Last Updated : 20 Jun, 2018 04:48 PM

 

Published : 20 Jun 2018 04:48 PM
Last Updated : 20 Jun 2018 04:48 PM

கலர் பிம்பங்கள் 2: புறப்படடா தம்பி புறப்படடா!

லட்சியத்தை நோக்கிச் செல்லும் பாதை எவ்வளவு வேகமானது என்பதைக் குழந்தைகளிடம் கேட்டுப் பார்த்தால் தெரியும். வில்லில் இருந்து அம்பு புறப்படுவதுபோல என்று அவர்கள் சொல்லக்கூடும். கிட்டத்தட்ட அப்படி ஒரு வேகம் எனது குழந்தைப் பருவம் எங்கும் காணப்பட்டது. அதைக் கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது

அந்த நாட்களை ஏன் நினைத்துப் பார்க்கவேண்டியுள்ளது என்றால் இன்று நான் அப்படி இல்லை, அதற்கு நேர்மாறாக நான் இருக்கிறேன் என்பதால்தான். பழைய சாகசங்களை நினைத்துப் பார்க்கும்போது திரும்பவும் சிறிய பலமாவது மீண்டும் கைசேரும் என்ற நப்பாசைதான்.

'எல்லாவற்றையும் அனுசரித்துப் போ' என்று நமது அன்றாடங்கள் இன்று நமக்குச் சொல்லித்தருகின்றன. இதிலும் பாறைகள் நிறைந்த நீரோடைகளில் இண்டு இடுக்குகளில் பாயும் வெள்ளத்தில் தன் லட்சியப் படகை லாவகமாக ஓட்டிச்செல்லும் பக்குவமான குழந்தைகளும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

குச்சி ஐஸ் சாப்பிடும் மனங்களுக்கு உச்சபட்சமாக என்ன லட்சியம் இருக்க முடியும்? அடுத்தகட்டமாக ஒரு கப் ஐஸ், ஒரு கோன் ஐஸ்கிரீம் அல்லது வெணிலா, ஸ்ட்ராபெரி, சாக்கோபார், இதாலியன் கஸாட்டா இப்படித்தானே என்று நாம் நினைத்துவிடுகிறோம். அதுதான் இல்லை.

எவ்வளவு மோசமான சூழலிலும் எப்படியாவது நிலவைத் தொட வேண்டும் என்று நினைத்த எல்மர் எனும் சிறுவனைப்பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கிறது. யார் அந்த எல்மர்... கொஞ்சம் பொறுங்கள்... கொஞ்சம்போல எனது பழைய நினைவுகளைக் கிளறிவிட்டுவிட்டு அப்புறம் எல்மருக்கு வருவோம்..

முகமறியா ஆட்களுடன் 8 மைல்தூரம் (10 கிலோ மீட்டர் தொலைவில் நடைபெறும்) கொக்கித்தேர் திருவிழாவுக்கு நடந்துசென்ற அந்த அதிகாலை நிலவொளி ஒரு கசங்கிய பிரதியாக கண்முன் தெரியத் தொடங்குகிறது. மெல்லமெல்ல தெளிவாக விடிந்தபோது பளிச்சென்று புலப்படுகிறது கொக்கித்தேர் திருவிழாவின் காலைக் காட்சிகள்.

கொக்கித்தேர் திருவிழா

முதல்நாள் இரவு 'அழைத்துச் செல்கிறேன்' என்று சொன்னவர்கள் மறுநாள் வைகறையில் காணாமல் போனார்கள். இத்தனைக்கும் திண்ணையில் என்னருகே உறங்கியவர்கள் எனது சகோதரர்கள் மற்றும் ஒன்றுவிட்ட சகோதரர்கள்தான். ஒவ்வொரு வருடமும் கொக்கித்தேர் திருவிழாவை அசைபோட்டுப் பேசுபவர்கள்தான் எனக்குள் அந்த ஆசையை விதைத்தனர்.

