Published : 16 May 2016 07:38 AM
Last Updated : 16 May 2016 07:38 AM

என்னய்யா இது, கொரளி வித்த மாதிரி இருக்கு?!

‘ஒன் தேர்தல் அறிக்கை பெருசா, என் அறிக்கை பெருசா?’ங்கிற சண்டையெல்லாம் முடிஞ்சி, இப்ப அடுத்த சுத்து போட்டி நடந்துக்கிட்டு இருக்கு. காசு, பணம், துட்டு, மணின்னு மானாவாரியா வாரி இறைச்சிட்டானுவ. எதிர்க்கட்சிக்காரன் பூராம் அசந்துபோய்ப் பாக்கான். “எலே.. அதெப்பிடிப் பணம் குடுத்தானுவ.. ராத்திரி 11 மணி வரைக்கும் பிள்ளையார் கோயில் திண்ணையிலதான உட்காந்திருந்தோம். ஊர் உறங்குனப் பெறவுதான நாம தூங்கப்போனோம். எழவு.. எப்பப் பணம் குடுத்துருப்பானுவ?” என்று.

தவசி படத்துல ஊஞ்சலாடிக்கிட்டே விஜயகாந்த் வாழைப்பழத் தோலை வீசியெறிய.. அது எந்தப் பக்கம் போய் விழுந்துச்சின்னு குழம்பி, பேச வந்ததையே மறந்துபோகும் வடிவேலு நிலைமைதான் எதிர்க்கட்சிக்காரங்களுக்கு.

“சார், ஏதோ பணம் குடுக்கிறாங்கன்னு புகார் பண்ணுனீங்களே, யாரு?”ன்னு போலீஸாரே நேரில் வந்து கேட்டாக்கூட, “போயா பணமே குடுக்கல.. தமிழ்நாட்ல தேர்தலே நடக்கல”ன்னு துண்டை உதறித் தோள்ல போடுற நிலைமைக்கு ஆளாகிட்டாங்க எதிர்க்கட்சிக்காரங்க.

மதுரை மேற்குத் தொகுதியில, ஒரு கட்சி ஆட்க கடைசிக் கட்ட பிரச்சாரத்துக்காக வீதியில நடந்தப்ப பொம்பளைங்க ஆர்வமா வந்து எட்டிப்பாத்தாங்களாம். இவங்க ஓட்டுக்கேட்க, அவங்களோ கையவே பாத்திருக்காங்க. தர்மசங்கடத்தோட இவங்க நகரப்பார்க்க, அந்தப் பொம்பளைங்க வாய்விட்டே கேட்டுப்புட்டாங்களாம், “காசு கொண்டுவரலியா?”ன்னு.

“இல்லம்மா, ரெண்டு கட்சிக்காரங்களும் குடுப்பாங்க. அதை வாங்கிட்டு எங்களுக்கு ஓட்டுப் போட்டுருங்க”ன்னு ஒரு சிவப்புத் துண்டு சொல்ல, “நல்ல கதையால்ல இருக்கு’’ என்றவாறே உள்ளே போயிட்டாங்க அந்தப் பொம்பளைங்க.

வெற்றிக்கான மந்திரம்

தமிழ்நாட்ல எப்படியெல்லாம் பணப் பட்டுவாடா நடந்துச்சின்னு துல்லியமா சொன்னாரு வேலுச்சாமி. “ஓட்டுக்குத் துட்டு குடுக்கிறதுக்கான பூர்வாங்க வேலைய ஆறு மாசத்துக்கு முன்னாடியே கட்சிக்காரங்க தொடங்கிட்டாங்க. 50 வாக்காளர்களுக்கு ஒரு ஆளுன்னு வாக்காளர் பட்டியலப் பிரிச்சி, வெவ்வேற ஆளுககிட்ட ஒப்படைச்சிருக்காங்க. அந்தப் பட்டியல்கள்ல ஒவ்வொரு வாக்காளரோட பேரு, அட்ரஸ், எந்தக் கட்சிக்காரரு, செல்போன் நம்பர்னு முழு சாதகமே இருக்கு. அந்த லிஸ்ட்டை கையில வெச்சுக்கிட்டு, எதிர்க் கட்சிக்காரனை மட்டும் விட்டுட்டு கட்சி ஆதரவாளர்க, நடுநிலை வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்குறாங்க. பணம் குடுத்தவுடனே லிஸ்ட்ல பேருக்கு நேரே ‘டிக்’ அடிச்சிடுறாங்க. இன்னொரு ஆளு ‘டிக்’அடிச்ச பேருக்கு போன் போட்டு, பணம் கரெக்டா வந்து சேந்துச்சான்னு விசாரிக்காங்க” என்கிறார்.

