Last Updated : 25 Jan, 2017 10:32 AM

 

Published : 25 Jan 2017 10:32 AM
Last Updated : 25 Jan 2017 10:32 AM

இளைஞர்களின் போராட்டம்: எப்படிப் பார்க்கிறார்கள் மொழிப் போராளிகள்?

ஜனவரி 25 மொழிப் போராட்ட நாள். 1965 போராட்டத்தின் மூலம் தமிழ் மொழியை மட்டுமின்றி, நாட்டின் பன்மைத்துவத்தையும் காத்த அன்றைய மாணவர்கள், இன்றைய (2017 ஜல்லிக்கட்டு) மாணவர் போராட்டத்தை அன்றைய பின்னணியில் எப்படிப் பார்க்கிறார்கள்?

அசன் முகமது, சென்னை.

1965 ஜனவரி 26 முதல் இந்தியாவின் ஆட்சி மற்றும் அலுவல் மொழியாக இந்தி மட்டுமே இருக்கும் என்று அப்போது குடியரசுத் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத் அறிவித்ததும், மாணவர்களிடையே போராட்டத் தீ பற்றியது. அதைத் தமிழகம் முழுவதும் பரவச் செய்வதற்காகவே, அந்த அறிவிப்புக்கு ஆதாரமாக இருந்த அரசியலமைப்புச் சட்ட நகலை எரிக்க மதுரை மாணவர்கள் தீர்மானித்தோம். அதை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்றிருந்த மதுரை தியாகராசர் கல்லூரி மாணவர்கள் கா.காளிமுத்து, நா.காமராசன் ஆகியோரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு கைதுசெய்ய முயன்றதால், இருவரும் இடைக்காட்டூரில் உள்ள எங்கள் வீட்டில் சில நாட்கள் தலைமறைவாக இருந்தார்கள்.

அப்போது எங்களை ஊக்குவிக்கவும், வழிநடத்தவும் தமிழ் அறிஞர்களும், தலைவர்களும் இருந்தார்கள். இப்போது நடந்தது தன்னெழுச்சியான போராட்டம். அரசியல் கலப்பில்லாமல், ராணுவக் கட்டுப்பாட்டோடு, ஒட்டுமொத்தத் தமிழகமும் மாணவர்களின் பின்னால் அணிவகுத்திருந்தது பாராட்டுக்குரியது. இதுபோன்ற ஒரு போராட்டத்தை இந்த 75 ஆண்டுகளில் நான் பார்த்ததேயில்லை. அகிம்சை வழியில் போராடி ஐந்தே நாட்களில் அரசைப் பணிய வைத்திருக்கிறார்கள் மாணவர்கள்.

அதேநேரத்தில், மத்திய - மாநில அரசுகள் இந்தப் பிரச்சினையை இவ்வளவு தூரம் பெரிதாக்கியிருக்க வேண்டியதில்லை. 2009 அவசரச் சட்டத்துக்கும், இன்றைய அவசரச் சட்டத்துக்கும் சில அடிப்படை வேறுபாடுகள் இருக்கின்றன என்பதைப் புரிந்துகொண்டு, மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டிருப்பது வரவேற்புக்குரியது. வாக்குறுதி பொய்யெனத் தெரிந்தால், மீண்டும் மாணவர்கள் போராடலாம்.

பா.செயப்பிரகாசம், புதுச்சேரி.

மதுரையில் ஊர்வலம் சென்ற மாணவர்களைக் காங்கிரஸார் அரிவாளால் வெட்டிய பிறகுதான், இந்தி எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்தது. காங்கிரஸ் ஆட்சிக்கே முடிவுகட்டிய போராட்டம் அது. இப்போதும் ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டம் பற்றிப் பரவுவதற்கு மதுரை அலங்காநல்லூர்தான் காரணமாக இருந்திருக்கிறது. அன்றைய போராட்டத்தை வழிநடத்திய மாணவர்களுக்கு எதற்காக இந்தப் போராட்டம் என்ற புரிதல் வரலாற்றுபூர்வமாகவும், அறிவுபூர்வமாகவும் இருந்தது.

