Last Updated : 22 Jan, 2018 04:08 PM

 

Published : 22 Jan 2018 04:08 PM
Last Updated : 22 Jan 2018 04:08 PM

புத்தகக் காட்சி: ஓர் அரங்கத்தைத் தெரிஞ்சுக்கலாமா?- தும்பி

புத்தகக் காட்சி பாதைகளில் நடந்து வரும்போது கண்ணில் பட்டது ஒரு தும்பி. அதாங்க தும்பின்னு ஒரு புத்தக அரங்கு. அங்கு காகித பொம்மைத் தும்பிகள் நிறைய அரங்கினுள் ஆடிக்கொண்டிருந்தன.

தும்பி அரங்கிலிருந்த ஒரு நடை வண்டியைக் கண்டதும் பெற்றோருடன் வந்து கொண்டிருந்த குழந்தை அவர்களைவிட்டுவிட்டு ஓடிவந்தது. குழந்தை அதன்மேல் ஏறி அமர்ந்துகொண்டது, அப்படியும் இப்படியும் ஆடத் தொடங்கியது.

ஸ்டால் முழுவதும் புத்தகங்களை அடுக்கிவைத்து நிறைக்காமல் தும்பி சிறுவர் மாத இதழை அங்கங்கே என வைத்திருந்தனர். என்ன இது வித்தியாசமா இருக்கே எனத் தோன்ற அருகில் சென்றோம். தும்பி எனும் சிறுவர் இதழுக்கான அரங்கு இது. தும்பி இதழின் விலை ரூ.80 ரூபாய். 12 இதழ்களின் சந்தாத் தொகை 800 ரூபாய்.

தும்பி அரங்கில் இதழ் சார்ந்த தொடர்புப் பிரிவில்  இயங்கிவரும் முத்துவிடம் பேசினோம்.

தும்பி ஒரு இதழின் விலை ரூ.80/- விலை ரொம்ப அதிகமாக இருக்கே? ஆண்டு சந்தா ரூ.800 அப்படிங்கறது வாய்ப்பே இல்லை...குழந்தைங்க வாங்குவாங்கன்னு நினைக்கறீங்களா?

இல்லை சார்... இங்க எந்த ஒரு காரியமும் தனியா யோசிக்கக் கூடாது. தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்குகோ அல்லது ஒரு குழந்தைகள் நூலகத்துக்கோ போகவேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். இங்க பாருங்க சார்... (லாங்சைஸ் குறிப்பேட்டை எடுத்துக் காட்டுகிறார்) இதெல்லாம் இந்த புத்தகக் காட்சிக்கு வந்துவிட்டுப்போன பள்ளிக்கூட தலைமையாசிரியர்கள் எழுதி வைத்துவிட்டுப் போன பள்ளிக்கூட முகவரிகள். நிறைய பேர் சந்தா கட்டியுள்ளார்கள்.

தனியாக ஒரு குழந்தை நிச்சயம் சந்தா கட்டி வாங்கிப் படிக்கமுடியாது அப்படிங்றதை ஒத்துக்கறோம். ஆனா பலபேர் சேர்ந்து வாங்கலாம். ஒரு விஷயம் சொல்றேன். ஒரு பள்ளிக்கூடத்தில் ஒரு வகுப்பு... ஒன்பதாம் வகுப்பு என்று நினைக்கிறேன். அந்த வகுப்பில் உள்ள அவ்வளவு மாணவர்களும் தனித்தனியே சந்தா கட்ட விரும்பினார்களாம். இனி மாதாமாதம் அந்த மாணவர்களுக்கு புத்தகங்கள் செல்ல உள்ளன.

இவ்வளவு தொகை கொடுத்து வாங்க அந்தப் புத்தகத்தில் அப்படி என்ன இருக்கு?

