Published : 02 Aug 2015 12:40 PM
Last Updated : 02 Aug 2015 12:40 PM

பிங்கலி வெங்கய்யா 10

இந்திய தேசியக் கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கய்யா (Pingali Venkayya) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 2). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தில் (1876) பிறந்தார். அங்கு பள்ளிப் படிப்பை முடித்தார். கொழும்பு சென்று சீனியர் கேம்பிரிட்ஜ் பட்டம் பெற்று நாடு திரும்பினார். ரயில்வே கார்டு, பிளேக் நோய் ஒழிப்புத் துறை ஆய்வாளராகப் பணியாற்றினார்.

# லாகூர் ஆங்கிலோ-வேத உயர்நிலைப் பள்ளியில் உருது, ஜப்பான் மொழிகள் கற்றார். சமஸ்கிருதம், இந்தி, ஆங்கிலமும் நன்கு அறிந்திருந்தார். நிலவியல், விவசாய அறிவியலில் அதிக ஆர்வம் கொண்டவர்.

# வைரச் சுரங்கத் தொழிலில் ஈடுபாடு கொண்டவர். ஆந்திரத்தில் வைரச் சுரங்கம் தோண்டுவதில் சாதனை படைத்ததால் ‘வைரம் வெங்கய்யா’ என்று அழைக்கப்பட்டார். தென்னாப்பிரிக்கப் போரில் இந்திய - பிரிட்டன் படையில் சேர்ந்து பணியாற்றினார். அப்போது மகாத்மா காந்தியை சந்தித்தவர், அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார்.

# பருத்தி விதைகளை ஒப்பீட்டு ஆராய்ச்சி செய்து, 1906-ல் கட்டுரை வெளியிட்டார். இதனால் ‘பருத்தி வெங்கய்யா’ என்ற பெயரில் பிரபலமானார். பிரிட்டிஷ் அரசு இவரை ‘லண்டன் ராயல் விவசாய சொசைட்டி’ உறுப்பினராக நியமித்தது.

# கல்கத்தாவில் 1906-ல் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் தன்னலமற்ற இவரது சேவைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. காங்கிரஸ் மாநாட்டில் ஆங்கிலேய அரசின் ‘யூனியன் ஜாக்’ கொடி ஏற்றப்பட்டிருந்ததைக் கண்டு வருந்தினார். பாரதத்துக்கென பிரத்யேகமாக கொடி உருவாக்க உறுதிபூண்டார்.

# காக்கிநாடாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் சந்திப்பின்போது, தேசியக் கொடிக்கான அவசியத்தை வலியுறுத்தினார். கொடியை வடிவமைக்கும் பொறுப்பை இவரிடமே ஒப்படைத்தார் காந்தி. பல நாடுகளின் கொடிகள் பற்றி 5 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்தார்.

# ‘எ நேஷனல் ஃபிளாக் ஃபார் இந்தியா’ என்ற நூலை 1916-ல் வெளியிட்டார். அதில் தேசியக் கொடியின் 30 மாதிரிகளை வெளியிட்டார். இதுசம்பந்தமாக தனது ‘யங் இந்தியா’ இதழில் காந்திஜி கட்டுரை எழுதினார்.

# விஜயவாடா தேசிய மாநாட்டின்போது சிவப்பு, பச்சை நிறங்கள் கொண்ட கொடியை வெங்கய்யா அறிமுகப்படுத்தினார். கொடியில் அசோக சக்கரத்தை சேர்க்கலாம் என்று ஜலந்தரை சேர்ந்த ஹன்ஸ்ராஜ் என்பவர் ஆலோசனை கூறினார். அமைதியைக் குறிக்கும் வெண்மை நிறத்தை சேர்க்கலாம் என்று காந்திஜி கூற, மூவர்ணங்கள் கொண்ட தேசியக் கொடியை வெங்கய்யா வடிவமைத்தார்.

# கராச்சியில் 1931-ல் நடந்த அகில இந்திய மாநாட்டில் இந்தக் கொடியை அனைவரும் ஒருமனதாக ஏற்றனர். முதலில் கொடியின் நடுவில் ராட்டை இருந்தது. பின்னர் அதற்கு பதிலாக அசோக சக்கரம் சேர்க்கப்பட்டது.

# நாட்டின் விடுதலை, முன்னேற்றத்துக்காக தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட பிங்கலி வெங்கய்யா, அந்த அளவு பிரபலமாகவில்லை. பன்முகத் திறனும், தேசபக்தியும் கொண்ட இவர் 86 வயதில் (1963) மறைந்தார். 46 ஆண்டுகளுக்குப் பிறகு, 2009-ல் இவரது உருவம் பொறித்த அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.



- ராஜலட்சுமி சிவலிங்கம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x