Last Updated : 11 May, 2016 09:43 AM

 

Published : 11 May 2016 09:43 AM
Last Updated : 11 May 2016 09:43 AM

சாதி எனும் சமூகக் கிருமி

இந்திய சமூகவியல் துறையின் தந்தை என்று அழைக்கப்படும் எம்.என்.ஸ்ரீனிவாஸ் எழுதிய புகழ்பெற்ற வாசகம் இது

‘இண்டியன்ஸ் டோண்ட் காஸ்ட் தேய்ர் வோட், தே வோட் தேய்ர் காஸ்ட்'(இந்தியர்கள் வேட்பாளர்களில் யாருக்கு என்று வாக்களிப்பதில்லை; தங்கள் சாதியில் யாருக்கு என்றே தேர்வுசெய்கிறார்கள்.) ஒரு தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ள வாக்காளரின் பின்னணி என்ன, எந்தக் கட்சி, என்ன கொள்கை, இதுவரை என்ன செய்திருக்கிறார்கள், இனி என்ன செய்வார்கள் என்றெல்லாம் விலாவாரியாக அலசி ஆராய்ந்து, நிறை குறைகளின்படி வாக்களிப்பவர்களைவிட, சாதி பார்த்து வாக்களிப் பவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். சாதியமைப்பு அழுத்தமாக வேரூன்றி யிருக்கும் கிராமப்புறங்களில் இதுவே வழக்கமாக இருந்துவருகிறது. கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் இதுதான் நிலைமை.

வரலாற்றில் சாதி

1853-ல் இந்தியாவுக்கு ரயில்வேயை அறிமுகப்படுத்தியது பிரிட்டன். அதே ஆண்டு கார்ல் மார்க்ஸ் பின்வருமாறு எழுதினார். ‘இந்தப் புதிய இயந்திரமயமாக்கப்பட்ட போக்குவரத்து முறை இந்தியாவில் நிலவும் சாதியமைப்பைக் குலைப்பதற்குப் பயன்படும்’. இது நடந்து நான்கு ஆண்டுகளில் சிப்பாய் புரட்சி வெடித்து, அது ஒடுக்கப்பட்டு, இந்தியா பிரிட்டனின் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது. பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தில் நாட்டின் பொருளாதாரம் சுரண்டப்பட்டது முதல், பல தளங்களில் இந்தியா பல இழப்புகளைச் சந்தித்தது.

ஆனால், இத்தனை களேபரத்திலும் இந்தியா கவனமாகப் பாதுகாத்து வைத்த ஒரு அமைப்புமுறை, சாதி. ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்தையும் நிர்ணயித்த, அனைத்துத் தளங்களிலும் ஆதிக்கம் செலுத்திய சாதி அமைப்பைக் கண்டு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களும் சிந்தனையாளர்களும் அரசியல்வாதிகளும் திகைத்து நின்றனர்.

இன்னொரு பக்கத்தில் இருந்து பார்த்தால், ரயில்வே, அச்சுத்தொழில், தபால் தந்தி சேவை உள்ளிட்ட புதிய முயற்சிகளால் பல சாதியினர் ஒன்றிணைந்து பணியாற்றும் வாய்ப்பு உருவானதென்னவோ உண்மைதான். ஆனால், இது சாதியமைப்பில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை என்கிறார் எம்.என்.னிவாஸ். மாறாக, பலர் இந்தப் புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு தங்களுடைய சாதி அபிமானத்தை மேலும் வலுப்படுத்திக்கொண்டனர்.

சுதந்திரமும் சாதியும்

சுதந்திரத்துக்குப் பின்னர் நேருவின் அறிவியல் பார்வை, தொழில்மயமாக்கல், சோஷலிச லட்சியங்கள் ஆகியவை சாதி அமைப்பை மாற்றிவிடும் என்று சிலர் கணித்தனர். ஆனால் அதுவும் நடக்கவில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய அளவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே பிராமணர், பிராமணர் அல்லாதார் போராட்டம் இங்கே தொடங்கப்பட்டுவிட்டது. ஒரு கட்டத்தில் காலனியாதிக்க எதிர்ப்பைக் காட்டிலும் தீவிரமாக சாதி எதிர்ப்பு வலுவாக இங்கே முன்வைக்கப்பட்டது. நீதிக் கட்சியும் அதைத் தொடர்ந்து திராவிட இயக்கக் கட்சிகளும் பலம்பெற்றபோது சாதியின் அடித்தளம் நிச்சயம் அசைக்கப்படும் என்னும் எதிர்பார்ப்பு பரவலாகத் தோன்றியது. ஆனால், அதுவும் ஒரு கட்டத்துக்கு மேல் நிறைவேறவில்லை.

