Last Updated : 08 Nov, 2018 05:44 PM

 

Published : 08 Nov 2018 05:44 PM
Last Updated : 08 Nov 2018 05:44 PM

புகழ், அதிகாரம் எனும் நீர்க்குமிழியில் இடறி விழுகிறாரா விராட் கோலி:  ‘இந்தியாவில் இருக்க வேண்டாம்’ ஆவேசமும் ஹர்ஷா போக்ளே எதிர்வினையும்

இந்திய பேட்ஸ்மேன்களை பிடிக்காத இந்திய ரசிகர்கள் இந்தியாவில் வசிக்க வேண்டாம், அவர்கள் எந்த நாட்டு வீரரை பிடிக்கிறதோ அந்த நாட்டுக்குச் செல்லலாம் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆவேசமாகப் பேசியுள்ளது கலவையான பல எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது.

நெட்டிசன்கள் பலர் விராட் கோலிக்கு ஆதரவாகவும் பலர் எதிர்ப்பாகவும் தங்கள் கருத்துகளை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

”விராட் கோலி மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கையும், நல்ல எண்ணமும் ரசிகர்கள் வைத்திருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து அவரிடம் ஏதும் சிறப்பான பேட்டிங் திறமை இருப்பதாகத் தெரியவில்லை. நான் இந்திய பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்வதை ரசிப்பதைக் காட்டிலும், இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பேட்ச செய்வதை ரசித்துப் பார்ப்பேன்” என்று ரசிகர் ஒருவர் கூறியதற்குத்தான், விராட் கோலி ஆவேசமாக நீங்கள் இந்தியாவில் வசிக்க வேண்டாமே என்று தன் வீடியோ ஒன்றில் பதிவிட்டுள்ளார்.

இன்றைய சமூகவலைத்தளம் என்பது தெருப்பேச்சு, திண்ணைப்பேச்சு, டீக்கடை, மதுபான விடுதி அரட்டைகளின் பதிலி வடிவமாக மாறியுள்ளது. உள்ளடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை, வடிவத்தில்தான்  மாற்றம், அதனால்தான் இது சொல்லாடல் தளத்துக்கு உயராது, வெறும் சர்ச்சை, கவன ஈர்ப்பு, 10 நிமிட புகழ், கவர்ச்சி விவகாரமாகவே தேங்கி விடக்கூடியது.  ஆகவே இவைகளை ஒரு வெளிப்பாட்டு வடிவமாக, ஊடகமாக சீரியசாகக் கருத வேண்டியதில்லை.

இவை சீரியஸாகப் பார்க்கப்படும் போதுதான் அதனைச் சுற்றி அதிகாரம் தன் வலையை விரிக்கிறது. இப்போது என்றில்லை 1970, 80களிலும் கூட இந்திய அணி ஒன்றுமில்லை, மே.இ.தீவுகள், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகள்தான் சிறந்தவை என்ற கருத்தோட்டமும், சுனில் கவாஸ்கர் இந்தியாவின் மிகச்சிறந்த பேட்ஸ்மென் என்று நிலைநாட்டப்பட்ட பிறகும் சுனில் கவாஸ்கரை ஏற்காத கிரிக்கெட் சமூகம் அப்போதும் இருந்தது. அதேபோல்தான் கபில்தேவா, இயன் போத்தமா, இம்ரான் கானா என்ற அரட்டைகளில் பெரும்பாலும் போத்தம், இம்ரான் ஆகியோர் பக்கமே சிலர் சாய்வார்கள்.

அப்போதெல்லாம் சமூக ஊடகங்கள் இல்லை, தெருப்பேச்சு, திண்ணைப்பேச்சாகவே முடிந்துள்ளது.

