ம.லெ.தங்கப்பா 10

Published : 08 Mar 2017 10:20 IST
Updated : 16 Jun 2017 13:41 IST

தமிழ் அறிஞர், எழுத்தாளர்

சிறந்த தமிழ் படைப்பாளியும், மொழிபெயர்ப்பு அறிஞருமான ம.லெ.தங்கப்பா (M.L.Thangappa) பிறந்தநாள் இன்று (மார்ச் 8). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே உள்ள குறும்பலாப்பேரி கிராமத் தில் (1934) பிறந்தார். குடும்பத்தில் தந்தை உட்பட பலரும் தமிழறிஞர்கள். இளம் வயதிலேயே கம்பராமாயணம், வில்லிபாரதம், தனிப்பாடல் திரட்டு உள்ளிட்ட பாடல்களைத் தந்தையிடம் கற்றார்.

* பாடல்களை எளிதாக மனப்பாடம் செய் யும் ஆற்றல் பெற்றிருந்தார். பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் பொருளியலில் பட்டம் பெற்றார். கல்லூரி நாட்களில், தாகூர், பாரதிதாசனின் படைப்புகள் இவரை மிகவும் கவர்ந்தன. தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார்.

* ‘தி ஃபோர்சேக்கன் மெர்மேன்’ என்பதுதான் இவர் முதன்முதலாக தமிழில் மொழிபெயர்த்த நூல். சாதி, மத வேறுபாடு, மூட நம்பிக்கைகளை எதிர்த்தார். இவற்றை எழுத்திலும் வடித்தார். பல ஆங்கிலப் பாடல்களைத் தமிழில் மொழிபெயர்த்தார். ஆசிரியர் பயிற்சி முடித்து, புதுச்சேரியில் உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார்.

* தமிழில் முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு, புதுவையிலேயே குடியேறினார். அங்கு பல்வேறு கல்லூரிகளில் 25 ஆண்டுகள் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார். மாணவர்களுடன் மிதிவண்டியில் வெகுதூரம் பயணம் மேற்கொண்டு, இயற்கை, சுற்றுச்சூழல் குறித்து அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

* ‘வானம்பாடி’ இதழில் முதன்முதலாக இவரது பாடல்கள் வெளிவந் தன. இதில் மொழிபெயர்ப்புப் பாடல்களும் அடங்கும். ‘தென்றல்’, ‘குயில்’, ‘இனமுழக்கம்’, ‘தென்மொழி’ ஆகிய இதழ்களிலும் பாடல்கள், கட்டுரைகள் எழுதினார். சிறந்த மொழிபெயர்ப்பாளரான இவர், தமிழ் ஆங்கிலம் இடையே பல நூல்களை மொழிபெயர்த் தார். திருவருட்பா, முத்தொள்ளாயிரம், சங்க இலக்கியம், பாரதியார், பாரதிதாசன் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

* ஏராளமான பாடல்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு நூல்களைப் படைத்துள்ளார். ‘மலைநாட்டு மலர்கள்’, ‘இயற்கையாற்றுப்படை’, ‘புயற்பாட்டு’, ‘பின்னாலிருந்து ஒரு குரல்’ உள்ளிட்ட இவரது படைப்புகள் குறிப்பிடத்தக்கவை. ‘எங்கள் வீட்டு சேய்கள்’, ‘மழலை விருந்து’ உள்ளிட்ட நூல்களைப் படைத்து சிறுவர் இலக்கியத்துக்கும் பங்களிப்பை வழங்கியுள்ளார்.

* ‘சோளக் கொல்லை பொம்மை’ நூலுக்காக 2010-ன் குழந்தை இலக்கியத்துக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றார். ‘லவ் ஸ்டாண்ட்ஸ் அலோன்’ என்ற தமிழ்ச் சங்க இலக்கியக் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலுக்காக 2012-ல் சாகித்ய அகாடமி விருது பெற்றார்.

* இயற்கை வளம், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிகுந்த அக்கறை கொண்டவர். புதுச்சேரி இயற்கை கழக உறுப்பினராகவும், பின்னர் தலைவராகவும் செயல்பட்டார். பள்ளிகளில் மரம் நடும் திட்டத்தை செயல்படுத்தினார். புதுவை தமிழ் வளர்ச்சி நடவடிக்கை குழுவின் துணைத் தலைவராகவும் செயல்பட்டார்.

* தமிழ் ஆட்சி மொழி, பயிற்று மொழி தொடர்பான போராட்டங்களிலும் கலந்துகொண்டவர். அமைதி, சர்வதேச சகோதரத்துவம், நல்லி ணக்கம், நல்லுறவு மலர வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்ட இவர், அதை தன் படைப்புகளிலும் வெளிப்படுத்தி வருகிறார். தமிழ், ஆங்கிலத்தில் மொத்தம் 41 நூல்களை எழுதியுள்ளார்.

* தமிழக அரசின் பாரதிதாசன் விருது, சென்னை பகுத்தறிவாளர் கழகத்தின் மொழிபெயர்ப்பு விருது, சிற்பி இலக்கிய விருது உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். இன்று 84-வது வயதில் அடியெடுத்து வைக்கும் ம.லெ.தங்கப்பா, ‘தெளிதமிழ்’ என்ற மாத இதழை நடத்தி வருகிறார்.

Keywords
More In
This article is closed for comments.
Please Email the Editor