Published : 01 Feb 2018 11:57 AM
Last Updated : 01 Feb 2018 11:57 AM

எழுத்தாளர் கமலாதாஸ் பிறந்த நாளுக்கு டூடுல் வெளியிட்டு சிறப்பு செய்த கூகுள்

மலையாள இலக்கியத்தில் சாகித்ய அகாடெமி விருதுபெற்ற கமலாதாஸின் இலக்கிய பணியைப் பாராட்டி 13 நாடுகளில் கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டுள்ளது.

மலையாள நவீன இலக்கியத்தில் தனது துணிச்சலான எழுத்துக்கள் மூலம் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துக்கொண்ட கமலாதாஸ் கேரள மாநிலம் மலபார் மாவட்டத்தில் உள்ள புனையூர்க்குளம் என்ற கிராமத்தில் 1934ல் மார்ச்சு 31ல் பிறந்தவர். இவரது இயற்பெயர் கமலா சுரயா.

இவரது தந்தை வி.எம்.நாயர் கல்கத்தாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேய நிறுவனம் ஒன்றில் பணியாற்றி பின்னர் கேரளாவில் மாத்ரூபூமி பத்திரிகையை நிறுவியவர். இவரது குடும்பத்தினர் பலரும் ஆங்கிலம், மலையாளம் போன்றவற்றில் புலமையும் இலக்கிய பின்புலமும் பெற்றிருந்ததால் மாதவிக்குட்டிக்கு இயல்பாகவே எழுதுவதில் ஆர்வம் பிறந்தது.

மாதவிக்குட்டி என்ற புனைப்பெயரில் நாவல், சிறுகதைகள், பத்தி எழுத்துக்கள் என எழுத ஆரம்பித்தார். அவற்றில் முக்கியமானது இவரது 'என் கதை' எனும்சுயசரிதை நூலாகும்.

இவரது இலக்கியப் பணிகளை பாராட்டி கேரளாவில் உள்ள கள்ளிக்கோட்டை பல்கலைக்கழகம் இவருககு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது.

இது தவிர, கேரளாவின் வயலார் விருது, எழுத்தச்சன் விருது ஆகியவைகளையும் பெற்றிருக்கிறார். ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்த கமலாதாஸின் ஆங்கிலக்கவிதைகளுக்காக இந்திய அரசு சாகித்ய அகாடெமி விருதும் கொடுத்து கவுரவித்தது.

சொன்னார்கள் அவர்கள்

சாரியை அணிந்து கொள்.

பெண்ணாக ஒழுங்காக இரு.

மனைவியாக இருந்து கொள்.

தையல் வேலையைக்கற்றுக்கொள்.

சமைத்துப்போடு.

எப்போதும் வீட்டு வேலையாட்களை

அதட்டிக்கொண்டிரு

இதற்குள் உன்னைப்பொருத்திக்கொள்

எமது சன்னல்கள் வழியாகப் பார்க்காதே’’

போன்ற கவிதைகளில் தனது பெண்ணிய நிலைப்பாட்டை கமலாதாஸ் பறைசாற்றினார். எழுத்தாளராக மட்டுமின்றி தனிப்பட்ட வாழ்க்கையிலும் எழுத்தைப் போலவே வாழ்ந்த கமலாதாஸ் தனது 75வயது வயதில், மே 31, 2009 அன்று காலமானார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x