இந்த வருடமாவது கூடவே அழைத்துச்செல்வார்கள் என்று நினைத்திருந்தேன். என்னை விட்டுவிட்டுப் போய்விட்டார்கள். உறங்கிக்கொண்டிருந்த என் அம்மாவிடம் 'அவர்கள் என்னைவிட்டுட்டு போய்ட்டாங்க' என்றேன்.

'திருவிழா கூட்டத்துல உன்னால சமாளிக்கமுடியாது. அதனால விட்டுவிட்டுப் போய்ட்டாங்க. போய்த் தூங்கு' என்றார்கள். அப்போது சுவரில் ஒரு மணி அடித்தது. மணி அதிகாலை 3.30. அரை மணிக்கான தனி பெல் அது. அப்படியென்றால் அவர்கள் 3 மணிக்குத்தான் கிளம்பியிருக்கிறார்கள்.

வேகமாகப் போனால் அவர்களைப் பிடித்துவிடலாம். ''இல்லம்மா நான் போய்த்தான் ஆகணும். நம்ம ஊர் திருவிழாவை நான் பார்த்திருக்கேன். ஆனா கொக்கித்தேர் திருவிழாவை நான் பாத்ததில்லை... நான் கண்டிப்பா போகணும் என்றேன். சரி இரு இதோ வர்றேன்'' என்றார் என் அம்மா.

தனித்த பயணம்

கோபத்தில் சூட்டாங்கோல் காய்ச்சி எடுத்து வந்தால் என்ன செய்வது.... இதுதான் சாக்கு என்று சட்டென்று வீட்டை விட்டுக் கிளம்பினேன்... ஒரு அம்பு பாய்வது போல என் நடை இருந்தது. வழியெங்கும் முகமறியா ஆட்கள்... ஆண்கள் பெண்கள், குழந்தைகள்.... ஏதோ ஒரு கூட்டத்தின் ஒரு ஆள்போல நானும் அவர்களுடன்...

இப்படிச் செல்பவர்கள் கொக்கித்தேர் திருவிழாவை மதியம் வரை கண்டுகளிப்பார்கள். அதன்பிறகு அந்த ஊரில் இருக்கும் ஒரு தியேட்டரில் தஞ்சம் புகுந்து ஒரு படம் பார்த்துவிடுவார்கள். மாலை 7 மணிக்கு நடைபெறும் இசைக் கச்சேரியை ரசிப்பார்கள். சாயங்காலமே வீடு திரும்புபவர்களும் இருப்பார்கள்.

இதை எங்கள் வீட்டின் ஆட்கள் சொல்லித்தான் எனக்கே தெரியும். நேற்று இரவு பேசும்போதுகூட அங்கு ரஜினியின் 'தாய்மீது சத்தியம்' திரைப்படம் ஓடுவதாகச் சொன்னார்கள். அப்படியொரு வாய்ப்பு கிடைத்தால் அதுவும் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் காசு.. அதுதான் பிரச்சினை... சரி திருவிழா மட்டும் பார்த்துவிட்டுத் திரும்பிவிடலாம் என்று மனம் ஆறுதல் கொண்டது.

இரு பக்கமும் வயல்வெளிகள், நீரோடைகள், பெரிய தரைப் பாலங்கள், சலசலக்கும் ஆற்றுநீரோட்டம் லட்சம் மரங்கள் சூழ்ந்திருக்கும் பனஞ்சாலைகள்...

நல்லவேளை திருவிழாவுக்கு நடக்கும் ஆட்கள் துணை கிடைத்தது. இல்லையெனில் இந்தக் காடும் லட்சம் மரங்கள் சூழ்ந்திருக்கும் பனஞ்சாலை கூட்டங்களும் அம்மாடி நினைத்தாலே குலை நடுங்குகிறது. என்றாலும் நிலவொளி ஒரு பெரும்பேரழகை சூழலெங்கும் படைத்திருந்தது கண்ணுக்கு இதமாக இருந்தது.

