Last Updated : 06 Nov, 2018 06:21 PM

 

Published : 06 Nov 2018 06:21 PM
Last Updated : 06 Nov 2018 06:21 PM

புத்தருடன் ஒரு காலை நடை: 12 - காடுகளின் கையெழுத்து

காடுகளின் கையெழுத்து

அந்த குருவின் பெயர் சிஸ்மருர். அடர்ந்த ஆலமரத்துக்குக் கீழே ஒரு மடம் நிறுவியிருந்தார். அந்த மடத்துக்கு அவர் சூட்டிய பெயர் ஆனந்த மடம். தன்னைத் தேடி வரும் சீடர்களுக்கு அவர் வாய் திறந்து எந்த உபதேசங்களையும் வழங்க மாட்டார். ஆனால் தன்னோடு சேர்த்துக்கொண்டு, தான் செய்கிற தச்சு வேலையைக் கற்றுக்கொள்ளச் செய்வார்.

அதுதான் சீடர்களுக்கான தனது உபதேசம் என்று சொல்வார். உழைப்புதான் என்னுடைய மொழி. உழைப்புதான் என்னுடைய உபதேசம். உழைப்புதான் உங்கள் குருவான எனக்கு நீங்கள் செலுத்தும் காணிக்கை.

ஆல மர நிலலில் அமர்ந்துகொண்டு தச்சுத் தொழிலை ஒரு தவம் போல செய்துகொண்டிருந்த சிஸ்ருமரின் கை வண்ணத்தில் மேசைகளும், கட்டில்களும், நாற்காலிகளும், மரப்பொருட்களும், குழந்தைகள் விளையாடும் மர விளையாட்டுச் சாமான்களும் உயர்ந்து விளங்கின. இதைப் போன்று வேறு எவரும் உருவாக்க முடியாது என்று சொல்ல வைத்தன. உழைப்பின் மொழியை அவை எல்லாம் உரக்க மொழிந்தன.

சிஸ்ருமரிடம் சீடராக இருப்பவர்களுக்கும் அவரைத் தேடி வந்து அந்த மரப்பொருட்களை பெற்றுச் செல்பவர்களுக்கும் ஆச்சரியம். எப்படி இவரால் கலை மழை பொழியும் வண்ணம் மர வேலைப்பாடுகளைச் செய்ய முடிகிறது என்று ஆச்சரியப்பட்டனர்.

தங்கள் ஆச்சரியத்தை அவரிடத்திலேயே விசாரித்தனர். ''இவ்வளவு சிறப்பாக உருவாக்கம் செய்ய எப்படி முடிகிறது?'' என்று கேள்விகளால் துளைத்தனர்.

கலை எல்லாருக்குமே ஆச்சரியம். ஒருவர் அவரிடம் சென்று, “அதெப்படி இவ்வளவு அழகாக, சிறப்பாகச் செய்கிறீர்கள்? இதன் ரகசியம் என்ன?” என்று கேட்டார்.

தன்னைத் தொடரும் இந்தக் கேள்விக்கு அவர் ஒரு நாள் பதில் சொன்னார்:

“இந்த மரப் பொருட்கள் இவ்வளவு அழகாக உருவாக நான் காரணமல்ல. நமக்கு அருகில் இருக்கிற காடுதான் காரணம். அந்தக் காடுதான் இந்தப் பொருட்களுக்கு அதிசிறப்பு ஊட்டுகின்றன. என் உழைப்புக்கு முன்னால்... எனது தச்சுக் கலைக்கு முன்னால்... காட்டின் அனுமதியை முக்கியமானதாகக் கருதுகிறேன். வெட்டப்பட வேண்டியது எந்த மரம்? மனிதர்களுக்கு எந்த மரத்தை நன்கொடையாக வழங்கலாம்... என்பதெல்லாம் காட்டுக்குத்தானே தெரியும்?

நான் இந்த மரப் பொருட்களை உருவாக்கும் முன்பாக... காட்டுக்குச் செல்வேன். காட்டின் காதில் ‘உன்னிடத்தில் இருக்கிற சில மரங்களைக் கொண்டு மனிதர்களுக்கு பயன்படக்கூடிய சில பொருட்களை உருவாக்கப் போகிறேன். உன்னிடம் சொல்லாமல்... உனக்கு சொந்தமான ஒன்றை இங்கிருந்து கொண்டு செல்லக் கூடாதல்லவா... எனவேதான் நான் எதற்காக உன்னைத் தேடி வந்திருக்கிறேன் என்பதை உன்னிடத்தில் சொல்கிறேன்’ என்று உரக்கச் சொல்வேன்.

