Published : 16 Sep 2016 11:32 AM
Last Updated : 16 Sep 2016 11:32 AM

அன்பு வாசக நெஞ்சங்களே...

நீங்கள் உச்சி முகர்ந்து, சீராட்டி வளர்த்துவரும் ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் இன்று நான்காம் வயதில் அடியெடுத்து வைக்கிறது.

ஒவ்வொரு நாளும் நாளிதழை எப்படி வாசகர்களுடன் மேலும் நெருக்கமாக்குவது, வாசிப்பு அனுபவத்தை எப்படி மேலும் எளிதாக்குவது, உள்ளடக்கத்தை எப்படி மேலும் மேலும் மேம்படுத்துவது என்று ஆசிரியர் குழுவினர் நடத்திக்கொண்டிருக்கும் ஆலோசனைக் கூட்ட நீள்வட்ட மேஜையில் நிரம்பி வழிகின்றன - உங்களுடைய கடிதங்கள், மின்னஞ்சல்கள், ‘உங்கள் குரல்’ பதிவுகள் வடிவில் வந்திருக்கும் உங்களுடைய ஆலோசனைகள். அத்தனையையும் கவனத்தில் எடுத்துக்கொண்டிருக்கிறோம்.

பளபள சரிகை வேலைப்பாட்டுடன் வண்ணத்துப் பூச்சிகள் சிறகடிக்க வாழ்த்துச் செய்திகளோடு முதல் வாழ்த்து அட்டையை அனுப்பிவைத்தது யார் தெரியுமா? புதுச்சேரி மூலக்குளம் அமிர்தா வித்யாலயம் பள்ளியின் நான்காம் வகுப்பு மாணவி கே. யஷ்வந்திகா!

வெறும் மூன்றே ஆண்டுகளில் தமிழ்ச் சமூகத்தின் எல்லா வயதினரும் தங்கள் இதயத்தில் கொடுத்திருக்கும் இந்த உயரிய இடம்தான் எங்கள் முன் நிற்கும் சுவாரஸ்யமான சவால்.

உங்கள் சமீபத்திய எண்ணங்கள் புதிய வண்ணங்களாக நாளிதழில் ஆங்காங்கே பளிச்சிடுவதை இன்று முதலாகவே பார்ப்பீர்கள். சொல்லப்போனால், ‘ஆரோக்கியமான மாற்றம்... அசத்தலான முன்னேற்றம்’ என்ற முழக்கத்தோடு, கடந்த ஞாயிறு அன்று புது வடிவில் வெளியான ‘பெண் இன்று’ இணைப்பிதழில் இருந்தே, நான்காம் ஆண்டுக்கான நம்முடைய புதிய மாற்றங்கள் தொடங்கிவிட்டன.

‘சர்வதேச, தேசிய செய்திகளில் எப்போதும் ஒரு படி முன்னே நிற்கும் ‘தி இந்து’, உள்ளூர் செய்திகளுக்கு மேலும் முக்கியத்துவம் தரத்தக்க வகையில், புதிய பதிப்புகளைத் தொடங்க வேண்டும்; செய்தியாளர்கள் படையை அதிகரிக்க வேண்டும்’ என்பது வாசகர்கள் தொடர்ந்து வலியுறுத்திவந்த ஆலோசனை. சமீபத்திய பதிப்புகளான காஞ்சிபுரம், தருமபுரி, தஞ்சாவூர், ராமநாதபுரம் மூலம் மூன்றாண்டு நிறைவுக்குள்ளேயே ஒரு டஜன் பதிப்புகள் எனும் நிலையை எட்டியிருக்கிறோம்.

வேர்கள் மேலும் பரவும்... பதியும்!

ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட ஒரு விஷயத்தைத் தேர்ந்தெடுத்து, அதை நோக்கிக் கூடுதல் கவனம் செலுத்துவது நம்முடைய இயல்பு. ‘தி இந்து’ தொடங்கப்பட்ட முதலாம் ஆண்டு - உலகின் மாபெரும் ஜனநாயக நிகழ்வான மக்களவைப் பொதுத் தேர்தலுக்குத் தயாராகிக்கொண்டிருந்தது இந்தியா. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இளைஞர்கள் பெருமளவில் வாக்களிக்கவிருந்த சூழலில், தேர்தல் ஜனநாயகத்தின் முக்கியத்துவம், நாம் கடந்துவந்த பாதை, இந்தியத் தேர்தலின் பன்மைத்துவம் ஆகியவை குறித்து இளைய சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் பணியில் நாம் ஈடுபட்டோம்.

இரண்டாம் ஆண்டில், தமிழகத்தைச் சீரழித்துக்கொண்டிருந்த மதுவுக்கு எதிராகக் களம் புகுந்தோம். கடந்த சட்டசபைத் தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளும் முன்னிறுத்தும் விவகாரமாக மதுவிலக்கு உருவெடுத்ததிலும்... தமிழக அரசு படிப்படியான மதுவிலக்கு அமலாக்கத்தை நோக்கி நகர்ந்ததிலும் ‘தி இந்து’வுக்கும் ஒரு பங்கு உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள்.

மூன்றாவது ஆண்டில் நாம் கையிலெடுத்தது - குடிநீர் மேலாண்மை. தமிழகத் தலைநகரம் சென்னை நூறாண்டு காணாத மழை வெள்ளத்தில் சிக்கிச் சின்னாபின்னமான நிலையில், தமிழக நீர்நிலைகளின் சமகாலத்திய அவலச் சூழலை அம்பலப்படுத்தி மாற்றத்துக்கான அறைகூவல் விடுத்தது ‘தி இந்து’.

