Published : 01 Aug 2015 11:09 AM
Last Updated : 01 Aug 2015 11:09 AM

முத்துக் குளிக்க வாரீகளா 3: குரு தட்சணை!

முகலாயப் பேரரசர் அக்பரும் அவருடைய அரசவைக் கவிஞர் ஷைகு பைஸியும் (Faizi) அரண்மனைப் பூவனத்தில் உலவிக் கொண்டிருந்தனர்.

அக்பர்: பைஸி! இதோ, இந்தப் பூக்களைப் பாருங்கள். வடிவம், வண்ணம், வாசம் வேறுபட்டா லும் இவை சுரக்கும் தேன் ஒன்றுதான். இதைப் போலவே பல்வேறு மதங்கள் இருந்தாலும் அவற்றின் சாரம் ஒன்றுதான்.

பைஸி: நன்றாகச் சொன்னீர்கள்!

அக்பர்: ஆனால், இந்த மதவாதிகள் தங்கள் பூவில்தான் தேன் இருக்கிறது. மற்றப் பூக்களில் தேன் இல்லை என்கிறார்கள்.

பைஸி: எல்லாப் பூக்களிலும் தேன் இருக்கிறது என்பது தேனீக்களுக்குத்தான் தெரியும். அதைப் போல் எல்லா மதங்களின் சாரமும் ஒன்றுதான் என்பது ஞானிக்குத்தான் தெரியும்.

அக்பர்: அருமையாகச் சொன்னீர்கள். ‘மாலிக்குஷ் ஷூரா’ (கவிக்கோ) ஆயிற்றே.

பைஸி: மாமன்னரே! அந்தப் பட்டத்தை எனக்கு வழங்கி என்னைக் கவுரவித்ததே தாங்கள்தானே!

அக்பர்: நான் வெளியிட்ட தங்க நாணயத்துக்கு, ஒரு கவிதை எழுதிக் கொடுத்தீர்கள்.

பைஸி: ஆமாம், அதில் ‘குகைகளில் தங்கம் விளைவது சூரிய நோக்கால். அந்தத் தங்கம் கண்ணியம் பெறுவது அக்பரின் முத்திரையால்’ என்று எழுதியிருந்தேன்.

அக்பர்: உண்மையில் என் முத்திரையால் அல்ல; உங்கள் கவிதையால்தான் அந்த நாணயம் மதிப்பைப் பெற்றது.

பைஸி: மாமன்னரே! நானோர் இந்தியத் தந்தை, பாரஸீகப் புல்புலோடு சேர்ந்து பாடுகிறேன். என்னை உங்கள் தோளில் ஏற்றி, அளவுக்கு அதிகமாகப் புகழ்கிறீர்கள்.

அக்பர்: உங்களுடைய இந்தப் பணிவுதான் உங்களை உயர்த்தியிருக்கிறது. ‘வாழ்க்கை இனிமையாக இருக்க வேண்டுமென்றால் பணிவுடையவனாக இரு. கரும்பில் மண்ணை ஒட்டிய பாகமே, அதிக மதுரமானது’ என்று எழுதிய கவிஞரல்லவா நீங்கள்.

பைஸி: நன்றி, மாமன்னரே!

அக்பர்: பைஸி! எல்லாப் பூக்களிலும் திரட்டிய தேனை, தேனீ ஒரே கூட்டில் நிரப்புவது போல, எல்லா மதங்களின் சாரத்தையும் திரட்டி ஒரு புதிய சமயத்தை உருவாக்க ஆசைப்படுகிறேன். அதற்கு ‘தீனே இலாஹி’ (இறைவனுடைய மார்க்கம்) என்று பெயர் சூட்ட விரும்புகிறேன்.

பைஸி: அற்புதமான யோசனை. தேன் பல நோய்களை நீக்கும் மருந்து. உங்கள் மார்க்கம் மதவாதிகளின் சர்ச்சைகள், சண்டைகளை நீக்கிவிடும். தேனை எல்லோரும் விரும்புவர். அதைப் போலவே உங்கள் மார்க்கத்தையும் எல்லோரும் விரும்புவர்.

அக்பர்: ஆனால், அதில் ஒரு சிக்கல்.

பைஸி: என்ன மன்னரே?

அக்பர்: எல்லா மதங்களின் கொள்கைகளையும் திரட்டிவிட்டேன். இந்து மத வேத ரகசியங்களை மட்டும் அறியமுடியவில்லை.

பைஸி: ஏன் மன்னரே?

அக்பர்: மறை மறையென்று மறைக்கிறார்கள். அதுவும் எனக்குச் சொல்லக்கூடாதாம்.

பைஸி: வேதம் இறைவனுடைய வார்த்தை என்றால் அது மனிதகுலம் முழுமைக் கும் சொந்தமல்லவா? சூரிய ஒளியையும், காற்றையும் யாராவது தனியாக அடைத்து வைப்பார்களா?

அக்பர்: எல்லாத் தோட்டத்துப் பூக்களில் இருந்தும் தேன் திரட்டிவிட்டேன். ஒரு தோட்டம் மட்டும் முள் வேலியால் என்னைத் தடுக்கிறது. அந்த முள் வேலியைப் பொருட்படுத்தாமல் உள்ளே நுழைந்து தேன் எடுக்கத் தேனீயால்தான் முடியும். அந்தத் தேனீ நீங்கள்தான்.

பைஸி: நானா?

அக்பர்: ஆமாம். நீங்கள்தான்! உங்களுக்கு ஏற்கெனவே சமஸ்கிருதம் தெரியும். சமஸ்கிருதத் தில் புகழ்பெற்ற கணித நூலான ‘லீலாவதி’யைப் பாரஸீகத்தில் மொழிபெயர்த்தவர் நீங்கள். மாபெரும் இதிகாசமாகிய மகாபாரதத்தையும் மொழிபெயர்த்திருக்கிறீர்கள்.

