Last Updated : 08 Jan, 2018 04:38 PM

 

Published : 08 Jan 2018 04:38 PM
Last Updated : 08 Jan 2018 04:38 PM

புத்தருடன் ஒரு காலை நடை: 2- ஜீப்ரா கிராஸிங்!

அன்பின் மொழி:

 

‘‘வாசகன் ஜென் கவிதைகளின் முன்பாகத் தன் வயதை இழக்கிறான். தன்னைப் பற்றிய பொது பிம்பங்களை, கருத்தாக்கங்களை நழுவவிடுகிறான். இப்போது, அவனுக்கும் அவன் அருகில் ஊர்ந்துகொண்டிருக்கும் சிறு எறும்புக்கும் பேதமில்லை. ஜென் கவிதையில் வரும் நான் ஒரு பயணி.

பயணி என்றதும் ஊர் சுற்றுகின்றவன் என்று பொருள் கொண்டுவிடுவோம். அப்படியல்ல; இந்தப் பயணி முடிவற்ற தேடுதலின் வழியே தன்னைக் கண்டு கொள்கின்றவன் தண்ணீரைப் போல. அவனது பயணம் இயற்கையைக் கடந்து போவது அல்ல; மாறாக இயற்கையினுள் போவது!’’

 - ‘பாஷோ’ இதழில் எஸ்.ராமகிருஷ்ணன்.

*** *** ***

புத்தர் சிலை முன்

ஒளிரும் விளக்குகளும்

புத்தராகவே ஒளிர்கின்றன!

 

 - பா.மீனாட்சி சுந்தரம்

 

*** *** ***

புத்தர் சிலை உடைந்தது

அந்தப் புன்னகை

உடையவே இல்லை!

 

 - மணி சண்முகம்

 

*** *** ***

‘ஜென்’னல்:

 

‘‘ஒளியைத் தேடுவதை நிறுத்து’’

‘‘ஏன்..?’’

‘‘நீயே ஒளி!’’

இதுதான் ஜென். இதுவே ஜென்! உனக்குள்ளே வந்து உன்னைத் தொட்டுவிட்டு, ‘உன்னைத் தொட்டுவிட்டேன் பார்’ என்று உன்னிடமே சொல்லிவிட்டுப் போகும். சில பொழுதுகளில் சொல்லாமலும் போய்விடும். 

 

ஒரு ஊரில் ஒரு ஜென் குரு இருந்தார்.

காலைவேளை.

சுற்றிலும் அவருடைய மாணவர்கள் உட்கார்ந்திருந்தனர்.

 ஜென் குரு வாயைத் திறந்து மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க ஆரம்பித்தார்.

 

அப்போது - 

மரமொன்றில் உட்கார்ந்திருந்த அடவோஸ் என்கிற பறவை பாட ஆரம்பித்தது.

குரு மவுனமாக இருந்தார். மவுனம் நீண்...டது. மாணவர்கள் குருவையே பார்த்துக்கொண்டே இருந்தனர்.

 

பறவை பாடி முடித்து... பறந்து போயிற்று.

மாணவர்களைப் பார்த்து குரு சொன்னார் : 

 

‘‘பாடம் முடிந்தது... அவ்வளவுதான்!’’

 

*** *** ***

 

ஜீப்ரா கிராஸிங்:

முதன்முதலாக புதியதொரு சத்தத்தைக் கேட்ட குழந்தையைப் போல திடுக்கிட்டார் பிர்ஹமி.

‘‘என்ன சொல்கிறாய் வார்கா? எனக்கொரு கெட்ட செய்தியா?’’

‘‘ஆமாம் குரு! அது உங்களுக்கொரு கெட்ட செய்திதான்!’’

‘‘ என்ன அந்த கெட்ட செய்தி?’’ ஆவல் மண்டியிருந்தது குரு பிர்ஹமியின் வார்த்தைகளில்.

‘‘இன்று அதிகாலையில் நீங்கள் சவுதாமினி நதிக்கரையோரத்தில் நீல மலர்களைப் பறித்துக்கொண்டிருந்தீர்கள். அதைப் பார்த்துக்கொண்டிருந்த நான்கூட எனது பக்கத்தில் இருந்த சஞ்சனாவிடம்... 

 

‘பூக்கள் கண்களைப் பறித்தன... 

கைகளோ 

பூக்களைப் பறித்தன’ 

- என்று சொல்லிக்கொண்டிருந்தேன். 

அப்போது... உங்களை ஒரு பெண்மணித் தேடி வந்தாள். அந்தப் பெண்மணி உங்களைக் கையெடுத்து வணங்கியபடி ஏதோ உங்களிடத்தில் சொன்னாள்.

நீங்கள் அவள் சொல்வதை எல்லாம் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்தீர்கள். பிறகு, பக்கத்தில் இருக்கிற சீடர்களில் ஒருவரை அழைத்து என்னமோ சொன்னீர்கள்.

அந்தச் சீடன் - அந்தப் பெண்மணியை அழைத்துச் சென்றான். இதை எல்லாம் நான் தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டே இருந்தேன். அந்தப் பெண்மணியை உங்கள் சீடர் எங்கு அழைத்துச் சென்றார்?’’

