Last Updated : 15 Feb, 2019 02:56 PM

 

Published : 15 Feb 2019 02:56 PM
Last Updated : 15 Feb 2019 02:56 PM

‘குண்டூஸ்’ குழந்தைகள் உங்க வீட்ல இருக்காங்களா? உஷார்!

அதீத காரம், அதிக புளிப்பு, அளவான இனிப்பு, சற்றே கலந்திருக்கும் உப்பு.. இது என்ன சுவை.. முப்பாட்டன் பாட்டன் காலத்தில் அனுபவிக்காத  ஆறுவித சுவைகளிலும் இல்லாத தனிச்சுவை.. ம்…ம்…ம்...யம்மி... தேங்யூம்மா.. என்று  தலையை ஆட்டி ஆட்டி கேடுதரும் பொருள்களை சப்புக்கொட்டி சாப்பிடும் குண்டு குழந்தைகளைத்தான் எல்லா  அம்மாக்களும் விரும்புகிறார்கள்.

இப்படிப்பட்ட தின்பண்டங்களை குழந்தைகள் விரும்ப, இந்தக் குழந்தைகளைத்தான் அம்மா விரும்புகிறார்கள்.

குழந்தைகளின் ஆரோக்கியம் உடல் பருமனில் இல்லை என்பதை  அம்மாக்கள் புரிந்து கொள்ளும் நிலை இன்றைக்கு உருவாகிக்கொண்டிருக்கிறது.

ஒல்லியாக இருக்கும் குழந்தைகள் எல்லாம் நோஞ்சான்கள். புஷ்டியாக இருக்கும் குழந்தைகள் எல்லாம் ஆரோக்கியவான்கள் என்று சொல்வது எப்படி இருக்கிறது தெரியுமா? வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்கிற மாதிரி இருக்கு…

ஆறுசுவைகளையும் அதற்குரிய காலங்களில் பக்குவமாக நேரமெடுத்து சமைத்து அன்போடு பரிமாறிய காலங்களைத் தொலைத்து  சமையலை சலிப்பாகச் செய்கிறோம். எல்லாமே ரெடிமேட் என்று அரைமணி நேர சமையலை அஞ்சு நிமிடங்களுக்குள் அடக்கி விடும் பளபள பாக்கெட்டில்  ஆரோக்கியத்தைத் தொலைக்கிறோம் என்பதுதான் உண்மை.

30 வருடங்களுக்கு முன்பு குழந்தைகளின் அதிகபட்ச ஆசை வெள்ளைச் சர்க்கரையில் செய்த மிட்டாய். ஆனாலும்  தேன் மிட்டாய், கடலை மிட்டாய், பொரி உருண்டையே கொறிக்க கிடைக்கும். அத்திப்பூத்தாற்போல வரும் பஞ்சுமிட்டாயும், கையில் கடிகாரம் சுற்றும் கமர்கட்டும் திருவிழாக்களில் மட்டுமே மறுக்காமல் கிடைக்கும். 

பெட்டிக் கடையில் விற்கும் சீரக மிட்டாய்களும், ஆரஞ்சு புளிப்பு மிட்டாயும் குழந்தைகள் அழுதால் அவசரமாய் கிடைக்கும். இப்போது... கலர்கலராக கண்களைக் கவர்வது போல் கடைகளில் இருக்கும் பொருளெல்லாம் காணாமல் போனது போல் தனியாக தொங்கும் பளபள பாக்கெட்டுகளைக் குழந்தைகளே ’இங்கி பிங்கி பாங்கி’ போட்டு  தேர்வு செய்து கொள்கிறார்கள். ஐஸ்க்ரீம்களும் குளிர்பானங்களும் இன்று பேதமின்றி எல்லோர் வீட்டு ஃப்ரிட்ஜிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றன.

இரண்டு குழந்தைகள் இணைந்தாலே ஓடிப் பிடித்து விளையாடுவது அந்தக் காலம். இப்போது பள்ளிகளிலும்  விளையாட்டு வகுப்புகளுக்கான முக்கியத் துவம் குறைந்து விட்டது. வீட்டிலும் கார்ட்டூன் சேனல்களும், வீடியோ கேம் களும், ஆப் மூலம் ஆயிரக்கணக்கான விளையாட்டுகளும், கம்ப்யூட்டரும் குழந்தைகளின் உலகமாய் மாறி அவர்களை ஒரே இடத்தில் முடக்கி வைத்து விட்டன.

அதற்கு அச்சாரமாய் உடல் பருமனையும் பரிசாக்கி சில குழந்தைகளுக்கு மன உளைச்சலையும் பரிசாக்கியிருக்கிறது. இப்படித்தான் இரண்டாம் வகுப்பு படிக்கும் நரேனுக்கும், கல்லூரி மாணவி தீபிகாவுக்கும் நடந்தது.