பணத்தையும் குடுத்துட்டு, அது சரியா போய்ச் சேர்ந்திருச்சான்னு கிராஸ் செக் பண்ற இந்த ஃபார்முலாதான், போன நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கான தாரக மந்திரமா இருந்துச்சி. அதனால, இந்தத் தேர்தல்ல தமிழ்நாடு முழுக்க இந்த ஃபார்முலாவத்தான் யூனிஃபார்மா கடைப்பிடிக்கிறாங்க. சில இடங்கள்ல மட்டும் பணம் கொடுக்கிறதுல வேற சில சுவாரசியங்களும் நடந்திருக்கு.

பணத்துக்கு ரசீது

கோயம்புத்தூர் கட்சிக்காரங்க செம உஷாரு. பணத்தை ஆட்டையைப் போட்டுட்டா என்ன பண்றதுன்னு பணம் குடுக்கிற வீட்ல பூராம், வாக்காளர் அடையாள அட்டை ஜெராக்ஸ் நகல் ஒன்றை வாங்கிட்டு வரச் சொல்லி உத்தரவு போட்டிருக்காங்களாம். இன்னாருக்கெல்லாம் பணம் குடுத்தாச்சு, இந்தாங்க அத்தாட்சி என்று ரசீது கொடுப்பதுபோல நகலை மேலிடத்தில் கொடுக்கிறார்களாம்.

இந்த விஷயத்தை எப்படியோ மோப்பம் பிடிச்ச எதிர்க் கட்சிக்காரங்க, பணப் பட்டுவாடா செஞ்சவங்ககிட்ட இருந்து, வாக்காளர்களின் பெயர்கள் அடங்கிய நோட்டுக்களைப் பறிச்சி தேர்தல் அதிகாரிங்ககிட்ட குடுத்திருக்காங்க. “வெறும் நோட்டை வெச்சிக்கிட்டு ஒண்ணும் பண்ண முடியாதுப்போய், பணமில்லியா?”ன்னு கிளம்பிப் போயிட்டாங்க அதிகாரிங்க.

தமிழ்நாட்லயே ஓட்டுக்கு அதிகமா பணம் கொடுக்கிற மாவட்டம்னு பேர் எடுத்திருக்கிறது கரூர். அரவக்குறிச்சி தொகுதியில போட்டிபோடுற பிரதான கட்சி ஆளுக ரெண்டு பேரும் பசையுள்ள ஆளுக. அதனால வாக்காளர்களோட எதிர்பார்ப்பு கன்னாபின்னான்னு இருக்குது. இந்தப் பக்கம் ஓட்டுக்கு ஆயிரம் கொடுத்திருக்காங்க. உடனே, அந்தப் பக்கம் சார்புல ரெண்டாயிரம் கொடுத்திருக்காங்க. போட்டிக்கு இன்னொரு ரவுண்ட் பணம் கொடுக்க இவங்க தயாராக.. அதைவிட ரெண்டு மடங்கு பணத்தை இறைக்கத் தயாராச்சாம் அந்தத் தரப்பு. பிறந்தா அரவக்குறிச்சியில பிறக்கணும்னு தமிழ்நாட்டு மக்கள் ‘தவவாழ்க்கை’ மேற்கொள்ளும் காலம் சீக்கிரமே வரும்னு சொல்றாங்க.

கரூர்ல பணம் கொடுக்கிறதக் கண்டிச்சும், அதைத் தடுக்காத தேர்தல் ஆணையத்தைக் கண்டிச்சும் எதிர்க் கட்சிக்காரங்க ஆர்ப்பாட்டம் பண்ணிருக்காங்க. உடனே, 15 பேரைக் கைது பண்ணிடுச்சி காவல்துறை. அந்த 15 பேரும் பணம் கொடுத்தவங்கன்னு நினைச்சா, நீங்க ரொம்ப அப்பாவிங்க. ஆர்ப்பாட்டம் பண்ணுனவங்களத்தான் கைது பண்ணிருக்கு போலீஸ்.

