Last Updated : 03 Jul, 2017 09:16 AM

 

Published : 03 Jul 2017 09:16 AM
Last Updated : 03 Jul 2017 09:16 AM

குறைந்தபட்ச ஆதரவு விலையின் உண்மை நிலை என்ன?

நியாயமான விலை கிடைக்காததால் எரிச்சலடைந்த விவசாயிகள் காய்கறி, பால் போன்ற வேளாண் விளைபொருட்களைச் சாலைகளில் கொட்டுவது சமீப காலமாக தொடர்நிகழ்வாக இருக்கிறது. நம்முடைய விவசாயிகளின் கோரிக்கைகள்தான் என்ன? அவர்கள் தங்களது விளைச்சலுக்கு நியாயமான விலையைக் கேட்கிறார்கள், சிறந்த சந்தை வாய்ப்புகளைக் கேட்கிறார்கள், நிறுவன கடன் வசதிகள், பாசனம், தரமான விதைகள், பூச்சிக்கொல்லிகள், அதிக விளைச்சலின்போது கொள்முதல் வாய்ப்புகள் ஆகியவற்றை எதிர்பார்க்கிறார்கள். இயற்கைப் பேரிடர்களின்போது சமூகப் பாதுகாப்பு தொடர்புகளை வேண்டுகிறார்கள். இவையெல்லாம் விவசாயிகள் தொடர்ந்து வேளாண் உற்பத்தியில் ஈடுபடுவதற்கு அவசியமான இடுபொருட்களும் சேவைகளும்தான்.

குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவதால் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியுமா? சில விமர்சகர்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவது உணவுப் பணவீக்கத்துக்கு இட்டுச் செல்லும் என்று வாதிடுகிறார்கள். அதேநேரத்தில், மற்றவர்கள் இது விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கச் செய்யும் என்கிறார்கள். இந்த இரண்டு வாதங்களுமே குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது லாபகரமான விலை என்ற தவறான எண்ணத்தின் அடிப்படையிலானவை. உண்மையில், அது காப்பீட்டு விலை, ஒவ்வொரு வகைக்குமான வழிகாட்டு விலை. மேலும், பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகள் அப்படியொன்று இருப்பதையே அறிந்திருக்கவில்லை.

கடன் சுமைக்குக் காரணம்

மத்திய அரசு, 23 பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கிறது என்றாலும், அவ்விலையானது அரிசியும் கோதுமையும் கொள்முதல் செய்யும்போது மட்டுமே பின்பற்றப்படுகிறது. அதுவும் மிகச்சில மாநிலங்களில் மட்டுமே. பஞ்சாப், ஹரியாணா மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்று கொள்முதல் நடக்கும் மாநிலங்களில்தான் அவ்விலையைப் பற்றி அறிந்திருக்கிறார்கள். தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அமைப்பு மேற்கொண்ட விவசாயக் குடும்பங்களைப் பற்றிய நிலை மதிப்பீட்டுக் கணக்காய்வு - 2013ன் படி, நெல் மற்றும் கோதுமையின் குறைந்தபட்ச ஆதரவு விலையைக்கூட மூன்றிலொரு பங்குக்கும் குறைவாகவே விவசாயிகள் அறிந்துவைத்திருக்கிறார்கள். மற்ற பயிர்களுக்கான ஆதரவு விலையைப் பற்றிய விழிப்புணர்வு குறிப்பிடத்தக்க வகையில் இல்லை. மேலும், விளைச்சலில் கணிசமான பங்கு உள்ளூர் தனியார் வியாபாரிகளிடமும் வசதியற்ற ஏழை விவசாயிகளுக்கு இடுபொருட்களை விற்பவர்களிடமும்தான் விற்கப்படுகிறது. குறுவிவசாயிகள் அவர்களது விளைபொருட்களைக் கடன் கொடுத்த வியாபாரிகளிடமே விற்பனை செய்ய வேண்டியிருக்கிறது.

2004-ல் தொடங்கி, அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் விவசாயத் துறைக்கு பயிர்க் கடன்களுக்காக பட்ஜெட்டில் அதிகமாக ஒதுக்கீடு செய்து, நிறுவனக் கடன் வசதிகளை அதிகரிக்கச் செய்திருப்பதாகக் கூறுகின்றன. தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு விவரங்களின்படி, 40%க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்னமும் நிறுவனம் சாராத கடன்களையே சார்ந்திருக்கிறார்கள். அவ்வாறு கடன் கொடுப்பவர்கள் வட்டிக்குக் கடன் கொடுக்கும் வியாபாரிகளாகவும் இடுபொருட்கள் விற்பனையாளர்களாகவுமே இருக்கிறார்கள்.

