Last Updated : 05 Apr, 2018 12:50 PM

 

Published : 05 Apr 2018 12:50 PM
Last Updated : 05 Apr 2018 12:50 PM

புத்தருடன் ஒரு காலை நடை: 6- மனிதனைப் பற்றிக் கவலைப்படு

''எண்ணங்களைத் தடை செய்யாதீர்கள். அது அப்படியே வந்து போகட்டும்!’’

- ஜென் குரு வூ லீ (Wu Li)

*** *** ***

’’நல்லவர்களுக்கு எந்த விதிகளும் தேவையில்லை;

ஏனெனில் அவர்கள் எல்லா தருணங்களிலும் பொறுப்புடன் இருப்பார்கள்!’’

- புத்தர்

*** *** ***

புத்தரை நோக்கி ஒருவன் ஓடோடி வந்தான்.

வந்தவன் ‘’என்னை தாங்கள் சீடனாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு நான் எல்லா தகுதிகளும் உடையவன். எனக்கு என்னவெல்லாம் தெரியும் என்பதை கேள்விகள் கேட்டு பரிசோதித்து என்னை ஏற்றுக்கொள்ளலாம்’’ என்றான்.

‘’அப்படியா... முதலில் உனக்கு என்னவெல்லாம் தெரியாது என்பதை தெரிந்துகொண்டு வா... அப்புறம் உன்னை எனது சீடனாக ஏற்றுக்கொள்வதைப் பற்றி நான் யோசிக்கிறேன்!’’என்றார்.

போனவன் போனவந்தான் திரும்பி வரவே இல்லை!

*** *** ***

''மவுனத்தை உங்களால் கேட்க முடியும்;

மவுனத்தை நீங்கள் பார்க்கவும் முடியும்;

மவுனத்தை நீங்கள் ருசிக்கவும்,

ஸ்பரிசிக்கவும் முடியும்!’’

- லாமா அனகாரிகா

*** *** ***

''கடவுளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்; மனிதனைப் பற்றி கவலைப்படு!’’

- கவுதம புத்தர்

*** *** ***

புத்தம் சரணம் கச்சாமி = புத்தரிடம் என்னை ஒப்படைத்துக் கொள்கிறேன்.

அதாவது, பகுத்தறிவு சிந்தனைக்கு என்னை நான் ஒப்படைத்துக்கொள்கிறேன்!

தம்மம் சரணம் கச்சாமி = அந்தக் கொள்கையில் என்றைக்கும் மாறாமல் இருப்பேன்.

சங்கம் சரணம் கச்சாமி = அந்த அமைப்புக்கு நான் என்றைக்கும் துரோகம் செய்யாதவனாக இருப்பேன்!

*** *** ***

எண்ணங்களில் கவனமாக இருங்கள்

அவை வார்த்தைகளாக வெளியேறுகின்றன

வார்த்தைகளில் கவனமாக இருங்கள்

அவை செயலாக உருப்பெறுகின்றன

செயல்களில் கவனமாக இருங்கள

அவை பழக்கமாக மாறுகின்றன

பழக்கங்களில் கவனமாக இருங்கள்

அவை ஒழுக்கமாக உயர்வு பெறுகின்றன

ஒழுக்கத்தில் கவனமாக இருங்கள்

அதுதான் உயர்ந்த வாழ்க்கையை உருவாக்குகின்றன!

- கவுதம புத்தர்

*** *** ***

புத்தர் வரலாறு- 6

இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு (கி.மு.563) ஒரு முழுநிலா நாளில் மகா மாயா தேவிக்கு அந்தக் குழந்தைப் பிறந்தது. தன்னுடைய தாய் வீடு இருந்த உலும்பினியில் சால மரங்கள் குடைபிடிக்கும் நிழல்வெளியில் அந்தக் குழந்தைப் பிறந்தது. மகிழ்ச்சியின் பிரகாரங்களில் எல்லாம் சிந்திக்கிடந்தன தாய்மையின் தொட்டில் கனவு.

அங்கே - கபிலவஸ்துவில் இருந்த சுத்தோதனருக்கு செய்தி பறந்தது. தான் தந்தையாகிவிட்டோம் என்கிற உணர்வின் வீதிகளில் அவர் மனசு றெக்கை அணிந்து பறந்தன. எல்லை உடைக்கும் மகிழ்ச்சி. பேரன்பின் ஒளி மழையில் நனைந்தார். உடனே புறப்பட்டு லும்பினிக்குச் சென்று தன் சிசுவின் பிஞ்சுப் பாதங்களில் முத்தமிடத் துடித்தார்.

தனது மகள் லும்பினியின் சால மரங்களுக்கு இடையே... தன்னுடைய கனவு மகனை பெற்றெடுத்துள்ளாள் என்கிற செய்தி கிடைத்த அடுத்த விநாடியே தன்னுடைய உற்றார் உறவினர்களை அழைத்துக்கொண்டு லும்பினிக்குச் சென்றார் அஞ்சனர்.