தறி வாத்தியார்

இந்த நேரத்தில் அந்த அதிசயம்... கைத்தறி வாத்தியார் தனது குடும்பத்துடன் கூட்டுச்சாலையில் தென்பட்டு நான் செல்லும் சாலையில் இணைகிறார். போய் அவர் கையை பிடித்துக்கொள்ளலாமா என்று தோன்றியது. அதற்குள் அது முடியாது என்று தோன்றியது. அவரது குடும்பமும் புடைசூழ அவர் அதோ முன்னே நடந்துசென்றுகொண்டிருக்கிறார்... எவ்வளவு ஒரு மோசம்...

ஆறாங்கிளாஸ் சேர்ந்த புதுசில்தான் நான் தறி வாத்தியாரைப் பார்க்கிறேன்.

புதிய பள்ளிக்கூடம், புதிய இடம் புதிய மாணவர்கள், தொடக்கப்பள்ளியை ஒப்பிடும்போது மிகவும் மாறுபட்ட மிகப்பெரும் மாணவர் சமுதாயம். கொஞ்சம் அச்சம், கொஞ்சம் பரவசம் எல்லாம் கலந்த புதுசான அந்த நாட்களிடம் இளங்குருத்தான மாணவ மணிகளிடம் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றும் தோட்டக்காரரைப்போன்று நடந்துகொண்டவர் இந்த தறி வாத்தியார்.

அந்த வயதில் நான் வரைந்த ஓவியங்களை ஒரு தாமரை மலரை எடுப்பது போல எடுத்துப் பார்ப்பார். பல ஆசிரியர்களையும் அழைத்துக் காட்டுவார்.

ஆறாங்கிளாஸ் ஏ, பி, சி வகுப்புகள் பிரிவதற்குள் ஒரேவகுப்பில் அனைவரையும் ஆடு மாடுகளைப் போல  அடைத்துவைத்து தறி வாத்தியாரைத்தான் பார்த்துக்கொள்ளச் சொன்னார்கள். கிளாஸ் பிரித்த பிறகுதான் கிளாஸ் டீச்சர் கையில் ஒப்படைப்பார்கள். அதன்பிறகுதான் மற்ற ஆசிரியர்களும் வகுப்பெடுப்பார்கள்.

காரேமூரே என்று கத்திக்கொண்டிருந்த புத்தம்புது சிறுவர்களை அவரால் எப்படி சமாளிக்கமுடியும். 'டேய் சத்தம்போடாம அமைதியாயிருங்கடா' என்று சொல்லிவிட்டு 'அப்பா முடியலப்பா' என்றுவிட்டு வெளியே போய்விடுவார். நான் இதுதான் தருணம் என்று பெரிய பெரிய ரீல்களாக சினிமா கதைகளைப்போல வரைந்து தெருவில் காட்டிக்கொண்டிருந்த காகித ஃபிலிம் சினிமா புரொஜக்டரைக் கொண்டுவந்து படம் ஓட்ட ஆரம்பித்தேன்.

நானே குரல் கொடுத்து நானே படம் ஓட்டி நானே இசை... டொடொய்ங்... டூர்ரர்ர்ர்.... டிடிங்டிடிங் ட்ரேன் ட்ரேன் ட்ரேன்.................... என்றெல்லாம் படக்கதைக்கான சூழ்நிலைக்கேற்ப இசையோசைகளை எழுப்பி பசங்களை என் பக்கம் திருப்பினேன். எனது கைக்குத்தல் அனிமேஷன் படங்களில் திளைத்தவர்கள் ஒரு வார்த்தையும் பேசாமல் அசையாமல் ரசித்தார்கள்.

