Last Updated : 01 Mar, 2018 07:47 PM

 

Published : 01 Mar 2018 07:47 PM
Last Updated : 01 Mar 2018 07:47 PM

வரவேற்கும் மனநிலை குறைவு... வசைபாடும் மனநிலைதான் அதிகம்: ஒரு பின்னூட்ட வாசகனின் கவலைகள்

மனிதர்கள் உடனான சந்திப்பிலும், புத்தக வாசிப்பிலும் நிலவும் அணுகுமுறை எனக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.

நண்பர்கள் சந்திப்பின்போது இன்னொரு நபர் குறித்த கருத்து பெரும்பாலும் விரும்பும்படியாக, மகிழும்படியாக சொல்லப்படுவதே இல்லை. சின்னச் சின்ன விஷயங்களிலும் நாம் விமர்சன விதையைத் தூவி விடுகிறோமே என்ற சந்தேகம் எழுகிறது.

மனிதர்களிடத்தில்தான் இந்தப் பழக்கம் புரையோடிக் கிடக்கிறது என்று நினைத்தால் அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை இணையம் எனக்கு கற்பிக்கிறது. புத்தக மதிப்புரை, இணையதளக் கட்டுரைகள், செய்திகள் மீதான வாசகர்களின் கருத்துகளிலும் இதே அதிருப்தியும், எதிர்ப்பும் இருந்து வருவதை ஆழமாக கவனிக்க முடிகிறது.

எதிர்மறை கருத்து பேசியே, எழுதியே யாரும் பிரபலமாகத் துடிப்பதில்லை என்பதில் ஓரளவு உண்மையும் இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், நாட்டின் எந்த நடப்புச் செய்திக்கும் ஆற்றும் எதிர்வினைகள் சற்று வித்தியாசமாக இருப்பதைக் காண முடிகிறது. அவற்றை ஒரே வகையில் அடக்க முடியவில்லை. ஆனால் பெரும்பாலும் அதிருப்தி மனநிலையின் வெளிப்பாடாக இருப்பதைப் பார்க்க முடிகிறது.

ஆக்கபூர்வமான செய்திகள் என்றாலும் ஆக்கபூர்வ வாய்ப்பு நிகழ்த்தமுடியாத எதிர்மறை சிந்தனை உள்ளவர்களை அங்கே கொண்டுவந்து அவர்களை திட்டிதான் கமெண்ட் எழுதப்படுகிறது. குறிப்பிட்ட அந்த செய்தி ஆக்கபூர்வமானது எனும்போது அது எப்படி சாத்தியப்பட்டது என்று அறிந்துகொள்ளும் ஆவலில் அல்லது அதை சாத்தியப்படுத்தியவர்களின் மனம்குளிர கருத்து பதிவது மிகவும் குறைவாக உள்ளது.

சார்புகள் அற்ற பொதுவான வாசகர்களும் கணிசமான அளவில் இருப்பதை பார்க்க முடிகிறது. ஆனால் இவர்கள் மிகவும் குறைவு. பெரும்பாலான வாசகர்கள் பொதுவான தளத்திலிருந்து கருத்துப் பதிபவர்கள் அல்ல என்பதை நாம் உணரவேண்டும்.

ஏதாவது ஒரு சார்பிலிருந்து அவர்கள் தங்கள் கருத்துகளைப் பதிக்கின்றனர். அது நேரடியாக அவர்கள் விமர்சிக்கத்தகுந்த அமைப்போ இயக்கமோ கட்சியோ மதம் சார்ந்த செய்திகள் இல்லையென்றாலும் கூட எந்தவகையான செய்தியின்கீழும் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டுமென்று அவர்கள் நினைக்கின்றனர். ஒருவகையில் இது தவிர்க்கமுடியாதது.