நான் சொல்வதை அந்தக் காடு செவிகொடுத்துக் கேட்டுக்கொள்ளும்’’ என்றவர் சிறிது நேர அமைதிக்குப் பிறகு தொடர்ந்து ''எல்லா மரத்தில் இருந்தும் எல்லா மரப் பொருட்களையும் உருவாக்கிவிட முடியாது. காடு அடையாளம் காட்டு மரத்திடம் சென்று நீ கட்டிலாகப் போகிறாயா? அலமாரியாகப் போகிறாயா? நாற்காலியாகப் போகிறாயா? என்று கேட்பேன். எந்த மரம் என்னவாகப் போகிறேன் என்று சொல்கிறதோ... அவ்வாறே நான் மரப் பொருட்களை உருவாக்குவேன்..’’ என்றார்.

சிஸ்ருமர் சொல்வதை வாய் பிளந்து கேட்பவர்களுக்கு... அவர் சொல்வதை எப்படி நம்புவது என்கிற குழப்பம் ஏற்படும். இவர் என்ன மன நிலை பிறழ்ந்தவரோ... என்கிற எண்ணம்கூட அவர்களுக்கு ஏற்படும்.

மறு பேச்சு பேசாமல் மவுனமாக இருக்கும் தன்னிடம் கேள்வி கேட்டவர்களின் எல்லாம் கடைசியாக சிஸ்ருமர் சொன்னார்:

‘’நீங்கள் நினைப்பதைப் போல இவை நாற்காலிகள் அல்ல; கட்டில்கள் அல்ல; அலமாரிகள் அல்ல.... இவை எல்லாம் காடுகளின் கையெழுத்துகள்!’’

ஞானவான்கள் எப்போதும் இயற்கையோடு ஒன்றியவர்களாகத்தான் இருப்பார்கள் என்பதை விளக்க புத்தர் தனது தலைமைச் சீடன் ஆனந்தனுக்கு சொன்ன கதை இது.

*** **** **** ****

புத்தர் வரலாறு!

சுத்தோதனர் - லும்பினியில் இருந்து தனது மனைவி மகா மாயா தேவியுடனும் தனது குழந்தையுடனும் சென்று கபிலவஸ்துவை அடைந்தபோது - கபிலவஸ்து நகரத்தின் நுழைவாயிலிலேயே காத்திருந்த பலர்... தங்கள் சாக்கிய இனத்துக்கு புதிய உறுப்பினராக வந்து சேர்ந்த அக்குழந்தையை வரவேற்று ஊருக்குள் அழைத்துச் சென்றனர்.

ஊர் முழுக்கத் தோரணங்கள் அசைந்தன. மக்கள் முகமெங்கும் சந்தோஷத் தேரோட்டம். சுத்தோதனரும் மகா மாயா தேவியும் தங்கள் குழந்தைக்கு என்ன பெயர் வைப்பார்கள்... ஊர் மக்கள் தங்கள் கற்பனைக்கு ஏற்றவாறு தங்கள் இஷ்டம்போல ஏதேதோ பெயர் வைத்து பார்த்து மகிழ்ந்தார்கள். சுத்தோதனரும் மகா மாயாதேவியும் தங்கள் குழந்தைக்கு சூட்டப் போகிற பெயரை அறிந்துகொள்வதில் ஊர் மக்கள் அவ்வளவு விருப்பத்தோடு எதிர்பார்த்திருந்தார்கள்.

ஜோதிடப் புளுகர்கள் சொல்கிற பெயர்களை அந்தக் குழந்தைக்கு வைத்துவிடக் கூடாதே என்று ஊர்மக்களில் பலர் மனசுக்குள் கவலைப்பட்டார்கள். தங்கள் பழங்குடி மக்களின் மாண்பையும் பண்பாட்டையும் ஒட்டிய பெயரை குழந்தைக்கு வைக்க வேண்டும் என்பது பழங்குடி மக்களின் வேண்டுதல்களாகவும் இருந்தது.

ஊர் மக்கள் மகிழ்வடைகிற மாதிரி குழந்தை பிறந்த ஐந்தாவது நாள்... சுத்தோதனரும் மகா மாயா தேவியும். அக்குழந்தையின் பெயர்சூட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

பெயர்சூட்டு விழாவில் மகிழ்வோடு கலந்துகொண்டு, விருந்து உபசரிப்புகளிலும் பங்குபெற ஊர் மக்கள் அத்தனை பேரும் அழைக்கப்பட்டிருந்தனர். தங்கள் இல்லத்தில் நடக்கும் விழாவென நினைத்து ஊர் மக்கள் அனைவரும் புத்தாடை உடுத்தி, மகிழ்வேந்தி பெயர் சூட்டுவிழாவுக்கு வந்திருந்தனர்.