ரீல்களை ஓட்டிக்கொண்டு பாத்திரங்களுக்கேற்ப குரல்கொடுத்துக் கொண்டிருந்த நான் திடீரென்று எட்டிப் பார்த்தபோது தறி வாத்தியார் இன்னபிற சில ஆசிரியர்களுடன் மாணவர்களுக்குப் பின்னால் பெஞ்சில் அமர்ந்து அவர்களும் எனது படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். எனக்கு என்ன செய்வதே என்றே தெரியவில்லை...

''தப்பா நெனைச்சுக்காதீங்க சார்... பசங்க பாக்கட்டுமேன்னுதான்...''

''ஏன் நாங்க பார்க்கக்கூடாதா ஓட்டுப்பா படத்தை ஓட்டு நாங்களும் பாக்கறோம்... அப்புறம் என்னாச்சி.. அவன் மாட்டிக்கிட்டானா'' என்று கேட்டார்கள்.

அதன்பிறகு தறி வகுப்பில் அவர் தந்த குறிப்பின் அடிப்படையிலான எனது கிராப் நோட்டில் நான் போடும் தறி டிஸைன்களை வெரிகுட் என்பார்.

அதுமட்டுமில்லை மாணவர்களிடம் அன்பு, மாணவர்களின் பிரச்சினைகளையெல்லாம் கேட்டறிந்து தீர்த்து வைப்பது போன்ற அவரது அனுசரனை எல்லோருக்கும் பிடித்த ஒன்று.

(2)

எதை எதையோ நினைத்தபடி 10 கிலோ மீட்டர் நடந்ததே தெரியவில்லை. அவ்வப்போது 'புறப்படடா தம்பி புறப்படடா இந்த பூமியில் தர்மம் நிலையாய் வாழப் புறப்படடா' நம்பிக்கை ஊட்டும் பாடல் வேறு... என் உதடுகள் முணுமுணுத்தன...

வழியில் ஒரு இடத்தில் ஏற்றம் இறைத்துக்கொண்டிருந்தார்கள். அங்கே போய் ஒரு குளியல். அப்புறம் மீண்டும் நடை.... விடியவிடிய திருவிழா ஊர் அவ்வளவு ஒரு அழகாக இருந்தது... உண்மையில் எதற்கு திருவிழாவுக்குச் செல்கிறேன். அங்கே எதற்காக சுற்றிச்சுற்றிவந்தேன்... அங்கு என்னஎன்ன பார்த்தேன்.

இதெல்லாம் ஒரு வரையறையும் இல்லை. நமக்குள் மற்றவர்கள் விதைக்கும் ஆசைகளே இப்படி கொழுந்துவிட்டு எரிகிறது என்று பிறகு புரிந்தது. ஆனால் அந்தத் திருவிழாவில் ஒன்று நடந்தது. என்னை திருவிழாவில் டீக்கடை வைத்திருந்த கண்ணம்மாக்கா தேடியிருக்கிறார்.

ஊரிலிருந்து டீக்கடைக்கு குட்டிவேனில் பால்வாங்கிச்செல்லும்போது எங்க அம்மா அழுதார்களாம்... இந்தப் பையன் சொல்லாம கொல்லாம கொக்கித்தேர்பாக்கப் போய்ட்டான். அவனோட அண்ணன்களையும் அக்காவையும் பாப்பானா இல்லையா தெரியலை... அதனால அவன்கிட்ட செலவுக்கு இந்தக் காசை கொடுத்துடு'' என்று அம்மா கொடுத்த பணத்தை கையில் வைத்துக்கொண்டு தேடியிருக்கிறார். தெப்பக்குளம் காணிக்கை மண்டபத்தில் பசி மயக்கத்தில் உறங்கிக்கொண்டிருந்த என்னை அவர் எப்படியோ கண்டுபிடித்துவிட்டார்.

புளிச்ச கீரை சாதம்

எழுப்பிக்கொண்டுபோய் தனது குடும்பத்தாருடன் என்னையும் சாப்பிட இணைத்துக்கொண்டார். காகிதப் பொட்டலங்களைப் பிரித்தார்கள். கல்யாணப் பூவரசம் இலையில் புளிச்சகீரையில் நல்லெண்ணெய் கலந்து பெரிய பெரிய அரிசி சாதத்தோடு பிசைந்திருந்தார்கள். உண்மையில் இப்படியெல்லாம் நான் சாப்பிட்டதில்லை.