அழகழகான கதைகள். ஒரு கதை ஒரு குழந்தைக்கு சந்தோஷத்தையோ எழுச்சியையோ ஏற்படுத்திவிட ஒரு வரியை ஒரு வார்த்தையோ படமோ குழந்தைகளை வேற ஒரு இடத்துக்கு டிராவல் செய்ய வைக்கிறது. ஒரு கதையில் ஒரு எலிக்குட்டியைப் பற்றிய வாழ்க்கையைப் பற்றிய கதை இது. ஒரு எலிக்குட்டி ஒரு பட்டாம்பூச்சியை பாட்டிலில் பிடித்துவைக்கிறது- அந்தப் பட்டாம்பூச்சி சிறைபிடிக்கப்பட்டதை அது ஆரம்பத்தில் உணரவில்லை. ஆனால் பின்னர் அதை உணர்ந்து விடுவித்துவிடுகிறது.இது ஒரு நீதிக்கதை அல்ல. ஒரு கதை ஒரு இதழ், குழந்தைகளோடு நெருங்க உதவுகிறது. இந்தக் கதைகள் மூலமாகவே அவர்களிடம் பேச முடியும்.

இதழை எத்தனை ஆண்டுகளாக நடத்திவருகிறீர்கள்.. வருமானம் எப்படி?

தயவுசெய்து தவறாக புரிந்துகொள்ள வேண்டாம். மக்கள் ஒரு கடல்னா நாங்கள் தரையில்தான் நின்னுகிட்டிருக்கோம். நாங்கள் வருமானத்திற்காக இதை நடத்தவில்லை. உங்களுக்கு தெரியுமா ஆயிரம் பிரதிகளில் 500 பிரதிகள் இலவசமாகவே விநியோகித்துள்ளோம். தும்பி இதழ் 2 வருடங்களாக நடந்து வருகிறது. இதுவரை மொத்தமே 200 சந்தாதாரர்கள்தான் எங்களுக்கு உள்ளனர். இந்தவருடம் புத்தகக் காட்சியில் அரங்கம் வைக்கலாம் என முடிவு செய்தோம். இங்கு இதழ்களை காட்சிப்படுத்துவது இதுதான் முதல் முறை. நல்ல சந்திப்புக்கானதாகவும் இந்த ஸ்டால் அமைந்துள்ளது. மேலும் தும்பி இதழ் பலருக்கும் தெரிய வாய்ப்பாகவும் இது அமைந்துவிட்டது. சென்னையில் பல கடைகளில் வைத்துள்ளோம்.

மற்ற சிறுவர் இதழ்களிலிருந்து இது எப்படி வேறுபடுகிறது?

ஒருமுறை ஹேண்ட்மேட் பேப்பரில் ஒருமுறை சாதா தாளில், இன்னொரு முறை பழுப்பு நிற காகிதத்தில் என பலவிதமாக அச்சடித்து வெளியிடுகிறோம். இதில் வெளியிடப்படும் கதைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் அடுத்தடுத்த பக்கத்தில் கதையும் படமும் இடம்பெறும். இவ்விதழில் இப்படியான கதைகள்தான் வரும் என்றில்லை.

ஆசிரியர் துரைராஜ் மற்றும் அவரது நண்பர்கள் இங்கே படித்தேன் இந்தக் கதையை போடலாம் அங்கே படித்தேன் அதைப் போடலாம் என தெரிவிக்கும் பல கதைகள்கூட இடம்பெறும். இதில் இடம்பெறும் கதைகள் ஒவ்வொருக்குமான பக்கங்கள் எண்ணிக்கை முடிவு செய்யமுடியாது. 2 பக்கக் கதையும் உண்டு. 2 வரி கதை கூட உண்டு. அந்தக் கதை குழந்தைக்கானது மட்டும்தானா என்ற ஒரு கேள்வியும் எழுகிறது. யாருக்கானது என்று யார் முடிவு செய்வது? கதை அப்படிங்கற விஷயம் இறுக்கமான மனநிலையை தளர்த்துகின்ற வேலையை செய்கிறது. இந்தக் கதைகள் என்னுடைய குழந்தைகளுக்கானதாக இருக்கலாம். இது எனக்கான கதையாகவும் இருக்கிறது என்று சொல்கிறவர்கள் இருக்கிறார்கள்.