அரசியல் சட்டத்தை எரித்தால் போராட்டம் பரவும் என்ற திட்டத்தோடு, சட்ட எரிப்புப் போராட்டத்தில் நானும் பங்கேற்கிறேன் என்றபோது, “வேண்டாம், நாங்கள் கைதானால் போராட்டத்தைத் தொடர்ந்து வழிநடத்த தலைமை தேவை” என்றார்கள் சக மாணவர்களான கா.காளிமுத்துவும், நா.காமராசனும். அவ்வளவு புத்திசாலித்தனமாகவும், இலக்கோடும் முன்னெடுக்கப்பட்ட அந்தப் போராட்டம், தமிழ்த் தேசியப் போராட்டமாக வளர்ந்திருக்க வேண்டும். ஆனால், ஏமாந்துவிட்டோம்.

ஆனால், இன்றைய மாணவர்களிடம் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியபோது, வாய்மொழி வாக்குறுதியை ஏற்க மாட்டோம், முதல்வரே எழுத்துபூர்வமாகத் தரட்டும் என்று கூறியது பாராட்டுக்குரிய முடிவு. என்னைப் பொறுத்தவரையில், ஜல்லிக்கட்டுப் போராட்டம் என்பது ஒரு அடையாளம்தான். அது வாடிவாசல் எல்லைகளைத் தாண்டி பண்பாட்டு மீட்பு, பன்னாட்டு நிறுவன எதிர்ப்பு, பறிபோன வாழ்வியல் முறைகள் மீட்பு என்று பல பரிமாணங்கள் கொண்டதாக மாறிவிட்டது. எந்தப் புரட்சியும் நேரம் குறித்து வைத்துக்கொண்டு உருவாவதில்லை. வரலாற்றின் போக்கில் வரும். அதனை எப்படிப் பயன்படுத்திக்கொள்கிறோம் என்பது நம் கையில்தான் இருக்கிறது!

புலவர் வீராச்சாமி, பரமக்குடி.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கும், இன்றைய மாணவர் போராட்டத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. அன்றிருந்த ஒரே மின் ஊடகமான அரசு வானொலியில் போராட்டச் செய்திகளை ஒலிபரப்பத் தடை போட்டார்கள். எங்களுக்குள் இருந்த ஒரே தொடர்பு பத்திரிகைகள்தான். சென்னை, மதுரையில் நிறைவேற்றப்பட்ட மாணவர் தீர்மானங்கள் பத்திரிகைகள் வழியாகவே மாணவர்களைச் சென்றடைந்தன. அதுவும் பிறகு கட்டுப்படுத்தப்பட்டது. வெளியூர் மாணவர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதங்கள்கூட தணிக்கையில் சிக்கின.

இன்றைக்குக் கைபேசிகளும், சமூக வலைதளங்களும் மாணவர்களை ஒன்றுதிரட்டுவதில் பேருதவி செய்திருக்கின்றன. அன்று பெண்கள் வெளிப்படையாக வரவில்லை. இன்று ஏராளமான பெண்கள் திரண்டு வந்திருக்கிறார்கள். அன்று தெருவில் இறங்கிப் போராடியதால் பொதுமக்களுக்குப் பாதிப்பு என்று கூறிக்கொண்டு, காவல் துறையும் அரசும் கடுமையான நிலைப்பாட்டை எடுத்தன. இன்று குறிப்பிட்ட மைதானங்களை நோக்கிச் சென்றதன் மூலம், காவல் துறையையும் அரசையும் ஒரு முட்டுச்சந்தில் நிறுத்திவிட்டார்கள் இளைஞர்கள்.

‘ஜல்லிக்கட்டுக்காக ஒன்று சேர்ந்த மாணவர்கள் அதற்காகப் போராடியிருக்கலாம், இதற்காகப் போராடியிருக்கலாம்’ என்று கூறுவதை ஏற்க மாட்டேன். மாணவர்கள் ஒன்று சேர்ந்ததே மிகப் பெரிய வெற்றிதான். காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு, மீத்தேன் போன்ற பிரச்சினைகளில் மத்திய அரசால் வஞ்சிக்கப்பட்டவர்களின் அடக்கப்பட்ட உணர்வுதான் ‘தமிழன்டா’என்று கிளர்ந்தெழுந்திருக்கிறது.

வி.மாறன், மதுரை.

