அரபி: ஓர் அறிமுகம்

அரபி நெடுங்கணக்கு

Published : 18 Dec 2013 00:00 IST
Updated : 06 Jun 2017 16:27 IST

‘அரபா’ என்ற சொல்லுக்குத் தெளிவாகப் பேசுதல் என்று பொருள். அரபு நாட்டில் வாழ்ந்த மக்கள், தாங்கள் தெளிவாகப் பேசத் தெரிந்தவர்கள் என்ற அடிப்படையில், தங்களின் மொழியை ‘அரபி’ என்று கூறலாயினர். இன்று 21 நாடுகளின் ஆட்சி மொழி; ஐ.நா-வின் அதிகாரபூர்வ மொழிகளுள் ஒன்று; 183 மில்லியன் மக்களின் தாய்மொழி அரபி. மேற்கே வட ஆப்பிரிக்காவிலிருந்து கிழக்கே ஓமன் வரையும், வடக்கே சிரியாவிலிருந்து தெற்கே சூடான் வரையும் அரபியின் எல்லை விரிந்திருக்கிறது.

“நாகரிக உலகின் மத்திய காலகட்டத்தில் பல நூற்றாண்டுகள் அரபி ஒரு கற்பிக்கும் மொழியாக, கலாச்சார மொழியாக, முற்போக்குக் கருத்துகளை முன்னிறுத்திய மொழியாக விளங்கியது. 9-ம் நூற்றாண்டு முதல் 12-ம் நூற்றாண்டு வரை தத்துவம், மருத்துவம், வானியல் மற்றும் புவியியல்பற்றிய அநேக படைப்புகள் அரபியில் படைக்கப்பட்டதுபோல் வேறு மொழிகளில் படைக்கப்படவில்லை” என்கிறார் கீழ்த்திசை மொழியியல் வல்லுநர் பிலிஃப் கே. ஹிட்டி.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளை நாம் எப்படித் திராவிட மொழிகள் என்று அழைக்கிறோமோ அப்படி அரபி ஒரு ‘ஸாமிய’ மொழி. நூஹ் நபியின் மூத்த மகன் ஸாம். ஸாமின் மக்களும் வழித்தோன்றல்களும் பேசிய மொழிகள் ‘ஸாமிய இன மொழிகள்’ என இன்று அழைக்கப்படுகின்றன. இம்மக்கள் பல்வேறு காலங்களில் பாபிலோனியா, சிரியா, பாலஸ்தீனம், எகிப்து, எத்தியோப்பியா ஆகிய நாடுகளுக்குப் பிரிந்து சென்றனர். ஹீப்ரு, அரமைக், உகாரிடிக் முதலிய மொழிகள் ஸாமிய இனத்தின் பிற மொழிகள்.

நமது தமிழைப் போலவே அரபியும் ஒரு செம்மொழி. அதன் சொல்வளம் வியக்கத் தக்கது. ஆண்டு என்பதற்கு 24 சொற்களும் ஒளி என்பதற்கு 21 சொற்களும் இருப்பதைப் போல இருள் என்பதற்கு 52 சொற்களும் கதிரவன் என்பதற்கு 29 சொற்களும் நீர் என்பதற்கு 170 சொற்களும் ஒட்டகம், வாள் போன்ற வார்த்தைகளைக் குறிக்க 1,000 சொற்களையும் கொண்டுள்ளது அரபி.

அரபிக்கும் தமிழுக்குமான உறவு இன்றைக்கு நெருக்கமானது. தமிழ்ச் சொற்களோடு இரண்டறக் கலந்த சொற்களாகிவிட்டன அரபிச் சொற்கள். அமல், இனாம், கஜானா, ஜாமின், கைதி, ஜில்லா, தாலுக்கா, தாசில்தார், நகல், மகஜர், மசோதா, மராமத்து, ஜப்தி, வசூல், தகராறு, பாக்கி, வாரிசு, தாக்கல், மைதானம், கடுதாசி, ரசீது, மாமூல், வகையறா எனத் தமிழில் கலந்துள்ள அரபிச் சொற்கள் தமிழாகவே மாறிவிட்டன.

மொழிகள் கொடுத்துப் பெறுகின்றன; பெற்றுக் கொடுக்கின்றன!

தொடர்புக்கு: arabic.zubair@gmail.com

Keywords
More In
This article is closed for comments.
Please Email the Editor