பூரி போல் உப்பிய கன்னமும், பிள்ளையார் தொந்தியும்,  கோலிக் குண்டு கண்களும் பார்ப்பவர்களை மீண்டும் நின்று பார்க்க வைக்கும் அழகு குட்டி நரேனுக்கு… வீட்டிலும் பள்ளியிலும் அதிக செல்லம்.. தனது வேலைக்கு இடையூறு இருக்காமல் அவனும் மகிழ்ச்சியாக இருந்தால் போதும் என்று நினைத்தன் விளைவு... விளம்பரத்தில் வரும் வித்தியாசமான நொறுக்குத் தீனிகள் அனைத்தும் நரேனுக்கு நொடியிலேயே கிடைத்தது. 

போதாக் குறைக்கு ஒருபுறம் டீவியும், மறுபுறம் வீடியோ கேமும் என்று வெளியே செல்லாமல் ஒரே இடத்தில் கொறித்தபடி அமர்ந்து விளையாடும் குழந்தையைக் கண்டு மெச்சிக்கொண்ட நரேனின் பெற்றோருக்கு விரைவிலேயே   குட்டு கிடைத்தது. நறுக் மொறுக் கொறிப்புகளும், மசாலாக்கள் நிறைந்த ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நரேனின் வளர்ச்சியோடு உடல் எடையையும் பெருக்க வைத்தன.

ஒருநாள் பள்ளிக்குச் சென்ற நரேன் அழுதுகொண்டே திரும்பினான்.  அவன் வகுப்பு தோழி கயல்விழி உணவு இடைவேளையின் போது ”குண்டா தடியா சோத்துக்கு ரெடியா?” என்று கிண்டல் செய்கிறாளாம். புத்திசாலியான  நரேன் மனதில் கயலின் கேலி அச்சாரமாய் பதிந்துவிட்டது.

சாப்பிட அடம்பிடித்தான். பள்ளிக்கு செல்ல மறுத்தான். உடல் எடையும் கூடிக்கொண்டே போனது. அவனோடு அவன் பெற்றோர்களும் மன உளைச்சலுக்கு உள்ளாகி  மருத்துவ மனைக்கு ஓடினார்கள். இப்போது நரேன் ஓட்டப்பந்தயத்திலும் நீச்சலிலும்  முதன்மை மாணவனாக இருக்கிறான்.

கல்லூரியில் படிக்கும் தீபிகா. மொத்தமே 35 கிலோ எடை. ஒருமுறை ரத்த தானம் செய்ய வந்தபோது ஹீமோகுளோபினின் அளவு 7  மட்டுமே இருந்தது. உனக்கே ரத்தம் ஏற்ற வேண்டும் என்று அறிவுரை செய்து அனுப்பினார்கள். காரணம், உடல் எடை அதிகரித்தால் தோழிகள் மத்தியில் கேலிக்கு உள்ளாவோமோ என்று இரண்டு  பிரட் துண்டுகளும், ஸ்நாக்ஸ் டப்பாவில் சாப்பா டும் என்று காலம் தள்ளியிருக்கிறாள். தற்போது நெல்லிக்கனியும், முளைகட்டிய தானியமும் உணவாக கொண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரத்ததானம் செய்கிறாள். உடலையும் கட்டுக்கோப்பாக ஆரோக்கியமாக வைத்திருக்கிறாள்.

பார்ப்பதெல்லாம் வேண்டும் என்று கேட்பது  குழந்தைங்களுக்கு சரியாக இருக்கலாம். ஆனால் கேட்பதையெல்லாம் வாங்கிகொடுப்பது பெற்றோர் களுக்கு சரியாக இருக்குமா. குழந்தைகளின் அனைத்து ஆசைகளையும் நிறை வேற்றி குழந்தைகளுக்கு நல்ல அம்மா அப்பாவாய் இருக்கவே பெற்றோர்கள் விரும்புகிறார்கள்.

சிறு தானியம் கொடுக்காத சத்துக்களை வெறும் சக்கை நிறைந்த பானம் கொடுப்பதில்லை என்பதை உணரவேண்டும். பசுமையான கீரைகளை விட பாஸ்தாவும், பீட்ஸாவும்… நொடியில் தயாராகும் (வயிற்றுக்கு வேட்டு வைக்கும்) ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளும் தான் எங்க வீட்டு குழந்தைகளின் முதல் சாய்ஸ் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைகொள்ளும் நாகரிக அம்மாக்கள்.. இனி மேலாவது விழித்துக்கொண்டு குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் கவனத்தில் செலுத்துவது நல்லது.

உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஆரோக்கியமான சத்தான உணவுகள் தான் தேவை. குழந்தைகளின் முதன்மை மருத்துவர் அம்மாக்கள்  தான். குழந்தைகளை ஆரம்பம் முதலே சுவைக்கு பழக்காமல் ஆரோக்கியத்துக்கு பழக்குங்கள்.

அம்மாதான் டாக்டர். உணவுதான் மருந்து!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x