Published : 20 Mar 2018 08:05 PM
Last Updated : 20 Mar 2018 08:05 PM

ரஜினி அரசியல்: 38-நதிநீர் இணைப்புக்கு ரூ.1 கோடி

சிவானந்தா குருகுலத்தைச் சேர்ந்த ராஜாராம், ஆதரவற்ற சிறுவர்-சிறுமிகளுடன் வந்து ரஜினியை வாழ்த்தினார். அயனாவரத்தைச் சேர்ந்த ஊனமுற்ற இளைஞர் மேடைக்கு தவழ்ந்தபடி வந்து ரஜினியை வாழ்த்தினார். இவர்கள் தவிர ரஜினியின் உண்ணாவிரதத்தை வாழ்த்த ஆயிரக்கணக்கான பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் மேடைக்கு வந்து பாபா முத்திரையைக் காண்பித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி சென்றபடி இருந்தனர்.

அதேபோல் ஆயிரக்கணக்கான ரசிகர்கள், பொதுமக்கள் வரிசையாகத் தடுப்புகள் வழியே நின்று ரஜினிக்கு சால்வையை அணிவித்தும், மாலைகள் அணிவித்தும் வாழ்த்தியபடி சென்று கொண்டிருந்தனர். இன்னொரு பக்கம் கல்லூரி மாணவிகள் பெரும் கூட்டம் கூட்டமாக வந்து ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தபடி சென்றனர். மொத்தம் 9 மணி நேரம் மேடையில் உண்ணாவிரதம் இருந்தார் ரஜினி.

பொதுவாக உண்ணாவிரதம் இருப்பவர்கள் வழக்கமாக தண்ணீர் மட்டும் குடிப்பார்கள். அதைக்கூட இங்கே ரஜினி செய்யாததையும், இயற்கை உபாதை கழிக்கக்கூட மேடையை விட்டு நிமிட நேரம் கூட அகலாமல் இருந்ததையும் வியப்பு பொங்க அனைவருமே பார்த்தனர். சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளவரான ரஜினி அதையும் செய்யாமல் இருந்தது அதை விட பலருக்கும் வியப்பு.

தன்னை சந்திக்க வரும் பிரமுகர்களின் வாழ்த்தை இன்முகத்துடன் பெற்றுக்கொண்டு, அனைவருக்கும் கை குலுக்கி நன்றி தெரிவிப்பதையும் தவறாமல் செய்தார். பிற்பகலில் வெயில் கடுமையாக அடித்த போதும், அமர்ந்த இடத்தை விட்டு அவர் நகரவில்லை. சிலர் நிழலில் உட்காரச் சொல்லி அவரிடம் வலியுறுத்திய போதும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

ரசிகர்கள் பலர் அவர் காலில் விழுந்து ஆசி பெற்றுச் சென்றனர். குழந்தைகளோ அவரின் கன்னத்தில் முத்தமிட்டுச் சென்றனர். பாரதிராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரசிகர்கள் கூட்டத்தில் கோஷங்களும் அவ்வப்போது ஒலித்தன. இந்த உண்ணாவிரதத்தின் அத்தனை அசைவுகளையும் பல்வேறு தொலைக்காட்சி சேனல்களும் நேரலை செய்தன. சரியாக மாலை 5 மணிக்கு இப்போது ரஜினிகாந்த் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வார் என்று மேடையில் அறிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து நடிகர்கள் சரத்குமாரும், நெப்போலியனும் நடிகை ரேகாவின் மகள் அபிரைனாவின் கையில் ஆரஞ்சு பழச்சாற்றை கொடுத்து ரஜினிகாந்திடம் கொடுக்கும்படி சொன்னார்கள். சிறுமி அபிரைனா ரஜினிகாந்திடம் பழச்சாறை கொடுக்க, அதை ரஜினிகாந்த் அருந்தி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். அதன் பின்னர் மேடை முன்பு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

