Last Updated : 11 Feb, 2019 09:48 AM

 

Published : 11 Feb 2019 09:48 AM
Last Updated : 11 Feb 2019 09:48 AM

ஆபாச டிக்டாக் மோகம்: உஷார் பெண்களே!

இப்போல்லாம் இதயம் லப்டப்… லப்டப்-ன்னெல்லாம் அடிக்கறதில்ல.  டிக்டாக்  டிக்டாக்- ன்னுதான் அடிக்குது.

ஆமாங்க... பொழுது போகணும்னு கொஞ்ச நேரம் கையில் வெச்சு விளையாடின கைப்பேசி இப்போ கையோட ஆறாவது விரலா  ஒட்டிக்கிட்டே இருக்கு. அப்பப்போ அதுல கண்ணு வெச்சதுபோக இப்போதெல்லாம் பொழுதே அதாலதான் போகுதுங்கிற மாதிரி நிறைய  பேர் மிதப்பாதான் அதுக்குள்ளேயே மிதக்குறாங்க!

நொடிக்கு ஒரு ஆப்-னு ஃபோனை அவன் வெச்சு செஞ்சா.. நம்ம பயபுள்ளங்க பிடிச்சவன், பிடிக்காதவன் அரசியல்வாதின்னு சகலமானவர்களையும் வெச்சு செய்றாங்க. ஏற்கெனவே ஃபேஸ் புக்.. வாட்ஸ்-அப், யூ டியூப்னு.. பார்த்துப்பார்த்து கண்ணு பூத்ததுதான் மிச்சம்.

இதுல புதுசா பூத்திருக்கு டிக் டாக்.

நோயில இருக்கிற வைரஸ் பரவற மாதிரி இன்னிக்கு என்ன வைரல் பரவியிருக்குன்னு பார்க்கமுடியாது. இந்த செகண்டு என்ன வைரல்னுதான் பார்க்க முடியும். அவ்ளோ பதிவை பக்குவமா போடறாங்க ஃபோனோபிலியா நோயால் பாதிக்கப்பட்டவங்க. அதுல அத்திப் பூத்தது போல சிலது ரசகுல்லா மாதிரி ரசிக்கவைக்கும். ஆல் டைம் ஃபேவரிட் மாதிரி. சிலது காரப் பணியாரம் மாதிரி அப்போதைக்கு போதையாவே மாறி, உசுப்பேத்தி விடும்.ஆறிப்போனா பணியாரத்துலேர்ந்து வர்ற நூல் மாதிரி சப்புன்னு ஆயிடும்.

அடியாத்தி… அம்புட்டு பயபுள்ளைகளோட பதிவைப் பார்த்தா உலகத்தை விட நம்ம மனசு சும்மா சர்ருன்னு சுத்திச் சுத்தி வந்து கிர்ருங்குதுடா சாமீ!

வயசு வித்தியாசம் இல்லாம சிறுசுகளும் பெருசுகளும் என்னமா கலக்குதுங்க...சங்கத்தை விட சாப்பாடுதான் முக்கியம்னு சிறுசு சொல்றது சிரிப்பேத்தினாலும்... என்னை அப்படிப் பார்க்காதடா என்று கண்ணை உருட்டி உதட்டை சுழித்து நெளிந்து நாலு சுவருக்குள் நடக்கும் விஷயங்களைப் பட்டிதொட்டியெங்கும் பரப்பும் பொண்ணுங்களைப் பார்த்தா  செவுல்லயே நாலு அப்பு அப்பலாம்னு தோணுது.

இது எங்க வீட்டு உங்கவீட்டு கோபமில்லீங்க. மொத்த ஊருநாட்டுலயும் டிக்டாக் மேல செம காண்டுலதான் இருக்காங்க. உள்ளுங்குள்ள பொங்குற மனசை ஊமை மாதிரி அடக்கி வெளிய பலபேரு திரியறாங்க.

உங்களுக்கு ஏன் இவ்ளோ கோபம்னு கேட்கறீங்களா? விவரத்தை நீங்களே கேளுங்க..

