22 ஆண்டுகளுக்கு முன்பு, தனது வலிமையான கன்னிப் பேச்சால் தேசத்தையே திரும்பிப் பார்க்கவைத்த, எங்களின் மறைந்த தலைவர் அண்ணா பேசிய இந்த அவையில், நான் பேசுவதை மிகப் பெரிய கெளரவமாகக் கருதுகிறேன். எனது கன்னிப் பேச்சில் மின்சாரப் பிரச்சினை குறித்து பேசப்போகிறேன்.

எனது தலைவரான தமிழக முதல்வர் எம்ஜிஆர், தமிழக மக்களின் குரலை ஒலிக்கச் செய்வதற்காக என்னை இந்த அவைக்கு அனுப்பிவைத்துள்ளார். குறிப்பாக, ஏழைத் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், பெண்கள் என சமுதாயத்தின் நலிந்த பிரிவினரின் பிரதிநிதியாக, அவர்களின் உணர்வுகளை நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக இங்கு வந்துள்ளேன்.

என்னைவிட மிகுந்த அறிவாற்றலும் அனுபவமும் மிக்க மூத்த உறுப்பினர்கள் பலர் இந்த அவையில் இருக் கிறார்கள். மற்ற உறுப்பினர்களுடன் சொற்போரில் ஈடுபட இந்த அவைக்கு வரவில்லை. குறிப்பிட்ட சில பிரச்சினை கள் குறித்து நாட்டின் கவனத்தை ஈர்க்கும் வகையில் எனது அறிவுக்கு எட்டிய சில உண்மைகளை எடுத்துச் சொல்லவே வந்துள்ளேன். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகம் மின்தட்டுப்பாட்டுப் பிரச்சினையைச் சந்தித்துவருகிறது. இந்தப் பிரச்சினையைச் சமாளி்க்கும் வகையில் 1971-72 முதற்கொண்டே 25% முதல் 100% வரை விட்டுவிட்டு மின்வெட்டை அமல்படுத்த வேண்டிய கட்டாயச் சூழலுக்குத் தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளது. அடிக்கடி நிலவும் மின்வெட்டு காரணமாக மாநிலத்தின் தொழில் வளர்ச்சியும் விவசாய உற்பத்தியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மிகக் குறைந்த அளவில்தான் நீர்மின் திட்டங்கள் மூலம் மின்சாரம் கிடைக்கிறது. பெரும்பாலான நீர்மின் திட்டங்கள் ஏற்கெனவே சுரண்டப்பட்ட நிலையிலும், வேறு சில திட்டங்கள் செயல்படாத நிலையிலும் உள்ளன. எஞ்சிய நீர்மின் திட்டங்கள் மாநிலங்களுக்கு இடையிலான சிக்கல்களால் இயங்கவில்லை. வேறு சில திட்டங்கள் மிகச் சிறிய அளவிலும், குறிப்பிட்ட பருவ காலத்திலும் செயல்படக் கூடியவையாக உள்ளன. மின்உற்பத்திக்காகத் தமிழகத் தில் கிடைக்கக் கூடிய ஒரே எரிபொருள் பழுப்பு நிலக்கரி தான். அதுவும் போதுமான அளவுக்கு ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டுவிட்டது. நீர்மின் திட்டங்களுக்கான ஆதாரங்களும் தீர்ந்துவிட்ட நிலையில், நிலக்கரியை வெளிமாநிலங்களிலிருந்து வாங்கினால் செலவு அதிகமாகும். அதோடு, நிலக்கரி தேவையான அளவு கிடைக்குமா என்பதும் சந்தேகம்தான்.