''இங்கே வந்திருக்கும் என்னை வாழவைக்கும் தமிழ்மக்களே, ரசிகப்பெருமக்களே, திரை உலகைச் சேர்ந்த நண்பர்களே உங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இங்கே வந்து என்னை வாழ்த்திய அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் மனமார்ந்த நன்றி. இவ்வளவு சிறப்பாக இந்த உண்ணாவிரதம் நடத்த உதவிய காவல்துறைக்கும் என் பாராட்டுகளும், நன்றிகளும். உண்ணாவிரதத்திற்கு இந்த இடத்தை அளித்த தமிழக அரசுக்கு நன்றி.

தென் இந்தியாவின் மூத்த தலைவராக இருக்கும் டாக்டர் மு.கருணாநிதி இங்கே கட்டாயம் வாழ்த்த வருவேன் என்று கூறினார். நான்தான் வரவேண்டாம் என்று கூறிவிட்டேன். அவர் வாழ்த்துக் கடிதமும் அனுப்பியிருக்கிறார். அவருக்கும் எனது நன்றி. இந்த உண்ணாவிரதம் இங்கே நல்ல முறையில் நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் போராட்டம் வெற்றியா தோல்வியா? என்பது கர்நாடகத்தின் கையில் உள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் கையில் உள்ளது.

மத்திய அரசு என்ன செய்யுமோ? எப்படிச் செய்யுமோ? தெரியாது. ஆனால் கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட்டே ஆக வேண்டும். இது சுப்ரீம் கோர்ட் உத்தரவு. தண்ணீர் வந்தாக வேண்டும். சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி தண்ணீர் கொடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி அரசிடம் மனு கொடுக்கச் செல்கிறேன்!'' என்று கூறி விட்டு ரஜினிகாந்த் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்குப் புறப்பட்டார்.

ரஜினியுடன் நடிகர்கள் 3 ஆம்னி பஸ்களில் சென்றனர். முதலில் புறப்பட்டுச் சென்ற பேருந்தில் ரஜினிகாந்துடன் நடிகர்கள் சரத்குமார், நெப்போலியன், பார்த்திபன், அப்பாஸ், விஜயகுமார், அர்ஜூன், அருண்குமார், கங்கை அமரன், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், படத் தயாரிப்பாளர் கே.ஆர், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட 19 பேர் இடம் பெற்றனர்.

போலீஸ் ஜீப் முன் செல்ல இந்த 3 பஸ்களும் அணிவகுத்து வந்தன. வழிநெடுகிலும் ரசிகர்கள் ஆராவாரம் செய்து வாழ்த்தி அனுப்பினர். மாலை 5.35 மணிக்கு இந்த பஸ்கள் கவர்னர் மாளிகைக்கு வந்தன. ரஜினிகாந்த், சரத்குமார், நெப்போலியன் உள்பட 20 பேர் மட்டும் கவர்னர் மாளிகைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அங்கே கவர்னர் ராமமோகனராவ் இல்லாததால் அவரது செயலாளர் ஷீலா பிரியாவை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றைக் கொடுத்தார்.

'தண்ணீருக்காக தவிக்கும் தமிழக மக்கள் சார்பாகவும், குறிப்பாக தமிழக விவசாயிகள் சார்பாகவும், தங்களிடம் இந்த மனுவை சமர்ப்பிக்கிறோம்!' எனத் தொடங்கும் அந்த மனுவின் வாக்கியங்கள் பின்வருமாறு நீண்டது.