தனது பேரனைக் காணும் ஆசையோடு தனது தந்தையும், தனது மகனைக் காணும் பேரன்போடு தனது கணவரும் வந்து சேர்ந்ததைக் கண்ட மகா மாயா தேவி மனம் குளிர்ந்தாள். அந்தக் குளிர்ச்சியின் ஒளி கண்களில் மிதந்தது. தன்னருகே ஒரு பகலைப் போல ஒண்டிக்கிடக்கும் சிசுவை தூக்கி தனது கணவர் சுத்தோதனரின் உள்ளங்கைகளில் கொடுத்தாள் மகா மாயா தேவி

இரண்டு கைகளாலும் தனது குழந்தையை வாங்கிக்கொண்ட சுத்தோதனர் - அக்குழந்தையின் முன்நெற்றியில் மெல்லிய முத்தமொன்றை பதித்தான். பிஞ்சுப் பாதங்களை வருடிக்கொடுத்தான். உள்ளங்காலில் இதழ் பதித்தான். எங்கிருந்தோ எழுந்தன தந்தைமை வயலின் நாற்றுப் பாடல்.

அஞ்சனரும் பேரனை அள்ளியணைத்துக் கொஞ்சினார். தனது மகள் மகா மாயா தேவியின் நீண்ட நாள் தாய்மையாகும் கவலையை அடியோடு தூர விரட்டியடித்த பேரனை வாஞ்சையுடன் பார்த்தார். மகிழ்வு நிகழ்வு.

சாக்கிய இனத்தில் ஒரு குழந்தை பிறந்தால் - அதற்கென்று ஆர்ப்பாட்டமான ஒரு விழாவை அவர்கள் கொண்டாடுவது வழக்கம். அது அவர்களின் பண்பாட்டு பெருமுழக்கமாகவே இருக்கும்.

சுத்தோதனர் தனது மனையாள் மகா மாயா தேவியையும், தனது குழந்தையையும் தன்னுடைய கபிலவஸ்து நகருக்குச் செல்ல வேண்டும் எனப் பிரியப்பட்டார்.

மகளையும் பேரக்குழந்தையையும் கொஞ்ச நாட்கள் கூட தங்களோடு வைத்துக்கொள்ள முடியவில்லை என்று அஞ்சனருக்கு சிறு வருத்தம்தான். என்ன செய்வது ஒரு பெண்ணைப் பெற்றெடுத்து ஆசை ஆசையாக வளர்த்தெடுத்து... அவளது சகல உணர்வுகளுக்கும் ஆறுதலாகவும், அரவணைப்போடும் இருந்து வந்தாலும், திருமண உறவுக்குப் பிறகு அவளுக்கு கணவன் இருக்கிற இடம்தானே சொர்க்கமாகிப் போகிறது.

சிறு வருத்தத்தை தனக்குள்ளேயே மறைத்துக்கொண்டு அஞ்சனர் - தனது மகளுக்கும் மருமகனுக்கும் பிரியா விடை அளித்தார்.

சுத்தோதனர், தனது மனைவி, குழந்தையுடன் கபிலவஸ்துவை நோக்கிப் பயணப்பட்டார்.

*** ***

சுத்தோதனர் - லும்பினியில் இருந்து தனது மனைவி மகா மாயா தேவியுடனும் தனது குழந்தையுடனும் சென்று கபிலவஸ்துவை அடைந்தபோது - தங்கள் சாக்கிய இனத்துக்கு புதிய உறுப்பினராக வந்து சேர்ந்த அக்குழந்தையை வரவேற்க - கபிலவஸ்து நகரத்தின் நுழைவாயிலிலேயே பலர் காத்திருந்தனர்.

அவர்கள் தங்களின் கைகளில் தங்கள் நிலங்களில் விளைந்த காய் - கனிகளை வைத்திருந்தனர்.

சிறுவர் சிறுமிகள் தங்கள் கைகளில் அன்றலர்ந்த பூங்கொத்துகளை சுமந்திருந்தனர். எல்லா கண்களிலும் வரவேற்பு வானவில்.

இது தவிர அன்றைய சமூகத்தில் சாக்கிய இனத்தினருடம் சுமுகமான உறவு நிலையில் இருந்த - பக்கத்து பக்கத்து பிரதேசங்களைச் சேர்ந்த கோலியர்கள், மள்ளர்கள், விர்ஜியர்களும் சுத்தோதனர் - மகா மாயா தேவி இருவருடைய சந்தோஷத்தில் பங்குகொள்ள திரண்டு வந்தனர். சில செல்வந்தர்கள் அணி, மணிகளுடன் வந்திருந்தனர்.

’கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு’ என்கிற வள்ளுவ வரிகளுக்கு அன்றைய மனிதர்கள் இலக்கணமாகவும் இலக்கியமாகவும் இருந்தனர். ஊர் கூடி தேர் இழுப்பதைப் போல அன்றைய மக்கள் ஊர் கூடி உறவை இழுத்தார்கள்.

- இன்னும் நடப்போம்...

மானா பாஸ்கரன், தொடர்புக்கு: baskaran.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x