Published : 30 Dec 2016 10:16 AM
Last Updated : 30 Dec 2016 10:16 AM

ரட்யார்டு கிப்ளிங் 10

நோபல் பெற்ற ஆங்கிலக் கவிஞர்

நோபல் பரிசு பெற்ற பிரிட்டன் எழுத்தாளரும், கவிஞருமான ஜோசப் ரட்யார்டு கிப்ளிங் (Joseph Rudyard Kipling) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 30). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* பம்பாயில் (1865) பிறந்தார். தந்தை சிற்பி மற்றும் மண்பாண்ட வடிவமைப்பாளர். பம்பாயில் புதிதாகத் தொடங்கப்பட்ட ஜாம்ஷெட்ஜி ஜீஜீபாய் கலைக் கல்லூரி பள்ளி முதல்வராகவும், பேராசிரியராகவும் பணிபுரிந்தவர்.

* சிறுவயதில் கிப்ளிங்கை வளர்த்த இந்தியப் பெண்மணி பல இந்தியக் கதைகள், பாடல்களை இவருக்குக் கூறுவார். அவை தன் நினைவை விட்டு அகலவே இல்லை என்று இவர் குறிப்பிட்டுள்ளார். 5 வயதில் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டார். இந்தியாவில் வாழும் ஆங்கிலேயர்களின் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் தம்பதியிடம் 6 ஆண்டுகள் வளர்ந்தார்.

* அந்த காலக்கட்டம் பயமும் பீதியும் கலந்திருந்ததாகவும், அவர்களிடம் பல கொடுமைகளை அனுபவித்ததாகவும் 65 ஆண்டுகளுக்குப் பிறகு எழுதிய சுயசரிதையில் நினைவுகூர்ந்துள்ளார். இந்தியாவில் இருந்து பெற்றோர் 1877-ல் இங்கிலாந்து திரும்பிய பிறகு, அவர்களுடன் வசிக்கத் தொடங்கினார்.

* ‘தி யுனைடட் சர்வீஸஸ்’ கல்லூரியில் பயின்றார். லாகூரில் வேலை கிடைத்ததால் மீண்டும் இந்தியாவுக்கு வந்தார். சிவில் அண்ட் மிலிட்டரி கெஸட் என்ற உள்ளூர் நாளிதழில் காப்பி எடிட்டிராகப் பணியாற்றினார். 1882-ல் பம்பாய் வந்தார். பல கவிதைகள் எழுதினார். 1886-ல் முதல் கவிதைத் தொகுப்பு ‘டிபார்ட்மென்டல் டிட்டீஸ்’ வெளிவந்தது.

* தொடர்ந்து, பல்வேறு இதழ்களிலும் கதைகள், கவிதைகள் எழுதினார். ஓராண்டுக்குள் இவரது 39 கவிதைகள், உரைநடைத் தொகுப்பு, 70-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் வெளிவந்தன. அலாகாபாத்தில் உள்ள ‘தி பயனீர்’ இதழில் பணியில் அமர்ந்தார். அங்கும் எழுத்துப் பணி தொடர்ந்தது. பின்னர், 6 குறுங்கதைத் தொகுப்புகள் வெளிவந்தன.

* இந்தியாவில் இருந்து சான் பிரான்சிஸ்கோ சென்றார். அமெரிக்கா முழுவதும் பயணம் மேற்கொண்டவர், ஏராளமான கட்டுரைகளை எழுதிக்கொண்டே இருந்தார். இவரது கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 2 நூல்களாக வெளிவந்தன.

* லண்டன் திரும்பிய பிறகு, கதைகள் எழுத ஆரம்பித்தார். இந்தியாவில் வாழும் ஆங்கிலேயரின் வாழ்க்கை பற்றிய ‘லைஃப்ஸ் ஹேண்டிகேப்’ என்ற குறுங்கதைத் தொகுப்பு லண்டனில் வெளியிடப்பட்டது. 1892-ல் இவர் எழுத ஆரம்பித்த ‘தி ஜங்கிள் புக்’, பல கதைகள் கொண்ட நூலாக உருவானது. உலகம் முழுவதும் சிறுவர்கள் விரும்பும் கதைகளில் ஒன்றாகப் புகழ்பெற்றது.

* தொடர்ந்து பல கவிதை, சிறுகதை தொகுப்புகள், நாவல்களைப் படைத்தார். இவரது ‘கிம்’ நாவல் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜவஹர்லால் நேரு கூறியுள்ளார். குழந்தை இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பாளியாகவும், குறுங்கதைக் களத்தின் முன்னோடியாகவும் இவர் போற்றப்படுகிறார்.

* இவரது பல படைப்புகள் உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நாடகங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், ஆவணப்படங்கள், திரைப்படங்களாகவும் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்றன.

* இலக்கியத்துக்கான நோபல் பரிசை 42-வது வயதில் பெற்றார். இதன்மூலம், மிகக் குறைந்த வயதில் நோபல் பெற்ற முதல் ஆங்கில மொழி எழுத்தாளர் என்ற பெருமையைப் பெற்றார். ஆங்கில இலக்கியத்துக்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய ஜோசப் ரட்யார்டு கிப்ளிங் 71-வது வயதில் (1936) மறைந்தார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x