உதாரணமாக பாஜக இந்தியாவை ஆள்கிறது. அதன் செயல்களை விமர்சிப்பது ஊடகங்களின் தார்மிகக் கடமை என்ற அளவில் வரும் கட்டுரைகளுக்கு வரும் எதிர்வினைகள் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளமுடியாத மனநிலையைக் காண முடிகிறது. அதேநேரம் மோடி, ராகுல் காந்தியோ கூட்டத்தில் பேசும் செய்தியை வெளியிட்டால் அவர்கள் பேசும் பிரச்சினைகளுக்கு மாற்றுக் கருத்துகள் முன்வைப்பதைக் காட்டிலும் உடனே தனிமனித தாக்குதலில் இறங்க கீபோர்டில் கைகள் பரபரப்பதைக் காண முடிகிறது.

நாடு முழுவதும் நடந்துவரும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் செய்தியாக வரும்போது இதை வெளியிடுவதில் 'உங்கள் நோக்கம் புரிகிறது' என்று கருத்து போடுவது... போன்ற தான் சார்ந்த இயக்க விசுவாசம் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அதுவே வசைபாடலாக மாறும்போது அந்த விசுவாசிகள் எல்லைமீறிவிடுகிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

அதேபோல பாலேஸ்வரம் முதியோர் விடுதியில் நடப்பவை பற்றி வெளிவரும் செய்திகள் க்ரைம் வகை சேர்ந்தவை. அனைத்து ஊடகங்களும் இதை வெளியிடுவது கடமை. ஆனால் ஏதோ உள்நோக்கத்தோடு இச்செய்தியை வெளியிட்டதாகவே சில வாசகர்கள் விமர்சிப்பதைப் பார்க்க முடிகிறது.

நடிகை ஸ்ரீதேவிக்கு அரசு மரியாதை என்ற செய்திக்கு குடித்துவிட்டு இறந்தவருக்கு எதற்கு மரியாதை என்கிற ரீதியான வாசகர் கருத்துகளையும் காணமுடிகிறது. மாறிவரும் உலகத்தில் கலைவெளிப்பாடு என்ற வகையில் சினிமாவுக்கான இடம் மிகப் பெரியது. தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகை ஸ்ரீவித்யா மறைவுக்கு கேரள அரசு மரியாதை செய்தது. இத்தனைக்கும் அது ஒரு இடதுசாரி அரசு.

இறந்தவர்மீது தனிமனித தாக்குதல் நிகழ்த்துவது எவ்வகையிலும் சரியானது அல்ல. சிவாஜி கணேசனை அமெரிக்காவில் மார்லன் பிராண்டோ சந்தித்து பாராட்டிய நிகழ்ச்சிகள் எத்தனை பேருக்குத் தெரியும்- அன்றைய கெய்ரோ அதிபர் நாசர் சிவாஜியின் 'சிவந்தமண்; படம் பார்த்து விட்டு நேருவிடம் சிவாஜியை எங்கள் நாட்டுக்கு அனுப்புங்கள், அவரை நாங்கள் பாராட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட நிகழ்வுகள் எல்லாம் நடந்தன.

ஆனால், 'சிவாஜியை எனக்கு பிடிக்காது அவரை யார் பாராட்டினாலும் எனக்கு அவசியமில்லை' என்ற மனநிலை இருந்தால் எதுவும் சொல்வதற்கில்லை.

சிரியா பற்றி எழுதினால் ஏன் இலங்கை பற்றி பேசவில்லை என்று கேட்பது. சினிமா செய்திகள் கொடுத்தால் ஏன் விவசாயத்தைப் பற்றி எழுதவில்லை என்று கேட்பதற்கென்று சிலர் இருக்கிறார்கள். சரி விவசாயம் கட்டுரைகளின் இவர்கள் எதிர்வினையைத் தேடிப்பார்த்தால் அதுவுமில்லை.

கிரிக்கெட் பற்றி எழுதினால் ஏன் டென்னிஸ் பற்றி எழுதவில்ல என்று கேட்பது. டென்னிஸ் பற்றி செய்தி வரும்போது இதுபோன்ற வாசகர் அதற்கு முக்கியம் கொடுத்தால் டென்னிஸ் பற்றி செய்திகள் அதிகம் வரத்தானே செய்யும்?