வெளியூர் பயணம் என்றால் எலுமிச்சை சாதம், உப்பில் ஊறவைத்த மிளகாய் போட்டு தாளித்த தயிர்சாதம் அல்லது இட்லிக்கு பூண்டு சட்டினி இப்படித்தான்... ஆனால் என்னசெய்வது..

யாசிப்பவனுக்கு தேர்வுசெய்ய உரிமையில்லை என்ற வெளிநாட்டுப் பழமொழி ஒன்று சொல்கிறதாமே... சரியென்று கையை நீட்டினேன். கவளம் கவளமாய் உருட்டித் தந்தார்கள். அதுவும் பெரிய பெரிய உருண்டைகள்... ஆனால் சும்மா சொல்லக்கூடாது புளிச்சகீரை நல்லெண்ணெணெய் சாதத்துக்கு என்று ஒரு மகத்துவம் இருக்கத்தான் செய்கிறது....

அம்மா கொடுத்த பணத்தையும் கொடுத்தார். காசு கைக்கு வந்துவிட்டது... ''சரி நான் வர்றேங்க... ரொம்ப நன்றிங்க'' என்று விட்டு அவர்களிடமிருந்து நகர்ந்தேன்.

'தாய்மீது சத்தியம்' ஏற்கெனவே பார்த்த படம் என்றாலும் மீண்டும் ஒருமுறை பார்க்கும் ஆசை வந்தது. ஆனால் தியேட்டரில் குழுமியிருந்த கூட்டம் என்னை வெளியே துப்பியது.

பூதக்கண்ணாடி

திருவிழாவில் சற்றே சோர்வுடன் நடந்துகொண்டிருக்கும்போதுதான் என்னை தறி வாத்தியார் பார்த்துவிட்டார். அப்போது அவர் ஒரு மிகப்பெரிய வளையல் கடையில் குழந்தைகளுக்கு பொம்மைகள் வாங்கிக்கொண்டிருந்தார்.

''தம்பி தம்பி இங்க வாப்பா... அடடே என்ன திருவிழாவுக்கு வந்திருக்கியா... எப்படி இருக்கு திருவிழா? நீ மட்டுமா வந்திருக்கே... தனியாவா? ஆச்சரியமாயிருக்கே... சரி சரி ஒரு நிமிஷம் இரு ஏம்பா அந்த பூதக்கண்ணாடி என்ன விலை.. அதுவும் ஒண்ணு இப்படி எடுத்துக்கொடு... இந்தா இது என்னோட அன்பளிப்பு... இந்த ஃபிலிம் கார்டுகளையும் வச்சிக்கோ... சூப்பரா இருக்கும்... போட்டுப்பாரு... '' என்றார்.

நான் பூதக்கண்ணாடியில் போட்டுப் பார்த்த முதல் ஃபிலிம் கார்டே ''புறப்படடா தம்பி புறப்படடா'' -தாய்மீது சத்தியம் பாடல் காட்சியின் பிலிம் பிம்பங்கள்தான். தன் தாய்தந்தையரை கொன்றவர்களை பழிவாங்க ரஜினி வீறுகொண்டு புறப்படும் காட்சி...

முதலில் ஒரு கண்ணை மூடிக்கொண்டு பார்க்கிறேன். அப்படியே தியேட்டரில் படம் பார்ப்பதுபோல இருக்கிறது. அடுத்ததாக இரண்டு கண்களையும் திறந்துகொண்டும் ஒருகண்ணால் படம் பார்க்கிறேன். அதிலும் ஒரு சுகம்.