தும்பிக்கு பின்னால் இருப்பது என்ன அமைப்பு? அதன் அடிப்படை நோக்கம்?

'குக்கூ' குழந்தைகள் வெளி திருவண்ணாமலையில் இயங்குகிறது. நண்பர்களாக இணைந்து நடத்திக்கொண்டிருக்கிறோம். இதை பொறுப்பெடுத்து நடத்திக்கொண்டிருப்பவர் எங்கள் மாஸ்டர் சிவராஜ். அவர்தான் தும்பி இதழுக்கும் ஆசிரியர். அதற்கு நிர்வாக ஆசிரியர் அழகேஸ்வரி. 'குக்கூ'வின் அடிப்படை நோக்கம் குழந்தைகளின் ஆளுமைகளை வளர்த்தெடுத்தல்.

ஒரு கதை குழந்தைகளோடு நெருங்க உதவுகிறது. இந்தக் கதைகள் மூலமாகவே அவர்களிடம் பேசமுடியும். குழந்தைகளின் சந்தோஷங்களை தக்கவைத்துக்கொள்ள இந்த இதழ் உதவுகிறது. குழந்தைகளுக்கான ஆளுமைகளை வளர்ப்பதுதான் எங்கள் குக்கூ அமைப்பின் அடிப்படை நோக்கம். அதற்குக் காரணம் நமது மோசமான கல்வி முறை. இன்றுள்ள கல்வி முறை உள்ளிட்டவை குழந்தைகளை துன்புறுத்துவதாகவே உள்ளது. மாற்றுக்கல்வி என்பது வெறும் பெருமை பேசுவதற்காகத்தான் உள்ளது. அந்த மாற்றுக்கல்வி என்று சொல்லிக்கொள்ளும் பள்ளிக்கூடங்கள் பெரிய அளவில் கட்டணத்தை வசூலிக்கின்றன. ஜே.கிருஷ்ணமூர்த்தி சொல்வார் இந்தக் கல்வி முறை தோல்வியடைந்த முறை. இல்லையெனில் 2 உலகப்போர்கள் ஏன் வரவேண்டும் என்றும் அவர் கேட்டார்.

குழந்தைகளை தனிப்பட்ட முறையில் அக்குழந்தையின் எதிர்காலத்தையே சுய வாழ்க்கையை வசதியாக அமைத்துகொள்வதற்கு மட்டும் என்று நினைக்கிறோம். உண்மையில் நல்ல கல்வி எனில் சமூகத்தில் ஒருவருக்குஒருவர் இணக்கமாக இருக்க பயன்பட வேண்டுமெல்லவா?

பெற்றோர்கள் குக்கூவை எப்படி பார்க்கிறார்கள்?

சில கிராமங்களுக்கு நாங்கள் சென்று நாடகம் நடத்தவோ, பொம்மைகள் செய்முறை கற்றுத்தரவோ, கதை சொல்லவோ போகும்போது எங்களோட பலரும் வருவாங்க. அவங்களையெல்லாம் அந்த கிராமத்து மக்கள் பாத்துட்டு இவங்க எப்படி இப்படி எந்த கஷ்டமும் இல்லாததுபோல வர்றாங்க. இவங்களுக்கு எங்கேயோ இருந்து பணம் வருதா அப்படின்னு பாக்கறாங்க. ஆனால் நிஜத்தில் எங்களுடன் குழந்தைகளை மகிழ்விக்க வரும் அவர்கள் ஒவ்வொருவரும் மற்ற நாட்களில் தங்கள் வாழ்க்கைக்கென்று வேறு வேலை வைத்திருக்கிறார்கள். ஒருவர் புகைப்படக்கலைஞர், ஒருவர் ஐடி மென்பொறியாளர், ஒருவர் விவசாயி, ஒருவர் இசைக்கலைஞர், ஒருவர் கல்லூரி மாணவர்,