இத்தகைய சூழலில், மாநிலத்தில் அணுமின் திட்டத்தை அமைப்பதற்குத் தமிழக அரசு வலியுறுத் தியதன்பேரில் 235 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் வகையில் மத்திய அரசு 1967-ல் கல்பாக்கம் அணுமின் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து, மேலும் 235 மெகாவாட் மின்சாரம் உற்பத்திசெய்யும் வகையில் நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தில் கல்பாக்கத்தில் இரண்டாவது அணு உலை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. தமிழகத்தின் அவசர மின் தேவையைக் கருத்தில்கொண்டு கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உற்பத்திசெய்யப்படும் மின்சாரம் முழுவதும் தமிழகத்துக்கு ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு - தமிழக அரசு இடையே ஒரு புரிதல் ஏற்பட்டது. ஆனால், அது நிறைவேற்றப்படவில்லை.

புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட போதிலும், தமிழகத்தில் மின்தட்டுப்பாடு தொடர்ந்த வண்ணம் உள்ளது. மின்தட்டுப்பாடு உள்ள மாநிலங்கள் அதிக மின்உற்பத்தி செய்யப்படும் மாநிலங்களிலிருந்து மின்சாரத்தை வாங்க வேண்டியிருக்கும். இதற்குத் தீர்வாக, மத்திய மின்உற்பத்தி நிலையங்களிலிருந்து, மின்தட்டுப்பாடு உடைய மாநிலங்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் மின்சாரத்தை ஒதுக்கீடு செய்வதுதான் ஏற்கக்கூடிய அணுகுமுறையாக இருக்கும்.

தென் மாநிலங்களிலேயே அதிகளவு மின்தட்டுப்பாடு உடைய மாநிலம் தமிழகம்தான். மின்தட்டுப்பாடு காரணமாகப் பிற மாநிலங்களிலிருந்து அதிகம் விலை கொடுத்து தமிழகம் மின்சாரம் வாங்க வேண்டியுள்ளது. இந்நிலையில், நெய்வேலியில் அமைக்கப்பட்டுவரும் இரண்டாவது அலகில் உற்பத்தி செய்யப்படும் மின் சாரம் முழுவதையும் தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யா விட்டால், மாநிலத்தின் மின்தட்டுப்பாடு மிகவும் மோசமாகி மாநிலத்தின் நலன் பெரிதும் பாதிக்கப்படும்” என்றார். அவரது உரைக்கு மிகப் பெரும் வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத் தக்கது!



முதல் சட்டப்பேரவை உரை!

1989-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக ஆட்சி அமைத்தது. அந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு முதல் வெற்றியைப் பெற்று எம்.எல்.ஏ. ஆனார் ஜெயலலிதா. எதிர்க்கட்சி தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

புதிய சட்டப்பேரவையின் பேரவைத் தலைவராக 1989 பிப்ரவரி 8-ல் தமிழ்க்குடிமகன் தேர்வுசெய்யப்பட்டார். பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் புதிய பேரவைத் தலைவரை வாழ்த்தி அன்றைய தினம் ஆற்றிய உரைதான் ஜெயலலிதாவின் முதல் சட்டப்பேரவை உரை.

“பேரவைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நீங்கள் ஒரு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்தவர். எனினும், பேரவைத் தலைவர் என்ற முறையில் எவ்வித கட்சி சார்பும் இல்லாமல் நல்ல முறையில், நடுநிலையோடு இந்த சபையை நடத்திச் செல்ல வேண்டும். பெருமை மிகுந்த இந்தப் பேரவையின் முந்தைய தலைவர்கள் பல நல்ல முன்னு தாரணங்களை விட்டுச் சென் றுள்ளனர். அவற்றைப் பின்பற்றிப் புதிய பேரவைத் தலைவர் செயல்படுவார் என்று நம்புகிறேன்.

இப்பேரவையில் நடைபெறும் விவாதங்கள் அனைத்தும் தரம் மிகுந்ததாக இருக்க வேண்டும். அதற்காக பேரவைத் தலைவரான நீங்கள் மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளுக்கும் நான் சார்ந்துள்ள அதிமுக என்றும் துணை நிற்கும்’’ என்றார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவரே தமிழக முதல்வரானது வரலாறு!

மக்களுக்கு ஒரு செய்தி!