அது போன்று ஒருவர் இந்திய பேட்ஸ்மென்களைத் தனக்குப் பிடிக்காது என்று கூறுவது  மிகவும் இயல்பான ஒரு விஷயமே. ஆனால் இது சர்ச்சையாகக் காரணம் சமூகவலைத்தளம், அதோடு மட்டுமல்லாமல் மைய நீரோட்ட ஊடகங்களும் கோலி ஒரு புகழ்பெற்றவர் என்பதால் அவர் கூறுவது எல்லாவற்றுக்கும் அனாவசியமான ஒரு மதிப்பை வழங்கி பரபரப்பு சேர்த்துக் கொள்கின்றன.  நாம் சமூகவலைத்தளங்களை பொதுவெளி என்று கருதுகிறோம்... அப்படிக் கருதவேண்டிய அவசியமில்லை... அதனால்தான் இவ்வளவு சர்ச்சைகளும் ஏற்படுகின்றன.

இந்தச் சூழலில் ஹர்ஷா போக்ளே விராட் கோலியின் கருத்து குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பது பொருத்தமாக உள்ளதாகப் படுகிறது.

அவர் கூறியிருப்பதாவது:

விராட் கோலியின் கூற்று என்பது பெரும்பாலான புகழ்பெற்ற நபர்கள் ஒன்று இடறி விழும் அல்லது அதற்குள் வலுக்கட்டாயமாகச் செலுத்தப்படும் நீர்க்குமிழியின் பிரதிபலிப்பே. அதற்குள் இருக்கும் குரல்களைத்தான் அவர்கள் கேட்க விரும்புவார்கள். இது ஒரு வசதியான குமிழிதான், அதனால்தான் புகழ்பெற்றவர்கள் அந்தக் குமிழி உருவாகாமல் முயற்சி செய்து பாடுபட்டு தடுக்க வேண்டும், என்று ட்வீட்டிலும்,

மற்றொரு ட்வீட்டில், “ அதிகாரமும் புகழும் நம்முடன் உடன்படும் மனிதர்களைத்தான்  கவர்ந்திழுக்கும், அதுதான் உங்கள் கருத்தையும் மேலும் வலிமைபெறச் செய்கிறது,  காரணம் அதிகாரத்துக்கும் புகழுக்கும் நெருக்கமாக இருப்பதன் மூலம் அவர்களுக்கு பயன் கிடைக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

1983 உலகக்கோப்பையை கபில்தேவ் தலைமையில் இந்தியா, கிளைவ் லாய்ட் எனும் சிங்கத்தை வீழ்த்தி வென்ற பிறகு இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்ட மே.இ.தீவுகள் அணி டெஸ்ட் தொடரில் இந்திய அணியை 3-0 என்று வீழ்த்தி, ஒருநாள் தொடர் முழுதையும் கைப்பற்றியது. அப்போது அப்பாடா இந்தியா தோற்றது என்று மகிழ்ந்தவர்கள் கிரிக்கெட் உலகில் கணிசமாகவே இருந்தனர், உலகக்கோப்பையை வென்றது  வெறும் குருட்டு அதிர்ஷ்டம் என்று இப்போது புரிகிறதா? என்று சில தீவிர மே.இ.தீவுகள் ரசிகர்கள் புளகாங்கிதம் அடைந்து பேசியிருக்கிறார்கள்.

இந்தியத் தோல்வியை கொண்டாடியிருக்கிறார்கள், இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றால் கேட்கவே வேண்டாம் ஆங்காங்கே வார்த்தைப் போரே நடக்கும். இவையெல்லாம் ஒருதனிப்பட்ட விஷயம்தான் அப்போது, அந்தக் குழுவுக்குள் நடக்கும் சுவாரஸ்யங்கள் அவ்வளவே, ஆனால் இன்று சமூகவலைத்தளம், லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பாலோயர்கள் என்று ஆனபிறகு நம்மிடையே சாதாரண ரசனை சம்பந்தப்பட்ட நிலைப்பாடு, கூற்றுகளெல்லாம் கூட ஒரு தேசியவாதப் பார்வையிலிருந்து விமர்சிக்கப்பட்டு, தாக்கப்பட்டு வருகின்றன.  இது துரதிர்ஷ்டமானதே, இது போன்ற புகழும் அதிகாரமும் ஹர்ஷா போக்ளே கூறுவது போல் வெறும் நீர்க்குமிழிதான், அது உருவாகாமல் பிரபலஸ்தர்கள் பாடுபட்டு தடுக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x