கண்ணு பார்த்தா கை செய்யணுங்கிறது ஆயா காலத்து பழமொழி. கையில பார்த்தா கண்ணு செய்யணுங்கிறது இந்த டிக் டாக் பழமொழி. ஒருத்தன் ஒரு பதிவைப் போட்டா போதும். நாங்களும் போடுவோமில்லனு எகிறி எகிறி ஊர் முழுக்க பார்க்கட்டுமேன்னு மொத்தமா அனுப்பவேண்டியது.

எங்க பக்கத்து ஊரு பச்சைப் பசேல்னு கிராமம். பத்தாம் வகுப்பு தாண்டினா பக்கத்து ஊருக்கு போய்தான் மேல படிக்கணும். அங்க கமலான்னு ஒரு பொண்ணு. 16 வயதினிலே மயில் மாதிரி அழகா இருப்பா. வகுப்பில முதல்ல இருந்த பொண்ணு மேல்படிப்புக்கு பக்கத்து ஊருக்குப் போனா. தோழிகளும் அறிமுக மானாங்க.. கூண்டுல இருந்த கிளியை சுதந்திரமா பறக்க விட்டா கட்டுப்பாடில்லாம  பறக்கிற மாதிரி அவளும் அவ தோழிகளோட சுத்த ஆரம்பிச்சா.. .படிப்பெல்லாம் மறந்துடுச்சி..  கறுப்பா இருந்த தோழி கூட மேக்கப் உபயோகத்தால கலரா தெரிஞ்சத  பிரமிப்போட பார்த்தா.

அதுவரைக்கும் பேச்சுத் துணைக்கு கூட ஆளில்லாம இருந்தவளுக்கு நாம என்ன செய்தாலும் ரசிக்க ஒரு கூட்டமே இருக்குன்னு தோழிகள் உசுப்பேத்தி உசுப்பேத்தி, டிக்டாக்கையே ரணகளப்படுத்திட்டாய்ங்க. அவளையும் டிக் டாக் களத்துல இறக்கினாங்க. ஊரு முழுக்க நம்ம பத்தி பேசணும்னு தினம் ஒரு பதிவை போட்டா. லைக் லைட்டா வந்தது. அப்புறம் போற இடமெல்லாம்… நின்னது, உட்கார்ந்ததுன்னு இடம் பொருள் ஏவல் இல்லாம குத்தாட்டம் போடறதும்.. குதித்து குதித்து ஆடறதும்.. பஞ்ச் டயலாக் பேசறதும்னு  மாறி ஒரு முடிவாதான் அலைஞ்சிருப்பா போல!

உன் அழகுக்கு பெரிய ஹீரோயினாவே வரலாம். விரும்பினா என் கூடவான்னு ஒருத்தன் பதிவு போட.. வயசுக் கோளாறு பொண்ணு பொறந்த ஊர விட்டு  ஓடி வந்து அவன் கையில சிக்கிறதுக்குள்ள  ஊருக்காரங்ககிட்ட சிக்கிக்கிட்டா. அப்புறம் புரிய வெச்சு மந்திரிச்சி தெளிய வெச்சது தனிக்கதை. பெருங்கதை!

ஆம்பிளைங்க வேட்டிய மடிச்சி கட்டி மல்லுக்கு நின்னா நாங்களும் உங்களுக்கு இணையா களமிறங்குவோமில்ல என்று கட்டிய புடவையை கால் வரைக்கும் தூக்கிகொண்டு வசனம் பேசும் குடும்பப் பெண்களும் டிக் டாக்ல  ரவுண்டு கட்டுவதைப்  பார்க்க முடிகிறது. கணவன் மட்டும் காணும் அழகை வெளிச்சம் போட்டு காட்டுறீயேனு சொல்ற அளவுக்கு சிறந்த நடன சிகாமணியாக தங்களைக் காண்பித்துக்கொண்டு ஆடை சுதந்திரத்தையும், பேச்சு சுதந்திரத்தையும் எல்லை மீறி எடுத்துக் கொள்வதைப் பார்க்கும் நமக்கே திக்திக்னு மனசு அடிச்சுக்குதே அவங்க வீட்டு ஆம்பிளைங்களுக்கு எப்படி இருக்கும்.

