Last Updated : 05 Dec, 2018 06:31 PM

 

Published : 05 Dec 2018 06:31 PM
Last Updated : 05 Dec 2018 06:31 PM

திருக்கழுங்குன்றத்து திருட்டுக் கழுகு 0.2

ஜனகராஜ் குரலில் மிமிக்ரி செய்து, நடிகர் மயில்சாமி வெளியிட்ட பிரமாதமான காமெடி ட்ராக் ஒன்று உண்டு. இனிப்புக் கடைக்கு போகும் ஜனகராஜ், கடைக்காரரிடம் லட்டு ஒரு கிலோ போடு, ஜாங்கிரி ஒரு கிலோ போடு, என்று ஒவ்வொரு இனிப்பிலும் ஒரு கிலோ போடச் சொல்வார். கடைக்காரரும் மகிழ்ச்சியோடு போடுவார். கடைசியில், "கலக்கு" என்பார் ஜனகராஜ். "சார்..." என்று புரியாமல் விழிப்பார் கடைக்காரர். மீண்டும் "கலக்கு..." என்பார் ஜனகராஜ். கடைக்காரரும் புரியாமல் கலக்குவார். "அதுல இருந்து ஒரு 100 கிராம் போடு," என்பார் ஜனகராஜ்.

சங்கரின் 2.0 படமும் அதுபோலத்தான் இருக்கிறது. கோஸ்ட் பஸ்டர்ஸ், சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், டெர்மினேட்டர், ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ், எக்ஸ்பெண்டபில்ஸ், அவென்ஜர்ஸ், இரும்பு மனிதன் (Iron Man), எறும்பு மனிதன் (Ant Man), விஞ்ஞானப் புனைவிற்கு ஐசக் அசிமோவின் பெயர் உதிர்ப்பு, அஞ்ஞானத்துக்கு "aura" என்ற சொல் உதிர்ப்பு, திருக்கழுக்குன்றத்து கழுகு, என்று ஏகப்பட்ட விஷயங்களை உருவி, ஒரு கலக்கு கலக்கி, அவற்றிலிருந்து ஒரு 100 கிராமை தமிழ் சினிமா ரசிகர்களின் தலையில் கொட்டியிருக்கிறார்கள்.

மயில்சாமியின் காமெடி ட்ராக்கை இன்றைக்கு கேட்டாலும் ரசிக்க முடியும், சிரிக்க முடியும். இந்த "திருக்கழுங்குன்றத்துத் திருட்டுக் கழுகு" படத்தை பார்த்த பிறகும் சிரிப்பு வருகிறது. ஆனால், அச்சிரிப்பு பரிதாபமான ஒரு படத்தை பார்த்த சலிப்பை உதறுவதற்கான சிரிப்பாகவே இருக்கிறது.

படத்தின் கதை, வில்லனின் ஃப்ளாஷ் பேக் மட்டுமே. கதாநாயகனாக வரும் ரோபோ ஒரு கார்ட்டூன் காரக்டர் என்ற அளவிலேயே இருக்கிறது (கார்ட்டூன்களை திரைப்படமாக்கிய மேலே குறித்துள்ள ஹாலிவுட் திரைப்படங்களில் கார்ட்டூன் காரக்டர்களுக்கு கொஞ்ச நஞ்சமாவது உயிர்ப்பை ஊட்டியிருப்பார்கள் என்பதோடு இதை ஒப்பிட்டு பார்க்கவேண்டும்). விஞ்ஞானியாக வரும் ரஜினியும் கதாநாயக பாத்திரமாக இல்லை. உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் முதல் காட்சியில் தோன்றி கடைசி காட்சியில் மீண்டும் வரும் “விஞ்ஞானி முருகன்” எம் ஜி ஆர் கதாபத்திரம் போல தொட்டுக்க ஊறுகாயாக அவ்வப்போது தலைகாட்டி, நீதி போதனை செய்ய மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