அவரிடம் இருந்து நன்றிப்பெருக்கோடு விடைபெற்று நடந்துகொண்டிருக்கும்போதுதான் என் உறவுகளை நான் மீண்டும் சந்திக்கிறேன். அவர்களுடன் அந்தக் கண்ணாமாக்கா.

******************

கனவுகளில் உயிர்வாழும் ஜீவராசி

சரி இப்போது எல்மருக்கு வருகிறேன். எல்மர் என்று இங்கு குறிப்பிடுவது 'தி டே வில் கம்' (2016) என்ற டேனிஷ் படத்தில் வரும் சிறுவனைத்தான். அவன்தான் அந்தப் 'புறப்படடா' பாட்டுக்கு மிகமிகப் பொருத்தமானவன். பள்ளிக்கூடத்தில் நமக்கு அமைந்த எந்த வாத்தியாரும் அமையப்பெறாதவன். அதேநேரம் கனவுகளிலேயே உயிர்வாழும் ஒரு ஜீவராசி அவன்.

வாழ்க்கை எவ்வளவு அதலபாதாளத்திற்சுச் சென்றாலும் வானில் பறந்துசெல்லும் விண்வெளி வீரனாக வேண்டும் என்ற தனது கனவுகளை விடாதவன். எவ்வளவு மோசமான சூழ்நிலையிலும் நம்பிக்கையும் கனவும் மட்டுமே அவனை வாழவைக்கின்றன. அதுவே மிக முக்கியமான நேரத்தில் முக்கியமான திசையை நோக்கிச் செல்லவும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணவும் உதவுகின்றன....

டெலஸ்கோப் திருடியதற்காக கோபன்ஹெகனில் சிறுவர் சீர்திருத்த மையத்தில் சேர்க்கப்படும் சிறுவர்களான எரிக்கையும் எல்மரையும் ஒரு பெண்மணி அவர்கள் படிப்பதற்கான புரவலராக பொறுப்பெடுத்துக்கொண்டு அவர்களை ஒரு நகரிலிருந்து வெகுதொலைவில் ஒரு வனாந்தரப் பகுதியில் உள்ள ஆதரவற்றவர்களுக்கான பள்ளிக்கூடத்தில் சேர்க்கிறார். அவர் என்னவோ நல்ல எண்ணத்தில்தான் சேர்க்கிறார்.

ஆனால் அந்தப் பள்ளி எவ்வளவு மோசமானது என்பது அவருக்குத் தெரியாது. ஒரு அற்புத அழகான வனாந்தரப் பகுதியில் ஒரு கோட்டை போன்ற பள்ளிக்கூடம் அது. ஆதரவற்றவர்கள்தானே அவர்களுக்கு நாம்தானே உதவுகிறோம் என்ற எண்ணமோ என்னவோ தெரியவில்லை. அப்பள்ளியில் சின்னச்சின்ன விஷயத்திற்கும் பெரிய பெரிய தண்டனைகள். அப்படியே தவறாக தெரிந்தாலும் அதற்கான காரணம் என்ன என்பதை தெரிந்துகொள்ளத் தயாராக இல்லாத பள்ளிக்கூட ஹெட்மாஸ்டர் ஒரு கொடுங்கோலன். அங்கு நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ளவர்களும் அவருக்குமேல்தான் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட சித்ரவதைக்கூடமாகவே அப்பள்ளி விளங்குகிறது.

ஒரு கட்டத்தில் அண்ணன் எரிக் தனக்கு 15 வயது ஆகிவிட்டது இப்பள்ளியிலிருந்து வெளியேற விரும்புகிறேன் என்று கேட்டபோது, அதற்கு மறுத்து 3 வருஷம் அப்ரண்டிஸ் கோர்ஸ் இருக்கு, 18 வயசுலதான் நீ வெளியே போக முடியும் என்று ஹெட்மாஸ்டர் கூற அவரது காரை சற்றே கீறிவிட அவனை அடித்து துவம்சம் செய்துவிடுகிறார்கள்.

