Last Updated : 06 Jan, 2018 06:17 PM

 

Published : 06 Jan 2018 06:17 PM
Last Updated : 06 Jan 2018 06:17 PM

சின்னச் சின்ன வரலாறு: புகை சூழ் உலகு

சினிமா திரையோ அல்லது தொலைக்காட்சித் திரையோ... அதில் சினிமா பார்க்கும்போது ஏறக்குறைய அந்த முழு படத்தின்கூடவே கீழே ஸ்க்ரோல் ஆகும் வாக்கியம்.... 'புகை பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும் உயிருக்கு கேடு விளைவிக்கும்".

இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய ஒரு திரைப்படத்தில் டூயட் பாடல் காட்சிகளைத் தவிர்த்து, எல்லாக் காட்சியிலும், இந்த வாக்கியம் காட்டப்படுமேயானால், சிகரெட் சமூகத்தின் மீது ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கடைகளில் சிகரெட் வாங்க அனுமதி இல்லை என ஒரு சட்டம் இருக்கிறது. ஆனால், இது கடைப்பிடிக்கப்படுகிறதா? அட அதைப்பற்றி பரவலான விழிப்புணர்வாவது இருக்கிறதா? யோசித்துப் பார்த்தால் இல்லை என்றே தோன்றுகிறது.

சில திரைப்படங்களில் ஒரு சின்னப்பையனை அனுப்பி சிகரெட் வாங்கிவருவதாகக் காட்டப்படுகிறது. இதை எப்படி சென்சார் வாரியம் அனுமதிக்கிறது? அப்படி என்றால் இந்தச் சட்டம் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லையா?

சிகரெட் அபாயம் குறித்த விழிப்புணர்வில் சில வருடங்களுக்கு முன் போடப்பட்ட சட்டம் 'ஹெல்த் வார்னிங்' எனும் புகைப்படத்துடன் கூடிய எச்சரிக்கை வாசகத்தை சிகரெட் பாக்கெட்டிலேயே பதிப்பித்தல்.இதை செவ்வனே கடைப்பிடிக்கிறார்கள். மகிழ்ச்சி.

இந்த சட்டங்கள் கோட்பா பில்  COTPA Bill-ன் கீழ் போடப்பட்டுள்ளது. அதேபோல் சிகரெட் விற்பனைக்கான வயது விளிம்பை 21 ஆக மாற்ற 2015-ல் ஒரு சட்டத்திருத்தம் போடப்பட்டு அது இன்னும் நிலுவையில் இருக்கிறது.

 

சிகரெட் புகைப்பது இந்த அளவில் பரவிக்கிடக்கக் காரணம் சிகரெட்டில் உள்ள நிகோடின். இந்த வேதிப் பொருளுக்கு நம்மை அதன் அடிமையாக்கும் தன்மை உள்ளது. 

எல்லோருக்கும் தெரிந்த விஷயம் சுருட்டப்பட்ட புகையிலை பீடியுள்ள அதே இலை பதப்படுத்தப்பட்டு காகிதத்தில் உருட்டப்படும்போது வசீகர சிகரெட். ஆனால், பெரும்பாலானோருக்குத் தெரியாதது, நிகோடினுடன் பால்மயமாக்கியபின் க்ளிசரால், வாசனைக்காகக் கொக்கோ கட்டிகள், லிகோரைஸ், விதவிதமான இனிப்பு வகைகள், மற்றும் புகையிலை சாறு ஆகியன சுகரெட்டில் உள்ளது என்பது.

இவை எல்லாவற்றிற்கும் கேஸிங்க்ஸ் என்று பொதுப்பெயர். ஆனால் இவைத்தவிர சிகரெட்டில் 599 விதமான ரசாயனங்கள் சேர்க்கைகளாக கலக்கப்படுகின்றன.

இவை சிகரெட் பெட்டிகளின் மேல் உட்பொருட்களாகப் பட்டியலிடப்படுவதில்லை. இவற்றின் சேவை சிகரெட்டுக்கு மிகவும் தேவை.  இவை, மனித மூளையை இன்னும் இன்னும் அடிமைப்படுத்தும் ஆற்றல் கொண்டவை. இப்படிப்பட்ட சில லாகிரி வஸ்துக்களில் முக்கியமானது அம்மோனியா சால்ட். இவை நிகோடின் புகையில் உள்ள பிணைப்பு மூலக்கூறுகளை நெகிழ்வடைய வைத்து நிகோடின் சேவையை மேன்படுத்தும். இந்தமுறைக்குப் பெயர் ஃப்ரீ பேஸிங்.