அந்த வகையில் இந்த ஆண்டு நாம் கையில் எடுக்கப்போகும் மக்கள் பிரச்சினை என்ன? பெரும்பான்மை வாசகர்கள் கை காட்டும் திசையில் கல்வித் துறை!

கற்பித்தல் என்பது, ஏதோ ஒரு வகையில் ஊடகங்களின் பணியாகவும் இருக்கிறது. கல்வி நிலையங்கள், ஒரு சட்டகத்துக்கு உட்பட்டு கல்விப் பணியாற்றுகின்றன என்றால் ஊடகங்கள் அந்த வரையறுக்கப்பட்ட சட்டகத்துக்கு வெளியில் இருந்து அந்தப் பணியை மேற்கொண்டே ஆக வேண்டும்.

இந்தப் பொறுப்பை முழுமையாக உணர்ந்திருப்பதாலேயே, வளரும் குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் பல்வேறு துறைகள் சார்ந்த அறிவார்ந்த தகவல்களை எளிய நடையில் தொடர்ந்து அளித்து வருகிறது ‘தி இந்து’ தமிழ் நாளிதழ்.

அன்றாடச் செய்திகளினூடே பெட்டிச் செய்திகளாக... இணைப்பிதழ்களில் பல்வேறு கதைகள் மற்றும் போட்டிகளாக... நடுப்பக்கத்தில் நிபுணர்களின் கட்டுரைகளாக... அறிவியல், வரலாறு, இலக்கியம் போன்றவற்றை சலிக்காத நடையில் அளித்துக் கொண்டே வருகிறோம். அதோடு, பள்ளிக் கல்வி முறை குறித்த தொடர் விவாதங்களை அரங்கேற்றி பெற்றோரையும் ஆசிரியர் சமுதாயத்தையும் அடுத்த இலக்கு நோக்கி நகர்வதற்கு தூண்டுதல் தருகிறோம்.

ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ்., அரசு மற்றும் வங்கிப் பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு நிபுணர்கள் துணையோடு நாம் அளிக்கும் வழிகாட்டுதல்களுக்கு உங்களிடமிருந்து அப்படி ஒரு வரவேற்பு!

பாடப் புத்தகங்களைத் தாண்டி உலகைக் கற்பிக்கும் புத்தகங்கள்தான் எத்தனை... எத்தனை! சென்னையைத் தாண்டி தமிழகம் எங்கும் சின்னச் சின்ன நகரங்களிலும்கூட புத்தகக் காட்சி எனும் அறிவியக்கம் பரவி நிற்பதற்கும் நம்மாலான பங்களிப்பைச் செய்து வருகிறோம். கடந்த ஆங்கிலப் புத்தாண்டின் விடியலுக்கான இரவை ‘புத்தக இரவு’ என்றே வாசக நேசர்கள் கொண்டாடிய பின்னணியில் ‘தி இந்து’வின் பங்களிப்பு முக்கியமானது.

இந்நிலையில், இந்தியக் கல்வித் துறை ஒரு மாறுபட்ட யுகத்துக்குள் நுழையவிருக்கும் காலகட்டத்தில் ‘தி இந்து’ கல்விக்குக் கூடுதல் கவனம் அளிக்க வேண்டும் என்று பெருவாரியான வாசகர்கள் சொன்னதற்கு செவி சாய்ப்பது ஒரு வரலாற்றுக் கடமை என்றே கருதுகிறோம்.

ஆண்டுதோறும் வாசகர்களாகிய உங்களை ‘வாசகர் திருவிழா’வாகத் தேடி வந்து சந்திப்பது ஒரு களிப்பான அனுபவம். இந்த ஆண்டில், வாசகர்கள் மட்டுமின்றி... மாணவ உலகத்தையும் இந்தத் திருவிழாவில் இணைத்துக்கொள்வது குறித்து ஆலோசித்துவருகிறோம். விரைவில் அது குறித்த அறிவிப்பு வெளியாகும்.

நேரில் நாம் சந்தித்துக்கொள்ளும்போது, ஊருக்கு ஊர் ஒன்றாய்க் கூடி இன்னும் நிறைய பேசுவோம்... பயனுள்ள பல புதிய அம்சங்களைத் திட்டமிடுவோம்.

அதுவரை...

வி.வெங்கடேஸ்வரன் தலைமையில் இயங்கும் செய்திப் பிரிவினர், டி.அரவிந்தன் வழிகாட்டுதலில் பல வண்ணங்கள் காட்டும் இணைப்பிதழ் குழுவினர், சமஸ் வழிநடத்திச் செல்லும் நடுப்பக்கக் குழுவினர், உலகத் தமிழர்க்கு உடனடிச் செய்திகள் படைக்கும் பாரதி தமிழனின் இணையதள குழுவினர் மற்றும் என்.கணேசன் தலைமையிலான வடிவமைப்புக் குழுவினர்.... ஆகிய அனைவரின் சார்பிலும் வாசகர்களுக்கு நெகிழ்வான நன்றிகள்!

என்றும் தொடரும் உங்கள் ஆதரவோடு, எட்டிப் பிடிப்போம் புதிய உயரங்களை..!

- கே.அசோகன்,ஆசிரியர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x