கபிலவஸ்துவை தலைநகராகக் கொண்டு பழங்குடி இனத்தைச் சேர்ந்த மன்னனாகத் திகழ்ந்த சுத்தோதனர்... தனக்குப் பிறந்த ஆண் குழந்தைக்கு பெயர் சூட்டுவிழா கொண்டாடிக் குழந்தைக்கு பெயர் சூட்டப் போகிறார் என்பதை அறிந்த... கபிலவஸ்துவில் வாழ்ந்திருந்த நிமித்திகர் என்றழைக்கப்பட்ட ஜோதிடத்திலும் எண்கள் கணிப்பிலும் பெயர் பெற்றிருந்த 108 பேர்கள் திரண்டு சுத்தோதனரின் மாளிகைக்கு வந்துவிட்டனர்.

வந்தவர்களை எல்லாம் வரவேற்பதுதானே பண்பாடு. எனவே அழையா விருந்தாளியாக வந்திருக்கும் அத்தனை நிமித்திகர்களையும் வரவேற்று உபசரித்து... அவர்களுக்குப் பொன்னும் பொருளும் காயும் கனிகளும் கூடவே ஆடைகளும் கொடுத்து உபசரித்தார் சுத்தோதனர்.

வந்திருந்த 108 நிமித்திகர்களில்... சுதத்தர், சுயாமர், போஜர், கொண்டஞ்சர், மந்த்ரி, இலக்குமணர், தஜர், ரேமர் ஆகிய எட்டு நிமித்திகர்கள் மிக மிக முக்கியமானவர்களாகக் கருதப்பட்டனர்.

அந்த எட்டு நிமித்திகர்களும் மன்னர் சுத்தோதனரிடம், ''நாங்கள் எல்லோரும் ஜோதிட சாஸ்திரங்களிலும் எண் கணிதத்திலும் உயர் கல்வி கற்றவர்கள்... நிபுணத்துவம் வாய்ந்தவர்கள். நாங்கள் எல்லோரும் ஒன்று கூடி... ஆலோசித்து... உனது அருமை மைந்தனுக்கு ஜோதிட சாஸ்திரப்படி ஒரு பெயரைத் தெரிவு செய்து சொல்கிறோம். அந்தப் பெயரை உன் மைந்தனுக்கு நீ சூட்டினால்... அவன் இந்த உலக்கத்தின் எல்லா திசைகளையும் வென்று பேரரசன் ஆவான்!’’ என்றனர்.

அதைக்கேட்டு உரக்கச் சிரித்த சுத்தோதனர்... ''அய்யா... அனைத்து நிமித்திகர்களுக்கும் எனது வணக்கம். உங்கள் விருப்பத்துக்கு நான் செவி சாய்க்கிறேன். என் மகனுக்கு விருப்பமுடன் பெயர் ட் சூட்ட விழைந்ததற்கு மிகுந்த நன்றி. ஒரே ஒரு வேண்டுகோள். அதுவும் நான் இந்த தேசத்து மன்னன் என்கிற அதிகாரத்துடன் உங்களிடம் கேட்கவில்லை. பழங்குடி மக்களின் ஒருவனாக இருந்து கேட்கிறேன்.... நீங்கள் அத்தனை பேரும் ஜோதிட ஞானத்தில் மேன்மையானவர்கள்.

என் மைந்தனுக்கு சூட்டப்படும் பெயர் என்பது காலா காலத்துக்கும் யுக யுகங்களுக்கும் பரவி ஒளி வீசக்கூடிய பெயராக இருக்க வேண்டும். உங்கள் ஜோதிட ஞானத்தைக் கொண்டு என் மகனுக்குப் பெயர் தெரிவு செய்யாமல்... இந்த கபிலவஸ்துவின் மண்ணுக்கு ஏற்ற வகையில், எங்கள் பழங்குடி இனத்தின் மாண்பைப் போற்றும் வகையில் ஒரு பெயரைக் கண்டுபிடித்துச் சொலுங்கள்.

என் மைந்தனின் அங்க அடையாளங்களை வைத்து நீங்கள் என் மைந்தனுக்குப் பெயர் சூட்டுவதை நான் விரும்பவில்லை’’ என்றார்.

சுத்தோதனர் சொல்லியதைக் கேட்ட 108 நிமித்திகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

- இன்னும் நடப்போம்...

மானா பாஸ்கரன், தொடர்புக்கு: baskaran.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x