Published : 28 Jun 2016 09:30 AM
Last Updated : 28 Jun 2016 09:30 AM

இனி புற்றுசெல்களை எடிட் செய்யலாம்!

நமது உடலில் ‘டி’ செல்கள் எனும் நோய் எதிர்ப்புச் செல்கள் உள்னன. அவை நமது உடலைத் தாக்கும் கிருமிகளை இனம் கண்டு அழித்துவிடும். புற்றுநோயாளிகளின் புற்றுசெல்களையும் கிருமிகளைப் போல ‘டி’ செல்களால் தனித்து இனம் காண முடிந்தால், நமது உடலின் நோய்த்தடுப்பு அமைப்பை வைத்தே புற்றுசெல்களை அழித்து, புற்றுநோயை வெல்லலாம் என்று விஞ்ஞானிகள் முயல்கின்றனர்.

இதைச் செய்ய முதலில் புற்றுசெல்லில் மட்டும் காணப்படும் மரபணு ‘வாக்கிய’த்தைத் தேர்வு செய்ய வேண்டும். அந்த ‘வாக்கிய’த்தை இனம் காணும் புரத மூலக்கூறை வடிவமைத்து ‘டி’ செல்களுக்குள்ளே புகுத்த வேண்டும். அதன் மூலம் புற்றுசெல்களை ‘டி’ செல்கள் இனம் காணும். அதன் பிறகு, புற்றுசெல்களின் டி.என்.ஏ.வை (தமிழில் கரு அமிலம் என்கிறார்கள்) வெட்டும். வெட்டப்பட்ட புற்றுசெல்கள் இறந்துபோகும்.

இந்த முறையில் மூன்று முறை செல்கள் ‘எடிட்’ செய்யப்படுகின்றன. புற்றுசெல்களை இனம் காணும் புரத மூலக்கூறை ‘டி’ செல்லில் புகுத்துவது ஒன்று. புற்றுசெல்களும் நமது உடலின் செல்கள்தான் என்பதால் அதனை அழிக்க மறுக்கும் ‘டி’ செல்களின் புரதத்தை நீக்குவது இரண்டாவது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட அந்த ‘டி’ செல்களைப் புற்றுசெல்கள் அழிக்காமல் பாதுகாப்பது மூன்றாவது. இந்த மூன்று ‘எடிட்டிங்’குகளுக்குப் பிறகு ‘டி’ செல்கள் புற்றுநோயை ஒழிக்கும் ஆற்றலைப் பெறும்.

கணினியில் ‘தேடு’ எனும் ஆணையைக் கொடுக் கிறோம் அல்லவா? பல ஆயிரம் எழுத்துகளைத் தேடி அது நமக்குத் தேவையான ‘வாக்கிய’த்தில் போய் நிற்கும். ‘நீக்கு’ ஆணை எனும் கத்திரிக்கோலைப் பயன்படுத்தி அதை அழிக்கலாம். அதைப் போலத்தான் இந்த சிகிச்சை முறையும்.

மூன்று பில்லியன் ‘எழுத்து’க்கள் கொண்டது ஒரு டி.என்.ஏ. தொடர். அதில் தேவையானதைத் தேடி வெட்டுவதற்கு Cas9 எனும் புரத மூலக்கூறை ‘தேடு’ ஆணை எனும் கத்திரியைப் போலப் பயன்படுத்த முயல்கிறார்கள். இதற்கு கிறிஸ்பர் (CRISPR Cas9) மரபணு எடிட்டிங் தொழில்நுட்பம் என்று பெயர் வைத்துள்ளனர். ‘Clustered Regularly Interspaced Short Palindromic Repeats’ என்பதன் சுருக்கமே கிறிஸ்பர்.

தயிர் உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனம் தனது ஆய்வகத்தில் தயிர் தயாராகும் நடைமுறையை விரிவாக ஆராய்வது வழக்கம். அப்போது ஒரு குறிப்பிட்ட வகை பாக்டீரியா கிருமிகள் நோய்களை உருவாக்கும் வைரஸ் கிருமிகளை எதிர்த்துப் போராடி நாசம் செய்வதைத் தற்செயலாக 2007-ல் கண்டறிந்தது. அந்த அனுபவத்துக்கு தற்போது விஞ்ஞானிகள் வைத்துள்ள பெயர்தான் கிறிஸ்பர்.

குணமாக வாய்ப்பே இல்லாமல், முற்றிய நிலையில் உள்ள 18 புற்றுநோயாளிகளிடம் பரிசோதித்துப் பார்ப்பதற்கான அனுமதியை அமெரிக்காவின் தேசிய மருத்துவ ஆய்வு நிறுவனம் ஜூன் 21 அன்று அனுமதி கொடுத்துள்ளது.

தொடர்புக்கு: த.வி. வெங்கடேஸ்வரன், அறிவியல் எழுத்தாளர் மற்றும் மத்திய அரசின் விக்யான் பிரச்சார் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x