தேசக்கட்டுமானத்தை உலகிற்கு பறைசாற்றும் கிரிக்கெட் பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் வேண்டியதுதானே? பொங்கல்விழாக்களின்போது விளையாடும் தமிழர்களின் தொன்ம விளையாட்டான ஜல்லிக்கட்டுப் பிரச்சனையை கலாச்சார பிரச்சனையாக்கியதில் ஊடகங்களின் பங்களிப்பை மறந்துவிடமுடியுமா?

இழிசொல், வசை பிரயோகக் கருத்துக்கள் பெரும்பாலும் வெளியிடப்படுவதில்லை. அடேய் என்று ஆரம்பித்து அர்ச்சனை செய்பவர்கள் இருக்கிறார்கள். நாம் சார்ந்த அமைப்பையும் இயக்கங்களையும் கட்சிகளையும் தாண்டி நமக்கென்று சுயாதீனப் பார்வை உண்டு என்பதை ஏனோ அவர்கள் மறந்துவிடுகிறார்கள். மொழியை நேசிப்பவர்கள் என்று கூறிக்கொள்பவர்களின் இத்தகைய பிரயோகங்கள் நமது மொழிக்கு செய்யும் மிகப் பெரிய கண்ணியக்குறைவு என்பதை நினைவில் இருத்திக்கொள்வது நல்லது.

தவிரவும், செய்திக்கு தொடர்பே இல்லாமல் எதையாவது வம்புக்கிழுக்க முற்படும் கருத்துகள் வெளியிடப்படுவதில்லை. அதேநேரம் நேரடியாக விமர்சிக்கும் கருத்துகள் வெளியிடப்பட்டே ஆகவேண்டும். ஆனால் அந்த விமர்சனம் ஆக்கபூர்வமானதாக இருக்கிறதா என்ற கேள்வியும் மிகமிக முக்கியமானது.

இப்படித்தான் வாசகர் கருத்து எழுத வேண்டும் என்று யாரையும் கட்டுப்படுத்துவது அல்ல நமது நோக்கம். ஆனால் எல்லாவற்றிற்குமே தனிமனித பெருவெறுப்போடு வெப்பத்தை உமிழும் மனநிலை தேவைதானா என்று நம்மைநாமே கேட்டுக்கொள்ளவேண்டியுள்ளது. உண்மையில் அனைவரும் இப்படி கிடையாது.

ஒரு பிரச்சினை சார்ந்து உண்மையிலேயே கோப்படுவது தார்மீக நெறியில் அது மிகமிக முக்கியமானது. அதில் எந்த தவறும் இருப்பதாகத் தெரியவில்லை.

சாதிக்கத் துடிக்கும் முதல்தலைமுறையினர் பற்றிய செய்திகள் ஆகட்டும் அரிய கண்டுபிடிப்புகளில் இறங்கியவர்களின் முயற்சிகள் பற்றிய செய்திகள் ஆகட்டும் முன்னுதாரணமான கிராமத்து சாதனைகள் ஆகட்டும் அதற்கு வரும் வாசகர்கள் கருத்துகள் நம்மை பெருமையடையச் செய்கின்றன. உத்வேகம் அளிக்கின்றன.

ஆனால் அது மிகமிகக் குறைவுதான். பெரும்பாலும் அதற்கான எதிர்வினைகள் தாமதமாகவே வருகின்றன. அரசியல் கருத்துகளுக்கு வருவதுபோல உடனடியாக கருத்துகள் வருவதில்லை. அவை உடனடியாக வரும்போது எங்கோ இருந்துகொண்டு சாதித்த அந்த வெளிஉலகம் காணக் காத்திருக்கும் அந்த உள்ளங்களுக்கு ஊக்கத்தைத் தருகின்றன. என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

பலபடிமேலேபோய் எத்தகைய உணர்வுபூர்வ தகவலாகப் புரிந்துகொள்ளப்படவேண்டிய செய்திகள் என்றாலும்கூட மிக கவனமாக உணர்ச்சிவசப்படாமல் அதில் கோபம் கொப்பளித்தாலும் கூட தங்கள் கருத்துகளை அனைவரும் ரசிக்கும்படி எழுதுகின்றனர் என்பதையும் இங்கு தவறாமல் சொல்ல வேண்டியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x