இத்தனை லட்சம் பேர், இவ்வளவு திரட்சியாக துளி வன்முறையைக்கூடக் கையில் எடுக்காமல் போராடினார்கள் என்பதே வியப்பளிக்கக் கூடியது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றவர்களில் பெரும்பாலான மாணவர்கள் வசதியற்றவர்கள். அவர்களது அன்றாட வாழ்க்கைக்கும், போராட்ட வாழ்க்கைக்கும் அதிகம் வித்தியாசம் கிடையாது. ஆனால், இன்றைய நிலவரம் வேறு. பெரும்பாலான இளைஞர்கள் வீட்டுக்கு ஒற்றைப் பிள்ளைகள். அந்தக் காலத்தில் கிடைத்த மாத ஊதியம் இவர்களின் ஒருநாள் பாக்கெட் மணிக்குச் சமம்.

இவ்வளவு சுகமாக வாழும் பிள்ளைகள் உணவு இல்லாமல், தண்ணீர் இல்லாமல் போராடுகிறார்கள். உணவு, தண்ணீர் கூட ஓரளவுக்குக் கிடைத்துவிடுகிறது. இயற்கை உபாதைகளைக் கூடக் கட்டுப்படுத்திக்கொண்டு அவர்கள் போராடியிருக்கிறார்கள். மாணவர்களுக்கு ஆதரவாகக் குடும்பப் பெண்களும், குழந்தைகளும், ஐ.டி. ஊழியர்களும் கூடக் களமிறங்கியது பிரம்மிப்பாக இருக்கிறது. எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண் ஒருவர், வளைகாப்பு நடத்திய கண்ணாடி வளையல்களோடு போராட்டக்களத்தில் நின்றார்.

தமிழ்க் கருவும் போராடியதைப் பார்த்தபோது உடல் புல்லரித்தது. எவ்வளவு எளிமையாகத் தொடங்கி, வலிமையாக வளர்ந்ததோ, அதேபோல அற்புதமாக முடிந்திருக்கிறது மாணவர் போராட்டம். எந்தச் சட்டத்தை அவர்கள் கேட்டார்களோ, அந்தச் சட்டத்தைப் பற்றி ஓய்வுபெற்ற நீதிபதி பரந்தாமன் வாசித்துக்காட்டியதைத் தொடர்ந்து போராட்டத்தை முடித்துக்கொண்டதைப் பாராட்டுகிறேன். எதிர்காலத் தமிழகம் நம்பிக்கையூட்டுவதாக இருக்கிறது.

ஐ.ஜெயராமன், மதுரை.

எங்கள் போராட்டம், மொழி உணர்வை முன்வைத்து நடத்தப்பட்டது. இன்றைய போராட்டத்தை மேலோட்டமாகப் பார்த்தால், சாதாரணமாகத் தெரியலாம். ஆனால், போராட்டத்தின் அடிப்படை தமிழ்ப் பண்பாட்டைக் காப்பதாக உள்ளது. இன்றைய தலைமுறைக்குத் தமிழ் மீது பாசமே இல்லையோ என்று கலங்கி நின்ற நேரத்தில், எதிர்பார்க்காத வேகத்தோடு அந்த உணர்வு கிளர்ந்தெழுந்திருப்பது சிலிர்க்க வைக்கிறது.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை அடக்க முயல்வது, கொச்சைப்படுத்துவது என்று காங்கிரஸும், மாணவர்களுக்கு ஆதரவாக திமுகவும் வந்ததால் எங்கள் போராட்டத்தில் அரசியல் கலந்துவிட்டது. இப்போதும் அதற்கான வாய்ப்புகள் நிறைய இருந்தும், துளிகூட கட்சி, அரசியல் கலப்பின்றி கடைசிவரை போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்த விதம் பாராட்டுக்குரியது. இந்த உணர்வும், ஒற்றுமையும் தமிழர் உரிமைப் பிரச்சினைகள் அனைத்திலும் எதிரொலிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

அதேநேரத்தில், இப்போராட்டத்தை முடிக்க அரசு இவ்வளவு அவசரம் காட்டியிருக்கக் கூடாது. சட்டமே 23-ம்தேதி மாலையில்தான் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அமைதியாகப் போராடிக்கொண்டு இருந்தவர்களைக் காலையிலேயே விரட்டாமல் இருந்திருந்தால் போராட்டம் சுமுகமாக முடிந்திருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x