1990-களின் தொடக்கத்தில் முதலாளித்துவப் புரட்சி. தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் மூன்று கொள்கைகளும் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்பட்டன. அதுவரை நிலவிவந்த சமூக மதிப்பீடுகள் பலவற்றை இவை உடைத்தெறிந்தன. அரசைக் காட்டிலும் வலுவான அமைப்பொன்றைத் தனியார்கள் கட்டியமைக்கத் தொடங்கினார்கள். இந்தப் பலன்களைப் பயன்படுத்தி ஒரு புதிய, பலமிக்க நடுத்தர வர்க்கம் ஒன்று உதயமானது. இனி சாதி மெல்லச் சாகும் என்னும் நம்பிக்கை மீண்டும் உதயமானது. ஆனால் இந்த முறையும் தோல்விதான்.

எளிதாக அனைத்தையும் தின்று செரித்துவிட்டு, மேலும் மேலும் செழிப்படைந்துகொண்டே போகிறது சாதியமைப்பு. ஜோதிபா புலே, அம்பேத்கர், பெரியார் என்று தொடங்கி பல சிந்தனையாளர்கள் முயன்று பார்த்துவிட்டார்கள். அரசியல் விஞ்ஞானிகளும் சமூக ஆய்வாளர்களும் சாதியமைப்பை மிக விரிவாகவும் நுணுக்கமாகவும் ஆராய்ந்து பார்த்தார்கள். எதுவும் நடக்கவில்லை.

அரசியலும் சாதியும்

பெருமளவில் உயர் சாதியினரின் கட்சியாகத் திகழ்ந்த காங்கிரஸ் 1967-ல் அகில இந்திய அளவில் முறியடிக்கப்பட்டபோது, பல மாநிலங்களில் பிற்படுத்தப்பட்ட சாதிகள் எழுச்சிபெற்று ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றின. ஆனால், இந்த வெற்றிகள் அந்தந்தக் கட்சிகளின் வெற்றிகளாக மட்டுமே பெரிதும் சுருங்கிப்போயின. இருந்தும் சாதி அடையாளத்தை முன்வைத்து வாக்கு சேகரிக்கும் வழக்கம் இன்றளவும் பிரபலமாகவே இருக்கிறது. சாதிய உணர்வு எளிதில் தூண்டிவிடக்கூடிய ஒன்றாக இருப்பதால், மீண்டும் மீண்டும் கட்சிகள் மக்களிடையே சாதி அடையாளத்தை முதன்மைப்படுத்திவருகின்றன. தேர்தல் காலங்களில் இது பளிச்சென்று வெளிப்படுகிறது.

குறிப்பிட்ட சாதியினர் மதிக்கும் ஒரு தலைவருக்கு மரியாதை செலுத்துவது, பழம்பெருமை பேசும் அவர்களுடைய தொன்மக் கதைகளை அங்கீகரிப்பது, வெளிப்படையாகச் சாதிச் சங்கங்களுடன் கைகோத்துச் செயல்படுவது போன்றவை அவற்றில் சில. தேவைப்பட்டால் சாதியக் கலவரங்களை மூட்டிவிடவும் வளர்த்தெடுக்கவும்கூடச் சில கட்சிகள் தயங்குவதில்லை.

சாதியில் அரசியலும் அரசியலில் சாதியும் கலந்திருப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது. அது ஒரு தடைக்கல். அதனை அகற்றாமல் நாம் ஓரடிகூட முன்னோக்கி எடுத்து வைக்க முடியாது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய அடிப்படை மனித லட்சியங்களுக்கு எதிரானது சாதியமைப்பு என்கிறார் அம்பேத்கர்.

சாதி ஒழிப்பு என்பது சாதி அரசியலை ஒழிப்பதில் இருந்தே தொடங்குகிறது. வலுவான பல சக்திகளாலும் சிந்தனையாளர்களாலும்கூட முடியாத காரியமல்லவா இது என்று மலைக்க வேண்டாம். தனி நபர்களைக் காட்டிலும் சமூகம் பலமானது. தவிரவும், சாதி என்பது ஒரு சமூகக் கிருமி. அதைச் சமூகம்தான் ஒன்றுதிரண்டு களைந்தாக வேண்டும். அதற்கு தேர்தலைவிடப் பொருத்தமான ஒரு தருணம் இருக்க முடியாது.

- மருதன், எழுத்தாளர். தொடர்புக்கு : marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x