Last Updated : 17 Jul, 2018 02:58 PM

 

Published : 17 Jul 2018 02:58 PM
Last Updated : 17 Jul 2018 02:58 PM

பலாத்காரம் பரிசு அல்ல மிஷ்கின்

 

"நான் ஓர் ஆணாக இருந்திருந்து மம்மூட்டி என்னைவிட இளைய பெண்ணாக இருந்திருந்தால் நான் காதலில் விழுந்திருப்பேன். அதுவே நான் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் அவரைப் பலாத்காரம் செய்திருப்பேன்" என்று ஒரு பொதுமேடையில் பேசினார் மிஷ்கின். மம்மூட்டியைப் பாராட்டுவதற்காக, பெருமிதம் பொங்க இப்படி மிஷ்கின் பேசியிருக்கிறார்.

நீங்கள் இப்படி பேசலாமா மிஷ்கின்?!

தமிழ் சினிமாவின் பெருமித அடையாளங்களில் ஒருவர். இப்படித்தான் என்னைப் போன்ற ரசிகைகள் மிஷ்கினை (உங்களை) நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், செவித்திறன் இழந்த 11 வயது சிறுமியை ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் போகிற வருகிறவர்கள் எல்லாம் சேர்ந்து பலாத்காரம் செய்திருக்கும் சமூகத்தில் நீங்கள் அப்படிப் பேசலாமா மிஷ்கின்?!

பேரன்பு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. விழாவில் பேசிய மிஷ்கின் வழக்கம்போல் தனக்கே உரித்தான பாணியில் படத்தின் ஷாட்களையும் கேமரா ஆங்கிள்களையும் சிலாகித்துக் கொண்டிருந்தார்.ஒரு பைபிளைப் போல, குர்ரானைப் போல, பகவத் கீதையைப் போல எல்லோரது வீட்டிலும் பேரன்பு படத்தின் டிவிடி இருக்க வேண்டும் என்று படத்தைப் புகழ்ந்து கொண்டிருந்தார்.

எல்லாவற்றுக்கும் நான் கைதட்டுகிறேன் மிஷ்கின். நீங்கள் கைதட்டுங்கள் என்று சொல்லாவிட்டாலும்கூட தட்டுகிறேன். ஆனால், ஏன் அப்படிப் பேசினீர்கள்?

"நான் ஓர் ஆணாக இருந்திருந்து மம்மூட்டி என்னைவிட இளைய பெண்ணாக இருந்திருந்தால் நான் காதலில் விழுந்திருப்பேன். அதுவே ஒரு பெண்ணாக இருந்திருந்தால் அவரைப் பலாத்காரம் செய்திருப்பேன்" என்று சொன்னீர்கள். அந்த வார்த்தைகள் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உங்கள் 'பிசாசு'கூட இரக்கமுள்ளதுதான் மிஷ்கின். ஆனால், இன்றைய உலகில் பெண்களை, பெண் குழந்தைகளை இரக்கமற்று வேட்டையாடுகின்றன சில பிசாசுகள்.

பிசாசுகளுக்கு கோயிலும் தெரிவதில்லை, ஆட்டோவும் தெரிவதில்லை, ஓடும் பேருந்தும் தெரிவதில்லை. கூரிய நகத்தைப் பாய்ச்சும். அதற்குத் தெரிந்தது எல்லாம் பெண் உடல் மட்டுமே. குழந்தையைக் கூட சதை உடலாகப் பார்க்கும் இந்த சமூகத்தில் உங்களைப் போன்றோரின் படைப்புகள் அல்லவா மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

உங்கள் யுத்தம் செய் படத்தின் ரசிகை நான். பெண்கள் கடத்தப்படுவதுதான் கதைக் களம். அந்தப் படத்தில் வருவதுபோல் சட்டத்தை யாரும் கையில் எடுக்கக்கூடாது என்றாலும், "உங்க பொண்ணுக்கோ இல்லேன்னா தங்கச்சிக்கோ இப்படி நடந்தால் நீங்களும் மிருகமாத்தானே மாறுவீங்க?" என்ற அந்த ஜஸ்டிஃபிகேஷன் எனக்குப் பிடித்திருந்தது.

அப்படிப்பட்ட கொந்தளிப்புடன் படம் எடுத்த நீங்களா பலாத்காரத்தை அவ்வளவு எளிதாகப் பேசுகிறீர்கள்? அன்பின் அடர்த்தியை நீங்கள்தான் அழகாக படங்களில் பதிவு செய்திருக்கிறீர்கள் மிஷ்கின். ஆனால், சில சினிமாக்களில் இருந்து வரும் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டுதான் அவற்றை முன்மாதிரியாக வைத்துதான் பெண்களை துரத்துக்கிறார்கள், விரட்டி விரட்டிக் காதலிக்கிறார்கள், பின் தொடர்தல் எனும் பெருங்குற்றம் புரிந்து சிதைக்கிறார்கள்.

நீங்கள் ஒரு பொதுமேடையில் "மம்மூட்டியைப் பலாத்காரம் செய்திருப்பேன்" என்று படு இயல்பாகச் சொல்கிறீர்கள் அதற்கு அரங்கமே கைதட்டி சிரிக்கிறது. பலாத்காரம் தண்டனைக்குரிய குற்றம். குற்றத்தை யார் செய்தாலும் குற்றம்தான். அதில் மிஷ்கினுக்கு ஏதாவது விதிவிலக்கிருக்கிறதா?

இது என்னைப் போன்ற பெண்களுக்கு, பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கு எத்தகைய மனோ வலியைக் கடத்தும் என்று நீங்கள் கண நேரம்கூட யோசிக்கவில்லையா? நீங்கள் ஃப்ளோவில் பேசிவிட்டீர்கள், மிகை உணர்ச்சியில் பேசிவிட்டீர்கள் என யாராவது சப்பைக்கட்டு கட்ட வரலாம். ஆனால், நீங்கள் பொறுப்புணர்ச்சியோடு அந்த வார்த்தைகளை திரும்பப் பெற்று விடுங்கள்.

பலாத்காரம் பரிசு அல்ல...பலாத்காரம் வெகுமதி அல்ல...நீங்கள் மம்மூக்காவுக்காகவோ இல்லை யாருக்கோ வாரி வழங்க. அது மனித இனத்தின் அவமானம்.  நீங்கள் பொறுப்புணர்ச்சியோடு அந்த வார்த்தைகளை திரும்பப் பெற்று விடுங்கள். அப்படி நீங்கள் திரும்பப் பெற்றால் பேரன்பு காட்டுவேன். அப்போது உங்களுக்குக் கை தட்டுவேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x