புறப்படடா தம்பி புறப்படடா

கோமா நிலைக்கு சென்றுவிடும் எரிக் பள்ளிக்கூட மருத்துவமனைப் படுக்கையில் கிடக்கிறான். அவனை எப்படியாவது காப்பாற்றியே ஆக வேண்டும் என்று எல்மர் முடிவெடுக்கிறான். அவன் எப்படி கோபன்ஹெகன் செல்கிறான். எந்த அதிகாரிகளை சந்திக்க முயற்சிக்கிறான்... அவர்கள் வந்தபிறகு அப்பள்ளியின் நடவடிக்கைகள் என்னவாகிறது அண்ணனுக்கு உரிய சிகிச்சைகளுக்கு வழியேற்பட்டதா என்பதெல்லாம் மீதிக்கதை.

இப்பகுதியில் ஒரு அற்புதமான காட்சி. எரிக் போலவே எல்மரும் கோபக்காரனாகி விண்வெளி வீரனைப்போல வேஷம்போட்டுக்கொண்டு தோட்டத்தில் உள்ள ஹெட்மாஸ்டர் காரை அடித்துநொறுக்கி விட்டு மேல்நிலை நீர்நிலைத்தொட்டி உச்சிக்கு சென்ற அங்கிருந்து அவன் வானில் தோன்றும் நிலவை நோக்கிப் பாயும் காட்சி. உண்மையில் அவன் விரும்பும் உணர்வைப்போல சில நிமிடங்கள் வானை நோக்கி அவன் பறக்கத்தான் செய்கிறான். உண்மையில் அவன் கீழே மரக்கிளைகளின்மேல் விழுந்துவிடுகிறான் என்றாலும் அதற்கு இடைப்பட்ட நிமிடங்களில் நீர்த்தொட்டியிலிருந்து நிலவை நோக்கிப் பாயும்போது அவன் விரும்புவதைப்போலவே உருவாக்கப்பட்ட காட்சி மிகமிக அழகானது.

இப்படத்தில் முக்கியமாக அப்போலோ ராக்கெட் விண்வெளிக்குச் செல்லும் செய்திகள் தொடர்ந்து பல்வேறு இடங்களில் வருகின்றன. அதேநேரம் நீல் ஆம்ஸ்ட்ராங் 1968 டிசம்பர் 23-ல் நிலவில் காலடி எடுத்துவைக்கும் காட்சியை பள்ளியில் மாணவர்கள் தொலைக்காட்சியில் காண்கின்றனர். இத்தகைய வரலாற்றுச்செய்திகள் மட்டுமல்ல, இத்திரைப்படத்தின் மையக் கதாபாத்திரங்கள் அனுபவிக்கும் கொடுமைகள் அரங்கேறும் குட்ப்ஜெர்க் ஆதரவற்றோர் இல்லம் பற்றி வரும் சம்பவங்களும் உண்மையானதே.

******************

சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நான் படித்த பள்ளிக்கூடத்திற்கு சென்றேன். அங்கு தறி வாத்தியார் இல்லை. ரிடையர் ஆகிவிட்டாராம். சரி தறி ரூமையாவது பார்க்கலாம் என்று சென்றேன். 'தறி மெஷின்கள் உடைஞ்சிபோச்சி... அதை அப்புறப் படுத்திட்டாங்க. அங்க எல்லாம் கம்ப்யூட்டர்கள் போட்டிருக்காங்க...' என்றார் பியூன் சுப்பிரமணி அண்ணன்.

அதன்பிறகு எந்தத் தறி வாத்தியாரும் அப்பள்ளிக்கு வரவில்லை. கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் வந்திருக்கிறார்கள். அப்படியென்றால் நான் பார்த்தது கடைசி தறி வாத்தியாரை...! எனக்கு மெல்ல புரிய ஆரம்பித்தது. தறி வாத்தியார்களின் காலம் முடிந்துவிட்டது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x