இப்படி மனிதர்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் சிகரெட் வஸ்து நமக்கு வந்த கதை சுவாரஸ்யமானது. 5000 பிஸிக்கு முன்பிருந்தே ஏதோ ஒருவகையில் இந்தப் புகையிலை புகைக்கப்பட்டு வந்திருக்கிறது.

குகை மனிதர்களின் சித்திரங்களில் கோவில் பூசாரிகளும் மதகுருக்களும் இதற்கு ஒப்பான மயக்கும் வஸ்துக்களைப் புகைப்பது போல் நிறையச் சித்திரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அப்போது பார்த்தால் குட்கா வகையில் தான் இந்த புகைவிடும் பழக்கம் இருந்திருக்கிறது. இப்படி ஒரே சுருட்டாக சுருட்டி வாயில் வைத்து ஊதித்தள்ளும் வழக்கம் 1865-ல் சர் வாஷிங்டன் ட்யூக்கால் வடக்கு கரோலீனா மாகாணத்தில் வியாபாரமயாக்கப்பட்டு சிவில் போர் வீரர்களுக்குக் கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் உள்ளன.

1881-ல் ஜேம்ஸ்பொன்சாக் என்பவர் சிகரெட் சுற்றும் இயந்திரம் கண்டுபிடிக்க.... சிகரெட்டை கையில் பிடிக்க முடியாத அளவு வளர்ச்சி அடைந்தது. 

1492 ல் கொலம்பஸ் வட அமெரிக்காவிற்கு வந்து திரும்பியபோது அவருடன் ஐரோப்பாவிற்கு கொடுத்தனுப்பட்டதுதான்பு கையிலை செடிகள். கஞ்சா புகையில் ஆரம்பித்து, மெதுவாகச் சுருட்டு வடிவெடுத்து, பின் சோளமாவில் சுருட்டப்பட்டு, பின் பேப்பரில் சிகாராக இலைகள் மட்டும் சுருட்டப்பட்டு, இப்போது மெல்லிய பேப்பரில் பில்டர் செய்யப்பட்ட புகையிலை தூளாக இந்த வஸ்து பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்தப் புகையை உள் இழுத்து பின் வாயால் வெளியேற்றும் விதிமுறை 1930க்களுக்கு பின் வந்ததாக வரலாறு சொல்கிறது. இதற்கு முக்கிய காரணமாக புகையிலையின் குறைக்கப்பட்ட காரம் மற்றும் சுருட்டப்பட்ட பாணியிலான மாறுதலைச் சொல்லலாம்.

மெல்லிய மற்றும் தடிமனான காகித சுருட்டுக்கள் உபயோகப்படுத்தப்பட்டு அதனால் உள் எழுந்த புகை சிகரெட் நீளத்தில் சுருள் சுருளாக வெளியேற்றப்பட, இதனால் உள் இழுக்கும்போது மட்டுமே புகைந்து, மிக நிதானமாகவும், நிறைய நேரமும் புகைந்து, வாயில் வைத்துப் புகைப்பது சாத்தியப்பட்டு போயிற்று. இதன் தொடர்ச்சியாக லைட்ஸ் அல்லது மைல்ட்ஸ் வகை மிதமான வகைகளும், பில்டரில் நிறைய காற்றுபுகும் விதமாக அமைக்கப்பட்டவையும் அறிமுகமாயின.