திரைப்படத்தின் இறுதியில் சொல்லப்படும் நீதிபோதனைக்கு காரணமாக அமையும் வில்லனின் கதையோ வழக்கமான சங்கர் பாணிக் கதை. ஏதோ ஒரு ‘நியாயமான’ காரணத்திற்கான முயற்சியில் தோல்வியுற்ற அப்பாவியான கதாநாயகன், குறுக்கு வழியில் அதை நிறைவேற்ற போராடுவான், பழிவாங்குவான் (ஜென்டில்மேன், இந்தியன், அன்னியன்). இப்படத்தில் அது வில்லன் பாத்திரமாக ‘உல்டா’ செய்யப்பட்டிருக்கிறது. அவ்வளவே. (ஒரே கதையை ‘உல்டா’ செய்து, மீண்டும் மீண்டும் எடுப்பதில் வல்லவரான பாலச்சந்தரின் வாரிசுகளாக மணிரத்தினம், கௌதம் மேனன், சங்கர் போன்றோரை சொல்லலாம்).

இப்படத்தின் வேடிக்கை என்னவென்றால், உல்டா செய்வதற்கு நீண்ட காலம் எடுத்துக்கொண்டதாலோ என்னவோ, உண்மையிலேயே நல்லதொரு காரணத்திற்காக பாடுபட்டவனை சாகடித்ததோடு நிற்காமல், வில்லனாகவும், கொடூரமான தீய ஆவியாகவும் மாற்றியிருப்பதுதான். இந்தப் புள்ளியில்தான் விஞ்ஞானப் புனை கதை (science fiction), அஞ்ஞானத்தை ஊற்றாகக் கொண்ட அசட்டு மூட நம்பிக்கைக் கதையாக மாறுகிறது.  அது, படத்தின் மையகருவாக இருக்கும் “aura” என்ற மூடநம்பிக்கை.

மனிதர்களுக்கு “aura” என்பதாக ஒன்று இருக்கிறது என்பதெல்லாம் அசட்டு மூடநம்பிக்கை. தமிழில் இதை “ஒளிவட்டம்” என்பார்கள். சாமி படம் போட்ட காலண்டர்களில், சாமியின் தலைக்குப் பின்னால் தகதகக்கும் ஒரு வட்டம் இருக்குமே அது. அல்லது சிவாஜி கணேசனை வைத்து ஏ. பி. நாகராஜன் எடுத்த சாமி படங்களில் இந்த ஒளிவட்டம் சாமிகளின் தலைக்குப் பின்னால் சக்கரம் போலச் சுழலுவதை பார்க்கலாம்.

இந்த ஒளிவட்டம் தெய்வங்களுக்கும் “தெய்வப் பிறவிகளுக்கும்” இருக்கும் என்பது மத நம்பிக்கை. சில “மேதைகளை” தலைக்குப் பின்னால் தகதகக்கும் ஒளிவட்டத்தோடு சித்தரிக்கும் “நாத்திக மத நம்பிக்கையாளர்களும்” உண்டு. இந்த ஒளிவட்டம் புனிதத்தன்மையைக் குறிப்பது.

மத நம்பிக்கைகளில் இருந்து பிரிக்க முடியாதவையாக கலைகள் இருந்த நவீன காலம்வரை கலைப் பொருட்களும் இவ்வாறு ஒளிவட்டம் பொருந்திய புனிதமான படைப்புகளாகவே பார்க்கப்பட்டுவந்தன. சாதாரண மக்கள் பயபக்தியுடன் அணுகவேண்டிய புனிதமான பொருட்களாக பார்க்கப்பட்டன. அது இலக்கியமாகட்டும், நாடகமாகட்டும், ஓவியமாகட்டும், சிற்பக்கலையாகட்டும் அனைத்து படைப்புகளும் ஒளிவட்டம் பொருந்திய புனிதமான பொருட்களாகவே பார்க்கப்பட்டன.