இன்னொருவர் நாடகக் கலைஞர், ஒருவர் ஓவியர் இப்படி பலரும் வருகிறார்கள். இப்படி வெவ்வேறு பணிகளில் உள்ளவர்கள் தங்கள் விருப்பத்தின்பேரில் எங்கள் அமைப்போடு இணைந்து ஒரு வாரம்கூட விடுமுறை எடுத்துக்கொண்டு வருகிறார்கள். இப்படி ஓய்வாக ஜாலியாக கிளம்பிவந்துவிடுகிறார்களே இவர்களுக்கு பின்னால் ஜெர்மன், பிரான்ஸ் என ஏதாவது என்ஜிஓ இருக்குமா என்றுதான் சந்தேகிக்கிறார்கள். நமது மக்களுக்கு எதை சந்தேகிக்க வேண்டும் எதை ஆதரிக்க வேண்டும் என்ற புரிந்துணர்வு மிகவும் குறைவினால் இந்தமாதிரியான சந்தேகங்கள் வருகின்றன எனத் தோன்றுகிறது.

குழந்தைகள் முகாம்களில் உங்கள் பணி?

ஜவ்வாது மலைக்கிராமம் ஒன்றுக்குச் சென்று பின்ஹோல் ஒர்க்ஷாப் நடத்தினோம். அதாவது ஊசித்துளை புகைப்படக்கலை பயிலும் முகாம். தீப்பெட்டிகளில் பழைய பிலிம் ரோலை வைத்து அதன்மூலம் சூரிய ஒளியின் மூலமாகவே போட்டோ எடுக்கமுடியும். அதற்கான முகாம் ஜவ்வாது மலைக்கிராமம் நெல்லிவாசலில் நல்ல வரவேற்பிருந்தது.

குழந்தைகள் மனநிலையிலிருந்து வித்தியாசமான அனுபவங்கள் ஏதாவது?

குழந்தைகளுக்கு எல்லாமே அழகுதான். குழந்தைகளை நாம்தான் நமது கருத்துகளைத் திணித்து மழுங்கடிக்கிறோமோ என்று தோன்றுகிறது. குழந்தைகள் சுதந்திர உணர்வோடு இருப்பதற்கான நேரமும் மனநிலையும் அவர்களுக்கு இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டால் அவர்களை மதித்தால் போதுமானது.

ஊத்துக்குளியில் குழந்தைகள் நூலகம் ஒன்று இருக்கிறது. அங்கே வந்து நிறைய குழந்தைகள் படிக்கிறார்கள். சுற்றிலும் உள்ள கிட்டத்தட்ட 40 கிராமங்களிலிருலுந்து அங்குள்ள அரசுப் பள்ளிகளுக்கு வருகிறார்கள். அங்கிருந்து நடந்துபோகும் தூரத்தில் கயித்தமலை என்று ஒன்று இருக்கிறது. அதிகாலை நேரம் அந்த மலைபக்கம் செல்வது வழக்கம்.

அப்போது சில குழந்தைகளும் என்னுடன் வந்தனர். அதில் ஒரு சிறுவனை அழைத்து வானில் ஒரு நட்சத்திரத்தைக் காட்டினேன். சற்றே பெரிய அளவில் உள்ள அந்த வெள்ளி நட்சத்திரத்தைக் காட்டி ''அதோ பார்றா அந்த நட்சத்திரம் அழகாயிருக்கு பாத்தியா'' என்று சொன்னேன். குழந்தைகள் யாரையும் ஓங்கி அறைவதில்லை. ஆனால் அவர்களது சில வார்த்தைகள் அதை செய்துவிடுகின்றன,.அதற்கு அச்சிறுவன் கேட்டான் ''ஏன் மற்றது எல்லாம் அழகாயில்லையா?'' என்று.

குழந்தைகளின் ஆரோக்கியமான மனநிலையின் இயல்பிலிருந்தே அவர்களின் ஆளுமையை வளர்த்தெடுத்தல் என்று இயங்கும் இவர்களிடம் குழந்தைகள் சார்ந்த புரிதல் சிறப்பாகவே அமைந்துள்ளதை புரிந்துகொள்ள முடிகிறது. இவர்களைத்தான் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கான காலம் விரைவில் வரவேண்டும் என வாழ்த்தி விடைபெற்றோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x