பைஸி: அது வேறு விஷயம். வேத ரகசியங் களை உங்களாலேயே அறிய முடியாதபோது நான் மட்டும் எப்படி அறிய முடியும்?

அக்பர்: நீங்கள் பிராமணராகிறீர்கள்!

பைஸி: என்ன சொல்கிறீர்கள் மாமன்னரே? அது எப்படி சாத்தியம்?

அக்பர்: நீங்கள் பிராமணக் கோலம் தரிக்கிறீர் கள். உங்களை அறியாத சற்றுத் தொலைவான ஊருக்குச் செல்கிறீர்கள். அங்கே இருக்கும் வேத விற்பன்னரிடம் சீடராகச் சேர்கிறீர்கள். வேத ரகசியங்களைக் கற்று வருகிறீர்கள்.

பைஸி: இது திருட்டில்லையா?

அக்பர்: நீங்கள் மருத்துவம் கற்றவர். ஏழை களுக்கு இலவசமாக மருத்துவம் செய்பவர். இதுவும் மருத்துவம்தான். அறிவில் ஏழையாக இருப்பவர்களுக்கு, மருந்துக்காகச் செடியில் இருந்து இலை பறிப்பது திருட்டா? பைஸி… எனக்கு உதவுங்கள்!

பைஸி: நீங்கள் ஆணையிட வேண்டிய மாமன்னர். வேண்டுகோள் விடுக்கின்றீர்களே… இலை பறிக்கச் செல்கிறேன் மன்னரே!

பைஸி குடுமி வைத்தார். பூணூல் தரித்தார். வேத விற்பன்னரைத் தேடிப் புறப்பட்டார்.

தில்லியில்

இருந்து நெடுந்தொலைவில் ஓர் அழகான சிற்றூர். அங்கே அவர் தேடிய குரு கிடைத்தார். அவரிடம் தன்னைச் சீடனாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று வேண்டினார்.

பைஸியின் தோற்றப் பொலிவையும், கண் களில் பிரகாசித்த தீட்சண்யத்தையும், பணிவையும் பார்த்து, ‘இவருக்கு வேதப் பொக்கிஷத்தைக் கற்றுக் கொடுப்பது தகும்’ என்று எண்ணி அவரைச் சீடராக ஏற்றுக்கொண்டார் பண்டிதர்.

கடுந்தாகம் கொண்டவன் நீர் பருகுவதுபோல் பைஸி கல்வி கற்றார்.

அங்கே ஒரு பிரச்சினை உண்டாயிற்று. குருவுக்கு ஓர் அழகான புதல்வி.

அவள் பைஸியின் அழகையும் அறிவையும் பார்த்து அவரைக் காதலிக்கத் தொடங்கினாள்.

பக்கத்தில் நல்ல கொழுகொம்பு கிடைத்தால் பருவக் கொடி படராமல் இருக்குமா?

பைஸியும் அவளைக் காதலித்தார்.

காந்தம் ஈர்த்தால் இரும்பு ஈர்க்கப்படாமல் இருக்குமா?

குருவுக்கும் இந்தக் காதல் தெரியாமல் இல்லை.

என்னதான் புதர்களுக்குள் ரகசியமாக மலர்ந்தாலும் பூவின் வாசம் வெளியில் வராமல் இருக்குமா?

‘என்னைப் போல் மகா பண்டிதனாகி வரு கிறான். அகமும் புறமும் அழகாக இருக்கிறான். என் மகளுக்கு இவனை விடச் சிறந்த கணவன் கிடைக்கப் போவதில்லை’ என்று நினைத்த குரு, பைஸியிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.

பைஸிக்கோ மகிழ்ச்சியும் துயரமும் சேர்ந்து உண்டாயிற்று. அவர் இந்த விஷயத்தில் குருவை ஏமாற்ற விரும்பவில்லை.

அவர் தம்மைப் பற்றிய ரகசியத்தைக் குருவிடம் வெளிப்படுத்தினார்.

பண்டிதர் பரம வைதீகர்; சிற்றூரில் வசிப்பவர். அவரால் இந்த அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை.

ஒரு கத்தியை எடுத்துத் தம்மைக் குத்திக்கொள்ள முயன்றார்.

பைஸி அவரைத் தடுத்தார். தம்மை மன்னிக்கும்படி மன்றாடினார். தம் குற்றத்துக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வதாகக் கூறினார்.

அழுது புலம்பி அடங்கிய பண்டிதர், “வேதங் களை நீ எந்த மொழியிலும் பெயர்க்கக்கூடாது. இந்து தர்மத்தின் ரகசியங்களை உன் வாயாலும் வெளியிடக் கூடாது. இதுதான் நீ எனக்குத் தர வேண்டிய குருதட்சணை’’ என்றார்.

பைஸி கட்டை விரலைக் காணிக்கையாக்கிய ஏகலைவன் போலானார். குருவின் ஆணைப்படி நடப்பதாக வாக்குறுதியளித்தார்.

பண்டிதரின் மகள் அவரைப் பார்த்துக் கண்ணீர் வடித்தாள். அந்தக் கண்ணீர் அவளுடைய துயரத்தைச் சொல்லும் வார்த்தைகளாக இருந்தன.

இரண்டு பெரும் இழப்புகள். பைஸியின் இதயம் வெடித்துவிடும் போலிருந்தது.

பைஸி தில்லி திரும்பினார். அக்பரிடம் நடந்ததை எல்லாம் சொன்னார்.

அவர் குருவுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை இறுதிவரை மீறவே இல்லை.

- இன்னும் முத்துக் குளிப்போம்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: kaviko2003@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x