இந்தப் புகையிலைத்தூள் செய்யப்படும் விதம் பற்றி அறிந்துகொள்ள.... பாட்டி வீட்டில் காப்பிகொட்டை மெஷினில் அரைப்பதற்கு நடத்தும் தயாரிப்பு முறைகளைக் கொஞ்சம் நினைவில் கொண்டுவந்தால்போதும். அவர் செய்யும் ப்ளாண்டேஷன் A , பீபரி மிக்ஸ் போல், BL அதாவது ப்ளெண்டட் இலை, RL அதாவது ரீகான்ஸ்டிட்யூடட் இலை மற்றும் ES அல்லது IS , எக்ஸ்பாண்டட் ஸ்டெம் அல்லது இம்ப்ரூவ்ட் ஸ்டெம் இவற்றைச் சரியான விகிதத்தில் சேர்த்து..... வேண்டாம் சிகரெட் மட்டுமல்ல, அதைப் பற்றிய டெக்னிகல் தகவல்களும் உடம்பிற்கு நல்லதல்ல.

இங்கே கொஞ்சம் யோசிப்போம். நெருப்பை வாயில் வைத்து சிலாகிக்கிறோமே... அந்த நெருப்பால் உயிருக்குச் சேதம்ஏற்பட்டால்....?

 

 

இவற்றை மனதில் கொண்டுதான் ஒவ்வொரு நாடும் இந்தப் பழக்கத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக நிறைய விதிமுறைகள் ஏற்படுத்தி இருக்கின்றன. எங்கு புகைக்கலாம், எந்த வயதிலிருந்து, விளம்பரம், பெட்டியின் மேல் கவனத்தை ஈர்க்கும் எச்சரிக்கை மற்றும் தீ பாதுகாப்பு விதிகள். இவற்தைத்தவிர இதன் மீதான வரியை எல்லா அரசாங்கமும் தன் கைகளில் வைத்துக்கொண்டு தன் நிதித் தேவைக்கும் உபயோகித்துக் கொள்கிறது.

அரசாங்கம் மட்டுமல்ல ஒரு தனிமனிதனும் இதை எவ்வாறு பணம் சம்பாதிக்க உபயோகப்படுத்தினான் என்பது ஒரு தமாஷ் கதை. பல வருடங்கள் முன் வடக்கு கரோலினா நாட்டில் ஒருவன் மிக விலை உயர்ந்த சிகரெட்டுகளை வாங்கி அதற்குக் காப்பீடும் எடுத்தான். பின் ஒரு வாரத்தில் எல்லா சிகரெட்டையும் ஊதி முடித்துவிட்டு காப்பீடு தொகை கோரினான் காப்பீடு எடுத்த பொருள் நெருப்பில் எரிந்துவிட்டதாக. காப்பீடு நிறுவனம் இதை எதிர்பார்க்காததால் இந்தக் காரணத்தைத் தனிமைப்படுத்தி எந்தக் கட்டுப்பாடு விதியும் கொடுக்கவில்லை. காப்பீடு தொகையை கொடுக்கச் சொல்லி கோர்ட்டில் தீர்பாயிற்று.

கதை இத்துடன் முடியவில்லை. தொகையைக் கொடுத்த காப்பீட்டு நிறுவனம், உடனே அவன் மேல் ஒரு எதிர்வழக்கு போட்டது. அதாவது காப்பீடு எடுத்த பொருளை வேண்டுமென்றே அவன் தீ இட்டுக் கொளுத்தினான் என்று. அதுவும் வென்றுகொடுத்ததை விட இரட்டிப்புத்தொகையை நிறுவனம் அவனிடம் வசூலித்தது.

 

 

 

சிகரெட் ஊதித் தள்ளுவதை எப்படி நிறுத்துவது சுலபமில்லையோ அதேபோல் அதைப்பற்றி எழுதுவதை நிறுத்துவதும். நிறைய...நிறைய..இன்னும் இருக்கிறது. ஆனாலும் கடைசியாக....சிகரெட் குடிப்பதற்கான முதல் எதிர்ப்புக்காரணம்.... புகைப்பதால் புற்றுநோய் வரும். 1978 ல் ஜேம்ஸ் மோல்ட் என்ற விஞ்ஞானி ப்ராஜெக்ட் டேம் என்ற பெயரில் XA சிகரெட் தயாரிப்பைத் தொடங்கி பின் கைவிட்டார். இந்த வகை புற்றுநோய் ஏற்படுத்தா வகை சிகரெட்டுக்களாம். சாத்தான் தேவதை வேடம் எடுத்து வருமா?? ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் வைத்துக் கண்டுபிடிப்போம். !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x