மேலும், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள கடன் அளிப்பு விவரங்கள் பற்றிய ஆய்வில், விவசாயத் துறைக்கு அளிக்கப்பட்டுள்ள மொத்தக் கடன்களில், மறைமுகக் கடன்களின் பங்கு கடந்த காலங்களில் கணிசமான அளவுக்கு அதிகரித்திருக்கிறது. அதேநேரத்தில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் நேரடிக் கடன்கள் மிகவும் குறைந்திருக்கின்றன. பரந்த அளவில் பார்க்கும்போது, வேளாண் துறைக்குக் கடன் வசதிகள் அதிகரித்திருப்பதாகத் தோன்றலாம். எனினும், வேளாண் வணிக நிறுவனங்களுக்கே அவை வழங்கப்பட்டதே தவிர, விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கப்படவில்லை. எனவே சிறு, குறு விவசாயிகள் தொடர்ந்து வியாபாரிகளையும், இடுபொருள் விற்பனையாளர்களையுமே நம்பியிருக்கிறார்கள்.

பயிர்ச் சாகுபடியின் அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் நிலவும் பிராந்தியப் பாகுபாடுகள் மட்டுமின்றி, அரசு கொள்முதல் நடவடிக்கைகள், நிறுவனக் கடன்வசதிகள் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

குறைந்தபட்ச ஆதரவு விலையைச் சிறிதளவு உயர்த்துவதால்மட்டும், நாட்டிலுள்ள பெரும்பாலான விவசாயிகள் பயன்பெற்றுவிட முடியாது. ஆக மொத்தத்தில், விவசாயிகள் மனசாட்சியற்ற வியாபாரிகளின் கருணையை எதிர்பார்த்து அவர்கள் என்ன விலை சொல்கிறார்களோ அதற்கு உடன்படுகிறார்கள், அல்லது அதற்கு எதிர்வினையாக ஒட்டுமொத்த விளைச்சலையும் தீயிட்டு அழித்தோ, சாலைகளில் கொட்டியோ தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள்.

2004-05 தொடங்கி 2013-14 வரையிலான காலக் கட்டத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலையானது குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்திருந்தாலும், பெரும் பாலான தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளின் சாகுபடியிலிருந்து கிடைக்கும் வருமானம் குறைந்திருக்கிறது என்பது வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் வெளியிட்ட தகவல்களிலிருந்து தெரியவருகிறது.

வருமானம் என்பது பெயரளவில்தான்

நெல் சாகுபடியைப் பொறுத்தவரையில், அதிகளவில் நெல் விளையும் 18 மாநிலங்களில், 5 மாநிலங்களில் நிகர வருமானம் குறைந்துள்ளது, 6 மாநிலங்களில் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது, 7 மாநிலங்களில் மிகச்சிறிய அளவில் மட்டுமே அதிகரித்துள்ளது. வேதியுரங்களின் விலை உயர்வு, பிரச்சினையை மேலும் கடுமையாக்கியிருக்கிறது: 1991-92க்கும் 2013-14க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் யூரியா விலை 69% அதிகரித்துள்ளது. டிஏபி (டைஅம்மோனியம் பாஸ்பேட்) மற்றும் பொட்டாஷ் ஆகியவற்றின் விலை முறையே 300%, 600% அதிகரித்துள்ளது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட கொள்கைத் திட்டங்கள், ஏற்கெனவே தொந்தரவுக்கு ஆளாகியிருக்கும் விவசாயிகளுக்கு மென்மேலும் துயரங்களை அளிக்கக்கூடியதாகவே அமைந்துள்ளன. விவசாயம் மேம்படுத்தப்பட வேண்டிய இச்சூழலில், பாரம்பரிய விவசாய முறைகளை ஊக்கப்படுத்துவது, பல ஆண்டுகளுக்கு முன்பிருந்த அதே நிலைக்குத்தான் இட்டுச் செல்லும். தற்போதுள்ள பெரும்பாலான நவீனப் பயிர் வகைகள், பாரம்பரிய விவசாய முறைகளுக்கு ஏற்றவையாக இல்லை. எனவே, விளைச்சலும் வருமானமும் குறைந்துவிடுகிறது.

மேலும், தேவையான அளவுக்கு இடுபொருட்களைத் தயாரிப்பதற்கான வசதிகளும் இன்னமும் மேம்படவில்லை. நினைவுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே கால்நடை வளர்ப்பு விவசாயத்தின் துணைச் செயல்பாடாகப் பின்பற்றப்பட்டுவருகிறது. வறட்சிக் காலங்களின்போதும் சாகுபடி பொய்க்கும்போதும் கால்நடைகள்தான் விவசாயிகளைத் தாங்கிப் பிடித்துக்கொள்கின்றன. கால்நடைச் சந்தைகள் பற்றிய புதிய விதிமுறைகள், ஏழை விவசாயிகளையும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர் களையும் இக்கட்டான நிலைக்கு ஆளாக்கிவிடும்.

- ஏழுமலை கண்ணன், புது டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர்

© ‘தி இந்து’ ஆங்கிலம், சுருக்கமாகத் தமிழில்: புவி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x