கலைப் பொருட்களுக்கு இருப்பதாக நம்பப்பட்ட இந்த புனிதத்தன்மையைக் கலைத்துவிட்டு தோன்றிய முதல் கலையே சினிமாதான். சினிமா பார்க்கும்போது நொறுக்குத்தீனி திங்கலாம், சிகரெட் பிடிக்க எழுந்து போகலாம், விசில் அடிக்கலாம், நாராசமான கமெண்ட் அடிக்கலாம், காதலர்கள் முத்தங்களைப் பரிமாறிக்கொள்ளலாம், திரையில் தோன்றும் நாயக – நாயகிகளை மனசுக்குள் காதலிக்கலாம், இன்னும் விரும்பிய எதையும் செய்யலாம். நூற்றாண்டுகளாக கலைப்படைப்புகளை பிரமிப்போடும் பயபக்தியோடு பார்க்கும் அனுபவத்தை, அதன் நுகர்வு நிலையிலேயே தகர்த்து நொறுக்கிவிட்டு உருவானது சினிமா. கலைகளுக்கு இருப்பதாகக் கருதப்பட்ட ஒளிவட்டத்தை – “aura”வைக் கலைத்தது சினிமா.

சினிமா எவ்வாறு ஒளிவட்டத்தை தகர்த்த கலை என்பதைப் பற்றி தத்துவ ஆசிரியராகவும், பண்பாட்டு விமர்சகராகவும் அறியப்பட்ட வால்டர் பெஞ்சமின் என்பார் எழுதிய The Work of Art in the Age of Mechanical Reproduction என்ற புகழ் பெற்ற கட்டுரை இது தொடர்பில் கட்டாயம் வாசிக்கவேண்டியது. தமிழில் 10 ஆண்டுகளுக்கு முன்பாக மொழியாக்கமும் செய்யப்பட்டிருக்கிறது. 

அத்தகைய தன்மை பொருந்திய சினிமா என்ற கலைவடிவத்தில் “aura”-வைக் கருவாக கொண்டு ஒரு திரைப்படத்தை எடுத்தால், அந்த அபத்தத்தை என்னென்பது?

இந்த அபத்தம் போதாதென்று, ஒரு பேய் கதையை – ஒரு மீ-இயற்கைச் சக்திக் (super natural force) கதை என்றுகூட சொல்லமுடியாது - விஞ்ஞானப் புனை கதையின் முலாம் பூசி கொடுத்திருப்பது இன்னொரு அபத்தம். சரி அந்த பேய் என்னதான் செய்கிறது? சென்னையின் லட்சோப லட்சம் மக்களின் செல்ஃபோன்களைத் திருடுகிறது அல்லது பிடுங்கிக்கொள்கிறது அல்லது உருவிக்கொள்கிறது. செல்ஃபோன்களை உருவிக்கொள்வதோடு நின்றிருந்தால் பரவாயில்லை. அவற்றைப் பயன்படுத்தும் மனிதர்களையும் கூண்டோடு கொல்லப் பார்க்கிறது. ஆகையால்தான் கதாநாயக ரோபோவும், விஞ்ஞானி வசீகரனும் அதை முறியடிக்கிறார்கள். இறுதியில் விஞ்ஞானி வசீகரன் நீதிபோதனையும் செய்கிறார். ரசிகர்களின் போதைக்கு தீனியாக, ஜிகினாக் கலர்களில் ரோபோ டூயட்டுடன் படம் முடிகிறது.

ஆனால், துவக்கத்தில் குறிப்பிட்டிருப்பதைப் போல, பல படங்களில் இருந்து உருவி உல்டா செய்திருக்கும் காட்சிகளுக்கு வசீகரனும் அவரது ரோபோவும் தண்டனை ஏதாவது தருவார்களா? 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் குறைந்தது 100 படங்களாவது எடுத்திருக்கலாம். அதில் ஒரு 10 நல்ல தமிழ் படங்களாவது தேறியிருக்கலாம். அந்த வாய்ப்புகளை கூண்டோடு கொன்ற பாவத்திற்கு என்ன கழுவாய்?

இவற்றை அசைபோட்டால் பேசாமல் படத்திற்கு “திருக்கழுங்குன்றத்துத் திருட்டுக் கழுகு” என்று பெயர் வைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. எவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படத்தை எடுத்திருந்தாலும், எவ்வளவு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருப்பதாக பெருமை பேசிக்கொண்டாலும், ஊர் குருவி எவ்வளவு உயரப் பறந்தாலும், ஒருநாளும் பருந்தாகிவிடமுடியாது.

 

தொடர்புக்கு: mathi2006@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x