'காவிரி நீர் என்பது ஒரு மாநிலத்திற்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கு இடையே ஓடுகிற நதி. இரண்டு மாநிலங்களுக்கும் பொதுச் சொத்து என்பதுதான் உலக நீதி. பல்லாண்டு காலமாக இந்த சட்ட விதிதான் காவிரி நீரைப் பயன்படுத்திக் கொள்வதில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக சட்ட நியதிகள், இந்திய அரசியல் சட்ட அமைப்பு விதிகள், இயற்கை நீதி ஆகியவற்றை கருத்தில் கொண்டே உச்ச நீதிமன்றம் காவிரி நீர் பிரச்சினையில் உத்தரவு பிறப்பித்தது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு எல்லோரையும் கட்டுப்படுத்தும் உத்தரவு. சட்டத்தை விட உயர்ந்தவர்கள் யாருமில்லை. எல்லோரையும் விட உயர்ந்தது சட்டம். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த வேண்டிய கடமை கர்நாடக அரசுக்கு உள்ளது.

கர்நாடக அரசு அந்த உத்தரவை அமல்படுத்துகிறதா இல்லையா என்பதைக் கண்காணிக்கும் கடமை மத்திய அரசுக்கும் உள்ளது. ஒரு மாநில அரசு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த வேண்டுமென்று கட்டளை பிறப்பிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு 256-வது பிரிவின் கீழ் உள்ளது. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உரிய கட்டளைகளை பிறப்பிக்க வேண்டும். தமிழ்நாடு ஆளுநர் என்ற முறையில் தாங்கள் எங்களுடைய உணர்வுகளை மத்திய அரசுக்கு தெரியப்படுத்தி உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை கர்நாடக அரசு அமல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மூலமாக உடனடியாக செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்!' என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது.

கவர்னர் மாளிகையில் கோரிக்கை மனுவை கொடுத்து விட்டு திரும்பிய ரஜினிகாந்த் பின்னர் நிருபர்களை சந்தித்துப் பேட்டியளித்தார்.

''உண்ணாவிரதத்திற்கு இந்த அளவு ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்த்தீர்களா?'' எனக் கேள்வி கேட்டபோது, ''நான் இந்த வரவேற்பை எதிர்பார்த்தேன். தமிழ் மக்களை பற்றித் தெரியும். முதலில் என்ன நடந்தது; அப்புறம் என்ன நடந்தது என்பதையெல்லாம் மறந்து விடலாம்!'' என்று கூறிவிட்டு, முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும் என்று குறிப்பிடும் வகையில் 'கதம் கதம்' என்றார்.

அடுத்த என்ன திட்டம் என்று கேட்டபோது, ''பிரதமர் வந்ததும் தமிழ் திரை உலகத்தினருடன் சென்று பார்ப்பேன். கன்னட திரை உலக நண்பர்களையும் கூட்டிச் செல்ல முயற்சிப்பேன். சுப்ரீம் கோர்ட் உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்பேன். இது எல்லாம் தற்காலிகமான ஒன்றுதான். முக்கியமாக கங்கை, காவிரி இணைப்பு திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் இந்திய மக்களுக்கு ஒரு பொற்காலத்தை கொண்டு வரவேண்டும். கங்கை, காவிரி இணைப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 40-50 ஆண்டுகள் கூட இதற்கும் ஆகலாம். பாரதியார் கூட இந்த திட்டத்தைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்.

இந்தத் திட்டத்தை அமல்படுத்தினால் அமெரிக்கா மாதிரி சுவிட்சர்லாந்து மாதிரி ஆகும். 30 ஆண்டானாலும் பரவாயில்லை. அந்த நதியை இணைக்காவிட்டால் தென்னிந்திய நதிகளையாவது இணைக்க வேண்டும். எவ்வளவு பணம் என்பதைப் பற்றி கவலைப்படாதீர்கள். நாளைக்கே அறிவித்தால் நாளையே ரூ.1 கோடியை என் பாக்கெட்டில் இருந்து தருகிறேன். பணத்தைப் பற்றி அரசியல்வாதிகள் கவலைப்பட வேண்டாம். பணம் வேண்டுமென்றால் மக்களிடம், எங்களிடம் விடுங்கள் பார்த்துக் கொள்கிறோம்!'' என்று பொங்கினார்.

-பேசித் தெளிவோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x