சரி விளையாட்டு போதும் கொஞ்சம் சீரியஸா பேசுவோம்.

எங்களுக்கும் உரிமை இருக்கு என்று போர்க்கொடி தூக்கும் பெண்கள்  தங்கள் உரிமையை அடுத்தவர் எட்டிப் பறிக்காமல் இருக்க கடைப்பிடிக்க வேண்டிய கண்ணியத்தைக் காணாமல் போகும் அளவு பதிவிடுவது  பெண்மைக்கு அழகா?

 பெண்களுக்கே உரிய அச்சமும் நாணமும் கூட அஞ்சியபடி  தன்னை மறைத்துக்கொள்ளும் இத்தகைய மிதமிஞ்சிய நாகரிகம்(?) குடும்பப் பெண்களுக்கு எப்படி வந்தது?  மனதை நெகிழச்செய்யும் பதிவுகளுக்கு மத்தியில் விளையாட்டாய்  பதிவு செய்கிறேன் என்று ஓடவிடும் வீடியோக்கள் விபரீதத்தில் முடிவதும், பள்ளி மாணவிகள் பளிச்சென்று முகம் தெரியும் வகையில் சிறிதும் அச்சமின்றி, தயக்கமுமின்றி குத்தாட்டம் போடுவதும், கல்லூரி மாணவிகள் காதல் வசனங்கள் பேசுவதும்

(சமீபத்தில் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் என்னும் தெய்வீகப் பாடலுக்கு ஒரு பெண் ஆடிய ஆட்டம் அந்த ஆண்டவனையே கூட அதிரவைத்துவிடும் அளவுக்கு இருந்தது).

 கண்ட இடங்களில் ஆட்டம் போடுவதும், குடும்பப் பெண்கள் பாரம்பரிய உடையான சேலையைக் கூட செதுக்கினாற் போல காண்பிப்பதும், உச்சகட்டமாக இரவு நேரங்களில் மட்டுமே அணியும் (ஃபுல்டேவும் நைட்டிலதான் இருக்காங்க. அதௌ வேறவிஷயம்) நைட்டியோடு நையாண்டித்தனம் பண்ணுவதும்  காண சகிக்கிறதா?

இப்படியெல்லாம் செய்தால் சின்னத்திரையிலும் சினிமாவிலும் ஜொலிக்கும் வாய்ப்பு வாசல்  தேடிவரும் எனும் கனவில் இருக்கும் பெண்கள் எப்போது இதை மாயை என்று புரிந்துகொள்வார்கள்.

நகைச்சுவைக்காகத்தான் செய்கிறேன் எல்லாரும் பாருங்கள் என்று அனைத்துவித சேஷ்டைகளையும் செய்ய, சபல ஆண்கள் அந்தப் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வைத்து… செய்யும் போது துடித்துக் கதறுவது நாம்தானே!  

இன்று ஆண்களே தங்கள் பெண் குழந்தைகளையும், மனைவியையும் சமூக வளைத்தளத்தில் புகைப்படங்கள் பதிவிடுவதை தவிர்க்கும் போது ஐந்து வயது குழந்தையுடன் குத்தாட்டம் போடும் பெண்களை என்ன சொல்வது?

பெண்கள் எல்லா துறைகளிலும் ஆண்களை விட சிறந்து விளங்க முடியும். தங்கள் திறமையால் ஜொலிக்க முடியும். தங்களை அழகுற செதுக்கிக்கொள்ள முடியும். இப்படி உயரும் பெண்களுக்கு சமூகத்தில் நிச்சயம் தனி அந்தஸ்து உண்டு.

 டிக் டாக்… மனசு சோர்வடையும் போது விடுகதைக்கு விடை தேடற மாதிரி சட்டுன்னு ஒரு டிக் பண்ணி, டக்குன்னு அதைப் பத்தி டாக் பண்ணி பட்டுன்னு விடற ஊறுகாய் மாதிரி தொட்டுக்க மட்டுமே வெச்சுக்கணும்.

டிக்டாக் உஷார்... பெண்களே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x