மே மாதம் நடந்த சட்டப் பேரவைப் பொதுத் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற்றார் ஜெயலலிதா. தொகுதி மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்கச் சென்றார். 2 மணி நேரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல்வேறு இடங்களில் வாக்காளர்களைச் சந்தித்தார். தனக்கு வெற்றியைத் தேடித் தந்த தொகுதி மக்களிடம் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்தார்.

“ஆறாவது முறையாக மற்றும் இரண்டு முறை தொடர்ச்சியாக என்னை முதல்வராக்கியதற்கும், இரண்டாவது முறை தொடர்ச்சியாக ஆர்.கே.நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வுசெய்ததற்கும் நன்றி கூறுகிறேன்.

ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களாகிய நீங்கள் என் நெஞ்சில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளீர்கள். உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் அது போதாது. கடந்த ஆண்டு இடைத்தேர்தலில் என்னை உங்கள் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தீர்கள். அதன் பின், கடந்த ஓராண்டாக என் சக்திக்கு உட்பட்ட வரை இந்தத் தொகுதிக்குப் பல வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளேன். இன்னும் நிறைய திட்டங்களைக் கொண்டுவரத் திட்டமிட்டிருக்கிறேன். விரைவில் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன் என உத்தரவாதம் அளிக்கிறேன்.

தமிழகத்திலேயே ஆர்.கே.நகர் தொகுதிதான் முன்னேறிய, முன்மாதிரியான தொகுதி என்று அனைவரும் வியக்கும் அளவுக்கு இந்தத் தொகுதியில் பல வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டுவந்து செயல்படுத்துவேன். ஒவ்வொரு முறையும் இங்கு வரும்போது நீ்ங்கள் என் மீது பொழியும் அன்பையும், அளிக்கும் வரவேற்பையும் பார்க்கும்போது, என் நெஞ்சம் நெகிழ்கிறது. என் உள்ளத்தில் உள்ள உணர்வுகளை எடுத்துரைக்க வார்த்தைகள் போதவில்லை. ஆகவே, எனக்குள் ஏற்படும் நன்றிப் பெருக்கைச் செயலில் காட்டுவேன்!”

இந்தச் சுற்றுப்பயணத்தின்போது, மீனவப் பகுதியான திடீர் நகரில் ஒரு குழந்தைக்கு அபர்ணா என்று பெயரிட்டார். தண்டையார் பேட்டையில் ஒரு குழந்தைக்கு அவர் வைத்த பெயர் தேவிகா.



கட்சியினருக்கு ஒரு செய்தி

செப்டம்பர் 14-ல் மாற்றுக் கட்சியினர் 91,308 பேர் அதிமுகவில் இணைந்தனர். அவர்களைவ்வரவேற்றுப் பேசிய ஜெயலலிதா, ‘‘சமீபத்தில் வட இந்தியாவில், ஒரு மாநிலத்தில் தமிழகத்தின் அம்மா உணவகத்தைப் போல அங்கும் உணவகங்கள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கும் செய்திகளைப் பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள். உங்களுக்கெல்லாம் நன்கு தெரியும். ஏற்கெனவே வெளிநாடுகளிலிருந்து வந்து நமது ‘அம்மா உணவ’கங்களின் சிறப்பினைப் பார்த்துப் பாராட்டி, தங்கள் நாடுகளிலும் அதுபோலத் தொடங்க பார்வையாளர்கள் வந்து சென்றனர். இது ஓர் எடுத்துக்காட்டுதான்.

இதுபோலவே, எண்ணற்ற எனது மக்கள் நலப் பணிகளை நாடு முழு வதும், ஏன், பிற நாடுகளிலும்கூடப் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்கள் என்பது எனக்கு மட்டுமல்ல, உங்கள் எல்லோருக்குமே மகிழ்ச்சி அளிக்கின்ற செய்தி. மக்களுக்காகவே வாழும் நான், இன்னும் ஏராளமான மக்கள் நலப் பணிகளைச் செய்து முடித்திட ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். மக்களுக்காக உழைக்கும் ஒவ்வொருவருக்கும் பொது வாழ்வில் பெரும் எதிர்காலம் உண்டு. அந்த வாய்ப்புகளை உரிய நேரத்தில் உண்மையான தொண்டர்களுக்கு அளிப்பதில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு நிகரான இயக்கம் வேறு எதுவும் இல்லை.