‘சொல்கிறேன் வார்கா. அந்தப் பெண்மணியின் இரண்டு பெண் குழந்தைகளுக்கும் கண் தெரியாதாம். அவர்கள் பசியால் துடிக்கின்றார்களாம். ஏதாவது பொருள் உதவி செய்யுமாறு என்னிடத்தில் கேட்டாள். அதனால், என் சீடரை அனுப்பி என் குடிலில் இருக்கும் பழங்களையும், உணவுகளையும் அவருக்கு கொடுத்து அனுப்பச் சொன்னேன்!’’

‘‘அங்குதான் உங்களுக்கு கெட்ட செய்தி இருக்கிறது குருவே!’’ என்றான் வார்கா.

‘‘உன் வார்த்தைகளை போர்த்தியிருக்கும் அங்கியை விலக்கு வார்கா. விளக்கமாகப் பேசு!’’

‘‘குருவே! அந்தப் பெண்மணி உங்களைப் போல இரக்கமுள்ளவர்களை எல்லாம் சந்தித்து, பொய் சொல்லி பொண்ணும் பொருளும் திரட்டிவிடுவாள். இதுதான் அவளுடைய அன்றாட பிழைப்பு. உண்மையிலேயே அவளுக்குக் கண் தெரியாத குழந்தைகளே இல்லை. அவள் வார்த்தைகளால் பள்ளம் வெட்டி அதில் உங்களையுமல்லவா சரிந்து விழ வைத்துவிட்டாள்... உங்களை அவள் ஏமாற்றியது உங்களுக்கு ஒரு கெட்ட செய்திதானே!’’

புன்னகையின் நிழல் படிந்த வார்த்தைகளுடன் பிர்ஹமி சொன்னார்:

‘‘இது எப்படி எனக்கு கெட்ட செய்தியாகும்? அந்தப் பெண்மணிக்கு உண்மையிலேயே கண் தெரியாத குழந்தைகள் இல்லை என்பது எனக்கு நல்ல செய்திதானே!’’

 

இந்தக் கதையைப் படிக்கிற நீங்கள் உங்கள் மனச் சிலேட்டில் எச்சில் தொடாமல் ‘பிர்ஹமி’ என்கிற பயரை அழித்துவிட்டு, வேண்டுமானால் ‘புத்தர்’ என்று எழுதிக்கொள்ளுங்கள்.

 

*** *** ***

புத்தர் வரலாறு -2

 

கவலை ரேகை படிந்த மனசை என்ன செய்வது?

எவ்வளவு திசை திருப்ப முயற்சித்தாலும் மனம் முகவரியற்ற கடிதம் போல் அலைந்துகொண்டிருந்தது. எதிலும் ஒட்ட மறுத்தது வாழ்வின் நிமிஷங்கள். 

சுத்தோதனரும் - மகா மாயாதேவியும் கலங்கிப் போயிருந்தனர். குழந்தை பாக்கியமே இல்லாமல் போய்விட்டால் என்ன செய்வது... என்கிற கவலை அவர்களைத் தொடர்ந்து பிறாண்டியது.

பிள்ளை சுமக்க வாய்ப்பில்லாததால் கவலைகள் மண்டிய வாழ்வில் சுழன்றுகொண்டிருந்த மகா மாயாதேவியை உற்றுப்பார்த்தார் சுத்தோதனர். 

‘‘மாயா... இப்படியே எத்தனை நாட்களுக்குத்தான் காலத்தை புன்னகையின்றி கடப்பது? உன்னை என்னால் ஏறெடுத்துப் பார்க்கவே முடியவில்லை. எனக்கு நம்பிக்கையிருக்கிறது. நமக்கு குழந்தை பிறக்கும். அந்தக் குழந்தை மற்றவர்களின் குழந்தைப் போன்றில்லாமல் உலகை ஆளும். நட்சத்திரங்களின் மொழியை நம்முடைய குழந்தை பேசும். நினைவில் நல்லது வேண்டும் மாயா, நாம் நம்முடைய எண்ணங்களின் சாயலாகத்தான் இருக்கும். அந்த எண்ணங்களின் சாயலே நம் வாழ்வின் குறுக்குவெட்டுத் தோற்றமாகிவிடும். இதுவொரு துயரப் பொழுது. இதை நம் நேர்மறையான எண்ணங்களினால்தான் கடக்க வேண்டும். வா  எழுந்திரு மாயா... கவலைகளில் இருந்து வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்திரு மாயா.

உனக்கு இப்போதைக்குத் தேவை...  கவலையில்லா நிமிஷங்கள். நிரந்தரமான மகிழ்ச்சி. உனக்குள் சுழன்றடிக்கும் தற்காலிக சூறாவளியை விட்டொழிக்க... நீ கொஞ்ச நாட்களுக்கு உன்னுடைய தந்தை அஞ்சனரும், தாய் சுலக்க்ஷனாவும் வசிக்கிற தேவதகா கிராமத்துக்குச் சென்று சில  நாட்கள் கழித்துவிட்டு வா. அப்படியாவது உனது முகம் பிரகாசம் பெறட்டும்...’’ என்றார்.

கணவர் சுத்தோதனர் சொல்கிற ஆலோசனைக்கு மனசு கொடுத்தாள் மகாமாயாதேவி.

தன்னுடைய தந்தை  அஞ்சனரும் தாய் சுலக்க்ஷனாவும் வசிக்கிற தேவதகா கிராமத்துக்குப் புறப்பட்டாள் மகாமாயாதேவி.

 

- நடப்போம்....  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x