மின்தடைக்கு ஏங்கும் மக்கள்

முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். போட்டியிடுகிற தேனி மாவட்டத்துல இப்பெல்லாம் அடிக்கடி மின்தடை ஏற்படுது. தேர்தல் நேரத்தில் மின்தடையா.. மக்கள் கொந்தளிச்சிருவாங்களேன்னு தோணும். அதாம் இல்ல! நம்ம தெருவுல எப்ப கரெண்ட் போகும்னு ஊரே காத்துக்கிடக்குது. ஏன்னா, மின்தடை ஏற்பட்டா துட்டு வரும்னு அனுபவத்தால புரிஞ்சிவெச்சிருக்காங்க ஜனங்க. அதனால, சில பேரு கரெண்ட் போயி ரொம்ப நேரமாச்சு, என்ன இன்னும் ஆளைக் காணோமேன்னு வீட்டு வாசல்ல நின்னுக்கிட்டு தெருவை உத்து உத்துப் பாக்காங்களாம்.

ஆம்புலன்ஸ்ல பணம், வெங்கல பாத்திரக் கடையில பணம், பலசரக்குக் கடையில பணம் என்று வைகோ சொல்லும்போது காமெடியாக இருந்திருக்கும். ஆனா, ராமநாதபுரம் மாவட்ட நிலவரத்தைப் பாத்தா, வைகோ சொன்னது ஒருவேள உண்மையா இருக்குமோன்னு யோசிக்க வெக்குது. பரமக்குடி நகராட்சி கவுன்சிலர் ஒருத்தர் வீட்டுல நடந்த ரெய்டுல, வாக்காளர்கள் பெயர் எழுதுன டோக்கன்களை கட்டுக்கட்டாகப் பறிமுதல் செஞ்சிருக்காங்க அதிகாரிங்க. அந்த டோக்கன்ல பூராம் பின்பக்கத்துல, ‘இளநீர்க் கடையில் பெற்றுக்கொள்ளவும்’னு எழுதியிருந்துச்சி. இளநி இல்ல, காசு வாங்கிக்கலாமாம்.

திண்டுக்கல் பண மழை

தேர்தல் வானிலை முன்னறிவிப்புப்படி, ‘தமிழகத்தில் கனமான பணமழை பெய்ய’வாய்ப்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் ஒண்ணு ஆத்தூர். இங்கேதான் முன்னாள் வருவாய்த் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியும், இன்றைய மின்வாரியத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் போட்டி போடுதாங்க. சும்மா.. பணம் தண்ணியா பாயுது இங்கே.

இளைய தலைமுறைதான் பணநாயகத்தைத் தடுக்க முடியும்னு எல்லாரும் சொல்றாங்க. ஆனா, இந்தத் தொகுதியில வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் பண்றதே கல்லூரி மாணவர்கள்தான். கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் சில கல்லூரி மாணவிகளைப் பிடிச்சி போலீஸ்கிட்ட ஒப்படைக்க, எதிர்காலம் கருதி அவர்கள விடுவிச்சிடுச்சி போலீஸு. இந்தப் பசங்கள பண விநியோகத்துக்குப் பயன்படுத்திய பிரமுகர் கைதான உடனேயே, அவரும் ஜாமீன் வாங்கிட்டு, மறுபடியும் தன் ‘ஜனநாயகக் கடமை’யை ஆற்றத் தொடங்கிட்டாரு.

கிராமப் பகுதிகளில் சின்னப் பசங்க, கேபிள் ஆபரேட்டர்கள், குடிநீர் கேன் போடுபவர்களைக் கொண்டு பட்டுவாடாவைக் கச்சிதமா முடிச்சுட்டாங்க. நகரங்கள்ல போலீஸையே வெச்சு வேலை நடக்குதுன்னு சொல்றாங்க பொதுஜனங்க. போலீஸ்தான் பணம் கொடுக்குதா, இல்லா போலீஸ் உடுப்பு போட்ட ஆளுக பணம் கொடுக்குதான்னு போலீஸ்தான் கண்டுபிடிக்கணும். எந்த போலீஸ்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x