எனவே, நீங்கள் அனைவரும் மக்கள் பணிகளைச் சிறப்புடன் ஆற்றி, உங்கள் அரசியல் வாழ்வில் ஒளிமயமான எதிர்காலத்தைப் பெற்றிட, உங்கள் எல்லோருக்கும் எனது மனப்பூர்வமான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.



கடைசி அரசு நிகழ்ச்சி!

சென்னை, சின்னமலை - விமான நிலையம் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க நிகழ்ச்சிதான் ஜெயலலிதா பங்கேற்ற கடைசி அரசு நிகழ்ச்சி. ஆனால், நேரில் செல்லவில்லை. தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். முன்னதாக, விமான நிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர் சாலை, கிண்டி, சின்னமலை, பரங்கிமலை ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களையும் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார். விமான நிலையத்தில் இருந்தபடியே, மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.

“நான் கடந்த 2003-ல் தமிழக முதல்வராக இருந்தபோதுதான், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன என்பதும், மீண்டும் 2011-ல் முதல்வராகப் பதவியேற்ற பின்னர்தான், மெட்ரோ ரயில் வழித்தடப் பணிகள் பெரும்பான்மை நடந்துள்ளன என்பதும் எனக்கு மனநிறைவை அளிக்கின்றன. மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு உதவிவருவதும், இந்த நிகழ்ச்சியில், மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்ககய்ய நாயுடு பங்கேற்றிருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு அவர் தொடர்ந்து உதவியாக இருப்பார். இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனும் தமிழகத்துக்கு மிகப்பெரிய வளர்ச்சித் திட்டங்களைத் தொடர்ந்து கொண்டுவர முயற்சிக்கிறார்.

இந்தியா மற்றும் தமிழகத்தின் மிகப்பெரிய வளர்ச்சிக்கான பங்குதாரராக ஜப்பான் விளங்குகிறது. ஜப்பான் தூதர், ஜப்பான் சர்வதேசக் கூட்டுறவு முகமை (ஜைகா) அதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களில் ஒத்துழைப்பு அளிக்கும் ஜப்பான் அரசு, அங்குள்ள மக்கள் அனைவருக்கும் தமிழக மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

நவீனப் பொதுப் போக்குவரத்துத் திட்டத்தைச் சென்னைக்குக் கொண்டுவந்துள்ள மெட்ரோ ரயில் திட்டத்தில் உள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். சென்னை நகரவாசியாக நான், மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை ரயில் போக்குவரத்து இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்படும் என உறுதியாக நம்புகிறேன்!”

கடைசி அறிவிப்பு!

செப்டம்பர் 22-ம் தேதி இரவு அப்போலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அன்று காலைவரை கூடத் திட்டங்களைத் தொடங்கி வைத்துக்கொண்டிருந்தார் ஜெயலலிதா. தேர்தல் அறிக்கையில் அறிவித்த தாலிக்கு 8 கிராம் தங்கம் திட்டம் அவற்றில் ஒன்று. முன்னதாக, திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு 4 கிராம் தங்கம் வழங்கப்பட்டுவந்தது. இதில் தாலிக்கு வழங்கப்படும் தங்கம் 4 கிராமுக்குப் பதில் 8 கிராமாக வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பைச் செயல்படுத்தி செப்டம்பர் 22-ம் தேதி காலை, தாலிக்கு 8 கிராம் தங்கத்துடன், உதவித்தொகையை 12,500 பயனாளிகளுக்கு வழங்கும் திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x